Published:Updated:

பாசம் பேசும் பிரமாண்ட நண்பன்!

பாசம் பேசும் பிரமாண்ட நண்பன்!
பிரீமியம் ஸ்டோரி
பாசம் பேசும் பிரமாண்ட நண்பன்!

The BFGசினிமா விமர்சனம்

பாசம் பேசும் பிரமாண்ட நண்பன்!

The BFGசினிமா விமர்சனம்

Published:Updated:
பாசம் பேசும் பிரமாண்ட நண்பன்!
பிரீமியம் ஸ்டோரி
பாசம் பேசும் பிரமாண்ட நண்பன்!
பாசம் பேசும் பிரமாண்ட நண்பன்!

'வாவ்! இப்படி ஒரு பூதம் வந்து  புடிச்சுட்டுப் போறதா இருந்தா, நாம தாராளமா பூதத்தோடு போகலாம்' எனச் சொல்லவைக்கிறான், ‘தி பிஎஃப்ஜி'  (The BFG - Big Friendly Giant).

தூக்கமின்மை நோயான இன்சோம்னியா (Insomnia) வால் தவிப்பவள், சோஃபி. பெற்றோர் இல்லாத அவள், சிறுவர் விடுதியில் இருக்கிறாள். பல குழந்தைகள் போலவே அவளுக்கும் பூதங்கள் பற்றிப் பயம் உண்டு. ஒருநாள் நள்ளிரவில், விடுதியின் பால்கனி வழியே 24 அடி உயர பூதத்தைப் பார்க்கிறாள். சோஃபியைத் தூக்கிக்கொண்டு வெகு தூரத்தில் இருக்கும் தன் இடத்துக்குச் செல்கிறது அந்தப் பூதம்.

‘நீ என்னைப் பார்த்துட்டே. எங்க ரகசியம் வெளியில போகக் கூடாது. அதனால, நீ வாழ்நாள் முழுக்க இங்கேதான் இருக்கணும். தப்பிக்க முயற்சி பண்ணினா, வேற சில பெரிய பூதங்கள் பிடிச்சுத் தின்னுடும்’ என்று மிரட்டுகிறது.

ஆமாம். அந்த இடத்தில் இருக்கும் பூதங்களிலேயே ‘பொடி'யான பூதம் இதுதான். மற்ற பூதங்கள் எல்லாம் 54 அடி உயரம். மனிதர்களைச் சாப்பிடுவது என்றால் அவற்றுக்கு ரொம்ப இஷ்டம். அவை, இந்தப் பொடி பூதத்திடம் இருக்கும் சோஃபியைச் சாப்பிட முயற்சிக்கின்றன. பொடி பூதத்தையும் அடித்துத் துன்புறுத்துகின்றன. சுட்டிப் பெண் சோஃபிக்கு என்ன ஆச்சு? பூதங்களுக்கு நடந்தது என்ன? அன்பும் கருணையும் உடைய BFG என செல்லமாக அழைக்கப்படும் அந்தப் பூதம், சோஃபிக்கு நண்பன் ஆகிறது. அந்தப் பூதத்தின் வேலை, ஓர் இடத்தில் இருந்து கனவுகளைச் சேகரிப்பது. பாசக் கனவு, குறும்புக் கனவு, மோசமான கனவு, தீய கனவு எனப் பல்வேறு கனவுகளை ஜாடிகளில் பிடித்து வருகிறது. பிறகு, நள்ளிரவில் நகருக்குள் சென்று, ஒரு பெரிய ஊதுகுழல் வழியே தூங்குபவர்களின் எண்ணத்தில் செலுத்துகிறது.

BFG தவறாகப் பேசும் சொற்களை,  சோஃபி திருத்துவதும், ‘என் பிரச்னையே இதுதான். மனசுல இருக்கிற விஷயங்களைப் பேசும்போது தப்புத்தப்பா பேசிடுவேன்' என்று பூதம் வருந்துவதும், ‘ஃபீல் பண்ணாதே... நீ இப்படிப் பேசுறதும் அழகாத்தான் இருக்கு' என்று சோஃபி சமாதானம் செய்வதும், ரைம்ஸ் போல அவ்வளவு அழகு.

பூதத்தோடு சேர்ந்து சோஃபியும்  பட்டாம்பூச்சி  போல கனவுகளைப் பிடிக்கும் காட்சி, உறங்குபவர்களுக்கு கனவுகளைச் செலுத்த நகருக்குள் வரும்போது, மற்றவர்கள் கண்களில் தென்படாமல் இருக்க, சுவர், மரம், லாரி போல நிற்கும் காட்சி எனப் படம் முழுக்க கலகலப்பு. மகா பூதங்களை அழிக்கத் திட்டம் போட்டு, இங்கிலாந்து  அரசியைச் சந்திக்கிறார்கள். விருந்தில், BFG-க்கு செய்யப்படும் ஏற்பாடுகளில் தியேட்டரே சிரிப்பால் குலுங்குகிறது. பூதங்கள் பயன்படுத்தும்  பிரமாண்டமான நாற்காலி, கத்தி, கரண்டி போன்ற பொருட்கள் 3D தொழில்நுட்பத்தில் வாயைப் பிளக்கவைக்கின்றன.

1982-ம் ஆண்டு பிரபல எழுத்தாளர் ரோல் தால் (Roald Dahl) எழுதிய ‘The BFG' என்கிற நாவலை, வெகு அழகாகப் படமாக்கி இருக்கிறார், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். BFG ஆக வரும் மார்க் ரைலான்ஸ் மற்றும் சோஃபியாக வரும் ரூபியின்  நடிப்பு, சிறப்பின் உச்சம்.

க்ளைமாக்ஸில், அந்த அரக்கர்களை என்ன செய்தார்கள் என்பதில்தான், நாவலாசிரியர் கைதட்டல் பெறுகிறார்.

- பரிசல் கிருஷ்ணா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism