Published:Updated:

அரிசிதான் உடல் பருமனுக்குக் காரணமா ? மருத்துவர்கள் சொல்வது என்ன? #Obesity

அரிசிதான் உடல் பருமனுக்குக் காரணமா ? மருத்துவர்கள் சொல்வது என்ன? #Obesity
அரிசிதான் உடல் பருமனுக்குக் காரணமா ? மருத்துவர்கள் சொல்வது என்ன? #Obesity

ம் முன்னோர்கள், இயற்கையோடும் இயற்கை சார்ந்த உணவோடும் வாழ்க்கையைக் கொண்டாடியவர்கள். அதனால், ஆரோக்கியம் அவர்களிடம் நிறையவே அடைக்கலமாகியிருந்தது. ஆனால், 'நாகரிகம்' என்ற பெயரில், ஆரோக்கியமான பாரம்பர்ய  உணவுமுறையை நாம் மறந்துவிட்டோம் . பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை நிற உணவுகள், துரித உணவுகள் என்று மேற்கத்திய உணவுகளிடம் மயங்கிவிட்டோம். மேலும், அந்தக் காலத்தில் வாழ்க்கை முறையிலேயே உடலுழைப்புக்கான தேவை இருந்தது. வாகன, இயந்திரப் பயன்பாடு, தொழில்நுட்பம்  என இந்த நவீன காலத்தில் எல்லாமே மாறிவிட்டது. 

இப்படி, வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், வளரும் சூழல் என உடல் பருமனுக்கான காரணங்கள் நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதனால், இன்று உலகை ஆட்டுவிக்கும் பெரும் பிரச்னையாக உடல் பருமன் உருவெடுத்து நிற்கிறது. உடல் பருமன்  மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சர்க்கரைநோய், உயர் ரத்தஅழுத்தம், இதயநோய், பக்கவாதம் எனப் பல நோய்களுக்கு நுழைவு வாயிலாக அமைந்துவிடுகிறது.

இந்தப் பிரச்னை  நம் நாட்டில் மட்டுமல்ல... உலகம் முழுவதும், அநேக நாடுகளில் ஒரு சவாலாக மாறி வருகிறது. இதன் தீவிரத்தை உணர்ந்து அமெரிக்க மருத்துவக் கழகம் கடந்த 2013-ம் ஆண்டில் உடல் பருமனை ஒரு நோயாகவே அறிவித்துவிட்டது. 
 

`பொதுவாக, உடல் எடையைக்  குறைக்க மாத்திரை,  டயட் எனப்  பல வழிமுறைகள் உள்ளன. ஆனால், குறிப்பிட்ட உடல் எடையைத்  தாண்டியவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக இருக்கிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், `உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையில் பல அபாயங்கள் இருக்கின்றன. இதை மறைத்துவிடுகிறார்கள்; வருகிறவர்கள் அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்வதையே குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

இப்படி உடல் பருமன் குறித்து  குழப்பநிலையே நிலவுகிறது. உடல் பருமன் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாததும் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. `உடல் பருமன் குறித்துத் தெளிவாக அறிந்துகொண்டு, பிறகு அதிலிருந்து தற்காத்துக்கொள்வதுதான் சிறந்த வழி’ என்கிறார்கள் மருத்துவர்கள். 

உடல் பருமனாவது ஏன்? 

உண்ணும் உணவில் உள்ள சத்துகள், குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கின்றன. அதிக அளவு குளூக்கோஸ் சேரும்போது அது கிளைகோஜனாக (Glycogen)  கல்லீரலிலும் தசைகளிலும் அவசரத் தேவைக்கு சேமிக்கப்படுகிறது. தேவைக்கும் அதிகமான கிளைக்கோஜன் மட்டுமே கொழுப்பாக மாற்றப்பட்டு, உடலின் பல இடங்களில் தேங்குகிறது. உடல் பருமனை அதிகரிக்கிறது. 

இதை எப்படித் தெரிந்துகொள்வது? 

பொதுவாக, உடல் எடையை அளவிடுவதற்கு  பாடி மாஸ் இண்டெக்ஸ்’ (Body  Mass Index - BMI ) என்னும் அளவீட்டைப் பயன்படுத்துகிறோம். இதைக் கணக்கிட,  உயரத்தின் அளவை அதே அளவால் பெருக்கிக்கொள்ள வேண்டும்.  உடல் எடையை இந்த அளவால் வகுத்துக் கிடைக்கும் விடை, உங்கள் பி.எம்.ஐ.  
இது 18.5-க்குக் கீழே இருந்தால், உடல் எடை குறைவு அல்லது ஊட்டச்சத்துக் குறைவு என்று பொருள். 18.5 முதல் 24.9-க்குள் இருந்தால், சரியான உடல் எடை.  25 - 29.9 அதிக உடல் எடை. முப்பதுக்கு மேல் இருந்தால், உடல் பருமன். இது நாற்பதைத்  தாண்டிவிட்டால், ஆபத்தான உடல் பருமன் என்று அர்த்தம். 

உடல் பருமனால் ஏற்படும் ஆபத்துகள்... 

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம். இதய நோய்கள், மூச்சுத் திணறல், முழங்கால் மூட்டுவலி, முதுகுவலி, தோள்வலி, பித்தப்பை நோய்கள், குடல் இறக்கம், மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, அதிகக் குறட்டை, ஸ்லீப் அப்னியா, பெண்களுக்கு மாதவிடாயில் கோளாறு, நுரையீரல் நோய்களால் எளிதில் பாதிக்கப்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

உடல் பருமனாவதற்கான காரணங்கள்... 

தவறான உணவு முறை: அதிக அளவில் உணவு உட்கொள்ளுதல், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், அதிகக் கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிடுவது. உதாரணமாக, எண்ணெயில் வறுத்த, பொரித்த இறைச்சி உணவுகள், முட்டை, தயிர், நெய், வெண்ணெய், இனிப்புகள், நொறுக்குத்தீனிகள்  போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுவது.

வாழ்க்கைமுறை: உடற்பயிற்சி இல்லாமை. வாழ்க்கையில் பெரும்பாலான நாள்களில் உடல் உழைப்பில்லாமல், உட்கார்ந்தநிலையில் வேலை, மனஅழுத்தத்தோடு இருத்தல் போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு உடல் எடை கூடும். 

நோய்கள்: தைராய்டு சுரப்புக் குறைதல், இதயச் செயலிழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற நோய்கள் உடலின் திரவக் கொள்ளளவை அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கும்.

மருந்துகள்: நீண்ட காலம் நாம் எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்டு போன்ற சில வகை மருந்துகள் உடல் எடையை அதிகரிக்கும். 

இவை மட்டுமல்லாமல், உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது அரிசி. உலகில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றில் ஆசிய நாடுகள் மட்டுமே 90 சதவிகிதம் உற்பத்தி செய்கின்றன.  `உலக மக்கள்தொகையில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் முக்கிய உணவாக அரிசிதான் இருக்கிறது’ என்கிறது பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகம். நிலைமை இப்படி இருக்க, `அரிசி சாதத்தை உண்பதால் மட்டுமே உடல் பருமன் பிரச்னை அதிகரித்துவருகிறது. ஓட்ஸ், கோதுமை போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்’ எனப்  பலரும் ஆலோசனை கூறுவதைப் பார்க்கிறோம். இதனால், அரிசி சாதத்தை முற்றிலும் தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். மேலும் நாம் பாரம்பர்யமாக சாப்பிட்டுவரும் அரிசி ஆரோக்கியமற்றதோ என்ற

சந்தேகமும் எழுகிறது.

உண்மையில், உடல் பருமனுக்கு முக்கியக் காரணம் நாம் சாப்பிடும் அரிசி உணவுதானா? அரிசி உணவைச்  சாப்பிடலாமா, கூடாதா என மூத்த உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் பேசினோம்.

அரிசி உடலுக்குப் போதிய ஆற்றலையும் வலிமையையும் தரக்கூடிய அற்புத உணவு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உலகில் அரிசி வெள்ளை, பழுப்பு, மஞ்சள், சிவப்பு, ஊதா, கறுப்பு எனப்  பல நிறங்களில் உற்பத்தி செய்யப்பட்டாலும், நம் நாட்டில் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி போன்றவைதான் பிரதானம். ஆனால், இந்தத்  தலைமுறையினர் அரிசி பளிச்சென வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறார்கள். அதனால், இப்போதெல்லாம் பாலீஷ் செய்யப்பட்ட அரிசிகளைத்தான் பயன்படுத்துகிறோம். பாலீஷ் செய்யும்போதே, நார்ச்சத்து, வைட்டமின், மாங்கனீஸ், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கொழுப்பு அமிலங்கள் ஆகியவையும் நீக்கப்பட்டுவிடுகின்றன. இதனால், அரிசியில் உள்ள இயல்பான சத்துகள் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிடுகின்றன. ஆனால், பாலீஷ் செய்யப்படாத சிவப்பு அரிசியில் சத்துகள் நிறைவாகக் கிடைக்கின்றன. 

அதேபோல, நம் முன்னோர்கள்  மூன்று வேளையும் அரிசி  சாதம் சாப்பிட்டு ஆரோக்கியமாகவும்  நல்ல உடல்வாகுடனும் வாழ்ந்தார்கள். காரணம் அவர்களது உடல் உழைப்பு. நன்றாக உழைக்கும் உடலுக்கு அரிசி  சாதம் ஆரோக்கியத்தைத்தான்  கொடுத்தது; கெடுக்கவில்லை.  


   

அரிசியில் பல சத்துகள் இருந்தாலும், வேறு சில அத்தியாவசிய சத்துகள் இல்லை. எனவே, காய்கறிகள், பழங்கள், அசைவ உணவுகளைச் சேர்த்துக்கொள்கிறோம். 

சமையலுக்குச் சூரியகாந்தி எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் (Rice bran oil) அல்லது ஆலிவ்  எண்ணெயைப்  பயன்படுத்தலாம். நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 15 மி.லி போதுமானது.

அதிக மாவுச்சத்து, கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவுகள் மற்றும் பானங்கள்  உண்பதைத் தவிர்க்க வேண்டும். கொழுப்புள்ள உணவைத் தேவைக்கு மேல் சாப்பிட நேர்ந்தால், உடனுக்குடன் ஏதாவது  வேலையையோ, உடற்பயிற்சியையோ செய்து அதை எரித்துவிட வேண்டும். உண்ணும் உணவுக்கேற்ப நடைப்பயிற்சி,  உடற்பயிற்சி என்று ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

உடல் பருமனுக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது. ஓர் உணவியலாளர் உதவியுடன்  உங்கள்  BMI-க்குத் தகுந்த கலோரிகளைக் கணக்கிட்டு அதற்கேற்ப உணவைச் சாப்பிடுங்கள்" என்கிறார் தாரிணி கிருஷ்ணன்.