
1. `தனித்தமிழ் இயக்கத்தவர்கள் முதலில் தத்தம் பெயரைத் தமிழில் மாற்றிக்கொண்டார்கள்.’ (பக்.46) எனக் கூறி அவ்வரிசையில் சூரியநாராயண சாஸ்திரியார் பெயரையும் இணைத்திருக்கிறார் மகுடேசுவரன். சாஸ்திரியார் தனித்தமிழ் இயக்கத்தவர் இல்லை.
சுவாமி வேதாசலம் தன் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக்கொண்டு அதன் பின்னர் அப்பெயரையே பயன்படுத்தி வந்தமை போன்று வி.கோ.சூ செய்தாரில்லை.
`பரிதிமாற்கலைஞன்’ என்பது வி.கோ.சூ-வின் இடைக்காலப் புனைபெயரே. `தனிப்பாசுரத் தொகை’ எனும் நூலை முதன்முறை பதிப்பிக்கும்போது `பரிதிமாற்கலைஞன்’ என்னும் புனைபெயரில் பதிப்பித்தவர், இரண்டாம் பதிப்பில் `வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி’ என்னும் பெயரிலேயே வெளியிட்டுள்ளார்.
`தனிப்பாசுரத் தொகை’ நூலில் சில பாசுரங்களில் புதுக்கருத்துகளைத் தான் வெளியிட்டிருப்பதை எண்ணி தம் பெயரில் வெளியிடாது பரிதிமாற்கலைஞன் என்னும் புனைபெயரில் வெளியிட்டதாக இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் வி.கோ.சூ குறிப்பிடுகிறார். மற்றொரு காரணத்தையும் குறிப்பிடுகிறார்.
‘நல்ல நூல் ஒன்று புகழில்லாதவன் எழுதியதால் இகழப்படுவதாலும், தாழ்ச்சியான நூலொன்று புகழுடையோன் எழுதியமையால் மிகவும் புகழப்படுவதாலும் தான் எழுதிய தனிப்பாசுரத்தொகை என்னும் நூலின் உண்மை மதிப்பினை அறியவேண்டி புனைபெயரில் எழுதி வெளியிட்டதாகக்’ கூறுகிறார்.
2. `ஆட்பெயர்ச்சொற்கள் மதத்தில் வேர்கொண்டு வழங்குமிடத்தில் மொழிப்பற்றாளர்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது’ (பக்.47) என்கிறார் மகுடேசுவரன்.
மதத்தில் வேர்கொண்டிருப்பவர்களைத் தமிழ்பால் இழுத்துவருதல் இன்னும் எளிது. தேவார, திருவாசகங்களிலும் இதர திருமுறை நூற்களிலும் அம்மைக்கும் அப்பனுக்கும் வழங்கும் இனிய தமிழ்ப்பெயர்களைத் தொகுத்துத் தந்தால், தம் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்வர்.
திவ்யப் பிரபந்தத்திலும் கம்பராமாயணத்திலும் திருமாலுக்கும் திருமகளுக்கும் வழங்கும் தமிழ்ப் பெயர்களை மொழிப்பற்றாளர்கள் தொகுத்துத் தந்தால்போதும், வைணவத்தில் வேர்கொண்டவர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டிக் கொண்டாடுவார்கள். அன்றாடம் ஆலயத்தில் 1,008 பெயர் சொல்லி வழிபாடு செய்யும் பெயர்களைத் தனித்தமிழில் ஆக்கித்தர வேண்டும்.
தேம்பாவணியும் சீறாப்புராணமும் இன்ன பிற நூல்களும் இறைவனின் பண்பு நலன்களைத் தமிழில் விவரிக்கின்றன. அவை கொண்டும் அந்நூல்கள் இறைப்பெயர்களையும் இறையடியார் பெயர்களையும் தமிழில் ஆண்டுள்ள விதம் கொண்டும் தமிழ்ப்பெயர்கள் ஆக்கித் தரலாம். `பண்டிருந்து இன்றொழிந்த தமிழ்ச் சொற்களை எடுத்தாளுதல் நலம்’ என்னும் தங்கள் கொள்கைக்கு ஏற்ப பன்னூறு பழந்தமிழ்ப் பெயர்களைப் புதுக்கித் தரலாம்.
இம்முயற்சிகள் யாவற்றையும் இணையதளம் முதலிய ஊடகங்களால் ஒருங்கிணைக்க வேண்டும்.