Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

Published:Updated:
##~##

பொம்பளக் கிறுக்குப் புடிச்சு அலையிறான் சுழியன். பேயி ஏறி உக்காந்த மாதிரி அவன் நெஞ்சில ஒக்காந்திருக்கா பன்னிக்காரி பவளாங்கி.

 ஒரு ஆம்பளைக்கு ஒரு பொம்பளைய ஏன் புடிக்குது?

ஒரு பொம்பளைக்கு ஒரு ஆம்பளைய ஏன் புடிக்குது?

அதுக்கு இன்ன கணக்குன்னு இல்ல.

கல்யாண வீட்டுல புடிக்கும் பல பொம்பளைகள; எழவு வீட்டுல புடிக்கும் சில பொம்பளைகள.

முத்திப்போன பொம்பளைகள நோங்குவான் சில பேரு. முழுகாத பொம்பளை மேல ஆசை வரும் சில பயகளுக்கு.

சில பேருக்கு மல்லியப்பூ; சில பேருக்குக் கவிச்சி வாசம்.

வேர்வைப் பிசுக்கு இருந்தாத்தான் வேகம் வரும் சில ஆம்பளைகளுக்கு. வீம்பு காட்டுற பொம்பள மேல வெறி வரும் சில பேருக்கு.

ஒல்லியா இருக்கணும் சில பேருக்கு; ஓங்குசாங்கா இருக்கணும் சில பேருக்கு.

மூன்றாம் உலகப் போர்

ஆம்பள விரல் படாத பொம்பள மேலதான் ஆசை வரும் பல பேருக்கு. புழங்குன பொம்பளைகதான் வசதிம்பான் சில பேரு.

உன் பல்லுக் காவிக்கும் படந்த தேமலுக்கும்தான் ஆசப்பட்டேன்னு நாட்டுப் பாட்டு இருக்கு நாட்ல.

சுழியன் சொக்கி விழுந்து சுண்ணாம்பானது பன்னி மேல பவளாங்கி ஓங்கி ஒக்காந்து நிமிந்த ஆம்பளத்தனத்துல.

பொம்பளைக மாதிரி இருக்கிற சில ஆம்பளைகளப் பொம்பளைகளுக்குப் புடிக்கிற மாதிரி - ஆம்பளை மாதிரி இருந்த பவளாங்கி மேல பைத்தியமாகிப்போச்சு சுழியனுக்கு.

''கெண்(¬)டக்கால் ரோமத்துக்கும்
கீழுதட்டு வெத்தலைக்கும்
மண்(¬)ட கெறங்குதடி
மான ஈனம் மறக்குதடி''

இட்டுக்கட்டிப் பாட்டு வேற படிக்கிறான் எட்டுக் கட்டையில. அவ கெண்டைக்கால் ரோமத்தப் பல்லுல கடிச்சு இழுக்கிற மாதிரி கனாவா வருது. முழிச்சுப் பாத்தா, வெறும் வாய மென்னுக்கிட்டிருக்கான் வெறும் பய.

டம் மாறிப் போனவனுக்கு எடம் மாறிப் போகாதா?

எது பன்னி மேயிற எடமோ அதுதான் ஆடு மேய்க்கிற எடம்னு ஆகிப்போயிருச்சு சுழியனுக்கு.

மூன்றாம் உலகப் போர்

பொண்டாட்டிக்குத் தெரியாம ஆட்டுப் பால் வித்த காசுல, பூந்தியும் காராச்சேவும் வாங்கித் துண்டுல கட்டித் தோள்ல மாட்டிக் கம்மாக்குள்ள எறக்கிட்டான் ஆடுகள. பூந்தி தின்ன கடனைக் கழிக்க மறுநாள் உறைக்கப் புளிக்கப் பன்னிக் கறிக் குழம்போட வந்துட்டா பவளாங்கி. நாளாக ஆக ஒண்ணுக்கொண்ணு ஊட்டிவிட்டு உறவாடுதுக.

ஆடு - பன்னி ரெண்டுக்குமே இரை இருக்கு வத்திப்போன கம்மாயில.

கம்மாக்கரம்பை மேல பொத்தக்கோரை மொளச்சுக்கெடக்கு. மேல இலை  இருக்கும் கீழ கிழங்கு இருக்கும் பொத்தக் கோரையில.

எலைய ஆடு தின்னட்டும்; கிழங்கைப் பன்னி தின்னட்டுங்கற கருத்துல ''மேல எனக்கு - கீழ ஒனக்கு''னு சொல்லுக்குள்ள ஒரு சொகம் வச்சு இழுத்தான் சுழியன்.

''இந்த வார்த்தை அதுகளுக்கு மட்டுமா? இல்ல நம்மளுக்குமா?'' ஒரு சாராயப் பார்வை பாத்துச் சுண்டிஇழுத்தா பவளாங்கி.

''ரெண்டுக்கும்தான்.''

மேல் கோரைய மேஞ்சு ஆடுக முன்னப் போக, பின்னுக்குப் போற பன்னிக தரைய முட்டி ஒரு எம்பு எம்புனதுல கொத்தா வந்து விழுகுதுக கோரங்கிழங்குக.

ம்மாக்கரையில ஆடுகளுக்குக் குழை அறுத்துக்கிட்டிருந்தான் சுழியன்.

கருவேல மரத்துல படந்து பந்தல் போட்டிருக்கு ஊணாங்கொடி.

எக்கி எக்கிப் பாத்தான்; எட்டல தொரட்டி.

ஒரு தவ்வுத் தவ்வுனவன் தவறி உருண்டு விழுந்துபோனான் கம்மாக்குள்ள.

பெரண்டுபோச்சு காலு; உசுரு போகுது உள் வலி.

'யப்பே யாத்தே’ன்னு கத்திக் கதறிட் டான் சுழியன்.

பன்னிகள விட்டுட்டு ஓடி வந்தா பவளாங்கி. 'எந்தக் காலு?’ன்னு கேட்டா. 'எடது காலு’ன்னு சொன்னான். கால நீட்டிச் சாஞ்சு உட்காரச் சொன்னா கம்மாப் புல்லு மேல. சேலையத் தெரட்டி முழங்காலுக்கு மேல தூக்கிக்கிட்டு தன்னோட ரெண்டு பாதத்துக்கு மத்தியில அவன எடது கால மாட்டி ஒரு நமட்டு நமட்டுனா. ரெண்டு மூணு தடவை இப்படியும் அப்படியும் நமட்டவும் பாதி வலி போயிருச்சு பயலுக்கு.

இப்ப காலைத் தூக்கி மடியில போட்டுக் கிட்டா பவளாங்கி. பெரண்ட காலை உருட்டி உருட்டி நிமுத்துறா. ஒவ்வொரு வெரலா உருவி விடறா.

கடைசியா அவ ஒரு சுண்டுச் சுண்டி இழுக்கறப்பவெல்லாம் கால் கட்டை வெரலு பட்டுப் பட்டுத் தெறிக்குது அவ மார் மேல.

''ரெண்டு பன்னிக் குட்டிகளக் கட்டி

நெஞ்சுல முடிஞ்சுவச்சிருக்காளா பாவி மக? உசுரு போனாலும் போகட்டும்; இந்த சொகம் போதுமடி தாயி. இழுடியம்மா இழு... இன்னும் கொஞ்சம்... இன்னும்... கொஞ்சம்... இ...ன்...னு...ம்...''

மூளையே உலையாப் போக அதுல ஏறிக் கொதிக்குது மொத்த ரத்தமும்.

லேசா *மோடம் போட்டுச்சு.

போடி மெட்டுல புறப்பட்டு வருச நாட்டுக்குப் போய்க்கிட்டிருந்த மேகம், மறந்து போயி மார்க்கயன்கோட்டையில எறங்கிருச்சு.

புனுபுனுன்னு ஆரம்பிச்சுச் சடசடன்னு பெய்யவும் கம்மாயவிட்டுத் தவ்விக் கரையோரத்து வேப்பமரத்தடியில ஓடி ஒதுங்கிருச்சுக வெள்ளாடுக.

மழை பேஞ்சா வெள்ளாட்டுக்குத் திண்டாட்டம்; பன்னிக்குக் கொண்டாட்டம். மழையில நனஞ்சுக்கிட்டே கம்மாத் தண்ணியக் கலக்குதுக பன்னிக.

சுழியனும் பவளாங்கியும் ஒரு நொச்சிப் புதர்ல ஓடி ஒதுங்குறாக;

ஒருத்தர் துணிய ஒருத்தர் மாத்தி மாத்திப் புழியிறாக;

வெயில்ல உருகுற பனிக்கட்டி மாதிரி, மழையில ஒழுகுது இருதயம்.

ரொம்ப நாளாக் கனிஞ்சுக்கிட்டேயிருந்த தீய மூட்டிவிட்டுருச்சு மூச்சு.

கால் பெருவிரல் நகத்துல அவன் தொடையில குத்தி ஒரு சொரண்டு சொரண்டுனா பவளாங்கி.

''படபட படபட பட்... பட்டீர்...''

எங்கேயோ விழுந்த ஒரு இடி கிட்ட விழுந்த மாதிரி கேட்டுச்சு.

அரண்டு போன ஆடுக ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணு ஓடி வந்து நொச்சிப் புதரைச் சுத்தி வட்டம் கட்டி நிக்குதுக.

நொச்சிப் புதருக்குள்ள நடக்கிற கூத்தை எட்டிப் பாத்துட்டு 'இது வேற தினுசா இருக்கே’ன்னு வெறிச்சு நிக்குதுக வெள்ளாடுக.

''யாத்தே! இத்தன 'பங்கு’ இருக்கா பொம்பளைக்கும் இதுல? இதுவரைக்கும் தெரியாமப் போச்சே!''

மூன்றாம் உலகப் போர்

கெட்ட வார்த்தை சொல்லிச் சொல்லிப் பவளாங்கியப் பாராட்டி வையிறான் பைத்தியகாரப் பய.

அப்பறம் என்ன?

மழை மட்டும்தான் நின்னுச்சு.

''ஏன்யா என் வீட்லயே இருந்துர்றது..?''

அவன் ஒண்ணும் பேசல.

''பன்னிக்காரின்னு பாக்குறியா..?''

பதில் இல்ல.

''புருசன் இல்லாதவ... இல்லை... இல்லை புருசனக் கொன்னு குழி தோண்டிப் புதைச்சவ பவளாங்கின்னு என்னப் பத்தி ஊருக்குள்ள எக்குத்தப்பா பேசறாகளேன்னு பாக்குறியா?''

அவன் பதறிப் போயி 'அதுக்கில்ல’ன்னு தலையாட்டுனான்.

''பிறகென்ன? ஆடு ஒசத்தி; பன்னி கேவலம். அதான..?''

அவன் இல்லேன்னும் சொல்லல; ஆமான்னும் சொல்லல. இறுக்கமா இருந்தான்.

''இந்தாய்யா உன் ஆட்டைவிட என் பன்னிதான் சுத்தம் பாத்துக்க. உன் ஆடு நடு வீட்டுல கட்டிவச்சாக்கூடப் புழுக்கை போடும். எந்தப் பன்னியும் அடைச்சுவச்ச தொழுவுக்குள்ள ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போறதில்ல. இன்னொண்ணு சொல்லட்டுமா? ரெண்டு காம்பு ஆட்டுக்கு; பத்துக் காம்பு பன்னிக்கு. எந்தக் காம்புலயும் எந்தக் குட்டியும் பால் குடிக்கும் ஆட்டுல. ஆனா, எந்தக் குட்டியும் வாய் வச்ச காம்பைத் தவிர வேற காம்புல வாய் வைக்காது பன்னியில. ஆட்டுக்கும் பன்னிக்கும் என்னய்யா பெரிய வித்தியாசம்? தாய் வயித்துல ஆடும் ஆறு மாசம்; பன்னியும் ஆறு மாசம். நீயும் பத்து மாசம்; நானும் பத்து மாசம்.''

வார்த்தையைப் போட்டுப் போட்டுச் சிக்கவச்சுட்டா; மடியில போட்டுப் போட்டுச் சொக்கவச்சுட்டா; மயங்கிட்டான்.

வெல்லத்துல மொய்க்க வந்து ஊறுகாப் பானையில விழுந்த ஈயி, தட்டுத் தடுமாறி எந்திருச்சுப் பறந்து, சட்டுன்னு விழுந்துபோச்சு சாராயச் சட்டியில.

வளாங்கி பன்னிகள விக்கிறத நிறுத்திட்டா; குட்டி ஆடுகள வித்துவித்துக் குடும்பம் நடத்துறா.

விட்டுப் புடிச்சா புருசன் வந்துருவான் பாவம்னு பொறுத்துப் பொறுத்துப் பாத்தா கனகராணி. நாலஞ்சு மாசம்ஆச்சு - ஆளக் காணோம். ஆள் சொல்லிவிட்டா; அதுக்கும் பலன் இல்ல. அவன வீட்டுக்கு இழுக்க என்ன வழின்னு யோசிச்சவ - பிள்ளைக்குக் காதுகுத்துன்னு ஒரு காரணத்த வச்சா. பன்னிக்காரி வீட்டுக்கே போயிட்டா.

திண்ணையில புருசன் - வீட்டுக்குள்ள வப்பாட்டி - வாசல்ல பொண்டாட்டி.

சத்துள்ள மட்டும் கத்துறா கனகராணி:

''யோவ் வந்துருய்யா - ஆடும் பன்னி யும் ஒரு தொட்டியில தண்ணி குடிக் காதுய்யா. பிள்ளைக்குக் காதுகுத்து வைக்கணும். எண்ணிக்கை குறையாம ஆடுகளோட வந்து சேரு.''

''என்னிய எந்த முறையில கூப்புடுற?''

''என் புருசனாக் கூப்பிடலய்யா. என் புள்ளைக்கு அப்பனா வந்து சேரு.''

''சோளக் கூழும் சுட்ட மொளகாயும் தவிர ஒன்னக் கட்டிக்கிட்டு என்னத்தக் கண்டேன்? என் கழுத்துக்கு நாலு பவுன் சங்கிலி போடு. உன் பிள்ளைக்கு நாந்தான் அப்பன்னு வாரேன்.''

''வேணாம்யா... குடி கெட்டுப் போகும்.''

''ஏய்... வந்தா நாலு பவுனோட வாடி. இல்லேன்னா வந்த வழியாப் போடி.''

''நான் வெறுஞ்சிறுக்கிய்யா. மஞ்சக் கவுத்தத் தவிர வேற ஒண்ணும் இல்ல என்கிட்ட.''

''சொல்றேன்... சிறுக்கி கத்திக் குமிச்சு ஊரக் கூட்டுறா பாரு.''

ஆடு மேய்க்கிற கம்பெடுத்துச் சுத்தி ஒரு வீசு வீசுனான்.

அது அவ நெத்தியில பட்டும்படாம முள்முருங்கை மரத்துல போயி விழுந்துச்சு.

''ஏலேய்... நீ மனுசன் இல்லடா. நான் வாரேன். என் பிள்ளைக்கு அப்பன் நீ இல்லேன்னு சொல்லிட்டுப் போறன்.''

கீழ விழுந்த கம்பை எடுத்தா; ஆடுகள ஓட்டிக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டா.

பவளாங்கி கணக்குப் போட்ட நாலு பவுன் சங்கிலி பொய்யாப் போனதுமில்லாம ஆடுகளையுமில்ல ஓட்டிட்டுப் போயிட்டா அவ பாட்டுக்கு அவ வீட்டுக்கு.

''சீ... சொலவம் பொய்யாப் போச்சே! கெணத்துத் தண்ணியக் கொண்டுபோயிருச்சே வெள்ளம்.''

ஆடு மேய்ச்சவன் - பன்னி மேய்ச்சான். இப்ப சாப்பாடும் மரியாதையும் கொஞ்சம் கொஞ்சமாக் குறையுது; துணிமணியும் பொழப்பும் என்னமோ நாறுது.

ஒரு முன்னிருட்டுல பன்னிகள ஓட்டி அடைச்சிட்டுத் தண்ணியில தவுடு கலந்து வச்சிட்டு வீட்டுக்குள்ள வந்து பாத்தா - கயித்துக் கட்டில்ல கவுந்துகெடக்கா பவளாங்கி. பெரட்டிப் போட்டா - 'குப்பு’ன்னு மூஞ்சியில வந்து முட்டுது சாராய வாடை.

''ஏய் இது என்னாடி புதுப் பழக்கம்? ஏதுடி சாராயம்?''

''பன்னி ஏவாரி வந்தாரு; குடிச்சிட்டுக் கொடுத்தாரு.''

அவ உளறி உண்மையைச் சொல்லீட்டா.

கொஞ்ச நாள்ல ஊத்திக் கொடுத்தவன் கூட ஓடியும் போனா.

பொண்டாட்டி போயிட்டா; பொண்டாட்டியோட ஆடும் போச்சு. வப்பாட்டி போயிட்டா; வப்பாட்டியோட பன்னியும் போச்சு.

தொழில் அத்துப்போச்சு. பாதி வயசுலயே உடம்புக்கு முக்கா முதுமை வந்துருச்சு. ஊறிப்போன காயிதம் மாதிரி உடம்பும் நிறம் மாறிப்போயிருச்சு. பல ஊர்கள்ல சில்லரை வேலை செஞ்சு செஞ்சு காலமும் ஓடிப்போச்சு. இனி உழைக்க உடம்புல தெம்பு இல்லேங்கறப்ப ஊர் ஞாபகம் வந்திருச்சு.

ன்னும் விடியல.

செங்கமங்கலா இருக்கு.

வாழைக்குத் தண்ணி கட்டப் போனாரு கருத்தமாயி. சில ஆளுகளுக்கு நடு மண்டை கழிஞ்சு ஓரஞ்சாரம் மட்டும் கொத்துக் கொத்தா முடி இருக்கும் பாருங்க... அப்படி நடந்து நடந்து நடுவுல வழுக்கையாகிப் போன வரப்போரமா தை மாசப் பனித் துளிக முட்டை முட்டையாப் படுத்து கெடக்குது.

அதுகள எழுப்ப மனசு இல்லாம வழுக்கை வழியாவே நடந்து போனாரு கருத்தமாயி.

மழை பேஞ்சா நிலத்துல நீர் எறங்காது - அப்படி மூன்றரை ஏக்கரும் அடைச்சு நிக்குது வா(¬)ழ.

'வா(¬)ழ வாழவைக்குமா பாப்போம்!’

கிணத்து மேட்டுல யாரோ ஒரு ஆளு வேட்டிய இழுத்துப் பொத்திப் படுத்திருக்கிற மாதிரி தெரிஞ்சுச்சு. இது என்னடா இது என்னைக்கும் இல்லாத திருநாளா?

''ஏய் எவன்டா அது எந்தோட்டத்துல? எந்திரிர்றா.''

லேசாப் பெரண்டு எந்திரிச்சு, பொத்துன வேட்டிய எடுத்துப் பொத்துனாப்புல உதறி இடுப்புல இறுக்கிக் கட்டிக்கிட்டுக் கருத்தமாய உத்து உத்துப் பாத்துச்சு அந்த உருவம்.

''ஏய் யாரப்பா நீ? எந்த ஊரு?''

''எல்லாம் இந்த ஊருதான்.''

''அது யாரு அது எனக்குத் தெரியாம இந்த ஊர்ல? யார் வீட்டு ஆளு?''

''எல்லாம் சீனிச்சாமி வீட்டு ஆளு தான்.''

'சுருக்’குன்னு நெஞ்சுல முள்ளுத்தச்ச மாதிரி ஆகிப்போச்சு கருத்தமாயிக்கு.

ஒரு எட்டு முன்னுக்கு வந்தவரு அவன் மூஞ்சிய உத்து உத்துப் பாத்தாரு.

பரட்(¬)டத் தலைக்குள்ள - செரைக்காத மூஞ்சிக்குள்ள - அழுக்கு வேட்டி சட்டைக்குள்ள நுழைஞ்சு ஒரு முப்பது வருசம் பின்னுக்க - பின்னுக்கப் போறாரு.

கண்ணுக்குள்ள கலங்கலாத் தெரியுது ஒரு உருவம். பனி லேசா வெலகி அந்த மூஞ்சியில ஒரு வெளிச்சம் விழுகுது.

''தெரியலையா கருத்தமாயி?''

''யண்ணே! நீ சுழியன்தான?''

அண்ணன் தம்பி ரெண்டும் பேரும் 'கலகல’ன்னு கண்ணீர்விட்டுக் கட்டிப் புடிச்சு விம்மி விசும்பித் தொட்டுத் தொட்டுப் பாத்துத் துடிக்கிறாக.

''யண்ணே! நீ உசுரோட இருப்பேன்னு நான் நெனைக்கலண்ணே.''

''நீயும் செயிலைவிட்டு வருவேன்னு நானும் நெனைக்கலடா தம்பி.''

பின்னிப் பிணையுதுக பாவம் பிரிஞ்ச உசுருக.

த்தே நாள்ல தோட்டத்துல பங்கு கேட்டான் சுழியன்.

நெறஞ்ச மனசோட - நெறஞ்ச வெள்ளாமையோட சரிபாதி நெலத்தப் பிரிச்சுக் கொடுத்தாரு கருத்தமாயி.

ஆளுக்கு ஒண்ணே முக்கா ஏக்கரு; புறம்போக்கும் ரெண்டு பங்கு.

சாமி மரங்களோட ரோட்டோரத்து வெளிப்பங்கு கருத்தமாயிக்கு; உள்பங்கு சுழியனுக்கு.

தார் போட்ட வாழத் தோட்டத்த அடுத்த மாசமே ஒத்திவச்சு ஊரெல்லாம் சுத்திக் காசைக் கரியாக்கிட்டுத் தம்பி வீட்டுத் திண்ணையில அன்னைக்கு வந்து விழுந்தவன்தான் சுழியன்; இன்னும் எந்திரிக்கல.

அழுக்கு வேட்டியில ஒரு ஓரம் எடுத்து அழுத கண்ணத் தொடச்ச கருத்தமாயி, திண்ணையில பொத்திப் படுத்துக்கிடந்த சுழியன நிமிந்து பாத்தாரு.

''பொண்டாட்டிய நீ வச்சுப் பொழைக்கல. வப்பாட்டி ஒன்னிய வச்சுப் பொழைக்கல. உழுத நெலத்தயும் விட்டுட்ட; ஒடம்புல தெம்பையும் எழந்துட்ட. இப்பப் படுக்கத் திண்ணையும் இல்லாமக் கெடக்க. பெத்தவன் என்னத் தூக்கி எறிஞ்சுட்டான்; பெறந்தவன நான் தூக்கி எறிய முடியுமா? சொமக்கறண்ணே; சொமக்கறேன். உன் உசுரு உள்ள மட்டுமோ, என் உசுரு உள்ள மட்டுமோ? உன்னையும் தூக்கிச் சொமக்கறேன். கொஞ்சங் கொஞ்சமாக் கடன் குறையும்னு பாத்தா - கொஞ்சங் கொஞ்சமாக் கடன் கூடுதே... கழுத்து வரைக்கும் தண்ணி வந்தா சமாளிக்கலாம், மூக்கு வரைக்கும் ஏறி மூச்சு முட்டுதே. நெஞ்சுல 'தம்மு’ இருக்கிற வரைக்கும் நீச்சலடிச்சுப் பாப்பம்.''

நீளமா ஒரு பெருமூச்சுவிட்டு நிமிந்து உட்காந்தாரு கருத்தமாயி.

அப்பன் பட்ட பாட்டையும் அப்பன அண்ணன் படுத்துற பாட்டையும் நெனச்சு நெனச்சுக் கண்ணீர வெளிய காட்டாம அழுது, கைக்குட்டை எடுத்துக் கண்ணத் துடைச்சுக்கிட்டான் சின்னப்பாண்டி.

- மூளும்