Published:Updated:

வாட்ச்மேன் உத்தியோகத்துக்கு வாட்ச்சும் தேவைதான்!

ஜே.சந்தானம், படங்கள்: சிவபெருமாள்

வாட்ச்மேன் உத்தியோகத்துக்கு வாட்ச்சும் தேவைதான்!

ஜே.சந்தானம், படங்கள்: சிவபெருமாள்

Published:Updated:
வாட்ச்மேன் உத்தியோகத்துக்கு வாட்ச்சும் தேவைதான்!
##~##
செ
ன்னை லயோலா கல்லூரி வாட்ச்மேன் அருள்ராஜும், மகளிர் கிறித்துவக் கல்லூரி வாட்ச்மேன் செல்லதுரையும் சந்திக்கிறார்கள்.

 * ராஜீவ் - பெனாசிர், கோர்ப்பசேவ் - ஜார்ஜ் புஷ் மாதிரி செல்லதுரை - அருள்ராஜையும் வி.வி.ஐ.பி-க்களாகப் பாவித்து, அம்பாசிடர் பல்லவா நட்சத்திர ஹோட்டலுக்கு இருவரையும் அழைத்துச் சென்றோம்.

* காலை 11 மணி...

செல்லதுரை: எம் பேரு செல்லதுரை!

அருள்ராஜ்: என் பேரு அருள்ராஜ்!

(இருவரும் கைகுலுக்கிக்கொள்கின்றனர்).

செல்ல: எனக்கு வயசு 45.

அருள்: நமக்கு 49.

செல்ல: எனக்கு ரெண்டு பசங்க.

அருள்: எனக்கு ரெண்டு ஆம்பளைப் பசங்க, ஒரு பொம்பளைப் புள்ளை.

செல்ல: ஆம்பளைங்க காலேஜ்ல இருக்கிற உங்களைவிட, பொம்பளைங்க காலேஜ்ல இருக்கிற எங்களைப்போல வாட்ச்மேன்களுக்குப் பொறுப்பு கொஞ்சம் அதிகம். அதுவும் வயசுப் பொண்ணுங்க வந்துட்டுப் போற எங்க காம்பவுண்ட் கேட்ல, டூட்டி நேரம் முழுக்க நான் மடியில் நெருப்பைக் கட்டிக்கிட்டுதான் நிப்பேன். அப்படி நான் இருக்கிறதாலதான், எங்க ஸ்டூடன்ட்ஸ் மேல இதுவரைக்கும் ஒரு சின்ன தூசு தும்புகூடப் பட்டது இல்ல.

அருள்: அட! உங்களுக்குப் பொறுப்பு வேணா நெறைய இருக்கலாம். ஆனா, எங்களுக்குப் பொறுமை ஜாஸ்தி. ஒரு சின்னப் பிரச்னைன்னா, பொட்டப் புள்ளைங்ககிட்ட எடுத்துச் சொன்னா, கேட்டுக்கும். ஆனா, ஆம்பளைப் பசங்க அவ்வளவு சீக்கிரம் வழிக்கு வர மாட்டாங்க. அந்த மாதிரி நேரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு பொறுமையா இருக்க முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு பொறுமையா இருந்தாத்தான் காரியம் நடக்கும். அதை வுட்டுட்டு எடுத்ததுக்கு எல்லாம் 'தாட்பூட்’னு குதிச்சா, தர்ம அடிதான் வாங்கணும்.

வாட்ச்மேன் உத்தியோகத்துக்கு வாட்ச்சும் தேவைதான்!

லயோலாவுல படிக்கிற ரெண்டாயிரம் ஸ்டூடன்ட்ஸ்ல, ஆயிரம் பேராவது எனக்கு நல்ல பழக்கம். சிலர் என்னைத் 'தலைவா’னு கூப்பிடு வாங்க. சிலர் 'அண்ணே’னு கூப்பிடுவாங்க. நிறையப் பேர் 'வாட்ச்மேன்’னு கூப்பிடறது வழக்கம். சின்னத் தகராறு நேரத்துல 'வாய்யா, போய்யா’னும் சொல்வாங்க!

செல்ல: நம்மளை எல்லோருமே 'வாட்ச் மேன்’னுதான் கூப்பிடுவாங்க. படிக்கிற ஆயிரத்து இருநூறு புள்ளைங்கள்ல, தெனமும் இருநூறு புள்ளைங்க 'ஹலோ’ சொல்லும். உள்ளே இருக்கிற ஹாஸ்டல் புள்ளைங்க ரொம்ப அன்பாப் பழகும். படிப்பை முடிச்சுட்டு காலேஜைவிட்டுப் போகும் போது சில புள்ளைங்க நம்மகிட்ட வந்து, 'போயிட்டு வர்றேன் வாட்ச்மேன்’னு சொல்லும்போது 'பொலபொல’னு அழுதுடும். அப்பதான் 'நம்மளை யாரும் சாதாரண வாட்ச்மேன்தானேனு நெனைக்கலை’ங்கிறது புரிஞ்சு, மனசுல புதுத் தெம்பு பிறக்கும்.

அருள்: நான் நிக்கிற கேட்டைத் தாண்டி உள்ளே போறப்ப, காரு, ஸ்கூட்டர் எல்லாம் மெதுவாத்தான் போகணுங்கிறது ரூல்ஸ். ஆனா, சில இளவட்டங்க பறந்துக்கிட்டு பயங்கர ஸ்பீடா உள்ளே நுழைஞ்சு, ஹாரனை வேற மாடல் மாடலா அடிச்சுக்கிட்டு அட்டகாசம் பண்ணிட்டுப் போவாங்க. அவங்களைத் தடுக்க முடியுமா? அதனால, வண்டி நம்பரை நோட் பண்ணி, பிரின்ஸிபால்கிட்ட குடுத்துடுவேன். பிரின்ஸிபால் புடிச்சு ரெண்டு டோஸ்விட்டதும் நேரா நம்மகிட்ட வந்து, 'என்னண்ணே இப்படிப் பண்ணிட்டீங்க? ஒரு வார்த்தை - தம்பி, மெதுவாப் போ’னு சொன்னாப் போயிருப்பேனே! பேஜார் பண்ணிட்டீங்களே’னு ஒண்ணும் தெரியாத பாப்பா போல வந்து பேசுவாங்க!

செல்ல: நமக்கு இந்த மாதிரி பிரச்னைகள் எல்லாம் கிடையாது. முக்கால்வாசி மாணவிகளை அவங்க அவங்க வீட்டுல இருந்து கார்ல கொண்டாந்து விட்டுட்டுப் போவாங்க. சில புள்ளைங்க டி.வி.எஸ்-50, லூனா மாதிரி வண்டி யில வர்றதால, மெதுவாத்தான் வந்தாகணும்.

அப்புறம் ஒரு விஷயம்... சாயந்திரம் 3 மணிக்கு காலேஜ்விட்ட பிறகுதான் கேட்டைத் திறந்து பொண்ணுங்களை வெளியே விடணும். சில புள்ளைங்க முன்னாடியே ஏதாவது வெளியே வேலை வெச்சிக்கிட்டு, நம்மளை டபாய்ச்சுட்டுப் போகப் பார்ப்பாங்க!

இப்படித்தான் ஒரு நாள் காலேஜ் விடறதுக்கு முன்னாடி அஞ்சாறு பொண்ணுங்க கும்பலா வந்து 'வாட்ச்மேன், கேட்டைத் திறங்க’னு சொன்னாங்க. நம்ம கையில வாட்ச் இல்லாத தால அதுங்ககிட்ட 'மணி என்னம்மா ஆவுது?’னு கேட்டேன். அவங்க 'மூணு’னு சொன்னதால, காலேஜ்விடற நேரம்தானேனு கேட்டைத் திறக்கப்போனேன். அப்படியும் டவுட்டு வந்து, ரோட்ல போன ஒரு ஆளுகிட்ட டைம் கேட்ட துக்கு அந்த ஆளும் 'மூணு’னு சொல்ல...செகண்டுல பொண்ணுங்க வெளியே போயிடுச் சுங்க. வெளியே போய் சிரிச்சுக்கிட்டே, 'என்ன வாட்ச்மேன், ஏமாந்துட்டியா? மணி ரெண்டுதான் ஆவுது... நாங்க முள்ளைத் திருப்பிவெச்சு மூணுனு சொல்லிட்டோமே... ரோட்டுல நீ டைம் கேட்டப்போ, உன் பின்னால இருந்தவ கையைத் தூக்கி மூணு விரலால சிக்னல் குடுத்துட்டா. அதான் அந்த ஆளும் ரீல் விட்டுட்டுப் போயிட்டான்’னு சொல்லிட்டு ஓடிட்டாங்க. பத்து வருஷ சர்வீஸ்ல அன்னிக்குத்தான் மொதல் மொதலா ஏமாந்துட்டேன். 'சரி, வாட்ச்மேன் உத்தியோகத்துக்கு வாட்ச்சும் தேவைதான்னுட்டு மொதல்ல இன்ஸ்டால்மென்ட்ல ஒரு வாட்ச் வாங்கிக் கட்டிக்கிட்டேன்!

வாட்ச்மேன் உத்தியோகத்துக்கு வாட்ச்சும் தேவைதான்!

அருள்: என்னோட அனுபவம் கேளுங்க... அன்னிக்கு நைட் டூட்டி... நடுராத்திரி 12 மணி இருக்கும். திடீர்னு கறுப்பு பெட்ஷீட் போர்த்திக் கிட்டு ஒரு உருவம் 'ஹாஹா’னு சிரிச்சுக்கிட்டே போச்சு. பக்கத்துலயே சுடுகாடு இருக்கிறதால எனக்கு லேசா ஒதைப்பு உண்டாயிடிச்சு. இருந்தாலும் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு, 'டாய், யார்றா அது? நில்லுடா’னு டார்ச் லைட் அடிச்சுக் கத்தினேன்... 'மரியாதையாப் பேசுடா... யாரைப் பார்த்து டாய்ங்கிற’னு சொல்லிட்டு, அந்த உருவம் மறுபடியும் சிரிச்சுது.

கூலிங் கிளாஸ், கால்ல கறுப்பு ஷூ போட்டு இருந்தது. நான் கிட்ட நெருங்கி, 'டாய், மரியா தையா சொல்லு... நீ யார்றா?’னு சத்தமா அதட்டினேன். உடனே, அந்த உருவம் சிரிச்சுக் கிட்டே, 'சொல்றேன்டா... நான்தான்டா ஃபஸ்ட் எம்.ஏ. ஸ்டூடன்ட் கென்னடி. என்ன, பயந்துட் டியா?’னு சொல்லிக்கிட்டே பெட்ஷீட்டை மேல இருந்து எடுத்தாரு. அன்னிக்கு ஏப்ரல் ஒண்ணாம் தேதி. அதை என்னிக்கும் மறக்க மாட்டேன்!

செல்ல: நமக்குப் பேய் பிசாசு மேல நம்பிக்கை கிடையாது. ஒரு நாள் நைட் டூட்டியில பிரின்ஸிபாலோட பியூன் நம்மகூடப் பேசிக்கிட்டே தூங்கிட்டாரு. ஒரு மணி இருக்கும். திடீர்னு எழுந்து உக்காந்து எங்கியோ பார்த்துக்கிட்டே இருந்தாரு. என்னைக் கூப்பிட்டு, 'செல்லதுரை, ஒழுங்காப் படுடா’னுட்டு, 'முனீஸ்வரன் போறாருய்யா. அங்கன பாருய்யா’னு ஒரு வேப்ப மரத்தைக் காட்டிப் பெனாத்துனாரு.

அப்புறம், நடிகை சரண்யா தெரியுமா... அட, 'நாயகன்’ படத்துல நடிச்சுதேப்பா... அந்தப் பொண்ணு நம்ம காலேஜ்லதான் படிச்சுது.

அருள்: நான் கேள்விப்பட்டது இல்லை. உங்களுக்குப் பிரபு தெரியுமா... சிவாஜி புள்ள! அவரு நம்ம காலேஜ்லதான் படிச்சாரு. நமக்கு நல்லாத் தெரியும். அப்பப்ப போய்ப் பார்த்துட்டு வருவேன். என்னோட ரெண்டு பசங்களையும் ஒரு பொண்ணையும் பெரிய படிப்புப் படிக்க வைக்கணும்னு ஆசை. எப்படியாவது நல்ல நெலமைக்குக் கொண்டாரணும்னு முயற்சி பண்றேன்.

செல்ல: என்னோட பசங்களைப் பெரிய படிப்பு படிக்கவைக்க முடியாட்டாலும், நல்ல வேலை வாங்கிக் குடுத்துடணும்னு இருக்கேன். இதுல பெரிய பையன் நம்மளைப்போலவே வாட்ச்மேனாத்தான் போவேன்னு சொல்றான். அதுவும் 'லேடீஸ் காலேஜ்லதான் வாட்ச்மேனா வேலை பார்ப்பேன்’னு சொல்றான். என்ன பண்றது? அவன் வயசு அப்படி!

வீட்ல சும்மா இருக்கிற நேரத்தில் நான் பாட்டு எல்லாம் எழுதுவேன். காலேஜ் வொர்க்கர்ஸுக்குனு நடந்த ஒரு நாடகப் போட்டியில நான் பொம்பளை வேஷம் போட்டுக்கிட்டு...

'புதுப்பட்டி சேலை வேணும்
புட்டப்புள்ளி ரவிக்கை வேணும்
கைக்கு வளையலுமே
கடுகவே வாங்கித் தரணும் மச்சான்’-னு

புருஷனைப் பாத்துப் பாடற மாதிரி பாடி நடிச்சேன். பிரின்ஸிபால் அம்மா ரொம்பப் பாராட்டினாங்க.

அருள்: நான் கதைதான் எழுதுவேன். சும்மா ஒரு பேச்சுக்கு, ஒரு கதையைச் சுருக்கமா சொல்றேன்.

ஒரு ஊர்ல ஒரு அநாதைப் பையன் இருந்தான். அவனை அந்த ஊரு ஜமீன்தார் பொண்ணு காதலிச்சா. கடைசியில, அவங்க ரெண்டு பேரும் வேற வேற சாதிங்கிறதால வீட்டுல சம்மதிக்கலை... இதனால அவங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிப் போய் ஒரு கோயில்ல கல்யாணம் பண்ணிக்கிறாங்க...

இந்த மாதிரி(!) நெறையக் கதை எழுதி இருக்கேன். இதுல ஒரு கதையை சினிமாவுலகூட காப்பி அடிச்சுட்டாங்க!

நிருபர்: ஐயையோ, அப்படியா... என்ன படங்க?

அருள்: பேரெல்லாம் வேணாம். அப்புறம் அவங்க மனசு கஷ்டப்படும்.

நிருபர்: சரிண்ணே... இனிமே யார்கிட்டயும் இந்தக் கதையைச் சொல்லாதீங்க. ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி! மறுபடியும் ஒரு காபி சாப்பிடறீங்களா?

செல்ல: வேண்டாங்க! வெளிய போய் சாப்பிட லாம்... இங்க வெலய கேட்டா பயமா இருக்கு!