Published:Updated:

"அரைநிர்வாணப் போராட்டம், செருப்படி, முதல்வரிடம் கோரிக்கை..." - யார் இந்த ஶ்ரீ ரெட்டி?

தார்மிக் லீ
"அரைநிர்வாணப் போராட்டம், செருப்படி, முதல்வரிடம் கோரிக்கை..." - யார் இந்த ஶ்ரீ ரெட்டி?
"அரைநிர்வாணப் போராட்டம், செருப்படி, முதல்வரிடம் கோரிக்கை..." - யார் இந்த ஶ்ரீ ரெட்டி?

சமூக வலைதளங்கள் முழுவதும் நடிகை ஶ்ரீ ரெட்டி ஏற்படுத்திய சர்ச்சைதான் வைரல். பத்திரிகையாளர்களைச் சந்தித்த இவர், திடீரென ஆடைகளைக் களைந்து அரைநிர்வாணமாகப் பேட்டி கொடுக்கத் தொடங்கினார். யார் இந்த ஶ்ரீ ரெட்டி, பவன் கல்யாணை கெட்ட வார்த்தையில் திட்டியதற்கான காரணம் என்ன, தெலுங்கு சினிமாவில் `Casting couch' பிரச்னையைப் பற்றி இவர் கூறுவது என்ன?

ஜூன் 12, 1992 ஹைதராபாத்தில் உள்ள விஜயவாடாவில் பிறந்தவர், ஶ்ரீ ரெட்டி. முதலில் வீடியோ ஜாக்கியாகவும், செய்தி வாசிப்பாளராகவும், பின் நடிகையாகவும் தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமானார். `நீனு நானா அப்படம்' எனும் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்தவர், இதுவரை மொத்தமே மூன்று படங்களில்தான் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாகவும், சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை (12-04-2018) திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் (Movie Artistes Association) முன்பு ஆடைகளைக் களைந்து அரைநிர்வாணமாகப் போராட்டம் நடத்தி கண்டனம் தெரிவித்தார். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இவர், `எனக்கிருக்கும் ஒரேவழி இப்படிப் போராடுவதுதான். அரைநிர்வாணமாகப் போராட்டம் நடத்தினால் மட்டுமே மக்கள் காது கொடுத்துக் கேட்பார்கள். இதுவரை எந்தப் படங்களிலும் எனக்கு சொல்லிக்கொள்ளும்படியான ரோல் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை முயற்சி செய்தும், என்னைப் போன்ற நடிகைகளுக்கு நடக்கும் அவலங்களைக் கேட்க சங்கம் தயாராக இல்லை. அதனால்தான் இப்படியொரு முடிவை எடுத்தேன்' என்று பேட்டியளித்தார். 

திரைப்படக் கலைஞர்களின் சங்கத் தலைவர் சிவாஜி ராஜா பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, `ஶ்ரீ ரெட்டி மூன்று படங்களில் மட்டுமே நடித்திருப்பதால், அவரை உறுப்பினராக ஏற்க சங்கம் மறுத்தது. தவிர, இதுபோன்ற பிரச்னைகள் நிகழ்வது சங்கத்திற்குத் தெரியாது. நடிகர்களுக்கு உதவவே நாங்கள் இருக்கிறோம். சொல்லப்போனால், பிரச்னைகளில் சிக்கிய பல பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளோம். இதுதொடர்பாக ஶ்ரீ ரெட்டியிடமும் பேசினோம். எங்களிடம் வருவதற்கு முன், பப்ளிசிட்டி தேடி சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டது தவறு. இப்படி அரைநிர்வாணப் போராட்டம் நடத்துவதால், அவரை எங்களது சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள முடியாது. ஏனெனில், எங்களுக்கென்று சில கோட்பாடுகள் உள்ளது' என்று பதில் கூறினார். 

ண்

தமிழில் `நீ எங்கே என் அன்பே' என்ற படத்தை இயக்கியவர், சேகர் கமூலா. நயன்தாராதான் இந்தப் படத்தின் கதாநாயகி. `அவராலும் நான் நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறேன்' என்று பதிவிட்டிருக்கிறார், ஶ்ரீ ரெட்டி. இதுதொடர்பாக சேகர் கமூலாவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், `ஶ்ரீ ரெட்டி தேவையில்லாமல் என்மேல் பழி சுமத்துகிறார். தொடர்ந்து இதேமாதிரி பண்ணா, நான் போலீஸ்ல புகார் கொடுப்பேன்' என்று கோபமாகப் பதிவிட்டிருந்தார். அதற்கு ஶ்ரீ ரெட்டி, `அவர் தாரளமாகப் புகார் கொடுக்கட்டும், அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் போலீஸிடம் ஒப்படைப்பேன்' என்று பதில் பதிவு போட்டிருந்தார். 

இதைத் தொடர்ந்து, மேலும் சில புகைப்படங்களையும், திடுக்கிடும் சில போஸ்ட்டுகளையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ரசிகர்கள், இந்த செயல்களை சமூக வலைதளங்களில் கேலி செய்வதைக் கண்டித்து ஆவேசமாகப் பத்திரிகையாளர்களை சந்தித்த ஶ்ரீ ரெட்டி, `பவன் கல்யாண் மூன்று முறை திருமணம் செய்தவர். பெண்களை மதிக்கத் தெரியாதவர். ஒருமுறை நான் அவரை 'அண்ணா' என்று தெரியாத்தனமாக கூப்பிட்டேன். அதை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' என்று கூறி, அவர் அணிந்திருந்த செருப்பை எடுத்து அவரே அடித்துக்கொண்டார்.

`இனிமேல் பவன் கல்யாணை யாரும் அண்ணா என்று அழைக்கமாட்டார்கள்' எனச் சொல்லி கேமராக்களை நோக்கி தவறான சைகை காட்டினார். அதற்குப் பின், 'பவன் கல்யாணின் அம்மாவிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என அவரது ஃபேஸ்புக்கில் பதிவு போட்டிருந்தார். அதேசமயம், தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க 75 சதவிகிதம் தெலுங்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே நடிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.

இன்டஸ்ட்ரியில் இருக்கும் 90 சதவிகித நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களால் அவதிப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார், ஶ்ரீ ரெட்டி. இந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ரகுல் ப்ரீத் சிங், மஞ்சு லக்‌ஷ்மி, இயக்குநர் நந்தினி ரெட்டி ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர். `ஶ்ரீ ரெட்டி கூறுவதுபோல் எந்தப் பாலியல் துன்புறுத்தல்களையும் நான் அனுபவிக்கவில்லை' என மறைமுகப் பதிலளித்தார் ரகுல் ப்ரீத். ஆனால், டோலிவுட்டில் இதுவரை `Committee against sexual harassment' என்ற ஒரு அமைப்பே நிறுவப்படவில்லை. இதுதொடர்பாக இயக்குநர் நந்தினி ரெட்டி, `CASH என்ற அமைப்பு டோலிவுட்டுக்கு கண்டிப்பாக அவசியம். சில சமயம் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்தாலும், அதை சொல்ல இங்கே முறையான திட்டம் வகுக்கப்படவில்லை. சங்கம் விரைவில் இந்தத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்' என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.  

ஶ்ரீ ரெட்டி சர்ச்சையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பவன் கல்யாண், `அவரின் கோரிக்கை முறையாக போலீஸாரால் விசாரணை செய்யப்பட வேண்டும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார். மேலும் பல நடிகர், நடிகைகளும் `இவர் சொல்லவரும் கருத்து சரியாக இருந்தாலும், அதைச் சொன்ன விதம் சரியானதல்ல' என அவரவர் கருத்துகளை வெளியிட்டிருக்கின்றனர். இறுதியாக, ஶ்ரீ ரெட்டியை அவரது வீட்டில் சந்தித்த போலீஸ் அதிகாரிகளிடம், `முதலமைச்சரின் காதுக்கு இந்தப் பிரச்னை போய் சேரும்வரை நான் இதை விடுவதாக இல்லை. எனக்கு சரியான முடிவு தெரிந்தே ஆகவேண்டும். திறமையான நடிகைக்கு அங்கீகாரமும், பாதுகாப்பும் கிடைக்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார்.