Published:Updated:

நின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்

நின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்
பிரீமியம் ஸ்டோரி
நின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்

நின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்

நின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்

நின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்

Published:Updated:
நின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்
பிரீமியம் ஸ்டோரி
நின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்
நின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்

ரவு 9:30 மணி. அதிகம் பரிச்சயம் இல்லாத நகரில் தனியாகத் தங்கியிருக்கும் அந்த இளம் பெண்ணுக்கு அந்த நேரத்தில் ஒரு குறுந்தகவல் வருகிறது. தன்னை உடனடியாக வந்து சந்திக்கும்படி தகவல் அனுப்புகிறார், அந்த மாநிலத்தின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் காவல்துறை அதிகாரி. தன்னுடைய கடைசி இரவாக அது இருக்கக்கூடும் என்கிற முடிவுக்கு வருகிறார் ராணா அயுப். அப்போதைக்கு அவரது அடையாளம் `மைதிலி தியாகி’. இந்தியாவின் மிக முக்கியமான புலனாய்வுப் பத்திரிகையாளர்.

2010-ம் ஆண்டில் `தெஹல்கா’ இதழில் ராணா எழுதிய புலனாய்வுக் கட்டுரைகள் காரணமாக போலி என்கவுன்ட்டர் வழக்கின் உண்மை வெளிவந்து, அதில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா கைது செய்யப்படும் அளவுக்கு நிலைமை பரபரப்பானது. அதோடு தனது பணி முடிந்துவிட்டதாக ராணா நினைக்கவில்லை. ஆனால், அதன் பிறகு குஜராத்துக்குள் ராணா அயுப்பாக நுழைய முடியாது. எனவே, தனது பெயர், புற அடையாளங்கள் வரை அனைத்தையும் மாற்றிக்கொண்டு அமெரிக்க ஆவணப்பட இயக்குநராக குஜராத்திற்கு வருகிறார்.

‘மைதிலி தியாகி’ என்கிற பெயரில் முதல் நாள்தான் அவர் அந்தப் பெண் அதிகாரி உஷா ராதாவைச் சந்திக்கிறார். அடுத்த நாள் அவசர அழைப்பு வரவும், தனது உண்மை அடையாளத்தை அவர் கண்டுபிடித்திருக்கக் கூடும் என்று அஞ்சுகிறார் ராணா. ஆனால், அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் ஓர் இளம் பெண்ணுக்கு தனது மாநிலத்தின் பெருமையைக் காட்ட வேண்டும் என்று நினைத்த அந்த அதிகாரி, அவரை மிகச்சிறந்த உணவகத்துக்கு அழைத்துச் செல்கிறார். எந்தவிதத்திலாவது உஷாவுடனான உரையாடல்கள் தனக்கு உபயோகமானதாக இருக்கும் என்று முடிவுக்கு வரும் ராணா, அடுத்த நாள் படம் பார்க்க அழைப்பு வரும்போது கேமரா பொருத்தப்பட்ட தனது பிரத்யேகமான குர்தாவை அணிந்து செல்கிறார். தெஹல்காவின் புலனாய்வை அடிப்படையாகக்கொண்டு உருவான `No One Killed Jessica’ திரைப்படத்தைக் காண அந்த மல்டிபிளெக்ஸுக்குள் நுழைந்தபோது இன்னோர் ஆபத்து காத்துக்கொண்டிருந்தது. அங்கிருந்த மெட்டல் டிடெக்டர் ராணாவின் சின்னஞ்சிறிய கேமராவை காட்டிக் கொடுத்துவிடும் ஆபத்து. ஆனால், உஷாவை அடையாளம் காணும் பாதுகாப்பு அதிகாரி, அம்மாதிரியான பரிசோதனைகள் இல்லாத வாயில் வழியாக அவர்களை உள்ளே அழைத்துச் செல்கிறார்.

நின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராணா அயுப், நரேந்திர மோடியை தீவிரமாக விமர்சித்த பத்திரிகையாளர். அவர் இஸ்லாத்தைச் சேர்ந்தவர் என்பதால், கடுமையாக மோடி ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டார். மைதிலி தியாகியோ, உயர்சாதி வகுப்பைச் சேர்ந்தவர். அவரது அப்பா ஆர்.எஸ்.எஸ்-ஸில்கூட சில காலம் வேலை பார்த்திருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த புலம்பெயர் இந்தியரான மைதிலி தியாகி, குஜராத்தின் வளர்ச்சியின் பால் ஈர்க்கப்பட்டு, அதைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்காக இந்தியா வருகிறார். மைதிலி தியாகியின் நம்பகத்தன்மையை அதிகரிக்க, அவருடன் பிரான்ஸைச் சேர்ந்த ஓர் உதவியாளரும் வருகிறார்.

கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக மைதிலி தியாகியாகவே வாழ்ந்து, போலி என்கவுன்ட்டர்கள் பற்றியும், அதில் பா.ஜ.க-வின் பங்கு பற்றியும் ஆதாரங்களைச் சேகரிக்கிறார் ராணா. உயிரைப் பணயம்வைத்து அவர் சேகரிக்கும் இந்த ஆதாரங்களை வெளியிட தெஹல்கா மறுத்துவிடுகிறது. பின்னர், தருண் தேஜ்பால் மீது பாலியல் குற்றசாட்டு எழுந்தபோது, அதை நிறுவனம் சரியாகக் கையாளவில்லை என்று தெஹல்காவிலிருந்து பணியை ராஜினாமா செய்யும் ராணா, தான் சேகரித்த ஆதாரங்களை புத்தகமாகத் தொகுத்து வெளியிட வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் படும் சூழலில், ராணாவின் புத்தகத்தை வெளியிட எந்தப் பதிப்பகமும் முன்வர வில்லை. இரண்டு வருட போராட்டங் களுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன்பு புத்தகத்தை தானே வெளியிடுகிறார். `Gujarat Files – Anatomy of a Cover up’ என்கிற தலைப்புடன் வெளியான அந்தப் புத்தகத்தை குஜராத்தில் எந்தப் புத்தகக்கடையும் விற்பனைக்குவைக்க முன்வரவில்லை. ஆனாலும், இன்று வரையில் அமேசான் இணையதளத்தில் பெஸ்ட் செல்லராக இருக்கிறது புத்தகம். குஜராத் கலவரம், போலி என்கவுன்ட்டர்கள் பற்றி இன்னொரு விசாரணை வந்தால், அதில் இந்தப் புத்தகம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று நம்பும் ராணா, அதற்காகக் காத்திருக்கிறார்.    
 
ராணா மேற்கொண்டது undercover journalism என்றொரு வகை. ஒரு குற்றத்தைப் பற்றி, ஓர் அநீதியைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிய, அடையாளத்தை மாற்றிக்கொண்டு புலனாய்வு செய்யும் இதழியியல் வகை. இந்தியாவிற்குக் கொஞ்சம் புதிது என்றாலும், அண்டர்கவர் இதழியல் உலக அளவில் மிக முக்கியமான, அதே நேரம் சர்ச்சைக்குரிய ஓர் இதழியல் பிரிவாக இருந்திருக்கிறது.

நின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்

குறிப்பாக, பல பெண் பத்திரிகையாளர்கள் அண்டர்கவர் இதழியல் துணையோடு, பல அநீதிகளை வெளிக்கொண்டு வந்த வரலாறு இருக்கிறது.

1877-ம் ஆண்டில் நியூயார்க் நகரில் ஒரு பெண்கள் மனநலக் காப்பகத்தில் நிலவும் அவலங்களை அம்பலப்படுத்த, அதில் ஒரு நோயாளியாக தன்னை இணைத்துக்கொண்டார் பத்திரிகையாளர் நெல்லி பிளை. எலிசபெத் கோச்ரன் சீமேன் என்பது அவர் இயற்பெயர். காப்பகத்தில் அனுமதிக்கப்படுவதற்கு முதல் நாள் இரவு முழுவதும் கண்ணாடி முன் நின்று மனநலம் குன்றியவர்கள் செய்யக்கூடிய முகஜாடைகளைச் செய்து பயிற்சி எடுத்திருக்கிறார் பிளை. பத்து நாட்கள் அந்தக் காப்பகத்தில் தங்கியவர், அது குறித்து நியூயார்க் வேர்ல்டு என்னும் பத்திரிகையில் தொடர் கட்டுரைகள் எழுதினார். ஆறிய கஞ்சி, கெட்டுப்போன மாட்டிறைச்சி, காய்ந்த ரொட்டி, குடிக்க முடியாத நீர்தான் அங்கிருந்த நோயாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆபத்தானவர்கள் என்று கருதப்பட்ட நோயாளிகள் கயிற்றினால் கட்டி வைக்கப்பட்டார்கள். பல நோயாளிகள் நாள் முழுவதும் பெஞ்சுகளில் உட்கார்ந்திருக்க வேண்டும். அங்கு வேலை செய்த செவிலியர்களுக்கு நோயாளிகளை அடிக்கும் பழக்கமும் இருந்தது. அங்கிருந்த நோயாளிகளில் சிலர் நோயாளிகளே இல்லை என்பதையும் பிளை தெரிந்து கொண்டார்.

பெரிய சர்ச்சையைக் கிளப்பின இந்தத் தொடர் கட்டுரைகள். மருத்துவர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்தார்கள். அப்போது இப்படி எழுதினார் பிளை: `மனநோயை உருவாக்க, இதுபோல ஒரு சிறந்த சிகிச்சை இல்லை என்றே சொல்லலாம். இங்கிருக்கும் பெண்கள் குணப்படுத்தப்பட வேண்டியவர்கள். ஆனால், நல்ல மனநிலையில் இருக்கும் ஒரு பெண்ணை இங்கு தங்கவைத்தால், அவரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மர பெஞ்சுகளில் உட்காரவைத்தால், மற்றவர்களுடன் பேச அனுமதி மறுத்தால், புறஉலகு பற்றி எதுவும் சொல்லாமல் வைத்திருந்தால், மோசமான உணவைத் தந்து மோசமாக நடத்தினால், இரண்டே மாதங்களில் அவர் மனநோயாளி ஆகிவிடுவார்.’ 

பிளையின் தொடர் கட்டுரைகளின் அடிப்படையில் காப்பகம் பற்றி விசாரிக்க முடிவுசெய்த நீதிமன்றம், பிளையையும் விசாரணைக்கு உதவ அழைப்பு விடுத்தது. அண்டர்கவர் இதழியலுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இந்த விசாரணையைப் பார்க்கிறார்கள் பத்திரிகையாளர்கள். அதுபோலவே அண்டர்கவர் இதழியலை அடிப்படையாகக் கொண்டு வழக்குப் பதியலாமா என்ற கேள்வி எழும்போதெல்லாம் பிளையின் இந்த உதாரணம் சுட்டிக்காட்டப்படுகிறது.

நின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்

பிளை போலவே இன்னொரு கொடும் சமூக அநீதியை வெளிக்கொண்டுவர அண்டர் கவர் இதழியலைப் பயன்படுத்தினார் மார்வெல் குக். அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினப் பெண் பத்திரிகையாளர். 1950-ம் ஆண்டில் குக், `டெய்லி காம்பஸ்’ என்கிற இதழில் சேர்ந்தபோது, வெள்ளையினத்தவரால் நடத்தப்பட்ட ஒரு பத்திரிகையில் பணிக்குச் சேர்ந்த முதல் கறுப்பினப் பத்திரிகையாளர் என்கிற வரலாற்றைப் படைத்தார். அடிமைச் சந்தைகள் பற்றிய அவர் எழுதிய கட்டுரைத் தொடர் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. பிரான்க்ஸ் அடிமைச் சந்தையில் கறுப்பினப் பெண்கள் வரிசையில் நின்றுகொண்டிருப்பார்கள். குறைந்த கூலிக்கு ஆள் பார்க்கும் சீமாட்டிகள் அங்கு வந்து, தங்களுக்கான அடிமைப்பெண்ணைத் தேர்ந்தெடுத்து கூலி பேரம்பேசுவார்கள். பெரும்பாலும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் கூலி மிகக் குறைவாகவும், அவர்கள் செய்யவேண்டிய பணிகள் மிக அதிகமாகவும் இருக்கும்.

பத்திரிகையாளராக இருந்த மார்வெல் குக், அடிமைப் பணிப்பெண்ணுக்குரிய மாற்று உடையை ஒரு காகிதப் பையிலும்   நூறாண்டுகளின் வரலாற்று இழிவை நெஞ்சிலும் சுமந்து வரிசையில் நின்றார். `காகிதப்பைக் கும்பல்’ என்றுதான் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அங்கு தன்னையும் யாராவது சில மணி நேரங்களாவது விலைக்கு வாங்குவார்களா என்கிற ஆயிரக்கணக்கான கறுப்பினப் பெண்களின் துயரைச் சுமந்து நின்றார்.

பல இழிவான வேலைகளைப் பார்த்தார். அப்படி வேலைபார்த்து, அதன் அவலங்களை அவர் தொடர் கட்டுரையாக எழுதினார். `நான் ஓர் அடிமை’ என்று தலைப்பிட்டு ஐந்து கட்டுரைகள் டெய்லி காம்பஸில் வெளிவந்தன.  அடிமைப்பெண்கள் நிற்கும் கோலம், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும் விதம், அவர்களுக்கு அளிக்கப்படும் பணிகள், ஏற்கெனவே மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கூலியை மேலும் குறைக்க, சீமாட்டிகள் சொல்லும் குற்றச்சாட்டுகள் என்று மிக விரிவாகவே அந்தக் கட்டுரைத் தொடர் இருந்தது. அமெரிக்காவின் இறுகிய மனசாட்சியை உலுக்கிய கட்டுரைத் தொடர் அது.

நின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்

2000-த்தின் தொடக்கத்தில் மிமி சகரோவா என்கிற பல்கேரிய-அமெரிக்கப் பத்திரிகையாளர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஏழை இளம் பெண்கள் எப்படி பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பது பற்றி ஓர் ஆவணப்படம் எடுத்தார். மிமி-யின் 10 வருட உழைப்பு அந்தப் படம். அதில் ஒரு கட்டத்தில் துருக்கியில் ஒரு பாலியல் தொழிலாளியாக மாற்று அடையாளத்தைப் புனைந்துகொண்டு பல அதிர்ச்சிகரமான விஷயங்களை வெளிக்கொண்டு வந்தார். `The price of sex’ (பாலியலின் விலை) என்று தலைப்பிடப்பட்டு வெளியான அந்த ஆவணப்படம், பலவிதங்களில் தனது வாழ்க்கையை மாற்றியதாக மிமி சொல்கிறார். `என் கனவுகளைத் தின்னக் காத்திருந்த உலகம் அது’ என்கிறார் அவர்.

2011-ம் ஆண்டில் அமெரிக்க எழுத்தாளர் சுகி கிம், வட கொரியாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்து அங்கு நடந்துகொண்டிருந்த அதிகாரவர்க்க அடக்குமுறைகளை பதிவுசெய்து, பின்னர் புத்தகமாக எழுதினார். `கருணையே இல்லாத நாடு’ என்பதுதான் கிம்மின் வடக்கொரியா பற்றிய மனப்பதிவு. 

மிகச் சமீபத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர், பிரெஞ்ச் பத்திரிகையாளர் அன்னா எரெல் (புனைப்பெயர்) ஐரோப்பிய இளைஞர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் எப்படி கவர்ந்திழுக்கிறது என்பதை அறிய தன்னை மெலடி என்கிற ஒரு மதம் மாறிய இளம் முஸ்லிம் பெண்ணாக ஃபேஸ்புக்கில் அடையாளப்படுத்திக்கொண்டு, அபு பிலெல் என்கிற ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸைச் சேர்ந்த  நபருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டார். மதம் மாறிய முஸ்லிம் பெண் என்பதை நம்பிய பிலெல், அன்னாவிடம் ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டதுடன் அவரை மணக்கவும் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதெல்லாம் ஒரு புலனாய்வுக் கட்டுரைக்காகத்தான் செய்தார் என்பது வெளிப்பட்டபோது ஐ.எஸ்.ஐ.எஸ், அன்னா மீது ஃபட்வா விதித்தது. இன்றளவும் பிரெஞ்சு காவல்துறையின் பாதுகாப்பில் இருந்துவரும் அன்னாவின் இயற்பெயரின் ரகசியம்கூட இப்போது வரையில் காப்பாற்றப்பட்டுவருகிறது.

நின்று வெல்லும் நீதி - அண்டர்கவர் இதழியல் - கவிதா முரளிதரன்

பிளை தொடங்கி ராணா அயுப் வரையில் அண்டர்கவர் இதழியலில் ஈடுபடும் பெண்கள் பலரும் தங்களது உயிரைப் பணயம்வைத்து அதைச் செய்தாலும், பல சர்ச்சைகளை ஈர்க்கவும் செய்கிறார்கள். குறிப்பாக, அண்டர்கவர் இதழியல் எவ்வளவு தூரம் அறம் சார்ந்த இதழியலாக இருக்கிறது என்கிற கேள்வியைப் பலரும் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நேரடி புலனாய்வு இதழியலில் போதிய ஆதாரங்கள் பெற முடியாமல் மக்களுக்கு உண்மைகளைக் கொண்டுசேர்க்க முடியாமல், போகும் நெருக்கடி உருவானால் மட்டுமே அண்டர்கவர் இதழியலில் ஈடுபட வேண்டும் என்பது பல சர்வதேசப் பத்திரிகையாளர்கள் அமைப்புகளின் கோட்பாடாக இருக்கிறது. அவசியமில்லாதபோது அண்டர்கவர் இதழியலில் ஈடுபடுவது, ஊடகவியலாளர்கள் மீதும் நிர்வாகங்கள் மீதும் பொதுமக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் என்றே அந்த அமைப்புகள் சொல்கின்றன. `வேறு எந்த வகையிலும் உண்மையை வெளிக்கொண்டு வர முடியாது என்கிற நிலை உருவானால் மட்டுமே அண்டர்கவர் இதழியல் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்கிறது Society of Professional Journalists என்கிற அமைப்பின் விதிகள். 

See also: புறக்கணிக்கப்படும் பெண் எழுத்து - சு.தமிழ்ச்செல்வி

ராணா அயுப் அப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்ட பிறகே, மைதிலி தியாகி பிறந்தார். வேறு எந்த வகையிலும் மனநலக் காப்பகத்தில் நுழைய முடியாது என்கிற நிலையை உணர்ந்தே `பிளை’ என்று பேர் சூட்டிக்கொண்டார் எலிசபெத்.

பல சர்ச்சைகளை உருவாக்கி வரும் அண்டர்கவர் இதழியல் அதே நேரம் இருண்ட, புதைந்தே கிடக்கும், எப்போதும் வெளிவரும் வாய்ப்பே இல்லாத பல உண்மைகளையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பது மறுக்க முடியாது. மறுக்கப்பட்ட நீதிகளை அது பெற்றுத் தந்திருக்கிறது. உண்மையைப்போல, நீதியைப்போல வலிமையானதும் நியாயம் கொண்டதும் வேறு எது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism