இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 15

நீங்கள் ஒரு கார் வைத்திருக்கிறீர்கள் என்றால், மாற்று டயர் (ஸ்டெப்னி) இல்லாமல் கார் ஓட்டுவது எந்த அளவுக்கு ரிஸ்க்கானது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். 1904-ம் ஆண்டு வரை கார் ஓட்டுநர்கள் இப்படி மாற்று டயர் இல்லாமல், பஞ்சர் ஆகி, பாதி வழியில் அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருந்தனர். இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் மோரீஸ் டேவிஸ் என்பவரின் எளிய யோசனைதான் இந்த மாற்று டயர் வைத்திருப்பது. இன்றைக்கு, சாலையில் டயர் பஞ்சர் ஆனாலும் யாரும் பெரிதும் கவலைப்படுவது இல்லை. உடனடியாக மாற்று டயரைப் பொருத்திவிட்டு, தங்குதடை இன்றி சென்றுகொண்டிருக்கின்றனர். இதேபோலத்தான் டாப்அப் ஹெல்த் பிளானும் நமக்குப் பயன்படுகிறது.

நாம் ஒரு பாலிசி வைத்திருக்கிறோம். அதை முற்றிலுமாகச் செலவழித்துவிட்டோம். இன்னும் அதிக செலவாகிறது என்றால், அப்போது நமக்கு உதவியாக இருப்பது டாப்அப் பாலிசி. இரண்டு லட்ச ரூபாய் பாலிசி வைத்திருக்கிறோம். இரண்டு லட்சமும் செலவாகிவிட்டது. கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்ற நிலையில் டாப்அப் பாலிசி வைத்திருந்தால், பெரிதும் உதவியாக இருக்கும். எப்படி மாற்றுச் சக்கரம் பயன்படுகிறதோ, அதுபோல. ஏற்கெனவே உள்ள மருத்துவ பாலிசி முடியும் வரை டாப்அப் பாலிசி அமைதியாக இருக்கும். அடிப்படையாக நாம் வைத்திருக்கும் மருத்துவ பாலிசி முழுவதும் செலவானதும்,  இந்த டாப்அப் பாலிசியில் உள்ள பணத்தைப் பயன்படுத்தலாம்.

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 15

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலைசெய்யும் இடத்தில் நிறுவனமே பாலிசி எடுக்கும்போது டாப்அப் பாலிசியைக் கூடுதலாக எடுப்பது பயன் உள்ளதாக இருக்கும். பொதுவாக, ஒரு லட்சம், இரண்டு லட்சம் ரூபாய் என்ற அளவில்தான் நிறுவனங்கள் மெடிக்ளெய்ம் பாலிசியைத் தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கின்றன. இன்றைக்கு மருத்துவச் செலவு அதிகரித்துள்ள சூழலில், இரண்டு லட்சம் ரூபாய் எல்லாம் போதுமானதாக இல்லை. இந்த சூழலில், புதிதாக பாலிசியை எடுப்பது கூடுதல் செலவாக இருக்கும். இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் இருப்பதுதான் டாப்அப் பாலிசி.

எந்த ஒரு நிறுவனத்திலும் நாம் பாலிசி எடுத்திருக்கலாம். அந்த நிறுவனத்தில்தான் டாப்அப் பாலிசி எடுக்க வேண்டும் என்று இல்லை. வேறு எந்த ஒரு நிறுவனம் வழங்கும் டாப்அப் பாலிசியையும் நாம் எடுக்கலாம். நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு டாப்அப் பயனுள்ளதாக இருக்கும். தனி நபர்கள் ஏன் இந்த பாலிசியை எடுக்க வேண்டும் என்று கேட்கலாம். நீங்கள் ஐந்து லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்திருக்கிறீர்கள். அதிகரித்து வரும் மருத்துவக் கட்டணங்களால், 10 லட்சம் ரூபாய்க்கு பாலிசி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.

இதற்கு நீங்கள், ஏற்கெனவே உள்ள பாலிசியின் கவரேஜை மட்டும் மாற்றலாம் என்று செல்கிறீர்கள். அதற்கான ப்ரீமியம் மிகமிக அதிகமாக இருக்கும். தோராயமாக, ஐந்து லட்ச ரூபாய்க்கு நீங்கள் 6 ஆயிரம் ரூபாய் ப்ரீமியம் கட்டுகின்றீர்கள் என்றால், 10 லட்சமாக மாறும்போது, அது இன்னும் இரட்டிப்பாக இருக்கும். சரி, புதிதாக பாலிசி எடுத்துவிடலாம் என்று நினைத்தால், அதுவும் மிகவும் காஸ்ட்லியான முடிவுதான். இதற்கு மாற்றாக இருப்பதுதான் டாப்அப் பாலிசி. இதில், ஐந்து லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுக்கிறீர்கள் என்றால், ஆண்டுக்கு ப்ரீமியம் 2,000 ரூபாய்தான் இருக்கும். இதன் மூலம், உங்கள் மெடிக்ளெய்ம் கவரேஜை அதிகமாக செலவு செய்யாமலேயே அதிகரிக்க முடியும்.

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 15

ஓய்வு பெறும் வயது வந்துவிட்டீர்கள். இதுநாள் வரை நிறுவனம் அளித்துவந்த பாலிசியைப் பயன்படுத்தியிருப்பீர்கள். ஓய்வுக்குப் பிறகு அந்த பாலிசியை போர்ட்டபிளிட்டி செய்யலாம். ஆனாலும், கவரேஜை அதிகரிப்பது ப்ரீமியத்தை அதிகரிக்கச் செய்துவிடும். இந்த நிலையில், டாப்அப் பாலிசியை எடுக்கலாம். ஒருவேளை நீங்கள் அடிப்படை பாலிசியை எடுக்கவில்லை என்றாலும் டாப்அப் பயன்படும். அதாவது, முதல் ஒன்று, இரண்டு லட்ச ரூபாய் வரை நீங்கள் உங்கள் கையில் இருந்து செலவுசெய்ய வேண்டும். அந்த அளவைத் தாண்டியதும் தானாகவே டாப்அப் பாலிசி செயல்பாட்டுக்கு வந்துவிடும். ஏற்கெனவே ஒரு பாலிசி வைத்திருக்கிறோம், டாப்அப் பாலிசியும் உள்ளது. இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியுமா என்றால் முடியாது.

- தொடரும்

டாப்அப் பாலிசி. இதில், ஐந்து லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுக்கின்றீர்கள் என்றால், ஆண்டுக்கு ப்ரீமியம் இரண்டாயிரம் தான் இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism