Published:Updated:

என் ஊர்!

பேய்க் கதைகள் பேசிய மொட்டை மாடி இரவுகள்!

என் ஊர்!

பேய்க் கதைகள் பேசிய மொட்டை மாடி இரவுகள்!

Published:Updated:
##~##

'திருவல்லிக்கேணியும் மயிலாப்பூரும் சென்னைப் பட்டணத்தில் நூற்றாண்டுகளாக இருந்துவரும் பகுதிகள். இதில் ஏழைகளும் நடுத்தர மக்களும் நிறைந்த பகுதி திருவல்லிக்கேணி. பார்த்தசாரதி கோயிலைச் சார்ந்துதான் இங்கு உள்ள மக்களின் வாழ்க்கை இயங்குகிறது!'' - தான் பிறந்து, வளர்ந்த திருவல்லிக்கேணிபற்றிப் பேசத் தொடங்குகிறார் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர்.

 '36, கஜபதி லாலா தெரு. இதுதான் நாங்க குடியிருந்த வீட்டின் முகவரி. எங்க தெருவுக்குப் பக்கத்தில்தான் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு. அந்தச் சுடுகாடு வழியாகத்தான் குறுக்குப் பாதையில ஸ்கூலுக்குப் போவோம். பயம்னா என்னனு தெரியாத வயசு அது. இப்ப அந்த வழியா போகணும்னு நினைச்சாலே கை, காலெல்லாம் உதறுது. எங்க வீட்டுல இருந்து பார்த்தசாரதி கோயிலுக்கு நடந்து போக 20 நிமிடங்கள் ஆகும். அந்த  20 நிமிடங்களிலேயே வாழ்க்கையின் பல தரப்பு மனிதர் களையும்

என் ஊர்!

சந்தித்துவிடலாம்.

பார்த்தசாரதி கோயிலுக்குப் பக்கத்துல இருக்குற வீடுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்தத் தெருவில் ஒரு சிறிய திண்ணையில் ஆரம்பிக்கும் வீடுகள், உள்ளே செல்லச் செல்ல மிக நீண்டு அடுத்த தெருவில்தான் போய் முடியும். அந்த வீடுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் நுழையும் உரிமை சின்ன வயதில் எங்களுக்கு இருந்தது. ஆனால், இன்று அந்த வீடுகளை இடித்துவிட்டு 'ஃபிளாட்’ கட்டி வருவது வருத்தத்தை அளிக்கிறது.

இங்கு உள்ள லேடி வெலிங்டன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில்தான் 8-ம் வகுப்பு வரை படிச்சேன். எனக்கான முதல் மேடையை அமைத்துக்கொடுத்தது இந்தப் பள்ளிதான். எங்க ஸ்கூல், லேடி வெலிங்டன் கல்லூரி, ராணி மேரி கல்லூரினு பெரிய காம்பவுண்ட் அது. இப்ப விவேகானந்தர் இல்லம் இருக்கிற இடம், அப்போது எங்க ஸ்கூலுக்குச் சொந்தமாக இருந்தது. பிறகுதான் அந்த இடத்தில் விவேகானந்தர் மண்டபம் கட்டினாங்க. விவேகானந்தர் சிலை இருக்கும் இடத்துல ஸ்டேஜ் போட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தியது இன்னும் நினைவில் இருக்கு. கடற்கரையை ஒட்டியே வகுப்பறைகள் இருந்ததால், அடிக்கிற காற்றில் புத்தகம், நோட்டு எல்லாம் பிச்சிக்கிட்டுப் போகுற மாதிரி காற்றடிக்கும். அதுக்காகவே சிரமப்பட்டு நோட்டை ஒரு பக்கமாகச் சாய்த்து வைத்து எழுதியது நினைவில் இருக்கு.

என் ஊர்!

எங்க வீடு இருந்த தெரு மிக மிகக் குறுகியது. ஒரு காம்பவுண்ட்டுக்குள் மூன்று வீடுகள் இருக்கும். திருவல்லிக்கேணியிலேயே எங்க பக்கத்து வீட்டுக்குத்தான் முதன்முதலில் டி.வி. வந்தது. எங்க வீட்டு ஜன்னல்ல இருந்து எட்டிப் பார்த்தா லேசா டி.வி. தெரியும். ஜன்னல்கிட்ட இருபது, முப்பது பேரு இறுக்கி அடிச்சி நின்னுகிட்டு டி.வி. பார்க்க முயற்சி செஞ்சிருக்கோம். இன்னைக்கு ஒரு பாட்டு வேணும்னா, உடனே இண்டர்நெட்ல தேடிப் பார்த்துடலாம். ஆனால், 'ஒளியும் ஒலியும்’ல போட்ட பாட்டை ஜன்னல் வழியா எட்டிப் பார்த்த சந்தோஷம் இன்னைக்குக் கிடைக்காது.

கோயிலைச் சுற்றி இருக்குறவங்க கர்னாடக சங்கீத வகுப்பு, இந்தி வகுப்பு நடத்துவாங்க. இந்த ரெண்டு வகுப்புக்கும் போகாத பொண்ணுங்களே திருவல்லிக்கேணியில கிடையாது. ஸ்கூல் விட்டு வந்தா பாட்டு, இந்தி வகுப்பு, கோயில்னு மூணும்தான் சாயங்கால வேலைகளா இருக்கும். இரவு ஆனால் மொட்டை மாடியில்தான் தூங்குவோம். தொகுப்பு வீடு என்பதால் எல்லாருக்கும் ஒரே மாடிதான். மாடியில் படுத்துக்கிட்டு பக்கத்து வீடுகள்ல உள்ள சமவயதுப் பெண்களோடு பேய்க்கதைகள் பேசிக்கொண்டு இருப் போம். இன்றைக்குப் பக்கத்து வீட்டில் உள்ளவர்களைப் பார்த்தாலே பேயைப் பார்த்ததுபோல ஒதுங்கிச் செல்கிறோம்.  

என் ஊர்!

இப்படி பல தரப்பட்ட மக்களோடு வாழ்ந்த வாழ்க்கை அது. இப்ப உள்ளது மாதிரி தனித்தனி வீடுகளில், பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்றுகூட தெரியாமல் வாழ்கிற வாழ்க்கை அப்ப கிடையாது. அந்த திருவல்லிக்கேணி நாட்கள் மீண்டும் வராது!' - தீர்க்கமாக முடிக்கிறார் பாரதி பாஸ்கர்.

- சி.காவேரி மாணிக்கம், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்