Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : தொல்.திருமாவளவன்கவின்மலர்படம் : வி.செந்தில்குமார்

நானும் விகடனும்!

இந்த வாரம் : தொல்.திருமாவளவன்கவின்மலர்படம் : வி.செந்தில்குமார்

Published:Updated:

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

''என் ஊரான அங்கனூரில் எந்தப் பத்திரிகையும் வராது. திட்டக் குடியில் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோதுதான் விகடன் எனக்கு அறிமுகம். அங்கே உள்ள ஒரு நூலகத்துக்கு விகடனை வாசிப்பதற் காகவே செல்வேன். தலையில் கொம்பு முளைத்ததுபோன்ற விகடன் தாத்தாவின் உருவம் என்னைக் கவர்ந்தது. நான் சென்னைக்கு இடம்பெயர்ந்த பின்னர் சைதாப்பேட்டை எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டு இருந்தேன். மேற்கு சி.ஐ.டி. நகரில் உள்ள நூலகத்துக்குச் செல்வேன். எத்தனை வாரப் பத்திரிகைகள் இருந்தாலும், நூலகத்தில் என் கண்கள் முதலில் விகடனைத் தேடிய நினைவுகள் இப்போதும் நெஞ்சுக்குள். வேறு யாராவது வாசித்துக்கொண்டு இருந்தா லும், அவர்கள் முடிக்கும் வரை பொறுமை யாகக் காத்திருந்து வாங்கிப் படிப்பேன்.

பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி படித்துவிட்டு, எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் படிக்க ஆசைப் பட்டேன். அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில், ஏதாவது ஒரு பத்திரிகையில் பரிந்துரைக் கடிதம் வாங்கி வரச் சொன்னார் கள். அப்போதுதான் முதல் முறையாக ஆனந்த விகடன் அலுவலகத்துக்கு வந்தேன். செக்யூரிட்டியிடம் விஷயத்தைச் சொன்னபோது, அப்படி எல்லாம் கடிதம் கொடுக்க மாட்டோம் என்று அவரே முடிவெடுத்துச் சொல்லிவிட்டார். பின் ஆற்காடு வீராசாமி நடத்திய 'எதிரொலி’ பத்திரிகை அலுவலகத்துக்குப் போய் கடிதம் கேட்டேன். அங்கேயும் கிடைக்கவில்லை. அதனால், நான் எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் படிக்க முடியாமல் போய், எம்.ஏ. கிரிமினாலஜி படிக்க நேர்ந்தாலும், எப்படியாவது ஒரு பத்திரிகையாளனாக வர வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன்.

நானும் விகடனும்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்ட அறிவிப்பு வந்தது. ஆசையோடு விண்ணப்பப் படிவத்தைப்  பூர்த்திசெய்த நான்,  விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் அவசரத்தில் விண்ணப்பத்தை சென்னையிலேயே மறந்துவைத்துவிட்டுச் சென்றுவிட்டேன். சென்னை திரும்பியபோது  விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி முடிந்துபோய் இருந்தது தீராத வருத்தத் தைத் தந்தது. அந்த வருத்தத்துக்கு வடிகாலாகத்தான் இப்போது நானே பத்திரிகை ஒன்று ஆரம்பித்து, அதன் ஆசிரியராகவும் இருக்கிறேன்.

ஒரு முறை அருப்புக்கோட்டை  அருகே அல்லாலப்பேரி  கிராமத்தில், ஆதிக்கச் சாதிகள் பெரிய அளவில் தலித்துகளுக் குப் பிரச்னை ஏற்படுத்தி, அதனால் ஊரைவிட்டே தலித்துகள் வெளியேறும் படியான கொடூர சூழல் உருவானது. அப்போது நான் மதுரையில் அரசுப் பணியில் இருந்தேன். அந்தப் பகுதி மக்களைச் சந்திக்கச் சென்றிருந்தபோது, ஒரு மாணவர் அந்தப் பிரச்னை குறித்து விகடனில் எழுதுவதற்காக வந்திருந்தார். விகடனின் மாணவ நிருபர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்தான், இன்றைய ஆனந்த விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் என்பது வியப்பு.  

அதன் பின்னர், கால மாற்றத்தில் நான் என் வேலையைத் துறந்து, முழு நேர அரசியலுக்கு வந்துவிட்டேன். மதுரையில் மேலவளவு கிராமத்தில் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்ட போது அதைக் கண்டித்து மதுரையில் நாங்கள் நடத்திய பேரணியில், எனக்கு மிக அருகில் குண்டு வெடித்தது. அந்தச் சம்பவம் குறித்த விகடன் செய்திக் கட்டுரையில் உண்மைக்கு மாறான சில தகவல்கள் இருந்தன. அந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாக விளக்கமும் மறுப்பும் தெரிவித்து ஒரு கடிதம் எழுதி எடுத்துக் கொண்டு இயக்கத் தோழர்களோடு விகடன் அலுவலகத்துக்குச் சென்றேன்.

அப்போது ஆசிரியராக இருந்த கே.அசோகன் உட்பட சில நண்பர்களைச் சந்தித்தபோது என் வாய் மட்டும் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தது. மனமோ, மாணவப் பத்திரிகையாளராக விகடனில் சேராமல் விட்டுவிட்டோமே என்ற ஏக்கத்திலேயே இருந்தது இன்னமும் இனிய நினைவு!

விகடன் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் சுஜாதா எழுதிய கணினி தொடர்பான அறிவியல் கட்டுரைகள், மதன் கார்ட்டூன்கள் ஆகியவை மிகவும் கவர்ந்தன. எம்.எஸ். உதயமூர்த்தி எழுதிய தன்னம்பிக்கைத் தொடரை விரும்பிப் படித்திருக்கிறேன். விகடனின் விசேஷம் அதன் வடிவமைப்பு தான். ஒவ்வொரு பக்கமும் மிக அழகாகச் செதுக்கியது போன்றிருக்கும். கட்டுரைக்கான ஓவியங்கள் - படங்களின் தேர்வை முதலில் கவனித்த பின்தான் வாசிக்கவே தொடங்கு வேன். உள்ளூர் விஷயங்கள் முதல், தேசிய - சர்வதேசச் செய்திகள் வரை அலசி ஆராய்ந்து நடுநிலையோடு, சிறப்பாக, நேர்மை யாக எழுதப்படும் தலையங்கம் பிடிக்கும்.

1999 தேர்தலில் என்னைப் பற்றி மற்ற பத்திரிகைகளில் எல்லாம் பாதகமான விஷயங்களாகவே வந்துகொண்டு இருக்க... விகடன்தான் முதன்முதலில் என் தேர்தல் களத்தில் என்னோடுகூடவே பயணித்து, என்னையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் பற்றிய ஒரு முக்கியமான பதிவை மக்களுக்குத் தந்தது. நாங்கள் ஒரு பொருட்டே அல்ல என்று எல்லா ஊடகங் களும் நினைத்த அந்தக் காலத்தில், எங்க ளுக்கு முக்கியத்துவம் தந்தது விகடன்.

2001-ல் தேர்தல் இடப் பங்கீடு தொடர்பாக ஜெயலலிதாவைச் சந்திக்கச் சென்ற நான், கொடியங்குளம் தொடர்பாக அவரிடம் நேரடியாக விமர்சித்தேன் என்பதை 'முகத்துக்கு நேரே பளார்’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரியாக வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது  ஜூனியர் விகடன். அந்த இதழை நான் பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறேன்.

விகடனில் 'தமிழ் மண்ணே வணக்கம்!’, 'இது எங்க சாமி’ தொடர்களில் வந்த முதல் நபர் நான்தான். நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், விகடன் படங்களில் நான் நெற்றியில் பட்டையோடு காட்சி அளித்ததை நிறையப் பேர் விமர்சித்தனர். சாதி ஒழிப்பு பேசும் நீங்கள் எப்படிக் கோயிலுக்குப் போகலாம் என்று வெளிநாடுகளிலும்கூட என்னிடம் கேட்டனர்.

சாதி ஒழிப்பு என்பது இந்துத்துவ எதிர்ப்பு. சிறு தெய்வ வழிபாடும் இந்துத்துவ எதிர்ப்பு தான் என்று சொன்னேன். இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் அப்படி லட்சக்கணக்கான மக்களுக்குப் போய்ச் சேர விகடன்தான் எனக்கு வாய்ப்பு அளித்தது.

'எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு’ என்ற தலைப்பில் ஒரு தலித் முதல்வராகும் என் கனவைப் பேட்டியாக வெளியிட்டதும் விகடனே. தலித் மக்களுக்கு தன்னம்பிக்கை அளித்த அந்தப் பேட்டியைப் படித்த யாரும், 'இவன் முதல்வர் பதவிக்கு ஆசைப்படு கிறானோ’ என்று நினைக்காமல், 'ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவர் முதல்வராவது’ என்கிற கோணத்தில் புரிந்துகொண்டது மகிழ்ச்சி அளித்தது.

உள்ளாட்சிப் பதவிகளில்கூட தலித்துகளை அமரவிடாமல் செய்த பாப்பாபட்டி - கீரிப்பட்டி பிரச்னை தீவிரமாக இருந்த நேரம் அது என்பதால், விகடன் அளித்த கூடுதல் மகிழ்ச்சி அது!

அம்மா - அப்பாவைவிட என் திருமணம் குறித்து ஆனந்த விகடன் அதிகம் கவலைப் படுவதாக என் நண்பர்கள் கேலி செய்வார் கள். விகடனில் வெளியான என் அம்மாவின் பேட்டி மிகவும் பிரசித்தம். நான் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது குறித்து அம்மா வெளிப்படையாக விகடனுக்குப் பேட்டி கொடுத்திருந்தார்.

வெளிநாடுகளுக்குச் சென்றபோது எல்லாம் அந்தப் பேட்டி குறித்து தமிழ் மக்கள் என்னிடம் பேசி இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, நான் வன்னிக்குச் சென்றபோது, நான் மிகவும் மதிக்கும் தலைவர் மேதகு பிரபாகரன் 'விகடனின் செல்லப் பிள்ளையே!’ என்று என்னை வரவேற்று, அம்மாவின் பேட்டியை நினைவுகூர்ந்ததை மறக்கவே மாட்டேன்!

நானும் விகடனும்!

என் சொந்த ஊரான அங்கனூர் குறித்து 'என் விகடன்’-ல் வெளியாகும் 'என் ஊர்’ பகுதியில் என்னைப் பேசவைத்ததும் விகடன்தான். திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த வாசகர்கள் மட்டும்தான் அதை வாசிக்க முடிந்தது. 'என் விகடன்’ ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொன்று என வராமல், பொதுவாக வந்தால் என்ன? அனைத்து உள்ளூர் நிகழ்வுகள் குறித்தும் தமிழகம் அறிந்துகொள்ள இன்னும் வசதியாக இருக்குமே?

இதுவரை விகடனின் அச்சச்சோ அவார்ட்ஸில் இரண்டு விருதுகள்(!) வாங்கி விட்டேன். அப்புறம் லூஸுப் பையனிலும் அவ்வப்போது தலைகாட்டுவேன்!

அண்மையில் பரமக்குடி படுகொலை தொடர்பாக ஆனந்த விகடனிலும் ஜூனியர் விகடனிலும் பதிவுகள் ஆணித்தரமாக எழுதப்பட்டு இருந்தன. ஆளும் கட்சிக்கு எதிரான விஷயமாக இருந்தாலும் நேர்மை தவறாமல், உள்ளது உள்ளபடி மக்களுக்குச் சொன்னது விகடன்!

இன்றைய புது வடிவ விகடன் வண்ண மயமாக எல்லா வகையிலும் நன்றாகவே இருக்கிறது. ஆனாலும், சின்ன வயதில் மனதில் பதிந்துபோன, அளவில் சின்ன தான விகடன்தான் எனக்கு இன்னமும் பிடித்தமானதாக இருக்கிறது!''