Published:Updated:

பேட் பழசு... ரேடார் புதுசு... 2 கிலோமீட்டருக்கு ஒரு கொசுகூட தப்பிக்க முடியாது!

பேட் பழசு... ரேடார் புதுசு... 2 கிலோமீட்டருக்கு ஒரு கொசுகூட தப்பிக்க முடியாது!
பேட் பழசு... ரேடார் புதுசு... 2 கிலோமீட்டருக்கு ஒரு கொசுகூட தப்பிக்க முடியாது!

பேட் பழசு... ரேடார் புதுசு... 2 கிலோமீட்டருக்கு ஒரு கொசுகூட தப்பிக்க முடியாது!

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் கொசுக்களால் பரப்பப்படும் நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு மில்லியனுக்கு மேல் இருக்கும் என கணக்குக் காட்டுகிறது உலக சுகாதார நிறுவனம். வளர்ந்த நாடுகள், வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் என எல்லா இடங்களிலுமே மனிதனுக்குக் கொசு என்பது எதோ ஒரு வகையில் தொல்லை தருவதாகத்தான் இருக்கிறது. 

கொசுவைக் கட்டுப்படுத்துவதற்கு பல வழிகள் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் 1990-களுக்குப் பின்னரான காலகட்டத்தில் 'கொசு பேட்' என்ற சாதனம் புழக்கத்துக்கு வந்தது. அதைக் கண்டுபிடித்து 1996-ம் ஆண்டில் காப்புரிமை பெற்றவர் தைவான் நாட்டைச் சேர்ந்த ஒருவர். ஆனால், வழக்கம் போலவே குறைந்த விலையில் தாயரித்து நமக்கு அளித்தவர்கள்  சீனர்கள்தான். ஆகவே நம்மைப் பொறுத்தவரையில், 'கொசு பேட்' என்ற சிறப்பான சாதனத்தைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். அதுவரை திரவம், புகை என பல்வேறு வடிவங்களில் கொசுவை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்த மக்களும் கொஞ்சம் அட்வான்ஸ்டு மோட்க்கு மாறினார்கள். டென்னிஸ் பேட் போலவே இருக்கும் கொசு பேட்டை வைத்து ஒரே அடியில் கொசுவின் கதையை முடித்து விடுவார்கள். கொசுவைத்  தேடிப்பிடித்து கொல்லுவதை விடவும் நம்மைத் தேடி வரும் கொசுக்களை கொல்வது என்பது எளிதாக இருந்தது. விலையும் குறைவு என்பதால் ஒவ்வொரு வீட்டிலும் தவறாமல் இடம்பிடித்தது.

பல வழிகளைப் பின்பற்றினாலும் கூடக் கொசுக்களின் தொல்லையை முழுவதுமாக தவிர்க்க முடியவில்லை. பகல் முழுவதுக்கும் எங்கேயே மறைந்திருக்கும் கொசுக்கள் மாலையில் சூரியன் மறையத் தொடங்கியதும் மனிதர்களை நோக்கிப் படையெடுத்து வரும். மாலையில் அவ்வளவு எண்ணிக்கையில் வீடு தேடி வரும் கொசுக்கள் பகல் முழுவதும் எங்கே மறைந்திருக்கின்றன என்பது யாருக்குமே தெரியாத விஷயம். அதை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் தேவையில்லாத இடங்களில் அவற்றைக் கொல்வதற்கு மருந்து தெளிப்பதை விடவும் அவை மறைந்திருக்கும் இடத்தில் கூடுதலாக கவனம் செலுத்தி கொசுவைக் கட்டுப்படுத்த முடியுமே. யோசனை என்னவோ கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் ஒரு நாட்டின் மீது மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் படை வீரர்களைப் போல திடீரென பறந்து வரும் கொசுக்களை எங்கே போய் கண்டுபிடிப்பது. விஷயம் ஆராய்ச்சியாளர்களுக்குப் புரிந்துவிட்டது கொசுக்கள் எங்கே மறைந்திருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தால் அதைக் கட்டுப்படுத்தும் வேலையையும் எளிதாக்கலாம். அவ்வளவுதானே இதற்கு ஏற்கெனவே ராணுவத் துறையில் பயன்பாட்டில் இருக்கும் ரேடார் தொழில்நுட்பத்தையே பயன்படுத்தலாமே என்று கண்டுபிடித்திருப்பவர்கள் வேறு யாருமல்ல சீனர்கள்தான். 

ஒரு கொசுகூடத் தப்பிக்க முடியாது

சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் இந்த அதி உணர் திறன் கொண்ட ரேடார் அதைச் சுற்றி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பறக்கும் உயிரினங்களைக் கண்டுபிடித்து விடும் திறன் படைத்தது. பீஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த குழுவினர் சீன ராணுவத்துடன் இணைந்து இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சொல்லப்போனால் இந்தத் தொழில்நுட்பம் சீன ராணுவத்தால் அவர்களது வலிமையை அதிகரிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது அந்தத் தொழில்நுட்பத்தைத்தான் இந்தக் குழுவினர் பயன்படுத்தியிருக்கிறார்கள். ரேடார் செயல்படும் தொழில்நுட்பம் பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  மின்காந்த அலைகளை அனுப்பி அதைத்  திரும்பப் பெற்று அது எதிரொலிக்கப்பட்ட பொருளின் நிலையை அறிந்துகொள்வதுதான்  ரேடாரின் அடிப்படை தொழில்நுட்பம். ரேடாரின் திறனை அதிகரிக்கும் வகையில் உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவிடம் தற்பொழுது இருக்கும் எக்ஸ்-பேன்ட் ரேடார் மூலமாக நாலாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் பேஸ்பால் அளவில் இருக்கும் பொருளைக்கூட உணரும் திறன் படைத்தது. அதேபோல அதிக உணர் திறன் கொண்ட ஒரு ரேடாரை உருவாக்கும் முயற்சியில் சீனாவும் ஈடுபட்டு வந்தது. அப்படிக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த புதிய ரேடார் தொழில்நுட்பம்.

இதன் மூலமாக  இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மிகச் சிறிய பொருள்களின் தகவல்களைக்கூட அறிந்துகொள்ள முடியும். அதன்படி ராணுவத்துடன் இணைந்து இந்தக் குழுவினர் கொசுக்களைக் கண்டுபிடிக்கும் ரேடாரை உருவாக்கியிருக்கிறார்கள். அதற்காகப் பல மாற்றங்களை இதில் கொண்டுவந்திருக்கிறார்கள், தற்பொழுது  பயன்பாட்டில் இருக்கும்  ரேடார்கள் அதிநவீன விமானத்தைக்கூட கண்டறிந்து விடும். ஆனால், விமானத்தின் இறக்கைகளோடு ஒப்பிடும்பொழுது  கொசுக்களின் இறக்கைகள் முற்றிலும் வேறுபட்டவை. அதற்கேற்ற மாற்றங்களை இந்த ரேடாரில் சீன ஆராய்ச்சிக் குழுவினர் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவை அனுப்பும் அலைகள் மூலமாக இருப்பிடம், அதன் வகை, பாலினம், பறக்கும் வேகம் என ஒரு கொசுவின் ஒட்டுமொத்த தகவல்களையும் பெற்றுவிட முடியும். இதன் மூலமாகக்  கொசுக்கள் எந்த இடத்தில் கூட்டமாக இருக்கின்றன என்பதை அறிய முடியும். அதன் மூலமாக அதைக் கட்டுப்படுத்துவது என்பது முன்பைவிட எளிதாக இருக்கும். இந்த ரேடாரை கட்டடத்தின் கூரைப்பகுதியில் பொருத்திக்கொள்வதன் மூலமாகக் கொசுக்களின் தாக்குதல் எந்த இடத்தில் அதிகமாக இருக்கிறது, அவை எந்த இடத்தில் ஓய்வெடுக்கின்றன என்பது போன்ற தகவல்களை அறிந்துகொள்ள முடியும். இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக  US$12.9 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆராய்ச்சிக் குழுவினருக்கு அளித்துள்ளது அரசாங்கம். மிக விரைவாக இந்தத் தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். எனவே, கொசு பேட்டைப் போலவே இந்த ரேடாரையும் சீனர்கள் மலிவான விலையில் தயாரித்து நமக்குத் தருவார்கள் என்று நம்பலாம். 

அடுத்த கட்டுரைக்கு