Published:Updated:

போதும் என்ற மனோபாவம் ஏன் தேவை? - வாழ்க்கைப் பாடம் சொல்லும் கதை #FeelGoodStory

போதும் என்ற மனோபாவம் ஏன் தேவை? - வாழ்க்கைப் பாடம் சொல்லும் கதை #FeelGoodStory
போதும் என்ற மனோபாவம் ஏன் தேவை? - வாழ்க்கைப் பாடம் சொல்லும் கதை #FeelGoodStory

`இந்த அருமையான வாழ்க்கையை எங்களுக்கு அளித்ததற்கு நன்றி கடவுளே! வேண்டிய அளவுக்கு இந்த வாழ்வை நாங்கள் நேசிக்காமல் இருந்திருந்தால், அதற்காக எங்களை மன்னித்துவிடுங்கள்’ - பிரபல அமெரிக்க எழுத்தாளர் காரிசன் கெய்லர் (Garrison Keillor) சொன்ன அற்புதமான வாசகம் இது. துயரச் சம்பவங்கள், உடல்நலக் கோளாறுகள், எதிர்ப்புகள், ஏமாற்றங்கள்.. எத்தனையோ இன்னல்கள் இருந்துவிட்டுப் போகட்டும்; வாழ்க்கையின் மேல் மனிதர்களுக்குத் தேவை திருப்தி... `இது போதும்’ என்கிற மனோபாவம். இந்த வரம் வாய்க்காதவர்கள் எதையெதையோ தேடி ஓடினாலும், எத்தனையோ உயரங்களைத் தொட்டிருந்தாலும் ஏதுமில்லாதவர்களே! `போதும் என்ற மனம்’ ஏன் வேண்டும்... அது அள்ளித்தரும் பரவச அனுபவம் எப்படியிருக்கும் தெரியுமா? எடுத்துச் சொல்கிறது இந்தக் கதை. 

அது பிரேசிலில் இருக்கும் சின்னஞ்சிறு கடற்கரை கிராமம். ஒருநாள் அந்த ஊருக்கு ஏதோ வேலையாக ஒரு தொழிலதிபர் வந்திருந்தார். காலை நேரம். கடற்கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது கடலிலிருந்து, கரையை நோக்கி சிறு படகு ஒன்று வந்தது. அதில் ஒரு மீனவர் இருந்தார். படகு நெருங்க நெருங்க அந்த மீனவர் சில பெரிய மீன்களைக் கடலில் வலைவீசிப் பிடித்திருந்தார் என்பதையும் தொழிலதிபர் தெரிந்துகொண்டார். மீனவர் கரையில் இறங்கியதும், தொழிலதிபர் அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்; சரளமாக, நெடுநாள் பழகியவர்போல் பேச ஆரம்பித்தார். ஒரு தொழிலதிபருக்கான முக்கியமான தகுதியே சரளமாகப் பேசுவதுதானே! 

``இந்த மீன்களையெல்லாம் பிடிக்கிறதுக்கு உங்களுக்கு எவ்வளவு நேரமாச்சு?’’ 

``அதைக் கேட்குறீங்களா... ரொம்ப இல்லை ஒன்றரை மணி நேரமாச்சு...’’ 

``இன்னும் கொஞ்ச நேரம் கடல்லயே இருந்து மீன் பிடிச்சிருந்தீங்கன்னா, இதைவிட அதிகமா மீன்கள் கிடைச்சிருக்கும்ல?’’ 

``உண்மைதான். ஆனா, இப்போ நான் பிடிச்சிருக்குற மீன்களே எனக்கும் என் குடும்பத்துக்கும் போதுமானது.’’ 

``சரி... ஒரு நாள் காலையில எந்திரிச்சதுலருந்து நீங்க வழக்கமா செய்யுற வேலைகள் என்னென்ன?’’ 

``காலையில சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடியே எந்திரிச்சிடுவேன். அப்புறம் மீன் பிடிக்க கடலுக்குள்ள போயிடுவேன். கொஞ்சம் மீன் பிடிப்பேன். அதை மார்க்கெட்ல வித்துட்டு வீட்டுக்குப் போவேன். என் குழந்தைகளோட விளையாடுவேன். மத்தியானம் என் மனைவியோட ஒரு குட்டித் தூக்கம் போடுவேன். சாயந்திரம், என் நண்பர்களோட சேர்ந்து காபி ஷாப், விருந்துனு போவேன். கித்தார் வாசிக்கிறது, பாட்டுப் பாடுறது, டான்ஸ் ஆடுறதுனு பொழுது போயிடும்...’’ 

மீனவர் சொன்னதை கவனமாகக் கேட்டார் அந்த தொழிலதிபர். ``நான் ஒண்ணு சொல்றேன்... கேட்குறீங்களா?’’ 

``நான் பிசினஸ் மேனேஜ்மென்ட்ல முனைவர் பட்டம் வாங்கினவன். மிகச் சிறந்த வெற்றியாளராக நீங்க உருவாக என்னால உதவ முடியும்...’’ 

``சொல்லுங்க...’’ 

``இந்த நிமிஷத்துலருந்து மீன் பிடிக்கப் போகும்போது, எவ்வளவு அதிகமா கடல்ல இருக்க முடியுமோ இருங்க. எவ்வளவு மீன்களைப் பிடிக்க முடியுமோ பிடிங்க. அதை வித்துக் கொஞ்சம் பணம் சேர்த்துடுங்க. அப்புறம் அந்தப் பணத்தைக் கொண்டு இதைவிட பெரிய படகை உங்களால வாங்க முடியும். அதிகமான மீன்களையும் உங்களால பிடிக்க முடியும். ரொம்ப சீக்கிரத்துல இன்னும் சில படகுகளை உங்களால வாங்க முடியும். நீங்களே சொந்தமா ஒரு கம்பெனியை ஆரம்பிக்கலாம். டின்ல மீனை அடைச்சு விக்கிற கம்பெனியில இப்போ நல்ல லாபம் கிடைக்குது. அதை ஆரம்பிக்கலாம். நிறையா பணம் சேர்ந்ததும், இந்தச் சின்ன ஊரை விட்டுட்டு சாவோ பாவ்லொ (Sao Paulo) நகரத்துக்கு இடம்பெயரலாம். அங்கேயே உங்க கம்பெனியோட ஹெட் ஆபிஸைவெச்சுக்கிட்டு, உங்க கம்பெனியின் பல கிளைகளை ஊர் ஊருக்குத் திறக்கலாம்...’’ 

இப்போது மீனவர் கேட்டார்... ``அதுக்கப்புறம்?’’ 

``அதுக்கப்புறம் என்ன... ஒரு ராஜா மாதிரி உங்க சொந்த வீட்ல வாழலாம். நேரம் நல்லா இருந்துச்சுன்னா, உங்க கம்பெனியை ஒரு பொது நிறுவனமாக உருவாக்கி, அதனோட ஷேர்களை ஷேர் மார்க்கெட்லகூட விடலாம். அப்புறமென்ன... நீங்க பெரும் பணக்காரராகிடுவீங்க...’’ 

``அதுக்கப்புறம்?’’ 

``அதுக்கப்புறம்... நீங்க பெரிய வெற்றியாளரா வலம்வந்துட்டு ஒரு நாள் ஓய்வு பெறுவீங்க. இந்த மாதிரி ஏதாவது ஒரு சின்ன கிராமத்துக்குக் குடி போவீங்க. காலையில சீக்கிரம் எந்திரிச்சி கடலுக்குள்ள போய் கொஞ்சம் மீன் பிடிக்கலாம். அப்புறம் வீட்டுக்கு வந்து குழந்தைகளோட விளையாடலாம். மத்தியான உங்க மனைவியோட ஒரு குட்டித் தூக்கம் போடலாம். சாயந்திரம் ஆகிடுச்சுன்னா உங்க நண்பர்களோட சேர்ந்து காபி ஷாப், விருந்துனு போகலாம். அப்புறம் கித்தார் வாசிக்கிறது, பாட்டுப் பாடுறது, டான்ஸ் ஆடுறதுனு பொழுது போயிடும்...’’ 

மீனவர் இப்போது குழப்பமடைந்தவரைப்போல அந்தத் தொழிலதிபரைப் பார்த்தார்... ``இப்போ நான் அதைத்தானே செஞ்சுக்கிட்டு இருக்கேன்?’’