Published:Updated:

சேப்பாக்கத்தில் குவிக்கப்பட்ட கமாண்டோ படை... ஐ.பி.எல்-க்காக முடக்கப்பட்ட முக்கியச் சாலைகள்!

சேப்பாக்கத்தில் குவிக்கப்பட்ட கமாண்டோ படை... ஐ.பி.எல்-க்காக முடக்கப்பட்ட முக்கியச் சாலைகள்!
சேப்பாக்கத்தில் குவிக்கப்பட்ட கமாண்டோ படை... ஐ.பி.எல்-க்காக முடக்கப்பட்ட முக்கியச் சாலைகள்!

காவிரி மேலாண்மை வாரியம் கேட்டால் சென்னை சேப்பாக்கம் சாலைக்குப் பூட்டு... ஜல்லிக்கட்டு கோரி குரல் கொடுத்தால் மெரினாவுக்குப் பூட்டு என மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வாக இதுபோன்ற செயல்பாடுகளை சென்னையில் முதல்முறையாக அரங்கேற்றியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் என இந்தத் திட்டத்தை மெள்ள மெள்ள நகர்த்திக்கொண்டு போகவேண்டியதுதான் பாக்கி! 

போராட்டம் நடத்துவதற்காக மக்கள் திரண்டு விடக் கூடாது என்பதால், முன்னெச்சரிக்கையாக சேப்பாக்கம், மெரினா போன்ற இடங்களை ஊருக்குப் ஒதுக்குப்புறமாக மாற்றம் செய்ய முடியுமா என்பது பற்றி `ஆலோசனைக் கூட்டம்' நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, வாலாஜாசாலை, பெல்ஸ் சாலைகளில் வசிப்போரின் பிள்ளைகளுக்குப் பொதுத்தேர்வுகள் இல்லையா? அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அவசர மருத்துவ உதவியோ, இன்னபிற உதவிகளோ தேவைப்படப் போவதில்லையா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஏனென்றால், ஐ.பி.எல். போட்டி நடைபெறவுள்ள சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றிலும் அந்தளவுக்குப் பாதுகாப்பு கெடுபிடிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

சென்னை ரசிகர்கள்...!

கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்பட பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களுக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் மிகவும் பிடித்தமான ஒன்று. `நம் நாடு', `நம்ம அணி' என்ற சுய பிடிப்போ, தாக்கமோ இல்லாமல் விளையாட்டை விளையாட்டாகப் பார்க்கும் சென்னை ரசிகர்களின் பண்புதான் அதற்குக் காரணம். இந்திய வீரர் ஒருவர் வீசும் பந்தை `சிக்ஸராக' தூக்கியடிக்கும் வெளிநாட்டு வீரர்களையும் கைதட்டி வரவேற்கும் மனம் படைத்தவர்கள் சென்னை ரசிகர்கள். ஆனால், தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ள தற்போதைய அசாதாரணமான சூழலில் சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் சற்றே தயக்கத்தோடுதான் நுழையப் போகிறார்கள் என்றே தெரிகிறது. இப்படி ஒரு தருணம் உருவாகியிருப்பது, சென்னை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை என்றுகூட சொல்லலாம். இவ்வளவு பதற்றத்திற்குக் காரணம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக மாறியுள்ள காவிரி தண்ணீர்ப் பிரச்னைதான். `காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்கக் கோரி, தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுபற்றியெல்லாம் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

மைதானம் அமைந்துள்ள சேப்பாக்கம் பகுதியில் திடீர் பதற்றத்தை யாராவது உண்டு பண்ணக்கூடும் என்ற அச்சம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. இதனால், அண்ணா சாலை முதல் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, கடற்கரை காமராஜர் சாலைவரை பதற்றம் சூழ்ந்திருப்பதை போலீஸாரின் கெடுபிடிகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

வேல்முருகனும், அமைச்சர் ஜெயகுமாரும்...!

ரசிகர்களோடு, ரசிகர்களாக கிரிக்கெட் மைதானத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துவிடாமல் தடுக்க, ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் சொல்கிறார்கள். கறுப்பு நிற ஆடை, பேட்ஜ் அணிந்து வருகிறவர்கள் ஸ்டேடியத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வலைப்பயிற்சிக்காக கிரிக்கெட் வீரர்கள், ஸ்டேடியத்திற்கு வந்தபோதும் இதே அளவு பாதுகாப்பும், கெடுபிடியும் இருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கிரவுன் பிளாசா என்னும் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தபோதும், இதே அளவுப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஐ.பி.எல். போட்டி குறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார், ``காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உணர்வுகளை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. போட்டியை நடத்துவதும், நடத்தாததும் ஐ.பி.எல். நிர்வாகத்தின் கையில்தான் இருக்கிறது. அதேவேளையில் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு உள்ளிட்டவற்றை, தமிழக அரசு நிச்சயம் செய்து கொடுக்கும். ஐ.பி.எல். போட்டி நடைபெறாமல் இருந்தால் நல்லது" என்றார். 

``காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகளை நடத்த விடமாட்டோம். மீறி போட்டிகளை நடத்தினால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். கிரிக்கெட் அமைப்புகளின் நிர்வாகிகள்தாம் விளைவுகளைச் சந்திக்க வேண்டும்" என்று  தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் கடுமையாக எச்சரித்துள்ளார். எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, கறுப்பு வண்ண பலூன்களை சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகே வேல்முருகன் மற்றும் அவரின் கட்சியினர் பறக்க விட்டனர்.

கமாண்டோ படையினர் பாதுகாப்பு !

காவிரி உரிமை மீட்புக்குழு மற்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர், ``தமிழகத்தில் காவிரி விவகாரம் தலைதூக்கியுள்ள இந்த நேரத்தில் ஐ.பி.எல். விளையாட்டை தள்ளி வைக்க வேண்டும்; மீறி போட்டிகளை நடத்தினால், நாங்கள் அறவழியில் எங்களின் எதிர்ப்பைக் காட்டுவோம்" என்று கூறியுள்ளனர்.

``சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு கமாண்டோ படையின் ஓர் அணி, அதிவிரைவுப் படையின் நான்கு அணிகள் என பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்டேடியத்திற்குச் செல்லும் அணுகு சாலைகள் அனைத்திலும் உளவுப் பிரிவுப் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல், மைதானம் உள்பட அனைத்துப் பகுதிகளும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிநீர் பாட்டில், கூலிங் கிளாஸ், பேனர், கொடி, செல்போன், லேப் டாப், ரேடியோ, டிஜிட்டல் டைரி, கைப்பை, சூட்கேஸ், தின்பண்டங்கள், பைனாகுலர், இசைக் கருவிகள், தீப்பெட்டி, வேஸ்ட் பேப்பர், பேனா போன்றவற்றை மைதானத்துக்குள் எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்" என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  

சேப்பாக்கம் சாலைக்குப் பூட்டு!

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே இன்று இரவு ஐ.பி.எல். லீக் போட்டி நடைபெற இருப்பதால், போட்டி நடைபெறும் சேப்பாக்கம் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும், இன்று மாலையிலேயே மூடப்பட்டு விடும். போட்டிக்கான டிக்கெட் இல்லாமல் சேப்பாக்கம் - பெல்ஸ் சாலை சந்திப்பு வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடும் மக்களை கண்காணிப்புப் பணியில் உள்ள போலீஸார், தேவைப்பட்டால் விசாரணைக்கு உட்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் நடத்தக் கூடாது என்பதால், உலகின் மிக அழகான, நீளமான இரண்டாவது கடற்கரை என்று கொண்டாடப்படும், `மெரினா'-வுக்கு போலீஸார் ஏற்கெனவே பூட்டுப் போட்டு விட்டார்கள். இப்போது, ஐ.பி.எல். போட்டி சுமுகமாக நடைபெறவேண்டும் என்பதால், சேப்பாக்கம் மைதானத்திற்குச் செல்லும் முக்கியச் சாலைகளுக்கும் பூட்டுப் போடவுள்ளனர். கடந்த காலங்களில், இது போன்ற போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நூற்றுக்கணக்கில் இப்பகுதியில் நடந்துள்ளன, அப்போதெல்லாம், யாரும் குறிப்பிட்ட பகுதியைப் பூட்டி `சீல்' வைத்த வரலாறு கிடையாது.

``போராட்டங்களை ஒடுக்குவதாகச் சொல்லிக் கொண்டு, மெரினா கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்கள் தடுக்கப்படுகிறார்கள். கடற்கரையின் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மயிலை சத்யா முறையீடு செய்துள்ளார். `இதை தனி மனுவாகத் தாக்கல் செய்யுங்கள்' என்று கோர்ட் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. 

மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்கு, மக்களிடமிருந்தும், எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்தும் வெளிப்படும் எதிர்ப்பின் `வெயிட்டேஜைப்' பொறுத்து அரசும், காவல்துறையும் தங்களின் முடிவை மாற்றிக்கொள்கின்றன என்பதுதான் கடந்தகால அனுபவம்!

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு என்னாச்சு?

தமிழக மக்கள் நலன் சார்ந்த முந்தைய போராட்டங்களை விடவும், காவிரிப் பிரச்னைக்காக இப்போது நடைபெறக்கூடிய போராட்டங்களின் வீரியம் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. நெடுஞ்சாலை சுங்கச்சாவடி உடைப்பைச் சின்னதாகத் தொடங்கி வைத்தவர்கள், அடுத்தகட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, பிரதமருக்கும் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியைப் பார்வையிட, வரும் 12-ம் தேதி சென்னைக்கு வருகை தரவுள்ள பிரதமர் மோடியை வரவேற்று, கிழக்குக் கடற்கரை சாலையில் வைக்கப்பட்டுள்ள `கட்-அவுட்'-களை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். சில கட் அவுட்களில், `நீங்கள் வேண்டாம், காவிரி மட்டும்தான் வேண்டும்' என்று கறுப்பு மையினால் எழுதியுள்ளனர்.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினோ, ``கறுப்புச் சட்டை, ரவிக்கை  அணிந்து பிரதமருக்கு எதிர்ப்பைக் காட்டுவோம்" என்று தெரிவித்துள்ளார். கோடிகளைக் கொட்டிக்கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் ஒருபக்கம், போட்ட பணத்தை டிக்கெட் விற்பனை, விளம்பரங்களிலிருந்து எடுக்க வேண்டிய வணிகம் ஒரு பக்கம், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் கோரி மக்களின் போராட்டம் மற்றொரு பக்கம் எனச் சிக்கல் நீடித்துக்கொண்டிருக்கிறது. ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்டைக் கொளுத்தி, `இது ஆரம்பம், நெய்வேலி முதல் பல இடங்களில் இனிமேல்தான் தொடரும்' என்று எச்சரிக்கும் போட்டோ, வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கிறது.

இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், ``ஐ.பி.எல். போட்டியில் நடந்த சூதாட்டத்தின் உண்மைத்தன்மை வெளியில் வராமல் இந்த விளையாட்டை நடத்தக் கூடாது" என்று கோர்ட்டுக்குப் போன ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் கோரிக்கையும் நியாயத்துக்கான காத்திருப்பில் உள்ளது...