முன்பு எல்லாம் உடல்நிலை சரியில்லை என்றால், நொய், கஞ்சி தயாரித்துத் தருவது, கஷாயம் செய்வது என வீட்டிலேயே கவனிப்பார்கள். ஆனால், தெருவுக்குத் தெரு மெடிக்கல் ஷாப் வந்த பிறகு, கஞ்சி வைப்பதும் மறந்துவிட்டது, கஷாயம் தயாரிப்பதும் மறந்துவிட்டது. சாதாரண காய்ச்சலுக்குக்கூட மருத்துவமனைக்கு ஓடுவது வழக்கமாகிவிட்டது. தலைவலி, வயிற்றுவலி என்றால் எதனால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது என்பதைத் தெரிந்து, சுக்கு, மிளகு, இஞ்சி, கொத்தமல்லி என வீட்டிலேயே இருக்கும் சமையல் பொருட்களைக் கொண்டு எளியமுறையில் கஷாயம் தயாரிக்கலாம். இதனால், சட்டென்று பாதிப்பு மறைந்துவிடும். மேலும், நோயுற்றிருக்கும்போது உடலும் உள்ளமும் சோர்வாக இருக்கும். செரிமானம் மெதுவாகவே நடக்கும். கஞ்சி போன்ற நீராகாரங்கள் பருகுவதன் மூலம், உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெறலாம். நோயுற்ற காலத்தில் நாம் பருகும் கஞ்சிகள் மற்றும் கஷாயங்களைப் பட்டியலிட்டு அவற்றின் பலன்களைச் சொல்கிறார் சித்தமருத்துவர் சண்முகப்பிரியா. அதை செய்துகாட்டியுள்ளார் சமையல்கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி.

பார்லி கஞ்சி

தேவையானவை: பார்லி அரிசி - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பார்லி அரிசியை வாணலியில் லேசாக வறுத்து, ரவைப் பதத்துக்கு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி உடைக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் நீர்விட்டு, கொதித்ததும் பார்லி ரவையைப் போட்டுக் கொதிக்கவிடவும். வெந்ததும் இறக்கி, உப்பு சேர்த்துப் பருகலாம்.
வேறுமுறை: இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, பார்லி அரிசியைப் போட்டு 20 நிமிடங்கள் மூடிவைத்து, வடிகட்டி, அந்தத் தண்ணீரில் உப்பு சேர்த்துப் பருகலாம். வடிகட்டிய பார்லி அரிசியில், இரண்டு கப் வெந்நீர்விட்டு, மூடிவைத்து 20 நிமிடங்கள் கழித்து வடிகட்டிப் பருகலாம். இதன் மூலம், ஒரே பார்லி அரிசியை இருமுறை பயன்படுத்தலாம்.

பலன்கள்: கர்ப்பிணிகள் இதைக் குடிக்க, கால் வீக்கம் குறைவதுடன் சிறுநீர் வெளியேறவும் உதவும். பார்லியில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் நிறைந்துள்ளன.

ஜவ்வரிசிக் கஞ்சி

தேவையானவை: ஜவ்வரிசி - அரை கப், தேங்காய்ப்பால் - கால் கப், சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்து, ஒன்றரை கப் நீர் விட்டு வேகவிட வேண்டும். வெந்ததும், தேங்காய்ப்பாலை அதில் ஊற்றி, சர்க்கரை சேர்த்துப் பருகலாம். தேங்காய்ப்பால் சேர்க்காமலும் பருகலாம்.

பலன்கள்: வயிற்றுவலி நீங்கும். செரிமானத்துக்கு எளிதானது. வயிற்று எரிச்சல், வயிற்றுப்புண்ணை ஆற்றும். இதை, உள் அழல் ஆற்றி (Demulcent) என்பார்கள். அமைலேஸ் என்சைம் நிறைந்துள்ளதால், உடனடி எனர்ஜி தரும். பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்தது.

புழுங்கல் அரிசிக் கஞ்சி

தேவையானவை: புழுங்கல் அரிசி - அரை கப், பால் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, ரவை பதத்துக்கு மிக்ஸியில் போட்டு உடைக்க வேண்டும். புழுங்கல் அரிசி நொய் இருந்தாலும் உபயோகிக்கலாம். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் நீர் விட்டு, புழுங்கல் அரிசியைச் சேர்த்து வேகவிட வேண்டும். வெந்ததும், பால், உப்பு சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: காய்ச்சல் இருக்கும்போது, இந்தக் கஞ்சியை மூன்று வேளை குடிக்க, உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். காய்ச்சலின் வேகம் குறைவதுடன், உடல் அசதி குறைந்து, தெம்பு ஏற்படும். உடலுக்கு உடனடி எனர்ஜி தரும். குடல் தொடர்பான பிரச்னைகளைச் சீராக்கும். செரிமானத்துக்கு ஏற்றது. வைட்டமின் ஏ, பி, இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

கேழ்வரகுக் கஞ்சி

தேவையானவை: கேழ்வரகு - ஒரு கப், சர்க்கரை - தேவையான அளவு, பால் - கால் கப்.

செய்முறை: கேழ்வரகை ஆறு மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் அரைத்துப் பால் எடுக்க வேண்டும். இந்தக் கேழ்வரகுப் பாலில், சிறிது நீர்விட்டு, அடி கனமான வாணலியில் ஊற்றி, நிறுத்தாமல் கிளற வேண்டும். சிறிது நேரத்தில் பால் வெந்ததும் நிறம் மாறத் தொடங்கும். அப்போது, அடுப்பில் இருந்து இறக்கி, பால், சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: அனைவருக்குமான கஞ்சி. கேழ்வரகில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே, பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்றது. ரத்தசோகையைப் போக்கும். மாதவிடாய் கோளாறுகளைச் சீராக்கும். அமைலேஸ் என்சைம் நிறைந்துள்ளதால், செரிமானத்தை மேம்படுத்தும். வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் நிறைந்தது.

சம்பா கோதுமைக் கஞ்சி

தேவையானவை: சம்பா கோதுமை - அரை கிலோ, பால் - கால் கப், சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை: சம்பா கோதுமையை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும். ஆறியதும், காற்றுப் புகாத டப்பாவில் வைத்திருந்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாது. அடி கனமான வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் கோதுமை மாவுடன், ஒன்றரை டம்ளர் நீர்விட்டுக் கரைத்து, கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் இறக்கி, சர்க்கரை, பால் சேர்த்துப் பருகலாம். கொதித்து இறக்கிய கஞ்சி லேசாக ஆறியதும், பால், சர்க்கரைக்குப் பதிலாக, உப்பு, மோர் சேர்த்தும் பருகலாம்.

பலன்கள்: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது. எளிதில் செரிமானம் ஆகும். இரும்புச்சத்து, புரதம் நிறைவாக உள்ளது. கொழுப்பு இல்லை என்பதால், உடல் எடை குறைக்க விரும்புகிறவர்கள் எடுத்துக்கொள்ளலாம். கோதுமையில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், ரத்தத்தில் மெதுவாகக் கரையும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். பொட்டாசியம், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், அமினோஅமிலங்கள் நிறைந்துள்ளன.

சத்துமாவுக் கஞ்சி

தேவையானவை: புழுங்கல் அரிசி - அரை கப், சம்பா கோதுமை, கேழ்வரகு, கம்பு, கறுப்பு முழு உளுந்து, பச்சை முழுப் பயறு - தலா கால் கப், பொட்டுக்கடலை, ஜவ்வரிசி - இரண்டும் சேர்ந்து கால் கப், வெல்லம், பால் - தேவையான அளவு.

செய்முறை: அடி கனமான வாணலியில் மேற்கூறிய பொருட்களைப் போட்டு, அடுப்பை சிம்மில்வைத்துச் சிவக்க வறுத்து, ஆறியதும் நைஸாக அரைத்து ஆறவைத்து, காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தேவைப்படும்போது உபயோகிக்கலாம். ஒரு பாத்திரத்தில் நாம் தயாரித்த மாவில் இரண்டு டேபிள்ஸ்பூன் போட்டு, ஒன்றரை டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைக்கவும். இறக்கியதும் தேவையான வெல்லம், பால் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், செலீனியம் உள்ளன. கார்போஹைட்ரேட், புரோட்டின் நிறைந்தது என்பதால், உடல் எடை அதிகரிக்க இதைப் பருகலாம். கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது.

தேங்காய்ப்பால் - அரிசிக் கஞ்சி

தேவையானவை: புழுங்கல் அரிசி - கால் கப், கெட்டியான தேங்காய்ப்பால் - கால் கப், பயத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை: ஒரு வாணலியில் அரிசி, பருப்பு இரண்டையும் லேசாக வறுத்து, மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்கவும். உடைத்த ரவையை இரண்டு கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்ததும், தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்த்துப் பருகவும்.

பலன்கள்: தேங்காய்ப்பாலில் வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ், இரும்பு, கால்சியம், செலினியம் நிறைவாக உள்ளன. இந்தக் கஞ்சி, எலும்பு வளர்ச்சிக்கு உதவும். வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும். பயத்தம் பருப்பு செரிமானத்தை எளிதாக்கும். செலினியம் ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்பட்டு, புற்றுநோய் செல்களைத் தடுக்கும். உடலில் நல்ல கொழுப்பைச் சேர்க்கும். தேவையற்ற கொழுப்பை நீக்கும். இதயத்தை வலுவாக்கும்.

ஓட்ஸ் கஞ்சி

தேவையானவை: ஓட்ஸ் - கால் கப், மோர் - கால் கப், உப்பு - தேவையான அளவு

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் நீர்விட்டு, கொதித்ததும், கால் கப் ஓட்ஸைப் போட்டு வேகவிட வேண்டும். வெந்ததும் இறக்கி, சிறிது ஆறிய பிறகு மோர், உப்பு சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: ஓட்ஸில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இதனால் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும் என்பதால், இதயத்துக்கு மிகவும் நல்லது. ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவும். உடல் எடையை சீராகவைத்திருக்க உதவும். தயமின் என்ற பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின் நிறைந்துள்ளது.

வாழைப்பூக் கஞ்சி

தேவையானவை: சுத்தம்செய்து நறுக்கிய வாழைப்பூ - அரை கப், புழுங்கல் அரிசி - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சித் துருவல் - கால் டீஸ்பூன், பூண்டு - 3 பற்கள், அரிந்த மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், மோர், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூவை உப்பு, மோர் சேர்த்து, 10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் புழுங்கல் அரிசியை லேசாக வறுத்து, மிக்ஸியில் ரவைப் பதத்துக்கு உடைக்க வேண்டும். இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அதே பாத்திரத்தில் பூண்டை நசுக்கிப் போட்டு, இஞ்சித் துருவல் சேர்த்து, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். நீர் கொதித்ததும் புழுங்கல் அரிசி ரவையைப் போட்டுக் கொதிக்கவிடவும். பாதி வெந்ததும் வாழைப்பூவைச் சேர்த்து வேகவிட்டு, மல்லித்தழை சேர்த்து இறக்க வேண்டும்.

பலன்கள்: பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு அளிக்கும். கர்ப்பப்பை பலப்பட உதவும். கொலஸ்ட்ராலின் அளவையும் கட்டுப்படுத்தும். சீதக்கழிசலைக் கட்டுப்படுத்தும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தும்.

விரதக் கஞ்சி (பயறு கஞ்சி)

தேவையானவை: பயத்தம் பருப்பு - கால் கப், துருவிய வெல்லம் - கால் கப், ஏலப்பொடி - ஒரு சிட்டிகை, தேங்காய்ப்பால் அல்லது பால் - கால் கப்.

செய்முறை: பயத்தம் பயறைச் சிவக்க வறுத்து, குழைய வேகவிட வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் துருவிய வெல்லத்தைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, கொதிவந்ததும், பயத்தம் பருப்பு, ஏலப்பொடி, தேங்காய்ப்பால் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும். பால் சேர்ப்பதாக இருந்தால், அடுப்பில் இருந்து இறக்கிய பின் சேர்க்க வேண்டும்.

பலன்கள்: வயிற்றில் ஏற்படும் பித்தம் குறையும். புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் நிறைவாக உள்ளது. சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். உடலுக்குத் தேவையான புரோட்டினை பயறு கொடுக்கும். உடனடி ஆற்றல் கிடைக்கும். உடலை வலுவாக்கும். எலும்புகளுக்கு நல்லது. ஏலப்பொடி செரிமானத்தை மேம்படுத்தும்.

கொள்ளுக் கஞ்சி

தேவையானவை: கொள்ளு, மோர் - தலா 4 டேபிள்ஸ்பூன், பூண்டுப் பற்கள் - 3, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொள்ளை வெறும் வாணலியில் வறுத்து, ரவை பதத்துக்கு உடைத்து, ஒரு கப் நீரில் குழைய வேகவைக்க வேண்டும். வேகும்போதே பூண்டையும் நசுக்கிச் சேர்க்கவும். வெந்து இறக்கிய பின் மோர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: கொள்ளுக் கஞ்சியைத் குடித்துவர, உடல் எடை குறையும். கொள்ளு சிறுநீரைப் பெருக்கும். கொழுப்பைக் கரைக்கும். உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும். வயிறு நிறைந்த உணர்வைத் தரும். புரதச்சத்து நிறைந்தது.

வடிகஞ்சி

தேவையானவை: பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி - ஒரு கப், மோர் - அரை கப், உப்பு - தேவையான அளவு, சீரகம், மல்லித்தழை - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை.

செய்முறை: அரிசியை வேகவைத்து, வடிக்க வேண்டும். வடித்த நீரில், மோர், உப்பு சேர்த்து, மல்லி, சீரகம், பெருங்காயத்தை மிக்ஸியில் நன்கு அரைத்துச் சேர்த்து, நன்றாகக் கலந்து அருந்தலாம்.

பலன்கள்: சத்தானதும் எளிமையானதுமான இந்தக் கஞ்சி விரைவில் ஜீரணமாகும். உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும். செரிமானத்தை மேம்படுத்தும். சீரகம், புண்களைக் குணப்படுத்தும். பெருங்காயம் வாயுத்தொல்லைகளைப் போக்கும். மாதவிலக்கு வலியைப் போக்கும்.

கோதுமை ரவைக் கஞ்சி

தேவையானவை: கோதுமை ரவை - கால் கப், பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மோர் அல்லது பால் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பயத்தம் பருப்பையும் கோதுமையையும் தனித்தனியாக வறுத்து, ரவைப் பதத்துக்கு உடைக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் ஒன்றரை கப் நீர் விட்டு உப்பு சேர்த்து வறுத்த கோதுமை ரவை, பயத்தம் பருப்பு சேர்த்து வேகவிடவும். இறக்கிய பின் பால் சேர்த்துப் பருகவும். மோர் எனில், சிறிது ஆறிய பின்பு சேர்க்க வேண்டும்.

பலன்கள்: சர்க்கரை நோய், உடல்பருமன் பிரச்னை உள்ளவர்கள் இதனை அருந்தலாம். கோதுமையில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது ரத்தத்தில் மெதுவாக கரையும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். பொட்டாசியம், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் நிறைந்தது. உடல்பருமனைக் குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடலாம்.

முளைகட்டிய தானியக் கஞ்சி

தேவையானவை: கோதுமை, வெந்தயம், கொள்ளு அனைத்தும் சேர்ந்து - 4 கப், மோர் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை, வெந்தயம், கொள்ளு மூன்றையும் எட்டு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடிகட்டி, துணியில் கட்டி எட்டு மணி நேரம் தொங்கவிட வேண்டும். நன்றாக முளைகட்டிய பின் எடுத்து, நிழலில் ஒரு நாள் உலர்த்திய பிறகு வெயிலில் நன்றாகக் காயவைத்து, மெஷினில் கொடுத்து அரைக்க வேண்டும். அடி கனமான வாணலியில் ஒன்றரை டம்ளர் நீர்விட்டு, இரண்டு டேபிள்ஸ்பூன் முளைகட்டிய தானிய மாவைக் கரைத்து, கொதிக்கவிடவும். கொதித்து ஆறியதும், உப்பு, மோர் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், உடல் எடை மூன்றையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இந்தக் கஞ்சியைத் தினம் ஒரு வேளை பருகிவரலாம். வெந்தயத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்தசோகையைப் போக்கும். பித்தநீர் சுரப்பை மேம்படுத்துவதால், செரிமானம் எளிதாகும். சர்க்கரை சிறுநீரில் வெளியேறுவதைக் (கிளைக்கோயூரியா) கட்டுப்படுத்தும்.

சிறுதானியக் கஞ்சி

தேவையானவை: வரகு, சாமை, குதிரைவாலி அனைத்தும் சேர்ந்து - அரை கப், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மோர் - கால் கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இரண்டு கப் நீர்விட்டு, சிறுதானியங்களை உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும், மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கி, சிறிது ஆறிய பின் மோர் சேர்ந்துப் பருகலாம்.

பலன்கள்: காலை உணவாக இந்த சிறுதானியக் கஞ்சியை அருந்திவர, விரைவில் சர்க்கரை நோய் கட்டுப்படும். சிறுதானியங்கள் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். எடைக்குறைப்புக்கு உதவும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். மிளகு ஒரு மிகச்சிறந்த டீடாக்ஸ் உணவு. புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்.

சோயாக் கஞ்சி

தேவையானவை: சோயா மாவு - 2 டேபிள்ஸ்பூன், பால் - கால் கப், சர்க்கரை - சுவைக்கு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீர் ஊற்றி, சோயா மாவைக் கரைத்து, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும் இறக்கி, பால், சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: இந்த சோயா கஞ்சியை குழந்தைகள் சாப்பிட நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். சோயா, நார்ச்சத்து நிறைந்தது. உடலுக்குத் தேவையான அமினோஅமிலங்கள் நிறைந்துள்ளன. உயர்ரக தாவர புரோட்டின் சத்து நிறைந்தது. பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பை சீராக்கும். தாய்மார்களுக்குப் பால் சுரப்பை மேம்படுத்தும்.

நோன்புக் கஞ்சி

தேவையானவை: பச்சரிசி - கால் கப், பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் - கால் கப், வெல்லம் - சிறிதளவு.

செய்முறை: அரிசி, பருப்பு, வெந்தயம் மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்து, ரவை பதத்துக்கு உடைக்கவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் நீர் ஊற்றி, உடைத்த ரவையைச் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் வெல்லம் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்ததும், தேங்காய்ப்பால் சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

பலன்கள்: நோன்பின் முடிவில் இந்தக் கஞ்சியைக் குடிப்பதால், பட்டினி இருப்பதால் ஏற்படும் அமிலச் சுரப்பின் பாதிப்பில் இருந்து காக்கும். வெல்லத்தின் இரும்புச்சத்தும் கிடைக்கும். பச்சரிசி செரிமானத்துக்கு எளிதானது. பயத்தம் பருப்பில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் நிறைந்துள்ளது. வெந்தயம் வயிற்றுக்கோளாறுகளைச் சீராக்கும். தேங்காய்ப்பாலில் குடலைப் பாதுகாக்கும் நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளன.

ஆரோரூட் மாவுக் கஞ்சி

தேவையானவை: ஆரோரூட் மாவு - 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - 2 கப், மோர் - கால் கப்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் நீரை ஊற்றி, ஆரோரூட் மாவை அதில் போட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து கட்டிபடாமல் கிளறவும். மாவு வெந்து, கஞ்சியானதும் இறக்கி, ஆறிய பின் மோர் கலந்து, பருகலாம்.

பலன்கள்: வயிற்றுப்போக்கு ஏற்படும்போது இந்தக் கஞ்சியை இரண்டு மூன்று வேளை வைத்து குடிக்க, வயிற்றுப்போக்கு நிற்பதுடன் குடல் புண்ணும் குணமாகும். உடலுக்கு ஆற்றலைத் தரும். தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் சாப்பிடலாம். செரிமானத்தை மேம்படுத்தும். வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் நிறைந்தது. பொட்டாசியம் நிறைந்தது.

கஷாயங்கள்

உடல்நலக்குறைவு ஏற்படும்போது நம் சமையல் அறையில் உள்ள மிளகு, சீரகம் போன்ற பொருட்கள், வீட்டுத் தோட்டத்தில் உள்ள மூலிகைகளைக்கொண்டு கஷாயம் வைத்துக் குடிக்கலாம். இதற்குப் பக்கவிளைவுகள் ஏதும் கிடையாது.

மிளகுக் கஷாயம்

தேவையானவை: மிளகு - 6 டீஸ்பூன், பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான வாணலியில் மிளகை வறுத்து, 2 கப் நீர் விடவும். அது ஒரு கப் ஆகச் சுண்டியதும் இறக்கி, வடிகட்டிய பின் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: மிளகு, தொண்டைக் கரகரப்பை நீக்கும்; பனங்கற்கண்டு இருமலைப் போக்கும். சளி, இருமல் இருக்கும்போது இரண்டு வேளை இந்தக் கஷாயம் வைத்துச் சாப்பிட, நிவாரணம் கிடைக்கும். மிளகு, செரிமானக் கோளாறுகளைச் சீராக்கும். உணவால் ஏற்படும் விஷத்தன்மையைப் போக்கும். தொண்டை அழற்சி, மூக்கடைப்பு, கபப் பிரச்னைகளைப் போக்கும். வைரல் தொற்றுகளுக்கு நல்ல தீர்வு. மிளகில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.

இஞ்சிக் கஷாயம்

தேவையானவை: இஞ்சி - சிறிய துண்டு, மிளகு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், பனைவெல்லம் - சுவைக்கு ஏற்ப.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் அரை லிட்டர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து, இஞ்சியை நசுக்கிப் போட்டு மிளகு, தனியா இரண்டையும் சேர்க்க வேண்டும். அனைத்தும் சேர்ந்து கொதித்து, கால் லிட்டர் ஆக வற்றியதும் இறக்கி வடிகட்டி, பனைவெல்லம் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: மோசமான சளி, இருமல் பிரச்னைகள்கூட சீராகும். இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தும். கல்லீரலைத் தூண்டி நன்கு செயல்பட வைக்கும். இஞ்சியில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நுண்ணூட்டச்சத்துக்கள், இரும்புச்சத்து, வைட்டமின் சி நிறைந்துள்ளது. தனியா, பித்தத்தைக் குறைக்கும். இந்தக் கஷாயத்தைப் பிரசவித்த பெண்களுக்குக் கொடுக்க, கர்பப்பை சுத்தமாகும். தாய்ப்பால் சுரப்பைத் தூண்ட உதவும். வெல்லத்தில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து உடலுக்கு வலுவைத் தரும். ரத்தசோகையைக் கட்டுப்படுத்தும். ரத்த செல்களைப் பெருக்கும்.

ஓமக் கஷாயம்

தேவையானவை: ஓமம் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - அரை டேபிள்ஸ்பூன், சீரகம் - கால் டேபிள்ஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேன் - 2 டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் நீர்விட்டு, இஞ்சியை நசுக்கிப் போட்டு ஓமம், மிளகு, சீரகம், தனியா இவற்றையும் போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து, ஒரு கப் ஆக சுண்டியதும், வடிகட்டி, தேன் சேர்த்துப் பருகவும்.

பலன்கள்: பித்தத்தைப் போக்கும். செரிமானக் கோளாறு ஏற்படும்போது, தினமும் இருவேளை சாப்பிட நிவாரணம் கிடைக்கும். ஓமத்தில் உள்ள வாலட்டேல் எண்ணெய்கள் செரிமானத்தை மேம்படுத்தும். வயிற்றை அசிடிட்டி பிரச்னைகளில் இருந்து காக்கும். கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக்கோளாறுகளைப் போக்கும். சீரகத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. தனியா பித்தத்தைப் போக்கும்.

திப்பிலி கஷாயம்

தேவையானவை: திப்பிலி - நாலு துண்டு, சுக்கு - ஒரு சிறிய துண்டு, மிளகு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், துளசி இலை - 4, ஓமவல்லி இலை - 2, புதினா இலை - சிறிது, சீரகம் - ஒரு டீஸ்பூன், தேன் அல்லது பனங்கற்கண்டு - ருசிக்கு ஏற்ப.

செய்முறை: திப்பிலி, சுக்கு, மிளகு, தனியா, சீரகம் எல்லாவற்றையும் ஒன்றிரண்டாக நசுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். பாதி கொதிவந்ததும், துளசி, ஓமவல்லி, புதினாவைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். நீர், ஒன்றரை கப் ஆக வற்றியதும் இறக்கி, பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: ஜுரம், தலைவலி, ஜலதோஷம் உள்ளவர்கள் இதை அருந்த விரைவில் குணம் பெறலாம். புதினா வயிற்றுவலி, மாதவிலக்குப் பிரச்னைகளைச் சீராக்கும். ஈறுகளை வலுவாக்கும். வாய்ப்புண்களைக் குணமாக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். வாத, பித்த, கபம் போன்றவற்றால் ஏற்படும் ஜுரங்களைப் போக்கும். கை, கால் வலி, அசதி, வயிற்றுப் பொருமல் நீங்கும். புதினாவில் உள்ள மென்தால், வயிற்றைக் குளுமையாக்கும். சுக்கு, சீதக்கழிசலைக் குணமாக்கும்.

ரெடிமிக்ஸ் கஷாயம்

தேவையானவை: தனியா - ஒரு கப், சீரகம் - கால் கப், லவங்கப்பட்டை - சிறிதளவு, சுக்கு - 2 செ.மீ நீளத்துக்கு, மிளகு - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் - அரை டீஸ்பூன், சோம்பு - அரை கப்.

செய்முறை: மேற்கூறிய எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்து, நைஸாக அரைத்து காற்றுப் புகாத டப்பாவில் வைக்கவும். இது ஒரு மாதம் வரை கெடாது.

கஷாயத்துக்கு: கஷாயப் பவுடர் - 2 டீஸ்பூன், வெல்லம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் - ஒரு சிட்டிகை, பால் - கால் கப்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் நீர் ஊற்றி கஷாயப் பவுடர், வெல்லம் சேர்த்துக் கரைத்து, துளி மஞ்சள்தூள் சேர்த்துக் கொதித்ததும், பால் ஊற்றி இறக்கிப் பருகலாம்.

பலன்கள்: ஜீரணத்துக்கும், உடல்வலியைப் போக்கவும் உதவுகிறது. லவங்கத்தில் யூஜெனின் எனும் அல்கலாய்ட்ஸ் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். சீரகம், தனியா போன்றவை செரியாமைப் பிரச்னைகளைப் போக்கும். வாத, பித்த, கபத்தால் ஏற்படும் பிரச்னைகளைச் சீராக்கும்.

வெந்தயம் - சோம்பு கஷாயம்

தேவையானவை: வெந்தயம், சோம்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன்.

செய்முறை: வெந்தயம், சோம்பு இரண்டையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, இரண்டு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவிடவும். அது ஒரு டம்ளராக வற்றியதும், இறக்கி, வடிகட்டி சர்க்கரை சேர்த்துப் பருகலாம். வடிகட்டும்போது மேலே தங்கும் வெந்தயம், சோம்பை ஒரு கப் வெந்நீரில் போட்டு ஊறவைத்து, சிறிது நேரம் கழித்து அந்த நீரை வடிகட்டி, சர்க்கரை சேர்த்துப் பருகலாம். இந்தக் கஷாயத்தை ஒரு நாளைக்கு காலை, மாலை இருவேளை கர்ப்பிணிகள் பருக வேண்டும்.

பலன்கள்: கர்ப்பிணிகள் இந்தக் கஷாயத்தை ஏழாம் மாதம் முதல் பிரசவம் வரை பருக, பிரசவம் எளிதாகும். பிரசவித்த தாய்மார்களுக்குக் கொடுக்க கர்பப்பை அழுக்குகளை நீக்கும். தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்தும். வெந்தயத்தில் உள்ள இமுலின் எனும் நார்சத்து, செரிமானத்தை சீராக்கும். வயிற்றைக் குளுமையாக்கும். வெந்தயத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது உடலை வலுவாக்கும். மாதவிலக்குப் பிரச்னைகளைச் சீராக்கி, வயிற்றுவலியைப் போக்கும்.

வெங்காய வடாம் கஷாயம்

தேவையானவை: உதிர்த்த வெங்காய வடாம் - கால் கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வெங்காய வடாமைப் பொடித்து, வாணலியில் வறுத்து, ஒன்றரை கப் நீர் விட்டுக் கொதிக்கவிட்டு, வடிகட்டி, நெய் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: கர்ப்பிணிகளுக்கு 10-ம் மாதம் வயிற்றுவலி ஏற்படும். இந்தக் கஷாயத்தை வைத்துக் குடித்தால், சூட்டினால் ஏற்பட்ட வலியானால் உடனே நின்றுவிடும். இதனால், சூட்டு வலியையும், பிரசவ வலியையும் கண்டுபிடித்துவிடலாம். வெங்காயத்தில் அலிஃபின் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். தொண்டை வலி, தொண்டைச் சதை வளர்ச்சி போன்ற பிரச்னைகளைச் சீராக்கும். புற்றுநோய்க்கு எதிராகப் போராடும். பார்வைத்திறனை மேம்படுத்தும். ரத்தத்தின் அடர்த்தியைக் குறைப்பதால், ரத்தக் குழாய் அடைப்புகளைச் சீராக்கும்.

வேப்பம்பூ கஷாயம்

தேவையானவை: பறித்த வேப்பம் பூ - 3 டேபிள்ஸ்பூன், உலர் வேப்பம் பூ - 2 டேபிள்ஸ்பூன், இளநீர் - கால் கப்.

செய்முறை: ஒரு வாணலியில் ஒன்றரை கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் வேப்பம் பூக்களைப் போடவும். நன்கு கொதித்ததும், இறக்கி, ஆறிய பின் இளநீர் சேர்த்துப் பருகவும்.

பலன்கள்: காலையில் வெறும் வயிற்றில் இந்த வேப்பம்பூக் கஷாயத்தைத் தொடர்ந்து ஒரு வாரம் பருகிவர, வயிற்றில் உள்ள பூச்சிகள் அகலும். வயிற்றுப் புண் ஆறும். வேம்பு ஒரு மிகச்சிறந்த நச்சு நீக்கி. உட்புற, வெளிப்புற புண்களைக் குணமாக்க உதவும். அம்மை நோயாளிகள் தொடர்ந்து அருந்தலாம். இதன் நுண்ணூட்டச்சத்துக்கள் நரம்புகளை வலுப்படுத்துவதால், வாதம் உள்ளிட்ட நரம்புப் பிரச்னைகள் உள்ளவர்கள் பருகலாம். வைட்டமின் இ நிறைந்திருப்பதால் சருமப் பிரச்னைகளில் இருந்து காக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும். அசாடிரச்டின் (Azadirachtin) எனும் அல்கலாய்டு நிறைந்திருப்பதால், நுண்ணுயிர்க் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும்.

சித்தரத்தை - சுக்குக் கஷாயம்

தேவையானவை: சித்தரத்தை - ஒரு பெரிய துண்டு, சுக்கு - ஒரு சிறிய துண்டு, தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சித்தரத்தை, சுக்கு இரண்டையும் நன்றாக நசுக்கி, ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் நீர் விட்டு நசுக்கியவற்றைப் போட்டுக் கொதிக்கவிடவும். ஒரு கப்பாக வற்றியதும் இறக்கி, வடிகட்டி தேன் சேர்த்துப் பருகவும்.

பலன்கள்: சித்தரத்தை, சளியை வெளியே கொண்டு வந்துவிடும். சளி, இருமல் இருக்கும்போது இந்தக் கஷாயத்தைப் பருக, நல்ல பலன் கிடைக்கும். உடல்வலி, மூட்டுவலி நீங்கும். அலிபின் எனும் அல்கலாய்டு உள்ளதால், நெடுநேரப் பயணத்தின்போது ஏற்படும் கால்வீக்கத்தைக் குறைக்கும் சக்தியும் இந்த சித்தரத்தைக்கு உண்டு. தொண்டைப்புண்ணைக் குணமாக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும். ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். நுரையீரலைப் பாதுகாக்கும் அருமருந்து.

நன்னாரி கஷாயம்

தேவையானவை: நன்னாரி - 25 கிராம், வெட்டிவேர் - 25 கி, வெல்லம் - சுவைக்கு.

செய்முறை: நன்னாரி, வெட்டி வேர் இரண்டையும் நசுக்கி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் கொதிக்கவைக்கவும். லேசாகக் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி, வடிகட்டி, வெல்லம் சேர்த்துப் பருகவும்.

பலன்கள்: உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சி தரும். உடல் சூடாவதுபோல் உணர்ந்தாலும், அதிக தாகம் எடுத்தாலும் இந்தக் கஷாயத்தைக் குடிக்க நல்ல பலன் தரும். உட்புற புண்களைக் குணமாக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சிறுநீரைப் பிரிக்கும். சிறுநீர் குழாய் பிரச்னைகளைப் போக்கும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கும். இதன் நுண்ணூட்டச்சத்துக்கள் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலைத் தரும்.

சுக்கு - தனியா கஷாயம்

தேவையானவை: தனியா - 5 டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், திப்பிலி, சித்தரத்தை - தலா ஒரு சிறியதுண்டு (நசுக்கியது), ஏலக்காய் - 2, சுக்கு பொடி - ஒரு டீஸ்பூன், கிராம்பு - 4, வெல்லம் - ருசிக்கு ஏற்ப.

செய்முறை: வெறும் வாணலியில் திப்பிலி, சித்தரத்தையைப் பாதியாக வறுத்து, மிளகு, சீரகம், தனியா, ஏலம், கிராம்பைப் போட்டு, அனைத்தும் வறுபட்டதும் இறக்கி, கொரகொரப்பாகப் பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் விட்டு, சுக்குப்பொடி, வறுத்துப் பொடித்த பொடி போட்டுக் கொதிக்கவிடவும். வெல்லத்தையும் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி வடிகட்டி, பருகவும்.

பலன்கள்: சுக்கு, உடல்வலி, வாந்தியைக் குறைக்கும். தனியா, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். தொண்டைக் கமறல், தொண்டை வலி, வாயுக்கோளாறு போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கஷாயம் நல்ல பயனைத் தரும். சுக்கு செரிமானத்துக்கு ஏற்றது. ஜின்குபெரின் எனும் ஆல்கலாய்ட் உள்ளதால், தலைவலியைப் போக்கும். கழிசலைக் கட்டுப்படுத்தும்.

ஓமவள்ளி - வெற்றிலை - துளசிக் கஷாயம்

தேவையானவை: ஓமவள்ளி, நறுக்கிய வெற்றிலை, துளசி மூன்றும் சேர்ந்தது - ஒரு கப். வெல்லம் - சிறிதளவு.

செய்முறை: இரண்டு கப் நீர் விட்டு மேற்கூறியவற்றைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்துக் கொதிக்கவிடவும். பிறகு, இறக்கி வடிகட்டி, தேவைப்பட்டால் சிறிது வெல்லம் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: அடிக்கடி சளி, தும்மல், இருமல் போன்றவற்றால் அவதிப்படுவோர் இந்தக் கஷாயத்தைக் குடிக்க, நல்ல பலன் கிடைக்கும். மார்புச்சளிக்கு கைக்கண்ட மருந்து. செரிமானத்தை மேம்படுத்தும். ஆன்டிவைரலாகச் செயல்பட்டு, கபத்தினால் வரும் காய்ச்சலைப் போக்கும்.

முடக்கத்தான்கீரைக் கஷாயம்

தேவையானவை: ஆய்ந்து, அரிந்த முடக்கத்தான் கீரை - ஒரு கப், மிளகு - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய்விட்டு, முடக்கத்தான் கீரையை வதக்கி, மிளகு சேர்த்து மீண்டும் வதக்கி, இரண்டு கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும் வடிகட்டி, தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: மூட்டுவலி, தலைப்பிடிப்பு, கை, கால் வலி, பித்தம் ஏற்பட்டால், இந்தக் கஷாயம் வைத்துக் குடிக்க, நல்ல பலன் கிடைக்கும்.மூட்டுவலி, கை, கால் வலியைப் போக்கும். ஆர்த்ரைடிஸ் பிரச்னைக்கு மிகவும் நல்லது. மாதவிலக்குப் பிரச்னைகளைச் சீராக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

தூதுவளைக் கஷாயம்

தேவையானவை: ஆய்ந்து முள் நீக்கி அரிந்த தூதுவளைக் கீரை - கால் கப், மிளகு, சீரகம் இரண்டும் சேர்ந்து - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, தூதுவளையை வதக்கி, மிளகு, சீரகம் வதக்கி, ஒரு கப் நீர் விட்டுக் கொதிக்கவிடவும். கொதித்ததும் இறக்கி வடிகட்டி, தேவைப்பட்டால் உப்பு சேர்த்துப் பருகலாம்.

குறிப்பு: ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நாட்பட்ட சளி, இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தக் கஷாயம் நல்ல பலனைத் தரும். தூதுவளை நுரையீரலுக்கு வலிமையைக் கொடுக்கும். நெஞ்சுச்சளியைப் போக்கும்.
சி.ஓ.பி.டி பிரச்னை உள்ளவர்களுக்கு நல்லது. ஆண்மையைப் பெருக்கும்.

- இளங்கோ கிருஷ்ணன், படங்கள்: எம்.உசேன்

உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள், வாழ்வியல்முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.