Published:Updated:

"எதையும் கேஷுவலாக எடுத்துக்கிட்டா ஸ்ட்ரெஸ் வராது!’’ - நடிகர் அனுமோகன் #LetsRelieveStress

"மிகச் சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் எது தெரியுமா?’’ - நடிகர் அனுமோகன்

"எதையும் கேஷுவலாக எடுத்துக்கிட்டா ஸ்ட்ரெஸ் வராது!’’ - நடிகர் அனுமோகன் #LetsRelieveStress
"எதையும் கேஷுவலாக எடுத்துக்கிட்டா ஸ்ட்ரெஸ் வராது!’’ - நடிகர் அனுமோகன் #LetsRelieveStress

இயக்குநராக அறிமுகமாகி, நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் அனுமோகன். 'படையப்பா'வில் இவருடைய 'பாம்பு புற்று' காமெடி வசனம் மிகப் பிரபலம். சினிமா துறையிலிருந்தாலும், எதையுமே தன் மூளைக்குக் கொண்டு போகாமல், சாலையில் நாம் சந்திக்கும் சக மனிதரைப்போல்தான் இருக்கிறார். பழகுவதில் அன்பைப் பரிமளிக்கிறார். அவருக்கு ஏற்பட்ட மனஅழுத்தங்களையும் அவற்றிலிருந்து விடுப்பட்டதையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.  

``அப்போ 'நினைவுச் சின்னம்' படத்துக்கு தயாரிப்பாளரும் நான்தான்;  இயக்குநரும் நான்தான். அதனால ரொம்ப டென்ஷனாகவே இருக்கவேண்டிய சூழல். படத்தோட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு. 

வியாழக்கிழமை இளையராஜா சார் டபுள் பாசிட்டிவ் பார்த்துட்டு, ரீ-ரிக்கார்டிங் வேலைகள்ல தீவிரமா இருந்தார். மறுநாள் `குட் ஃப்ரைடே.'  அன்னிக்குக்கூட கூடுதல் செலவு ஆனாலும் பரவாயில்லை, வேலை பார்க்கலாம்னு முடிவு பண்ணி வேலை பார்த்துக்கிட்டு இருந்தோம். 
திடுதிப்புனு மதியம் ஒரு மணிக்கு ஒரு போன்... 'எங்க அப்பா இறந்துட்டார்'னு தகவல். உடனே கிளம்பி கோயம்புத்துருக்குப் போயிட்டேன். ஒண்ணும் பண்ண முடியலை. காரியமெல்லாம் முடிஞ்சு, 15 நாளைக்குப் பிறகுதான் வர முடிஞ்சுது. 

எல்லா வேலைகளும் முடிஞ்சு படம் ரிலீஸ் பண்ணலாம்னா லேபுக்கு ஏழரை லட்ச ரூபா தரவேண்டியிருந்தது. `நான் கொடுத்துடுறேன்’னு பொறுப்பு ஏத்துக்கிட்ட என் நண்பர் ஒருத்தர் அதைக் கொடுக்கலை.  நாளாக நாளாக, வட்டியும் அதிகமாக ஆரம்பிச்சிடுச்சு. இதனால ரிலீஸ் தேதி மறுபடியும் தள்ளிப்போயிடுமோனு பயந்துட்டேன். 

என்ன செய்யறதுனு தெரியலை. `என்னடா இது... இப்படி அவமானமாப் போயிடுச்சே’னு, என் அப்பாவை நெனைச்சு கலங்கிப் போய் மனசுக்குள்ளேயே கண்ணீர்விட்டேன். பெத்தவங்களோட ஆசீர்வாதம் பாருங்க, மின்னல் மாதிரி பளிச்னு  ஒரு யோசனை. இங்கே யாரையும் கேட்கலை. சொந்த ஊரான கோயம்புத்தூருக்குக் கிளம்பிப் போனேன். அங்கே இருந்த என் நண்பர்கள்கிட்ட சொல்லி வருத்தப்பட்டேன். நண்பர்கள், உடனே எட்டு லட்ச ரூபாயைப் புரட்டிக் கொடுத்தாங்க. 

'இதை நீ உனக்கு எப்போ முடியுமோ அப்போ கொடு போதும். அவசரமெல்லாம் ஒண்ணும் இல்லை'னு சொல்லிட்டாங்க. அப்புறம் படம் ரிலீஸாகி சக்சஸாக ஓடிச்சு. அதுக்கப்புறம், 'அண்ணன்', 'மேட்டுப்பட்டி மிராசு'னு ரெண்டு படம் டைரக்ட் பண்ணினேன். சுமாரா போச்சு.
 கலைப்புலி தாணு சார்தான் என்னை  `வி.ஐ.பி’ படத்துல நடிகனாக்கினார். அதுக்குப் பிறகுதான் நண்பர்களோட கடனைத் திருப்பிக் கொடுத்தேன். 

'நினைவுச் சின்னம்' படம் என் அப்பாவின் நினைவுகளைச் சுமந்ததாகவே அமைஞ்சுது. அப்பாவுக்கு சினிமாவெல்லாம் பெருசா பிடிக்காது. அம்மாவுக்கு சினிமா ரொம்பப் பிடிக்கும். அம்மா எம்.ஜி.ஆர்., சிவாஜி  ரெண்டு பேருக்குமே ஃபேன். புதுசா எம்.ஜி.ஆர்., சிவாஜி படம் வந்துச்சுனா என்னையும் கூட்டிக்கிட்டு சினிமாவுக்குப் போயிடுவாங்க. ஆனா அதுக்கு முன்னாடி காலையிலேயே நான் லேசா இருமுவேன். 'அவன் ஏன் இருமிக்கிட்டு இருக்கான்? அது என்னனு பாரு. அவனைக் கூட்டிக்கிட்டு டாக்டர்கிட்ட போயிட்டு வா'னு சொல்லுவார். அப்பா வேலைக்குப் போனதும் ஸ்கூலுக்குக் 'கட்' அடிச்சிட்டு, நானும் அம்மாவும் காலைக் காட்சி படத்துக்குப் போயிடுவோம். 

அப்படி ஒருமுறை போயிட்டு வந்தப்போ, அந்தத் தியேட்டர் ஆபரேட்டருக்கு ஹெட் மாஸ்டர் வீட்டுக்குப் பக்கத்து வீடு போலிருக்கு. அவர் ஹெச்.எம்கிட்ட சொல்ல,  அவர் என் அப்பாகிட்ட சொல்லிட்டாரு.  இந்த விஷயம் ஸ்கூல் போனதும் எனக்குத் தெரிஞ்சிடுச்சு. அன்னிக்கு அப்பா வீட்டுக்கு வர்ற வரைக்கும் என்ன சொல்லப் போறாரோனு எனக்கும் அம்மாவுக்கும் ஒரே உதறலா இருந்துச்சு. அன்னிக்கு முழுக்க இதே குழப்பம். அப்புறம் நானும் அம்மாவும் 'இனி ஸ்கூல் டேஸ்ல சினிமாவுக்குப் போறதில்லை'னு முடிவு பண்ணினோம்.
 

அப்பா என்னை  மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கவெச்சார். கோவை சி.ஐ.டி காலேஜ்லதான் படிச்சேன். மூணு வருஷம் படிச்சேன். நாலாவது வருஷம் சரியாப் படிக்கலை. சினிமா, நாடகம்னு சுத்திக்கிட்டு இருந்தேன். சினிமா ஆசையில சென்னைக்கு வந்து ஆர்.சுந்தர்ராஜன் சார்கிட்ட உதவி இயக்குநராகச் சேர்ந்துட்டேன். அவர்கிட்ட பல படங்கள்ல வேலை செஞ்சேன். அப்புறம் ரொம்ப நாளாக நேசித்த என் காதலி அனுராதாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவங்க ஐயங்கார். நாங்க ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். 

எங்க வீட்டுல ஏத்துக்கிட்டாங்க. அவங்க அம்மா, அப்பா ஏத்துக்கலை. என் மனைவிகிட்ட 'வா... அவங்களைப் போய் பார்க்கலாம்'னு சொல்லுவேன். `போனா, அவங்க நம்மை அவமானப்படுத்துவாங்க’னு சொல்லுவா. எனக்கும் என் மனைவிக்கும் சாமி கும்பிடுறது தொடங்கி, நிறைய விஷயங்கள்ல  எந்த கருத்து வேறுபாடும் வந்தது கிடையாது. கோவையில எங்க வீட்டுக்கு எதிர்த்த வீடுதான் அவங்க வீடு.  

என் மனைவியின் `அனுராதா’ங்கிற பேரையும், `மோகன்’கிற என் பேரையும் சேர்த்துத்தான் 'அனுமோகன்'னு வெச்சுக்கிட்டேன். நடிகர் மோகன், அமலா, ரேகா நடித்த 'இது ஒரு தொடர்கதை' தொடங்கி, பல படங்களை இயக்கியிருக்கேன். எங்களுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு.  

`சரபம்’ பட டைரக்டர் அருண் என் பையன்தான். என் திருமணம் முடிஞ்சு 33 வருஷம் ஆகுது. இன்னமும் என் மாமியார் எங்ககிட்ட பேச மாட்டாங்க. அவங்க வீட்டு உறவுக்காரர்களின் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் போவோம்... வருவோம். அவங்க மட்டும் பேசவே மாட்டாங்க.  ஒரு டி.வி பேட்டியிலகூட 'நீங்களும் எனக்கு ஒரு அம்மா மாதிரிதான். பழசையே இன்னும் ஏன் மனசுலவெச்சுக்கிட்டு இருக்கீங்க'னு சொன்னேன். அவங்க மனசு மாறலை. இது என் மனசுல ஒரு குறையாகவே இன்னிக்கும் இருக்கு'' என்றவரிடம் "மனஅழுத்தம் போக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளுவீர்கள்?’’ என்று கேட்டோம். 

``எதையுமே கேஷுவலா எடுத்துக்குவேன். சீரியஸா எடுத்துக்க மாட்டேன்.  நம்மைவிடக் கஷ்டப்படுறவங்களைப் பார்த்து நான் ஆறுதல்பட்டுக்குவேன். மசூதி, கோயில், சர்ச் எல்லாத்துக்கும் போவேன். எல்லா சாமிகளையும் கும்பிடுவேன். ரொம்ப பிரஷராக இருந்தா,  என்னோட ஸ்கூல், லைஃப் என் காலேஜ் லைஃப் இதையெல்லாம் அசைபோடுவேன். காதலிக்கும்போது நான் விரும்பிக் கேட்ட காதல் பாடல்களை திரும்பக் கேட்பேன். கார்லயும்  என் ரூம்லயும் இளையராஜா பாடல்கள் ஒலிச்சுக்கிட்டே இருக்கும். அதைவிட வேற 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' என்ன இருக்கப் போகுது?

 என்னைப் பொறுத்தவரை எனக்கு எதிரிகளே இருக்கக் கூடாது. எல்லோரும் எனக்கு நட்பாக இருக்கணும்னு நினைப்பேன். என்னை யார் பார்த்தாலும், `அய்யோ இவன் வந்துட்டானே'னு நினைக்கக் கூடாது. முடிஞ்ச அளவுக்கு வெளிப்படையாகவும் கலகலப்பாகவும் இருப்பேன். 

காலையில  4:30 மணிக்கெல்லாம் என்னோட  நாள் தொடங்கிடும். என் வீடு இருக்கிற நுங்கம்பாக்கத்தில் இருந்து, எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் நடைப்பயிற்சி மேற்கொள்வேன். ஆறரை கிலோ மீட்டர்.  ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்திடுவேன். கிட்டத்தட்ட நாற்பது வருஷமா இருக்குற ஒரு பழக்கம் இது. 

நடைப்பயிற்சி உடல், உள்ளம் ரெண்டையும் நல்ல முறையிலவெச்சுக்க உதவுது. `நாம பெரிய டைரக்டர்... நாம பெரிய நடிகர்’ங்கிறதெல்லாம் என் மூளைக்குப் போகாம பார்த்துக்குவேன்.  ட்ரெயின்ல போனாலும், ஃபிளைட்ல போனாலும் யார் செல்ஃபி எடுத்துக்கணும்னு கேட்டாலும், உடனே `சரி’னு சொல்லிடுவேன். இப்போல்லாம் ஆட்டோகிராஃப் கிடையாது. போட்டோகிராஃப்தானே எடுக்கிறாங்க.

வீட்டுக்கு வந்ததும் என்னோட  டூ-வீலர், கார் ரெண்டையும் நானே துடைச்சு சுத்தம் செய்து, கழுவுவேன். சிலர், 'என்ன சார்... தினமும் இதைத் துடைச்சிக்கிட்டே இருக்கீங்க?’னு கேட்பாங்க. `நாம தினமும் குளிக்கிற மாதிரிதான் இதுவும்’னு சொல்வேன். நாம தினமும் பயன்படுத்தும் பொருளை நாமதான் சுத்தமா வெச்சுக்கணும்னு நினைப்பேன். இதுவே எனக்குப்பெரிய எக்சர்சைஸாக இருக்கும்.’’ சிரித்தபடி சொல்கிறார் அனுமோகன்.