Published:Updated:

ரயில்வே பட்ஜெட் 2011-12-ல் தமிழகத்துக்கு..?

புதுடெல்லி, பிப்.25,2011

நாடாளுமன்றத்தில் 2011-12 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்தார். இதில், தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள 6 புதிய விரைவு ரயில்கள் மற்றும் சேவைகளின் முக்கிய அம்சங்கள்... ##~~##

சென்னனயில் 9 புறநகர் ரயில்..

* சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படவுள்ளது.
 
சென்னையில் 9 புறநகர் ரயில் சேவைகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை  கடற்கரை - கும்மிடிபூண்டி, கும்மிடிபூண்டி - சென்னை சென்ட்ரல், ஆவடி - சென்னை கடற்கரை, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் ஆகிய மார்க்கங்களில் கூடுதல் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

2 துரந்தோ...

* மதுரை - சென்னை, சென்னை - திருவனந்தபுரத்துக்கு புதிய துரந்தோ ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் இடையில் எந்த ரயில்களிலும் நிற்காது.

6 விரைவு ரயில்கள்...

* பெங்களூரூ வழியாக சென்னையில் இருந்து ஷீரடி செல்லும் வாராந்திர விரைவு வண்டி, கோயம்புத்தூர் - தூத்துக்குடி இணைப்பு விரைவு ரயில் (தினசரி), மைசூரிலிருந்து - சென்னை செல்லும் வாராந்திர விரைவு வண்டி, வாஸ்கோ - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில், வேலூர் வழியாக காரக்பூர் - விழுப்புரம் வாராந்திர விரைவு ரயில், வேலூர் வழியாக புருலியா - விழுப்புரம் வாராந்திர விரைவு வண்டி ஆகியவை தமிழ்நாட்டு மார்க்கங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய விரைவு ரயில்களாகும்.

மேலும் டெல்லியிலிருந்து புதுச்சேரி செல்லும் வாராந்திர விரைவு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* சென்னை எழும்பூர் - நாகூர் எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்கால் வரையும், நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில் கோசுவெள்ளி வரையும் நீட்டுக்கப்பட்டுள்ளன.

* சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் விழாவையொட்டி இயக்கப்படும் 'விவேக் எக்ஸ்பிரஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள 4 புதிய ரயில்களில் திப்ரூக்கர் - கன்னியாகுமரி, துவாரகா - தூத்துக்குடி ஆகியவை அடங்கும்.

ஒரு சுற்றுலா ரயில்...

ரயில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ஜனம் பூமி கௌரவ் என்ற பெயரில் நான்கு புதிய சுற்றுலா ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் ஒன்று தமிழக மார்க்கத்தில் இயக்கப்படவுள்ளது.

சென்னை - புதுச்சேரி - திருச்சிராப்பள்ளி - மதுரை - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் - எர்ணாகுளம் - சென்னை வழித்தடத்தில் புதிய ஜனம் பூமி கௌரவ் ரயில் இயக்கப்படும்.

நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வரலாற்று, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைப்பதே இந்த புதிய ரயில்களின்  நோக்கமாகும். மற்ற மூன்று ரயில்கள் ஹவ்ரா, பெங்களூரூ, மும்பை நகரங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.

* * தமிழகத்தில் இரண்டு புதிய ரயில்தடங்கள், நாமக்கல் - கரூர், வாலாஜாரோடு - ராணிப்பேட்டை ஆகிய மார்க்கங்களில் அமைக்கப்படவுள்ளன.

* கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் புதிய பயணியர் ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும்.
 
* மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையங்களின் தோற்றத்தையும், வசதிகளையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

* வேலூர், கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் தரமான உணவு விடுதி.