Published:Updated:

''கலைகளில் வாழ்கிறான் கடவுள்!''

''கலைகளில் வாழ்கிறான் கடவுள்!''

''கலைகளில் வாழ்கிறான் கடவுள்!''

''கலைகளில் வாழ்கிறான் கடவுள்!''

Published:Updated:
''கலைகளில் வாழ்கிறான் கடவுள்!''

'' கோயிலுக்குப் போவதும், உருத்திராட்சம் அணிவதுமே ஆன்மிகம் என்றாகிவிடாது. ஆழ்கடல் அமைதிக்கு ஒப்பானது ஆன்மிகம்; வெளிப் பகட்டுகளில் வெளிப்படுத்துகிற விஷயம் இல்லை என்பதை எனக்கு உணர்த்தியவர் என் தந்தை மணியம்.

அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம்! கலையும் மனமும் ஆழ்ந்த ஈடுபாட்டோடு ஒருங்கே இணையும் புள்ளியில்தான் அமைதியையும் ஆன்மிகத்தையும் என்னால் அறியமுடிகிறது!'' - மென்மையான வார்த்தைகளிலேயே வசீகரிக்கிறார் ஓவியர்  ம.செ. (எ) மணியம் செல்வன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
வீடு முழுக்க மணியம் (ம.செ.தந்தை) கை வண்ணத்தில் உருவான பிரமாண்ட ஆன்மிகப் படங்கள் வீட்டுக்கு கம்பீர அழகைத் தருகின்றன. வண்ணக் கலவைகள், தூரிகைகளுக்கு மத்தியில் படம் வரைந்துகொண் டிருக்கிறார் ம.செ. அறை முழுக்க காற்றில் கரைந்து குழைகிறது எம்.எஸ்.சுப்பு லட்சுமி கீதம். தூரிகை யைத் தூர வைத்துவிட்டு சிரித்த முகத்துடன் நம்மிடம் பேச ஆரம்பிக்கிறார் ம.செ.

''கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா.... என குடும்பத்தில் அனைவருக்குமே ஆன்மிகம்தான் சுவாசம். பஜனை, பூஜை, கோபுர தரிசனம், வீடு முழுக்க சாமி படங்கள், கோயில் நற்காரியங்கள் போன்ற விஷயங்களில் எங்கள் வீட்டுப் பெரியவர்களுக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அப்பாவுக்கும் (மணியம்) ஈடுபாடு உண்டென்றாலும், அதிகம் வெளிக் காட்டிக் கொள்ளமாட்டார். எல்லோரும் இறைவனைத் தரிசிக்க கோயிலுக்குப் பயணமாவார்கள். ஆனால், அப்பாவின் நோக்கமோ இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் கலையைத் தரிசிப்பதற்கான பயணமாகத்தான் இருக்கும். கர்ப்பக்கிரஹத்தில் தரிசனம் செய்யும் நேரத்தை விடவும் கோயில் பிரகாரங்களிலும் சிலைகளிலும் வெளிப்படும் நுணுக்கமான கலைப் படைப்புகளை அணுஅணுவாக ரசித்து உள்வாங்கிக் கொள்வதில்தான் அதிக நேரம் செலவிடுவார். அவை அத்தனையும் அவரது ஓவியப் படைப்புகளிலும் பிரதிபலிக்கும். 'ஆன்மிகம் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஓவியமாக வடிப்பதே ஒருவகையான தவம்தான். அமைதியான அந்த மனநிலையில் ஆழ்மனமும் சக்தி பெற்று உடல் நலத்தைப் பேணிக்காக்கும். சுருக்கமாகச் சொன்னால் இதுதான் தியானம்!’ என்பார் அப்பா. இந்தக் கருத்துக்கள் எல்லாம் அப்போது எனக்கு புரியவில்லை. ஆனால், இப்போது அனுபவபூர்வமாக உணர்கிறேன்.

ஒரு சிவராத்திரி அன்று என் மன திருப்திக்காக 'சிவ தாண்டவம்’ படம் வரைந்தேன். நான் வரைந்த ஓவியங்களை ரசித்துப் பாராட்டும் மாதவன் என்ற ரசிகர் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு 'ம.செ. சார் அதெப்படி ஒரே படத்தில், சிவனையும் விநாயகரையும் இவ்வளவு அழகாக வரைந்தீர்கள்?’ என்று கேள்வி கேட்டார். 'சிவனை மட்டும்தானே வரைந்தேன்.... இதில் விநாயகர் படம் எப்படித் தெரியும்?’ என்று குழம்பிப் போனேன் நான். கொஞ்சநேரம் கழித்து அவரே புதிரையும் விடுவித்தார். 'நீங்கள் வரைந்துள்ள சிவ தாண்டவம் படத்தை அப்படியே தலைகீழாகப் பிடித்துப் பாருங்கள். அதில் விநாயகர் உருவம் அருமையாகத் தெரிகிறது!’ என்று. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், எதிர்பார்ப்புகள் இன்றி நூறு சதவிகித ஈடுபாட்டோடு மனம் ஒன்றி ஒரு காரியத்தைச் செய்யும்போது அது உற்சாகத்தை கொடுப்பதோடு நமக்கே தெரியாத ஒரு புதுவிதமான பரிமாணத் தையும் கொடுத்துவிடுகிறது. ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஓவியங்களை தவமாகக் கருதி வரையும்போது மன அமைதியும் இறையருளும் கிட்டுகிறது. தியானத்துக்கு ஒப்பான அந்த மன அமைதிதான் உடல் ஆரோக்கியத்துக்கும் அடிகோலுகிறது!

கட்டடம், சிற்பம், ஓவியம்... எனக் கலைகளின் கலவையாகவே இருக்கின்றன ஆலயங்கள். தாண்டவமாடும் சிவன், வீணை சரஸ்வதி, புல்லாங்குழல் கிருஷ்ணன்..... என, ஒவ்வொரு கடவுளரும் கலையோடு கலந்தே இருக்கிறார்கள். அதனால் கலையையும் கடவுளையும் பிரித்துப் பார்க்கமுடியாது. முன்பெல்லாம் அடிக்கடி கோயிலுக்குப் போகிற பழக்கம் உண்டு. ஆனால், இப்போது வேலை நெருக்கடிகளினால் அடிக்கடி கோயிலுக்குச் செல்ல நேரம் கிடைப்பதில்லை.

''கலைகளில் வாழ்கிறான் கடவுள்!''

தினமும் குறிப்பிட்ட நேரம் கடவுளை மட்டுமே மனதில் இருத்தி வழிபடச் சொல்கிறது பக்திமார்க்கம். ஆனால், நாள் முழுக்கவே அந்த வேலையைத்தானே நான் தொழிலாகவே செய்து வருகிறேன்! புராணக் காட்சிகள், ஆன்மிகப் பெரியவர்கள், நாயன்மார்கள் என மனக்கண்ணில் படிந்து கிடக்கும் உருவங்களை தூரிகை வழியே காகிதத்துக்கு பதிவிறக்கம் செய்கிறேன். அந்த வகையில், ஓவியம் வரைவதே ஒருவகையான பூஜைதான்.

ராமகிருஷ்ண பரமஹம்சர், யோகிராம் சுரத்குமார், சங்கராச்சார்யர், ரமணர் போன்ற மகான்களின் உருவப் படங்களை மிகவும் ஈடுபாட்டோடு வரைகிறேன். இவர்களில் பலரோடும் நான் பழகிய அனுபவம் கிடையாது. ஆனாலும் அவர்களின் சாரத்தையும் விஷயத்தை யும் கிரகித்துக்கொள்கிறேன். ரமணர் படம் என்றால், அமைதியான சூழ்நிலை; எம்.எஸ். சுப்புலட்சுமியின் படம் என்றால், முகத்தில் அவர் வெளிப்படுத்தக்கூடிய பாவத்தை ஓவியத் தில் அப்படியே தத்ரூபமாகக் கொண்டுவர வேண்டும். உருகிக் கொட்டும் எம்.எஸ்.ஸின் சங்கீதத்தைக் கேட்டுக்கொண்டே வண்ணம் தீட்டும்போது சூழ்நிலையே பொருத்தமாக மாறிவிடுகிறது. இப்படி முழு ஈடுபாட்டோடு சூழ்நிலையையே மாற்றிக்கொள்ளும்போது நான் அந்தப் பெரியவர்களோடு பேசிக்கொள்வது மாதிரியான ஒரு பரவச உணர்வே கிடைக்கிறது. கண், காது, மூக்கு என்று அவர்களின் ஒவ்வொரு பாகங்களையும் நுணுக்கமாக வரைய வரைய அவர்களது ஸ்பரிசத்தையே நான் உணர்கிறேன்'' என்று மெய்சிலிர்த்தவர், ஆரோக்கியம் குறித்து தனது நண்பர் அறிவுறுத்திய சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார்.

''கலைகளில் வாழ்கிறான் கடவுள்!''

''வேலை நெருக்கடியில், அடிக்கடி உடற்பயிற்சி செய்றதை தவிர்த்துடுவேன். ஒருமுறை நடிகர் சிவகுமார் என்னிடம், 'ஓவியத்தை மட்டும் ஹெல்த்தா பண்றது முக்கியம் இல்லை; உடம்பை யும் ஹெல்த்தா வெச்சுக்கணும். காஷ்மீருக்குப் போகணும்னு நினைச்சு ரயில்ல ஏறி உட்கார் றோம். அரக்கோணத்துலயே அந்த வண்டி ரிப்பேர் ஆயி நின்னுடுச்சுன்னா எவ்வளவு ஏமாற்றமாயிடும். அதனால தினமும் நடைப் பயிற்சி செய். உடம்பை பத்திரமா பாத்துக்கோ’னு அக்கறையாச் சொன்னார். அதுலேர்ந்து, எவ்வளவு வேலையிருந்தாலும் ஒத்திவைக்காமல் தினமும் நடைப்பயிற்சி போறேன்; யோகாவும் செய்றேன்.

பொதுவா நாற்பது வயதைக் கடந்துட்டா உடல் நலத்துல ரொம்பக் கவனமா இருக்கணும். சாப்பாடு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கணும். அந்த ஒழுக்கத்தைக் கற்றுத் தருவது ஆன்மிகம்! அதனால்தான் வாழ்க்கையின் இறுதிக் கட்டங்களில், கோயில், குளம் என்று ஆன்மிக வாழ்க்கையை வகுத்துக் கொண்டிருந்தார்கள் பெரியவர்கள்!'' என்று நிறைவாகப் பேசி முடிக்கிறார் ஓவியர் ம.செ.

- த.கதிரவன்