Published:Updated:

``காஸ்மெடிக் தேர்வு செய்வதைவிட சருமம் சுத்தமாக இருப்பது முக்கியம்!''

``காஸ்மெடிக் தேர்வு செய்வதைவிட  சருமம் சுத்தமாக இருப்பது முக்கியம்!''
பிரீமியம் ஸ்டோரி
News
``காஸ்மெடிக் தேர்வு செய்வதைவிட சருமம் சுத்தமாக இருப்பது முக்கியம்!''

- சர்வதேச பியூட்டி எக்ஸ்பர்ட் ஐஷிகாஅழகுக் கலை

ஷிகா டனேஜா... இந்தியாவின் டாப் ரேங்க் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்; இன்டர்நேஷனல் பியூட்டி எக்ஸ்பர்ட். மிஸ் அமெரிக்கா, மிஸ் ஸ்ரீலங்கா, மிஸ் போலந்து, மிஸ் இந்தியா அப்சரஸ்களுக்கும், பிரபல அமெரிக்க ராப் பாடகர்கள் ஜே இலம் மற்றும் மிக்கி அவலோனுக்கும், பல சர்வதேச மாடல்களுக்கும், அமீர் கான் உள்ளிட்ட இந்திய சினிமா பிரபலங்களுக்கும் மேக்கப் மேஜிக் செய்யும் விரல்கள் மேடமுடையது. மேலும், லாஸ் ஏஞ்சலஸ், ஃபேஷன் மிங்கா போன்ற உலகப் புகழ்பெற்ற `ஃபேஷன் வீக்'களில் வேலைபார்த்தவர். ஃபேஷன் தளத்தில் கின்னஸ் ரெக்கார்டு செய்த பெருமைக்கும் சொந்தக்காரர். ஃபேஷன் தொடர்பான ஒரு வொர்க் ஷாப்புக்காக, சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த இந்த டெல்லி பெண்ணைச் சந்தித்தோம்.

``காஸ்மெடிக் தேர்வு செய்வதைவிட  சருமம் சுத்தமாக இருப்பது முக்கியம்!''

“என் அம்மா பாரதி டனேஜா, ஒரு பியூட்டி எக்ஸ்பர்ட். அவரிடமிருந்துதான் எனக்கும் இதில் ஆர்வம் வந்தது. லண்டன் மற்றும் நெதர்லாந்து சென்று அட்வான்ஸ்டு மேக்கப் கோர்ஸ் படித்தேன். இந்தியா திரும்பிய பின்னர், இந்தத் துறையில் என் சிறகுகள் விரிக்கத் தொடங்கினேன்’’ என்றவர் தன் கின்னஸ் சாதனை பற்றிப் பகிர்ந்தபோது,

‘‘2014-ல், 60 நிமிடங்களில் 60 மாடல் களுக்கு ஏர்பிரஷ் மேக்கப் செய்து கின்னஸ் ரெக்கார்டில் பதிவுபெற்றேன். 60 மாடல்களில் ஒவ்வொருவருக்கும் மேக்கப்பில் வித்தியாசம் காட்ட வேண்டும்; அதே நேரம் ஒரு நிமிடத்தில் ஒருவருக்கு மேக்கப் போட வேண்டும். சொல்லப்போனால், கின்னஸ் அமைப்பினர் சார்பில் எனக்குக் கொடுக்கப்பட்ட டார்கெட், 60 நிமிடங்களில் 25 மாடல்களுக்கு மேக்கப் என்பதுதான். ஆனால், யாரும் எளிதில் நெருங்க முடியாத அளவுக்கு அந்தச் சாதனை இருக்க வேண்டும் என்பதால், நான்தான் 60 நிமிடம், 60 மாடல்கள் என்று ஃபிக்ஸ் செய்துகொண்டேன். மூன்று முயற்சிகளில் தோல்வியடைந்து, நான்காவது முயற்சியியில்தான் சாதனையை எட்ட முடிந்தது’’ என்றவர், தன்னுடைய கின்னஸ் சாதனையை நிர்பயாவுக்கு சமர்ப்பித்தார்.

‘‘2012-ல் பாலியல் கொடுமைக்குப் பலியான நிர்பயாவின் மரணம், எனக்குள் பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது. அதனால், என் கின்னஸ் விருதை நிர்பயாவுக்கு சமர்ப்பணம் செய்தேன். அதோடு நில்லாமல் 12 லட்ச ரூபாய் நிதி சேகரித்து, ‘நிர்பயா ஜோதி டிரஸ்ட்’ மூலமாக பலருக்கும் கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தேன்’’ என்று சொல்லும் ஐஷிகா, ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கும், பார்வையிழந்தவர்களுக்கான பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் சேவையாக ஃபேஷியல், ஹேர்கட், மேக்கப் செய்து, அவர்களுக்கு ஒரு சின்ன சந்தோஷத்தைக் கொடுத்து, மலரும் அந்த முகங்களில் தன் சந்தோஷம் தேடி வருகிறார்.

டெல்லியில் உள்ள தன் ‘ஆல்பஸ் பியூட்டி கிளினிக்’கின் நிர்வாக இயக்குநரான ஐஷிகா, ‘‘ஆர்வம் இருக்கும் துறையில் உழைப்பை போட்டால் நிச்சயம் வெற்றிபெற முடியும். மேக்கப்பை பொறுத்தவரை, தரமான காஸ்மெடிக்குகளைத் தேர்வு செய்வதைவிட முக்கியம்... நம் சருமத்தை ஆரோக்கியமாகவும், அழுக்கு, தூசி சேரவிடாமல் சுத்தமாகவும் வைத்துக்கொள்வது! என்னைப் பொறுத்த வரை, எந்த நிகழ்ச்சிக்குச் செல்லவும் 15 நிமிடங்கள் போதும்... மேக்கப்புக்கு!’’ என்று சிரிக்கும் ஐஷிகா,

‘‘அழகுக்கலை துறையில் இருப்பவர்களுக்கு சில வார்த்தைகள். இப்போது நாளுக்கு நாள் பார்லர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. தவிர, சர்வதேச அழகு நிறுவனங்கள் பலவும் இந்தியாவுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. மறுபுறம், தொழில்நுட்பங்களும் வேகமாக வளர்ந்துவருகின்றன. நமது தொழிலில் நாம் எந்தளவுக்கு அப்டேட்டாகவும், நவீன தொழில்நுட்பங்களை கையாளும் திறனுடனும் இருக்கிறோம் என்பதில்தான் எதிர்காலத்தில் நம் இருப்பும் வெற்றியும் இருக்கிறது’’ என்று அக்கறையுடன் விழிப்பு உணர்வு செய்தியும் சொல்கிறார் ஐஷிகா.

 கே.அபிநயா, படங்கள்: பா.காளிமுத்து

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz