Published:Updated:

ராஜரத்தினம் அரங்கத்தில் மாயாண்டி குடும்பத்தார்! இயக்குநர்கள் கைதுக்குப் பின் நடந்தது என்ன?

ஐ.பி.எல் புறக்கணிப்புப் போராட்டத்தில் சேப்பாக்கம் முதல் ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை என்ன நடந்தது?

ராஜரத்தினம் அரங்கத்தில் மாயாண்டி குடும்பத்தார்! இயக்குநர்கள்  கைதுக்குப் பின் நடந்தது என்ன?
ராஜரத்தினம் அரங்கத்தில் மாயாண்டி குடும்பத்தார்! இயக்குநர்கள் கைதுக்குப் பின் நடந்தது என்ன?

காவிரி மேலாண்மை வாரியம்குறித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் எனப் பலர் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், 'தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை' இயக்குநர் பாரதிராஜா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு, அதில் வெற்றிமாறன், ராம், அமீர், தங்கர் பச்சான் உட்பட பல பிரபலங்கள் பேரவையில் இடம்பெற்றிருந்தனர். 'தமிழர்களுக்காக குரல்கொடுக்க நினைக்கும் யார் வேண்டுமானாலும் இந்தப் பேரவையின் பெயரில் போராடலாம். அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தால், அவர்களின் கொடியைத் தவிர்த்துவிட்டு வாருங்கள். எல்லோரும் சேர்ந்தே போராடலாம்' என்று பாரதிராஜா கூறியிருந்தார். அதன்படி, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, தமிழ் தேசியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மணியரசன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து, சேப்பாக்கம் அண்ணா சிலை அருகே நேற்று போராட்டத்தை நடத்தி முடித்தார்கள். அந்தப் போராட்டத்தின் ஏ டூ இஸட் தொகுப்பு இது.  

சேப்பாக்கம் மைதானத்துக்குச் செல்லும் வாலாஜா சாலை முதல் சேப்பாக்கம் ஸ்டேடியம் வரை ஏராளமான போலீஸார் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடன் 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணியின் ஆதரவாளர்களுக்காக மஞ்சள் நிறக் கொடி, பேன்ட், டி-ஷர்ட் விற்பனையும் நடந்துகொண்டிருந்தது. 'ஆளே இல்லாத கடைக்கு யாருப்பா டீ ஆத்துற?' என்று என் மைண்டு வாய்ஸ் சொல்ல, சேப்பாக்கத்தை பைக்கில் ஒரு ரவுண்டு அடித்தேன். ஒவ்வொரு நிமிடத்துக்கும் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. மத்திய, மாநில அரசை எதிர்த்து கோஷமிட்டுப் போராடியவர்களை ஆங்காங்கே போலீஸார் கைதுசெய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.  

திடீரென்று அப்போலோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வந்ததால், சாலையை மறைத்துக்கொண்டிருந்தவர்கள் வழிவிட்டு ஒதுங்கினர். அடுத்தடுத்து ஆம்புலன்ஸ் வர, 'ப்ளேயர்ஸை ஆம்புலன்ஸில் அனுப்புறாங்கப்பா... புடி புடி' என்று ஒரு குரல் ஒலிக்க, ஒரு கூட்டம் ஆம்புலன்ஸை மறித்து டிரைவரைத் தாக்கினர். விசாரித்ததில், அது முதல் உதவிக்காக சேப்பாக்கம் ஸ்டேடியம் சென்ற ஆம்புலன்ஸ் என்று தெரிந்தது. கார் ஒன்று சாலையைக் கடக்க முயன்றபோது, உள்ளே இருந்தவர்கள் மஞ்சள் நிற உடை அணிந்திருந்த காரணத்தால் அவர்களையும் போராட்டக் களத்தில் இருந்தவர்கள் தாக்க முயன்றனர். போலீஸார் வந்து தடுத்த பிறகே, அந்த கார் கிளம்பியது. தாக்கிவிட்டுத் திரும்பிய ஒருவர், 'அதெல்லாம் தெரியாது. மஞ்ச சட்டை போட்டா அடிப்போம்' என்று உரத்த குரலில் கத்த, 'ஆமா... அடிப்போம்' என்று கோரஸும் வந்தது. 'நாம் தமிழர்... நாம் தமிழர்' என்று உள்ளே ஒரு கூட்டம் அண்ணா சிலையை நோக்கி வந்தது. அனைவரது கையிலும் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை அறிவித்த சேர, சோழ, பாண்டிய நாட்டு சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடி இருந்தது. 

அவர்களைத் தொடர்ந்து, எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் 'ஜிந்தாபாத்' என்று முழக்கமிட்டு மோடி, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோரின் பதாகைகளை வைத்துக்கொண்டு அவற்றை செருப்பால் அடித்தும், தீயிட்டுக் கொளுத்தியும் போராட்டம் செய்தனர். அவர்கள் கைதான பிறகு, இயக்குநர்கள் வெற்றிமாறன், ராம் ஆகியோர் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம்குறித்து முழக்கமிட்டபடி தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக சிலர் களத்துக்கு வந்தனர். அவர்கள் உள்ளே வந்த சில நிமிடங்களில், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, ஒரு கூட்டத்துடன் உள்ளே வந்தார்.

திடீரென்று கூட்டம் ஒரு பக்கமாகக் கூட, அந்தக் கூட்டத்தின் நடுவில் பாரதிராஜாவும் வைரமுத்துவும் கைகோத்து நடந்துவந்தனர். ஆண்டாள் குறித்த சர்ச்சையின்போது, வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேசினார் பாரதிராஜா. அதனால், இம்முறை பாரதிராஜாவுக்கு ஆதரவாக வைரமுத்து வந்தார் எனக் கூறப்படுகிறது. அவர்களைப் பின்தொடர்ந்து நீல நிறக் கொடியை ஏந்தியபடி பலர் வந்தனர். அங்கிருந்த இளைஞர்கள் திடீரென்று மைதானம் நோக்கி ஓட ஆரம்பித்தனர். அவ்வாறு ஓடியவர்களைப் போலீஸார் தாக்கியதால், சிலருக்கு தலையில் பலத்த அடி. அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதில், இயக்குநர் வெற்றிமாறன் மீது அடி பட்டதும் போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக முழக்கமிடத் தொடங்கினர். பின், திருவல்லிக்கேணி D1 போலீஸ் ஸ்டேஷன் முன்பு வெற்றிமாறன், ராம் ஆகியோர் சாலையில் அமர்ந்து முழக்கமிட்டனர். அதைப் பார்த்தவுடன், அவர்களுடன் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் அமர்ந்து போராட ஆரம்பித்தனர். போலீஸார் பாரதிராஜாவிடம் வந்து, 'சார் கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்க' என்று கேட்க, 'என் பசங்களை நான் பார்த்துக்கிறேன்!' என்றார் பாரதிராஜா. 

வைரமுத்துவும் பாரதிராஜாவும் ஒருபுறம் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்க, வெற்றிமாறனிடமும் ராமிடமும் போலீஸார் வேனில் ஏறும்படி கேட்டுக்கொண்டனர். உடனே, பாரதிராஜா பக்கத்தில் சென்று வெற்றிமாறன் பேசினார். உடனே D1 போலீஸ் ஸ்டேஷன் முன்பு அமர்ந்து முழக்கமிடத் திட்டமிட்டனர். அப்போது, கட்சிக் கொடியை தூக்கிக்கொண்டு கருணாஸ் கட்சியினர் வரத்தொடங்க, மற்ற கட்சிகளைச் சார்ந்தவர்களும் அவர்களின் கொடியைத் தூக்க ஆரம்பித்தனர். மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் தாங்கள் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி உள்ளே அணிந்திருந்த கறுப்பு டி-ஷர்ட்டுடன் போராட ஆரம்பித்தனர். அதில், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் - மனிதநேய ஜனநாயகக் கட்சி' என்று எழுதப்பட்டிருந்தது. ஆங்காங்கே கட்சிக் கொடிகளின் ஆதிக்கம் அதிகரிப்பதை உணர்ந்த பாரதிராஜா, 'நாம் எல்லோரும் ஒரு அமைப்பாக இணைந்து செயல்பட வந்திருக்கிறோம். போராட்டம் திசை திரும்புவதுபோல இருக்கிறது' என்றார். தொடர்ந்து, தங்கர் பச்சான், கெளதமன் ஆகியோர் மைக் பிடித்து தமிழர்களுக்காக முழக்கமிட ஆரம்பித்து, போராட்டத்தைத் தங்கள் வழிக்குக் கொண்டுவந்தனர். 

இந்தக் கூட்டம் ஒருபுறம் முழங்க, ஆங்காங்கே இருந்த போராட்டக்காரர்கள், 'எங்கே மேட்ச் பார்க்கப் போறீங்களா..?' என்று மஞ்சள் நிற  பணியனில் போகும் அனைவரையும் தாக்கினர். போராட்டம் வலுப்பெற்ற நிலையில், பாரதிராஜா, சீமான் உட்பட அனைவரையும் போலீஸார் கைதுசெய்தனர். பின், அடுத்தடுத்த வேன்களில் போராட்டத்தில் இருந்த அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். சிலரை போராட்டக் களத்திலிருந்து போலீஸார் விரட்டினர். இவை அனைத்துமே D1 போலீஸ் ஸ்டேஷன் வரை மட்டுமே. அதற்குப் பின் சாலையே வெறிச்சோடி இருந்தது.

இந்தக் களேபரங்களுக்கு இடையே, கடற்கரை வழியாக கிரிக்கெட் வீரர்களும், பார்வையாளர்களும் மைதானத்துக்கு வந்தடைந்தனர். மணி 7.30 ஆனபோது, மைதானம் சிஎஸ்கே ரசிகர்களால் நிரம்பியது. 'போராட்டத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று வேறு எங்கேயோ பிரச்னை நடப்பதுபோல ஜாலியாக சிஎஸ்கே அணியின் கொடிகளை வாங்கியபடி மகிழ்ச்சியில் மைதானத்துக்குள் ரசிகர்கள் சென்றனர். 

கைதானவர்கள், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் விடப்பட்டனர். உள்ளே போனவர்கள், அந்த மைதானத்தில் வட்டமாக அமர்ந்து பேச ஆரம்பித்தனர். அப்போது, தங்கர் பச்சான், 'நான் இப்போ முகநூல் நேரலை போறேன். எனக்கு அப்புறம், ராம், அமீர், வெற்றி எல்லோரும் பேசுங்க' என்று ஃபேஸ்புக் லைவ்வை ஆன் செய்து போராட்டம் குறித்துப் பேசத் தொடங்க, அவரைத் தொடர்ந்து வெற்றிமாறன், ராம் ஆகியோர் பேசினார்கள். இறுதியாக பாரதிராஜா பேசி, முகநூல் நேரலையை முடித்துவைத்தார். 

அங்கு, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக இருந்தனர். `ஸ்டேடியம்  முழுதுமே, என்ன நிலவரம்?' என்று பேசிக் கொண்டிருந்தவர்கள், தங்களின் செல்போனில் நேரலை செய்திகளைப் பார்த்துவந்தனர். மைதானத்துக்குள் காலணியை எறிந்த செய்தி வெளியானதைப் பார்த்தவர்கள், 'மாஸ் காட்டிட்டான்ல... ஒரு ஓவருக்கு ஒரு செருப்பு வீசினா சூப்பரா இருக்கும்' என்று பேசியபடி காலணியை எறிந்தவரைக் கொண்டாடினார்கள். அந்த இளைஞன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும், மேலும் சிலர் நாம் தமிழர் கொடியை காட்டியதைப் பார்த்ததும் சீமான் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

`இது வெறும் ட்ரெய்லர்தான்... இன்னும் மெயின் பிக்சர் காட்டலை' என்று சீறினார். பின், அந்த மைதானத்தில் எல்லாரும் குழுக்களாகப் பிரிந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பாரதிராஜா, 'ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கேன்டா... கொஞ்ச நேரம் நடக்கணும்' என்றவுடன், உதவியாளர்கள் அவரை அழைத்துச்சென்றனர். 'யாரும் கூட வராதீங்க... நான் தனியா நடக்குறேன்' என்று முழு மைதானத்தையும் தனியாக இரண்டு ரவுண்ட் அடித்தார். அங்கிருந்த நபர்கள்  பாரதிராஜா, தங்கர்பச்சான், ராம் என அனைவருடனும் தனித்தனியாக போட்டோ எடுத்துக்கொண்டனர். தங்கர் பச்சானிடம் ஒரு இளைஞர், ``அண்ணன்... ஒரு புகைப்படம் எடுக்கலாமா?'' என்றவுடன், ``புகைப்பட காலமெல்லாம் போயிடுச்சு. இது ஒளிப்படக் காலம். வா எடுக்கலாம். நான் சொல்றமாதிரி எடு. அப்போதான் லைட்டிங் சரியா இருக்கும்'' என்று தன்னிடம் போட்டோ எடுக்கவந்த இளைஞர்களுடன் புகைப்படம்... மன்னிக்கவும்... ஒளிப்படம் எடுத்துக்கொண்டார். 

கைதானவர்களின் வருகையைப் பதிவேட்டில் பதிவுசெய்து வந்தனர், போலீஸார். சினிமாத்துறை சார்ந்தவர்களைச் சுற்றி கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். கூட்டத்தை விலக்கிப் பார்த்தால், பாரதிராஜாவுக்கு சமுத்திரக்கனி சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்திருந்தார். அவருடன் சீமான், அமீர், ராம், வெற்றிமாறன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். சமுத்திரக்கனி, பாரதிராஜாவுக்குப் பரிமாறும்போது, சாப்பாடு கீழே கொட்ட, சமுத்திரக்கனியை செல்லமாகத் திட்டினார், பாரதிராஜா. உடனே, வேறு இடத்துக்குப் போய் பாரதிராஜாவை சாப்பிட வைத்தார் சமுத்திரக்கனி.

சாப்பிட்டு முடித்து வந்த பாரதிராஜா, 'நான் கிளம்புறேன் பசங்களா... தொடர்ந்து தமிழர்களுக்காகக் குரல் கொடுப்போம்' என்று கூறினார். சீமான், ``டேய் தம்பி... அப்பாவை பத்திரமா கூட்டிட்டுப் போய் கார்ல விட்டுட்டு வாங்கடா'' என்று சொல்ல, ``அண்ணே நான் போறேன்'' என்று சமுத்திரக்கனி  சொன்னவுடன், 'அன்னமிட்ட கை' என்று சமுத்திரக்கனி கையைப் பிடித்து பாரதிராஜா நெகிழ்ந்து போனார். அந்தச் சமயம், `மாயாண்டி குடும்பத்தார்' படமும், அதில் இடம்பெற்ற 'முத்துக்கு முத்தாக' பாடலும் என் மனதில் ஓடியது. பின், அனைவரும் கலைந்துசெல்லும்போது மணி 12-ஐத் தாண்டியது. 75 வயதைக் கடந்தும் எந்த சுயநலமும் இன்றி தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துவரும் இயக்குநர் பாரதிராஜா என்னும் இளைஞனின் எழுச்சிக்கு ஆயிரம் லைக்ஸ்!