Published:Updated:

`` `ஆர்கானிக்'னு சொல்ற பொருளெல்லாம் உண்மையிலேயே ஆர்கானிக்கா?" - டிசைனர் தஸ்னீம்

`` `ஆர்கானிக்'னு சொல்ற பொருளெல்லாம் உண்மையிலேயே ஆர்கானிக்கா?" - டிசைனர் தஸ்னீம்
`` `ஆர்கானிக்'னு சொல்ற பொருளெல்லாம் உண்மையிலேயே ஆர்கானிக்கா?" - டிசைனர் தஸ்னீம்

தொழில்நுட்ப வளர்ச்சியால், மக்களுக்கு நன்மைகளைவிட பாதிப்புகளே அதிகம். தெரிந்தோ தெரியாமலோ நாம் நம் விருப்பத்துக்காக இயற்கையை அழித்து, கட்டடங்கள், தொழிற்சாலைகள் எனப் பலவற்றை அமைத்து, முறையற்றக் கோட்பாடுகளைப் பின்பற்றிவருகிறோம். அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருள்கள் முதல் உடுத்தும் உடை வரை ரசாயனங்களின்றி ஏதுமில்லை. ரசாயனங்களில் சேர்க்கப்படும் நச்சுப்பொருள், பல பிரச்னைகளை உருவாக்கும். அவற்றைச் சரியாக வெளியேற்றாவிட்டால், அதனால் உண்டாகும் உடல்நலக் கோளாறுகள் ஏராளம். அந்த வகையில், நெசவாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால்தாம்  சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கிறது. பிளீச்சிங், டையிங், பிரின்ட்டிங் எனப் பல செயல்முறைகளைக் கடந்துதான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் துணிவகைகள் கடைகளுக்குள் நுழைகின்றன. எல்லாவற்றிலும் செயற்கை ரசாயனங்களின் பங்கு அதிகம். உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை தற்போது நம் கவனம், `ஆர்கானிக்' மீது திரும்பியுள்ளது. அந்த வரிசையில் `ஆர்கானிக்' துணிகளை உற்பத்திசெய்து ஃபேஷன் உலகில் ஆரோக்கியமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளார் தஸ்னீம்.

பரபரப்பான காலைப் பொழுதில் சில நிமிடம் நமக்காக ஒதுக்கிய அவரிடம்...

``ஆர்கானிக்' வகையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என்ன?"

``காலேஜ் படிக்கிறப்போவே இந்த இன்ட்ரஸ்ட் ஸ்டார்ட்டாகிடுச்சு. பட்டிக், Tie and Dye போல பிரின்ட்ஸ் வகையெல்லாம் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். அதையெல்லாம் செயற்கை ரசாயனம் இல்லாம, இயற்கைச் சாயத்தை மட்டும் பயன்படுத்தி உருவாக்கணும்னு ஒரு எண்ணம். அதுமட்டுமல்ல, ஒரு விஷயத்தைப் படிக்கிறதுக்கும் அனுபவிக்கிறதுக்கும் நிறையா வித்தியாசம் இருக்கு. அப்படி ரசிச்சுப் படிச்ச விஷயம் `டெக்ஸ்டைல் டிசைன்'. அதுலயும் நாம சொந்தமா டிசைன் பண்ணுறதுல இருக்கிற சந்தோஷமே வேற. அப்படிப் பிடிச்சதுதான் `ஆர்கானிக்' ஃபேப்ரிக் டிசைன். கூடவே நம்ம க்ளோஸ் ஃப்ரெண்டும் ஒரே எண்ணத்தோடு இருந்துட்டா யோசிக்கவே வேண்டாம்."

``இதற்காக ஆராய்ச்சி ஏதாவது செய்தீர்களா?"

``நிறைய. நாங்க ஆரம்பிக்கிற நேரத்துலதான் `Fast Fashion' ட்ரெண்டாச்சு. அதாவது, ரன்வேலிருந்து (Runway - fashion show) உடனே கடைகளுக்கு ஏற்றுமதியாகி, அதிகபட்சம் 15 நாளுக்குள்ள அந்த டிசைன் அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகிடும். அதுக்குள்ள இன்னொரு டிசைன் வந்துடும். இந்த டைம்லதான் நாங்க `ஆர்கானிக்' கான்செப்ட்டை உருவாக்கினோம். ரொம்பவே ரிஸ்க்கான வேலை. முன்னாடி வெச்ச கால, பின்னாடி வைக்கக் கூடாதுனு முடிவுபண்ணி களத்துல குதிச்சோம். நாங்க ரெண்டு கொள்கைகளை ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்றோம். ஒண்ணு, Eco Friendly ஃபேப்ரிக்ஸ் மட்டும்தான் உற்பத்திப் பண்ணணும். ரெண்டாவது Upcycling. அதாவது மீதம் இருக்கும் பொருள்களை இன்னும் க்ரியேட்டிவா உருவாக்கிறது. உதாரணத்துக்கு, போன மாசம் `மட்கா சில்க்' துணி வகைகளை வெளியிட்டோம். இந்த மாசம் Upcycling செயல்முறைப்படுத்திட்டிருக்கோம். மீதி இருந்த துணியை வெச்சு ஏதாவது புதுசா க்ரியேட் பண்ணுவோம். அடுத்த மாசம் ஆர்கானிக் ரிலீஸ். இப்படித்தான் சமாளிச்சுட்டு இருக்கோம்".

``அப்படினா சவால்கள் நிறையா இருக்கா?"

``ஏகப்பட்டது இருக்கு. இப்பெல்லாம் மார்க்கெட்டுல எண்ண முடியாத அளவுக்கு ஆர்கானிக் பொருள்கள் குவிஞ்சிருக்கு. அதெல்லாம் உண்மையிலேயே ஆர்கானிக்கானு நாம செக் பண்றதில்லை. உதாரணத்துக்கு, சுத்தமான தேங்காய் எண்ணெய்னு பாட்டில்கள்ல போட்டிருக்கும். முழுக்க முழுக்க தேங்காய் எண்ணெய் மட்டும்தான் அதுல இருக்குமானு பார்த்தா, `இல்லை'தான் பதில். 10 சதவிகிதம், 20 சதவிகிதம் மட்டும்தான் ஆர்கானிக்னு சொல்ற அந்த ஒரிஜினல் `தேங்காய் எண்ணெய்' இருக்கும். மற்றதெல்லாமே கெமிக்கல்ஸ். அதுக்காக அது ஆர்கானிக் ஆகிடுமா? இப்படித்தான் எல்லாப் பொருள்களையும் ஆர்கானிக்னு தப்பா நினைச்சு வாங்கிடுறோம். இதுக்கு நடுவுல தரமான பொருள்களுக்கு மதிப்பில்லாமப்போயிடுது".

`` `ஆர்கானிக்'கை மையமாய் வைத்து தொழில் தொடங்கவிருக்கும் இளைஞர்களுக்கு உங்களின் அட்வைஸ்?"

``ஆர்கானிக்னு முடிவுபண்ணிட்டா, 100 சதவிகிதம் ஆர்கானிக் பொருள்களை மட்டுமே கொடுங்க. அதுக்கு முதல்ல எது ஆர்கானிக்-ங்கிற தெளிவு வேணும். அதைவிட பொறுமை ரொம்ப முக்கியம். இப்போ இருக்கிற இளைஞர்களுக்குப் பொறுமையே இல்லை. பிசினஸ் ஆரம்பிச்சுட்டா கஷ்டப்படாம முன்னுக்கு வந்துரலாம்னு தப்பான நினைப்பு இருக்கு. அதெல்லாம் மாத்திக்கணும். அதுலயும் `ஆர்கானிக்'கை கையில எடுக்கிறப்போ, நிதானம் அவசியம். தெளிவான நோக்கம், கடின உழைப்பு ரெண்டும் அவசியம் இளைஞர்களே."

``உங்களின் ஃபேஷன் Quote?"

``ஆடம்பரமில்லாத குறைந்த வேலைப்பாடுகளுடைய ஆடைகள்தான் என் சாய்ஸ்" என்று கூறிவிட்டு விரைந்தார் upcycling முறையைப் பட்டியலிட.