Published:Updated:

``அஞ்சு புள்ளைங்க கைவிட்டுச்சுங்க... இப்ப காவிரியும் கைவிட்டிருச்சு'' - மீன்கார காளியம்மாள்

``அஞ்சு புள்ளைங்க கைவிட்டுச்சுங்க... இப்ப காவிரியும் கைவிட்டிருச்சு'' - மீன்கார காளியம்மாள்
News
``அஞ்சு புள்ளைங்க கைவிட்டுச்சுங்க... இப்ப காவிரியும் கைவிட்டிருச்சு'' - மீன்கார காளியம்மாள்

``அஞ்சு புள்ளைங்க கைவிட்டுச்சுங்க... இப்ப காவிரியும் கைவிட்டிருச்சு'' - மீன்கார காளியம்மாள்

`காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்' என்ற கோரிக்கையை முன்னெடுத்து தமிழ்நாடே திரண்டு போராடிவருகிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு தமிழகம் தழுவிய ஒரு போராட்டமாக மாறிவருகிறது. காவிரி என்பது, உழவர்களுக்கு மட்டும் பிரச்னையான விஷயம் அல்ல. ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் வரை குடிநீர் கொடுக்கும் தாய்மடி அது. தண்ணீர் தராத கர்நாடகம், தீர்ப்பு எழுதிய உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு, அதற்காக நடக்கும் போராட்டங்கள் போன்றவற்றின் மேலதிக தகவல்கள் காளியம்மாளுக்குத் தெரியாது. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். `காவிரி பொய்த்தால், தனது வாழ்க்கை அழிந்துவிடும்' என்பதுதான் அது. 

ஏனென்றால், அவரது `பொழப்பும்' காவிரியை நம்பியே இருக்கிறது. ``கொள்ளு வெரையாட்டம் நாலு ஆம்பளை புள்ளைங்களையும், ஒரு பெண்ணையும் பெத்தேன். அஞ்சும் என்னை பாரமா நெனச்சு கைவிட்டுருச்சு. 10 வருஷமா எனக்குக் பொழப்பைக் கொடுத்து, அனுசரணையா இருந்தது இந்தக் காவிரி ஆறுதான். அதுவும் என்னைக் கைவிட்டுரும் போலிருக்கே தம்பி" என்றபடி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை கட்டாந்தரையாக காய்ந்து கிடக்கும் காவிரியை வெறித்துப் பார்க்கிறார். அவரது கண்களில் காவிரியில் இல்லாத ஈரம்.

கரூர் மாவட்டம், மாயனூரில் ஓடுகிறது காவிரி. மாயனூருக்கும் காட்டுப்புதூருக்கும் இடையில் இருக்கும் பாலத்தில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர் காளியம்மாள். காவிரியில் பிடிக்கும் மீன்களை வாங்கி கைப்பகுவமாக வறுத்து, மணக்க மணக்க விற்கிறார். அவரது கைப்பக்குவத்துக்குச் சுத்துப்பட்டில் ஏக கிராக்கி. ஆனால்,காவிரியில் தண்ணீர் இல்லாமல், மீன் கிடைக்காமல், விட்டக்குறை தொட்டக்குறையாக நடக்கிறது பிழைப்பு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


 

தொண்டையில் சிக்கிய முள் வலியோடு தொடர்கிறார். ``எனக்குச் சொந்த ஊர் சீப்பலாபுதூர். என் புருஷன் கருப்பண்ணன் உயிரோடு இருந்தவரை பொழப்பும் நல்லா இருந்துச்சு. இந்தக் காவிரியும் நல்லா இருந்துச்சு. 10 வருஷத்துக்கு முன்னாடி அவர் இறந்துட்டார். அதுக்கு பெறவு, என் வாழ்க்கை நொட்டானா போயிடுச்சு. நானும் கணவரும் இதே காவிரி ஆத்துல மீன் பிடிச்சு வித்து, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினோம். தோரணையா கல்யாணமும் பண்ணிவெச்சோம். ஆனால், அதததுக்குத் துணை வந்ததும், எங்களை பாரமா நெனச்சு துரத்திட்டாங்க.

கலங்கி நின்ன எங்களை, `நான் இருக்கேன் வாங்க'னு வாரி அணைச்சு, சோறு போட்டது இந்தக் காவிரிதான் தம்பி. அப்போ வெங்கோடையிலும் காவிரியில் கடல்போல தண்ணி நிக்கும். மீன்கள் துள்ளி விழும். கூடை கூடையாப் பிடிச்சுட்டு வருவார். அதை விற்போம். கைநிறைய காசு புரளும். 10 வருஷத்துக்கு முன்னாடி, பொசுக்குன்னு என் புருஷன் நெஞ்சைப் புடிச்சுகிட்டு தரையில் படுத்தார். என்னை அம்போன்னு விட்டுட்டு போயிட்டார். ஒரு கணம் உலகமே இருண்டாப்புல இருந்துச்சு. அப்பவும் `நான் இருக்கேன் தாயி'னு என் கண்ணைத் துடைச்சது இந்தக் காவிரிதான். எனக்கு மீன் பிடிக்கத் தெரியாது. அதனால், மீனவர்கள் பிடிக்கும் மீனை வாங்கி, தலையில் சுமந்துட்டுபோய் மாயனூர், குளித்தலை, முசிறி என விற்பேன்.

ஆனால்,  வயசு ஏறிட்டே போகுதே தம்பி. நடக்க முடியலை. 80 வயசாவுது. அதனால், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, இந்தத் தள்ளுவண்டியைப் போட்டேன். காவிரியில் பிடிக்கும் அறைஞ்சான், உளுவ, கெண்டை, சிலேபி மீன்களை வாங்கி, வறுத்து விற்க ஆரம்பிச்சேன். பள்ளிக்கூடம் போற பிள்ளைங்க, இந்த வழியா வண்டியில போறவங்க எல்லாம் என் கைப்பக்குவத்துக்கு மயங்கி, வாங்கிச் சாப்பிடுவாங்க. தினமும் 200 ரூபா வரை லாபம் கிடைச்சுட்டு இருந்துச்சு. அதுல வயித்துபாடு, வைத்திய செலவுகளைச் சமாளிச்சேன். ஆனால், போகப் போக காவிரியில் தண்ணீர் வரலை. கோடையில் சொல்ல வேணாம். பாலைவனமா வறண்டு போயிருது. இருக்கிற குட்டை மாதிரியான இடங்களில் மீனைப் பிடிச்சு, ஒரு கிலோ 200 ரூபாய் வரைக்கும் விற்கிறாங்க. அதை வாங்கித்தான் வறுத்து யாவாரம் பண்ண வேண்டியிருக்கு. 

அதுக்காக, விற்கிற மீன் துண்டுகளுக்கு விலை ஏத்தலை. தள்ளுவண்டியில் மக்கள் தேடி வந்து வாங்கிச் சாப்பிடுறதே பெரிய விஷயம். இந்த லட்சணத்துல விலையை ஏத்தினால், யாரு வாங்குவா? இதனால், தினமும் 50 ரூபாய் கிடைக்கிறதே பெரிய விஷயமா இருக்கு தம்பி. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 100 ரூபாய் கிடைக்கும். அதுக்காக, ராத்திரி 10 மணி வரை வேலை செய்யணும். பிள்ளைக கைவிட்டாலும், இதுநாள் வரை சீர்செனத்தியா வாழவெச்ச காவிரி, `என் நிலைமையே சரியில்லை'னு சொல்லுது. பயமாயிருக்கு தம்பி. காவிரியை என் தழைச்சன் பிள்ளையா நம்பி இருக்கேன். அதுவும் கைவிட்டுருச்சுன்னா சோத்துக்கு என்ன பண்ணுவேம்'' என்கிற காளியம்மாள் குரல் உடைந்து விசும்புகிறது.

 வறண்ட ஆற்றின் நடுவில் வெக்கையால் விறைத்துக் கிடந்த ஒரு சிறு மீனை பிய்த்துத் தின்பதற்கு இரண்டு காக்கைகள் கத்தியபடி சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக் காட்சி பாலத்தின் மீது இருக்கும் நமக்கு நடந்தேறும் நாள் வெகு தூரமில்லை!