Published:Updated:

ஹரி என்கிற கோணல் மனிதனை நிறுத்தி நம்மை துணுக்குற வைத்த ஃபஹத்..! - மலையாள கிளாசிக் - 6

ஹரி என்கிற கோணல் மனிதனை நிறுத்தி நம்மை துணுக்குற வைத்த ஃபஹத்..! - மலையாள கிளாசிக் - 6
ஹரி என்கிற கோணல் மனிதனை நிறுத்தி நம்மை துணுக்குற வைத்த ஃபஹத்..! - மலையாள கிளாசிக் - 6

நார்த் 24 காதம்

இந்தப் படத்தில் பிரேம்ஜி ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். அவரது மனைவி வட இந்தியப் பெண். வளர்ந்த குழந்தைகூட இருக்கிறது. கதாநாயகி நாராயணியின் சந்தேகத்தை பிரேம்ஜியிடம் கேட்கிறார் நெடுமுடி. நீங்கள் உங்கள் காதலை அவளிடம் எப்படிச் சொன்னீர்கள்? அதற்கு அவன் ``அன்புக்கு ஒரு பாஷையும் கிடையாது, அதை அனுபவத்தில் தான் தெரிந்துகொள்ள வேண்டும்''  என்கிறான். வாழ்க்கையே அப்படித்தான். அதை அனுபவித்து உட்கொள்ளாமல் பிழைத்துப் போவதால் அறிய முடியாது.

ஹரிக் கிருஷ்ணன் அப்படித்தான். தனது பிழைப்பைப் பார்க்கிறவன். அப்பா, அம்மா, தம்பி, சக மனிதர்கள் யாருமே தேவையில்லை. காலை எழுந்ததில் துவங்கி படுக்கப் போகிறவரை உடலில் தூசு படாமல் சுகாதாரம் பேணுகிறவன். சத்தம் பிடிக்காது, சங்கீதம் பிடிக்காது. ஒரு பட்டியலைப் போட்டுக் கொண்டு அன்றாடங்களை கடந்து செல்லும் அவனுக்கு மனநலம் பற்றிப் பேசிக்கொள்ள ஒரு டாக்டரே உண்டு. தனது சம்பிரதாயங்களை செய்துகொள்ள முடியாது என்கிற நடுக்கத்தால் அவன் வெளியூர்களுக்குச் செல்வதில்லை. ஆனால், திருவனந்தபுரத்துக்குச் சென்றே ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் வருகிறது என்பதே கதையின் ஆரம்பப் புள்ளி. அவன் தன்னுடைய மூட்டை முடிச்சுகளுடன் இறுக்கமாக புறப்படுகிறான்.

ட்ராவலிங் மூவிஸ் என்பது உலகெங்கிலும் உண்டு. 

சே பயணம் போன மோட்டர் சைக்கிள் டைரீஸ் தொடங்கி வரிசையாய் பல காவியங்கள் இருக்கின்றன.

ஒரு ராட்ஷச லாரியோ, அல்லது ஒரு மீன் பாடி வண்டியோ சாலைகளின் வழியாக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்வதால் அது ட்ராவலிங் மூவியாக ஆகி விடாது என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன். வழக்கம்போல எதையுமே தப்பாக புரிந்துகொண்டு சர்க்கஸ் காட்டுகிற அபத்தம் தப்பித் தவறி வரவில்லை என்பதற்காகதான் நான் இந்தப் படத்தை தேர்வு செய்தேன். குறிப்பாய் ஹரி சந்திக்கப் போகிற முதல் கதாபாத்திரம் கோபாலன். முதுமைக்கு வந்துவிட்ட ஓய்வில் இருக்கிற ஆசிரியர். நெடுமுடி அந்தப் பாத்திரத்தை செய்திருந்தார்.

கிளம்பி விட்ட புகைவண்டியில் கோபாலனுக்கு ஒரு செய்தி வருகிறது. மனைவிக்கு சீரியஸ். பதற்றம் கொள்கிற அவரை நாணி சமாதானம் செய்கிறாள். ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொல்லி, வருகிற ஸ்டேஷனில் இறங்கிக்கொள்ள ஏற்பாடு செய்கிறாள். அவர் இப்போது கோழிகோட்டுக்குத் திரும்பிச் சென்றாக வேண்டும்.  தள்ளாடுகிற அவருக்கு அவள் உதவி செய்வதென்று தீர்மானிக்கிறாள். இருவரும் இறங்கிச் செல்கிறார்கள். பார்த்திருந்ததைத் தவிர ஒரு உதவியும் செய்யாமல் இருந்த ஹரி அவர் விட்டுச் சென்ற செல்லைப் பார்க்கிறான். போன் அடிக்கிறது. எடுத்து மறுமுனையில் யாரோ எதுவோ சொல்லுவதைக் கேட்டுவிட்டு போனைக் கொடுக்க டிரெயினை விட்டு இறங்குகிறான் ஹரி. பெட்டியும் டிரெயினும் சென்று விடுகிறது. கோபாலனிடம் போனைக் கொடுக்காமல் தயங்கி நிற்கிறான் அவன். வேறு வழியின்றி அவனும் அவர்களுடன் கிளம்பிச் செல்கிறான்.

ஏற்கெனவே பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சொல்லப் போனால் சக ஊழியர்கள், திருவனந்தபுரத்துக்குச் சென்று சேரும் ஹரி, இந்தப் பொறியில் சிக்குவதற்கு தான் திட்டமிட்டு இந்த நாளில் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஆட்டோவிலும் படகிலும் போலீஸ் வண்டியிலும் ஏன், மந்திரியின் காரில்கூட மூவருமாய் பயணித்து கோபாலனை அவரது வீட்டில் கொண்டு சேர்ப்பதுதான் படத்தின் முழுமையான கதை.

வழியெங்கிலும் விதவிதமான மனிதர்கள்.

அவர்களைப் பற்றின கதைகள்.

நாராயணி என்கிற நாணி முதலில் இருந்தே கோபாலன் மீது இரக்கம் கொண்டுவிட்டாள். தான் சென்று சேர வேண்டியதைப் பொருட்படுத்தாமல் அவரைக் கொண்டு சேர்ப்பதற்கு இறங்கியாயிற்று. அவளுக்கு கிலோ மீட்டர் கணக்கில் நடப்பதிலோ, கள்ளுக்கடையில் மீனும் கப்பையும் சாப்பிடுவதிலோ எந்த இடறலுமில்லை. கடத்தப் பார்க்கிற பையன்களைக்கூட வெளுத்து வாங்கி விட்டு சகஜமாயிருக்கிறாள். அவளுக்குப் புதுமைகளை சாதிப்பதில்  சந்திப்பதில், பயணம் செய்வதில், மனிதர்களுடன் தோழமை கொள்ளுவதில் சந்தோஷமே உண்டு.

மாஸ்டரும் அப்படியே. உலகம் தெரிந்தவர். அனுபவங்கள் நிறைந்தவர். செல்லும் வழியில் உதவுகிற மனிதர்களுடன் அவருக்கு ஈடுபாடு உண்டு. அளவளாவிக் கொண்டேயிருக்கிறார். அவருக்கு ஹரியைப் பற்றித் தெரிகிறது. அவனது குற்றம் குறைகளை ஆராயாமல் இயல்போடு அதில் பொருந்திக்கொள்கிறார். 

இவர்கள் இருவருக்கிடையே முட்டி மோதி திணறிக்கொண்டிருக்கிற ஹரி மெதுவாய் அவன் கற்க வேண்டிய பாடங்களை கற்கவே செய்கிறான். வேறு வழியில்லை என்றே சொல்ல வேண்டும். அவனுக்கு காலாற நடந்து பழக்கமில்லை. காலில் செருப்பில்லாமல் சில்லென்ற ஆற்றில் இறங்கி நடந்து பார்த்ததில்லை. இப்போதுதான் சுடச்சுட பிறந்த குழந்தையைக் கையில் ஏந்தி அதன் முகத்தை அந்த முகத்தின் புன்னகையைத் தரிசித்த காரியம் நடந்ததேயில்லை. அதெல்லாம் வேண்டாம், ஒரு இளம்பெண் இத்தனை நெருக்கத்தில் இருந்த அனுபவமே அவனுக்கு இருந்திருக்காது. மேலும், சரியாய் சொல்லி முடிப்பது என்றால் அவன் இயந்திரமாய் இருப்பதில் இருந்து நழுவி இப்போதுதான் மனிதனாக பழகிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறான்.

ஊரை சேரும்போது கோபாலன் தானும் தன் மனைவியும் சந்தித்து மோதல் காதலானதை சொல்கிறார். அரசியல் செயற்பாடுகளில் தலைமறைவு வாழ்க்கையை அவரும் அவரது மனைவியும் மேற்கொண்டபோது இருந்த இடத்தைக் காட்டித் தருகிறார். பின்னொரு காலத்தில் கணவன் மனைவியாக நாங்கள் அங்கேயே வாழ்ந்தோம் என்கிற அவர் அதற்குப் பின்னர் அவளது விருப்பத்தின் பேரில் கட்சி அலுவலகத்துக்காக கொடுத்துவிட்டோம் என்கிறார். போலீஸாரின் அடக்குமுறையில் சிக்கி பலமாய் அடிபட்டதால்தான் தனது மனைவி இப்போதும் உடல் நலமில்லாதவளாய் ஆகிப் போனாள் என்கிற விவரத்தையும் சொல்கிறார். உண்மையில் மாஸ்டரும் இவர்களும் சென்று சேரும்போது ஊரே காத்திருக்கிறது. அவரது மனைவி உயிரோடு இல்லை.

கோபாலன் நிலைகுலைந்தாலும் பொறுமையாய் உள்ளே சென்று எடுத்து வந்த செங்கொடியை தனது மனைவியின் சடலத்துக்கு போர்த்தும்போது அந்தத் தம்பதிகள் வாழ்ந்த பொதுவாழ்க்கை நமக்கு முழுவதுமாய் புரிகிறது. அவர்களைப் போன்ற தியாகிகளால் தான் நாம் இன்று பல சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் கேரளம் இன்று அனுபவிக்கிற சமூக பலன்களுக்கு கோபாலன் மாஸ்டரைப் போன்ற எவ்வளவோ பேர் காரணம். அவரது மனைவியைப் போன்ற உள்ளங்கள் காரணம். அவர்களின் ரத்தத்தைப் பிழிந்து கொண்டு வளமை பெற்ற மண்ணில் தான் கண்ணியம் காக்கிற ஹரியைப் போன்ற தன்னலவாதிகள் தூசு படாத இடத்தில் தன்னை மறைத்துக்கொண்டு அல்டாப்பு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கவனிக்க வேண்டும், ஹரியைப் போன்ற என்றுதான் சொன்னேன். ஹரி அல்ல. ஹரிக்கு மாஸ்டரின் மனைவி இறந்தது முன்னமே தெரியும். அவனிடம் அந்த போனில் மரணச் செய்தியைதான் சொல்லியிருக்கிறார்கள். போனை அவர்களிடம் கொடுக்காமல் தயங்கியவாறே அவன் இவர்களுடன் வந்தது ஒரு நல்ல மனம் இருந்ததால்தான்.

அது மட்டும் அல்ல, அவனுக்கு இப்போது ஜோதியில் கலக்க தெரிந்துவிட்டது. நாணியுடன் சின்ன ஓட்டலில் தோசை சாப்பிடுகிறான். அவள் கை கழுவுவதற்கு எழுந்துபோன பிறகு அவளைப் போலவே வெகு ரசமாய், சாப்பிட்ட விரல்களை வாய்க்குள் நுழைத்து இழுத்து உணவின் சுவையை அனுபவிக்கிறான். வேறென்ன, இந்த நேரத்தில் இது எதுவுமே கிடைக்காமல் உலர்ந்து போன வயிற்றுடன் தூக்கம் வராமல் எத்தனை பேர் புரண்டு கொண்டிருக்கிறார்களோ? இங்கே நாகரிகமாய் சாப்பிட முண்டுவது ஒரு அநீதியல்லவா?
ஹரி முற்றிலுமாய் தெளிந்துவிட்டான்.

இப்போது இவ்வளவு தெளிவாய் இருக்கிறவனைப் பார்க்கும்போது தான் அவன் வீட்டாருக்கு அவனது மனநலம் மீது ஐயம் வருகிறது.

ஒருவரையும் வதை செய்ய முற்பட மாட்டான் என்பதால் அலுவலகத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. 

வாழ்வு ஒளி பெற ஆரம்பித்து எல்லாமே மாறிப் போயிருந்தாலும் எதுவோ ஒன்று குறைகிறது. இல்லை, ஒன்றே ஒன்று குறைகிறது. என்ன அது?

ஹரி ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிறான்.

நாணி வழக்கமாய் ட்ரெய்னில் இருந்து வந்து இறங்கும் நாள் அது.

தவறவில்லை. வந்திருக்கிறாள், புன்னகைக்கிறாள்.

அவன் அவளை நெருங்கிப் போகும்போது படம் முடிகிறது.

ஹரியாக ஃபஹத் ஃபாசில். இது ஒரு விநோதமான கதாபாத்திரம். எடுத்துக்கொண்ட அந்தக் கண்ணிய முறுகலை அவர் அசாத்தியமாக கையாள்வதை நம்மால் பார்க்க முடியும். சொல்வதெனில் கதை நகர்ந்துகொண்டிருக்கிற பல இடங்களில் உறுத்துப் பார்த்துக் கொண்டிருப்பது தவிர்த்து அவருக்கு அங்கு வேறு வேலைகூட இல்லை. ஆனால், அவரது அந்த உடல்மொழி? ஒவ்வொரு பிரேமிலும் ஹரி என்கிற கோணல் மனிதனை நிறுத்தி நம்மை துணுக்குற வைக்க அவரால் முடிந்தது. ஒரு கதையை மட்டுமே எடுத்துச் செல்லும் இந்தப் படத்தில் நடிக்க ஃபஹத்தைத் தவிர வேறு யாரும் நடித்திருப்பார்களா தெரியவில்லை, நடித்திருந்தாலும் அது இந்த மாதிரி வந்திருக்காது.

நாணி, நாராயணியாக சுவாதி ரெட்டி. அவர் ஒரு நல்ல நடிகை என்பதைக் கவனிக்காமல் யாரேனும் இருந்திருந்தார்கள் அவர்களுக்கு இந்தப் படம் மிகுந்த வியப்பாயிருக்கும்.

நெடுமுடிவேணு யாவருக்குமே பிடித்தமான நடிகர். 

முழு படத்தையும் தாங்கிக்கொண்டு செல்கிறவர் அவர்தான்.

பிரேம்ஜியிடம் கொச்சைத் தமிழ் பேசுகிற ஒரு இடத்தில் அவரது புன்னகையைப் பார்க்க வேண்டும்.

தலைவாசல் விஜய்யும் கீதாவும் முறையே பெற்றோர். தம்பியாக நடித்த ஸ்ரீநாத் பாசி எப்பவுமே அடிபொளி பையன். Memories of machine   குறும்படத்தில் நடித்த kani kasruti யை நல்ல ஒரு கேரக்டரில் பார்த்தபோது சந்தோஷமுண்டாயிற்று. செம்பன் வினோத் வழக்கம் போலவே ஒரு உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் இருக்கிறார். இப்படியே இன்னும் பலரை சொல்ல வேண்டும். பிரேம்ஜி செம்மை. சொன்ன அத்தனை பேரும் சொல்லாமல் விட்ட அத்தனை பேரும் ஒரு நல்ல படத்தின் அங்கமாயிருந்தனர், திணிக்கப்பட்டு பிதுங்காதவர்களாயிருந்தனர் என்பதே முக்கியம்.

ஒளிப்பதிவு- ஜெயேஷ் நாயர்.

எடிட்டிங் – திலீப்.

இசை – கோவிந்த் மேனன், ரெக்ஸ் விஜயன்.

எல்லாமும் ஆடம்பரம் இல்லாமல், அந்தப் படத்துக்கு கச்சிதமான அளவில் இருந்தது. அறிவீனமோ, ஆட்டமோ, கூச்சலோ இல்லை. நீதியுரைகள் மற்றும் இதனால் அறிய வருவது போன்ற போதனைகள் இல்லை. திரைக்கதையில் அதற்கெல்லாம் நேரமே இல்லை என்று தான் கூற வேண்டும். திரைக்கதையை இயக்குநர் தான் எழுதியிருந்தார். தனக்கு என்ன வேண்டுமென்பதும், படத்தில் எது வரவேண்டுமென்பதும் அவர் புரிந்து வைத்திருந்தார். ஏனெனில் இம்மாதிரிப் படங்கள் கொஞ்சம் சறுக்கினாலும் தியேட்டரில் கொட்டாவி நிச்சயம். இது இயக்குநருக்கு முதல் படம் என்பது அவருக்கு அவரே பெருமை சேர்த்த விஷயம்தான். 

கொண்டாப்படவேண்டிய படம் என்று சொல்லலாம். 

அல்லது கொஞ்சம் ஏமாந்தால் படம் அல்ல பாடம் என்றும் சொல்லிக்கொள்ளலாம்.