Published:Updated:

"என்னாலயே முடியுதுன்னா, உங்களால முடியாதா என்ன?’’ - நகுலின் ஃபிட்னஸ் ரகசியம் #FitnessTips

நடிகர் நகுல் தன் ஃபிட்னெஸ் ரகசியம் பற்றி விவரிக்கிறார்.

"என்னாலயே முடியுதுன்னா, உங்களால முடியாதா என்ன?’’ - நகுலின் ஃபிட்னஸ் ரகசியம்  #FitnessTips
"என்னாலயே முடியுதுன்னா, உங்களால முடியாதா என்ன?’’ - நகுலின் ஃபிட்னஸ் ரகசியம் #FitnessTips

குல்...  `காதலில் விழுந்தேன்' படம் வெளியானபோது  `` `பாய்ஸ்’ படத்துல நடிச்சது இந்த பையன்தானா? என்னப்பா ஆளே மாறிட்டாரு.... அடையாளமே தெரியலையே...’’ என ஆச்சர்யப்படவைத்தது அவருடைய ஃபிட்னஸ்! அண்மையில் தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவில் இவர் பதிவிட்டிருந்த எக்சர்சைஸ் வீடியோ, வாவ் ரகம்!  `செய்’ படத்தின் ரிலீஸுக்காகக் காத்திருக்கும் நகுலிடம், அவரின் ஃபிட்னஸ் குறித்துக் கேட்டால் கடகடவெனக் கொட்டுகிறார்...

 ``பொதுவா செலிப்ரிட்டி லைஃப்ல, படத்துக்காக பண்ற எக்சர்சைஸ், தினசரி வாழ்க்கையில பண்ற எக்சர்சைஸ்னு ரெண்டு டைப் இருக்கு. படத்துக்காக பண்றது, ஒவ்வொரு தடவையும் மாறுபடும். 'வல்லினம்' படத்துலயே, பேஸ்கட்பால் விளையாடாம, நார்மல் லைஃப் லீட் பண்ற இடங்கள்ல கொஞ்சம் குண்டா, கொழுகொழுனு இருப்பேன். மற்ற இடங்கள்ல, அத்லெட்டா ஃபிட்டா இருப்பேன். அதெல்லாம், படத்துக்காகப் பண்றது. இதுதவிர என்னோட ரொட்டீன் லைஃப் ஃபிட்னஸுக்கு, மசில்ஸ் ஸ்ட்ரெங்த்துக்கான (தசைப் பயிற்சிகள்) எக்சர்சைஸ் பண்றேன். பாடி-பில்டிங்குக்கான பயிற்சி மாதிரிதான் என்னோட பயிற்சி முறைகளெல்லாம் இருக்கும். வொர்க்-அவுட்ஸ் செய்ய ஆரம்பிச்ச புதுசுல, வாரத்துல அஞ்சு நாள் செஞ்சுக்கிட்டு இருந்தேன்... இப்போ மூணு நாளா குறைச்சுட்டேன். இதோட சேர்த்து, கார்டியோ எக்சர்சைஸ் வாரத்துக்கு ரெண்டு தடவை செய்யறேன்.

 ``சாப்பாடு விஷயத்துல ரொம்ப கவனமா இருப்பேன். இப்போ 'கீடோ' ( Keto), 'பேலியோ'னு (Paleo) நிறைய டயட் டெக்னிக்ஸெல்லாம் இருக்கு. எனக்கு அது எதுவும் ஒத்து வராது. வீட்ல சமைக்கிற சாப்பாட்டைத்தான் சாப்பிடுறேன். ஒவ்வொரு டயட்டும் குறிப்பிட்ட காரணத்துக்காக செய்றது. உதாரணமா, உடல் எடை குறையணும்னு நினைக்கறவங்களுக்கு ஒருவகை டயட், உடல் எடை அதிகரிக்க இன்னொண்ணுனு ஃபாலோ பண்ணுவாங்க. இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கு. உடல் எடை குறைஞ்ச பிறகு, அதிகரிச்ச பிறகு... அடுத்து வேறு ஒரு டயட்டை, வேறொரு காரணத்துக்காக ஃபாலோ பண்ணவேண்டி வரும். என்னால வாழ்க்கை முழுக்க ஒரு காரணத்தையும் நோக்கத்தையும் தேடி அலைய முடியாது. இதுமாதிரியான 'தேடல்'கள் இல்லாமக்கூட பேலன்ஸுடு டயட் ஃபாலோ பண்ணலாம். நான் அப்படித்தான். வீட்டுச் சாப்பாடு, அதுலயும் பிடிச்ச சாப்பாட்டைத்தான் சாப்பிடுவேன். நான் பயங்கரமான ஃபுட்-லவ்வர். 'எனக்கு இது பிடிக்காது'னு எந்தச் சாப்பாட்டையும் சொல்ல மாட்டேன். எல்லாத்தையுமே ட்ரை பண்ணுவேன். எவ்வளவு சாப்பிடப் போறேங்கிறதுல மட்டும் ரொம்ப கான்ஷியஸா இருப்பேன். 'போர்ஷன் கன்ட்ரோல்' (Portion Control)தான் என்னோட டயட் ஸ்லோகன். என்னதான் பிடிச்ச சாப்பாடா இருந்தாலும், குறிப்பிட்ட அளவுக்கு வந்ததும் மனசைக் கட்டுப்படுத்திக்குவேன். ஒரு கப் சாதம், அம்பது சதவிகிதம் கார்ப்ஸ், இருபது சதவிகிதம் புரதம், 20 சதவிகிதம் கொழுப்பு... இப்படி ரெகுலர் பேலன்ஸுடு டயட்தான் நான் ஃபாலோ பண்றேன். அதேபோல, சாப்பாட்டுல வெள்ளைப் பொருள்கள் (சர்க்கரை, அரிசி...), ஜங் ஃபுட்ஸ், பால், இனிப்பு... இதையெல்லாம் சேர்த்துக்க மாட்டேன். குறிப்பா, சர்க்கரைக்கும் மைதாக்கும் நோ!

எக்சர்சைஸ் ரொம்ப முக்கியம். சோம்பேறித்தனப்பட்டு எக்சர்சைஸ் பண்ணலைன்னா, அன்னைக்கு வேணா ஜாலியா இருக்கும். குறிப்பிட்ட வயசுக்கு மேல உடம்பு கஷ்டப்பட ஆரம்பிச்சுடும். சில பேர் எவ்வளவு வயசானாலும், இளமையா தெரிவாங்க. காரணம், சின்ன வயசுல அவங்க பண்ணின டயட், ஃபிட்னஸ் பயிற்சிகள். அதுக்காக, எக்சர்சைஸ்னு சொன்னவுடனே  `இன்னைக்கு இவ்வளவு வெயிட் தூக்கணும், தூக்கியே ஆகணும்’னு முதல் நாளே எல்லாத்தையும் பண்ணக் கூடாது. முதல் ஸ்டேஜ்லருந்து கொஞ்சம் கொஞ்சமா நம்மளோட கெபாசிட்டியை அதிகரிக்கணும். ஃபிட்னஸுக்கான பயிற்சிகளையெல்லாம் லைஃப்ஸ்டைலா மாத்திக்காதவங்களால என்ன பண்ணாலும் ஃபிட்டா இருக்க முடியாது’’ என்றவரிடம், "உடல் எடையை ஏன் குறைச்சோம்னு ஃபீல் பண்ணினதுண்டா?" என்று கேட்டோம்...

 ``நிச்சயமா இல்லை. சின்ன வயசுலருந்தே குண்டா இருக்கோம்ங்குற எண்ணம் எனக்கு உண்டு.  `சட்டை சைஸ் பத்தலை’, `பேன்ட் சைஸ் பத்தலை’ங்கிற சூழல் வந்தப்போ, என்னோட தாழ்வு மனப்பான்மை ரொம்ப அதிகமாகிடுச்சு. 'சினிமா தான் நமக்கு'னு ஸ்ட்ராங்கா முடிவெடுத்தப்போ, குண்டா இருக்கிறது எந்தச் சூழ்நிலையிலையும் டிஸ்-அட்வான்டேஜ் ஆகிடக் கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்.  `படத்துக்காகத்தான் ஒல்லியானேன்’னு சொல்ல முடியாது. என்னோட தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி எறிய, இதையொரு சான்ஸா யூஸ் பண்ணிக்கிட்டு உடல் எடையைக் குறைச்சேன். 

 `பாய்ஸ்’ படத்தை நடிச்சு முடிச்சப்பவே,  `இனி நமக்கு சினிமாதான்’னு முடிவு பண்ணிட்டேன்.  `நாமும் ஹீரோவா பண்ணணும்'னு ரொம்ப ஆசைப்பட்டேன்.  `காதலில் விழுந்தேன்’ படத்துக்கு முன்னாடி  `ஒரு மாசத்துல பத்து கிலோ எடையைக் குறைக்கணும்'னு முடிவு பண்ணி பெசன்ட் நகர் பீச் ரோட்ல மத்தியானம் ஒரு மணிக்கு ஓடியிருக்கேன். ரோடு டூ பீச், பீச் டூ ரோடுனு ஓடிக்கிட்டே இருப்பேன். மத்தியான நேரத்துல கூட்டம் இருக்காதுங்கறதால, எதைப் பத்தியும் யோசிக்காம எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் ஓடுவேன். டயட்லயும் இப்படித் தப்புப் பண்ணியிருக்கேன். `வெறும் பச்சைப் பயறுதான் சாப்பிடுவேன்’னு சொல்லி, வேற ஃபுட்ஸே எடுத்துக்காமல்லாம் இருந்திருக்கேன். எப்படியாச்சும் உடம்பைக் குறைக்கணும்கிற எண்ணம் எனக்குள்ள இருந்துச்சு. அதுக்குப் பிறகு நிறைய பேர்கிட்ட திட்டும், சிலரோட அறிவுரைகளும் கிடைச்சதால கொஞ்சம் சரியானேன்.

காலுக்கான பயிற்சிகள்தான் எனக்கு ஃபேவரைட். ஆனா, அதுதான் ரொம்பக் கஷ்டம். எக்சர்சைஸைப் பொறுத்தவரைக்கும் நாம எந்தப் பகுதிக்கு அதிகப் பயிற்சி தர்றோமோ, அதுக்கு மட்டும்தான் நல்லது. ஆனா, கால் பயிற்சிகள் அப்படியில்லை. உடம்புலேயே அதிகமான தசையிருக்குற கால்களுக்கு பயிற்சி கொடுத்தா, மொத்த உடம்பும் ஃபிட்டா இருக்கும். அந்த வகையில, ஸ்குவாட்ஸ் (Squats) என்னோட ஆல்டைம் ஃபேவரைட். ஃபேஸ்புக்குல போட்டிருந்ததுகூட இதுதான். மெடிடேஷனும் என்னோட ஃபேவரைட். எல்லாச் சூழ்நிலையிலயும் எனக்கு பெஸ்ட் ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருக்கும்.

 `காதலில் விழுந்தேன்’ தொடங்கவிருந்த கேப்ல, நான் பண்ணின தப்புத் தப்பான விஷயங்கள் மூலமா, எக்சர்சைஸ்ல என்னல்லாம் செய்யக் கூடாதுன்னு கத்துக்கிட்டேன். சோஷியல் மீடியாவுல நிறைய பேர் என்கிட்ட 'எப்படி ஒல்லியாகறது?'னு அட்வைஸ் கேட்பாங்க. ஒல்லியாகுறதுக்காக நிறைய தப்புப் பண்ணியிருக்கேங்கிற உரிமையில, அவங்களுக்கும் சேர்த்தே ஒரு அட்வைஸ் சொல்றேன்... 'எக்சர்சைஸ் பண்ணணும்னு முடிவெடுத்தவுடனே, சிலர் ட்ரெட்மில்லுல ஓட ஆரம்பிச்சுடுவாங்க. அதெல்லாம் தப்பு! உங்களுக்கு என்ன தேவை, எதுக்காக எக்சர்சைஸ் பண்றீங்கனு யோசிச்சு, அதுக்கேத்த முறைகளை மட்டும் செய்யுங்க. சரியான புரிதல் இல்லாம, ஹெவி எக்சர்சைஸ் பண்றது தப்பு. அதேபோல, எக்சர்சைஸ்ல நோ ஷார்ட் கட்ஸ்! 

தினமும் காலையில எந்திரிச்சதும் பல் துலக்குறது எப்படி ஒரு நல்ல பழக்கமோ டிஸிப்ளினோ... அப்படித்தான் எக்சர்சைஸ் பண்றதும்! ஸோ, முதல்ல எக்சர்சைஸைப் பழக்கிக்கணும். என்னைப் பொறுத்தவரைக்கும், ஜிம்மைப் பரிந்துரைக்க மாட்டேன். காலையில எந்திருச்சதும் எக்சர்சைஸ் பண்ண ஆரம்பிச்சிடுவேன். நான் பேசிக்கா செம சோம்பேறி... காலையில எழுந்திருச்சு ஜிம்முக்குக் கிளம்பிப் போறதுக்குள்ள மூட் மாறினாலும் மாறிடும். அப்படிப்பட்ட நானே, ஃபிட்னஸுக்காக டைம் ஒதுக்கி, ஃபாலோ பண்ணி இவ்வளவு பண்றேன். என்னாலயே முடியுதுன்னா, உங்களால முடியாதா என்ன?! (If I can Do it, Everyone Can Do it!)...’’ என்று எல்லோருக்கும் நம்பிக்கை தருகிறார் நகுல்.