Published:Updated:

ஓவர் உடற்பயிற்சியும் உடம்புக்கு ஆகாதாம்... என்ன சொல்கின்றன ஆய்வுகள்?

இப்படி யாரேனும் உங்கள் நண்பர்கள் குழுவில் இருந்தால். அவர்களிடத்தில் சொல்லி விடுங்கள். அதீத உடற்பயிற்சியும் ஒருவித போதைதான். அதனால் ஆபத்துதான்!

ஓவர் உடற்பயிற்சியும் உடம்புக்கு ஆகாதாம்... என்ன சொல்கின்றன ஆய்வுகள்?
ஓவர் உடற்பயிற்சியும் உடம்புக்கு ஆகாதாம்... என்ன சொல்கின்றன ஆய்வுகள்?

ல்லா நண்பர்கள் குழுவிலும் ஒரு ஃபிட்நெஸ் அடிக்ட் (Fitness Addict) நிச்சயம் இருப்பான்.

``ஏன்டா நீயெல்லாம் சும்மாதானா இருக்க! எங்கூட ஜிம்முக்கு வரலாம்ல?"

"...."

``நான் எல்லாம் காலைல ஒரு மணி நேரம், சாயங்காலம் ஒரு மணிநேரம் ஜிம் போறேன். கார்டியோ பண்றேன். அதான் இப்டி ஃபிட்டா இருக்கேன்!" என்று முஷ்டியை முறுக்குவான்.

``இன்னைக்கு சாட்டர்டே, அதான் டபுள் ஒர்க்அவுட்!" என்று மாலை ரூமுக்கு வருபவன், ஞாயிறன்று காய்ச்சல் எனப் படுத்து விடுவான். திங்கட்கிழமை அதன் இரண்டாம் பாகம் தொடர, ஒரு வழியாகச் செவ்வாய்க்கிழமை நார்மல் ஆவான். ஆனால், அடுத்த நாளே ஜிம்மிற்கு ஓடி விடுவான்.

``மூணு நாளா ஜிம் போகலையா... அதான் இன்னைக்கு எக்ஸ்ட்ரா டைம் பண்ணேன்" என்று ஏதோ ஆபீஸில் ஓவர்டைம் பார்த்ததுபோல லேட்டாக வந்து விளக்கம் அளிப்பான். 

இப்படி யாரேனும் உங்கள் நண்பர்கள் குழுவில் இருந்தால். அவர்களிடத்தில் சொல்லி விடுங்கள். அதீத உடற்பயிற்சியும் ஒருவித போதைதான். அதனால் ஆபத்துதான்!

உடற்பயிற்சி செய்வதால் நிறைய நன்மைகள். ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது உண்மைதான். உடல் எடையைச் சரியான அளவுக்குக் கொண்டுவர உதவுகிறது; இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது; பலருக்கு மனச்சோர்வு மற்றும் கவலைகளில் இருந்து மீளவும் உதவுகிறது. ஆனால், எல்லாவற்றுக்கும் எல்லைக்கோடு என்று ஒன்று இருக்கிறது அல்லவா? இது வெயில் காலம்தான். தாகம்தான். தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும்தான். முடியும் என்ற காரணத்துக்காக இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறோமா என்ன? இயல்பான நாள்களில் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலம் என்றால் மூன்று லிட்டர். நம் உடல் சீராக இயங்க, இதுவே போதுமானது. அதுபோல உடற்பயிற்சிக்கும் ஓர் அளவுகோல் இருக்கிறது.

நீங்கள் வயது வந்தவர் என்றால் ஒரு வாரத்துக்கு ஐந்து மணி நேர மிதமான உடற்பயிற்சி (Moderate Workout) போதுமானது. ஐந்து மணி நேரம் உங்களால் ஒரு வாரத்தில் ஒதுக்க முடியவில்லை என்றால், இரண்டரை மணி நேரங்கள் கடினமான உடற்பயிற்சியை (Heavy Workout) மேற்கொள்ளலாம். இந்தத் தகவலை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention) தெரிவித்துள்ளது. 

உடற்பயிற்சி தொடர்பாக பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் இணையத்திலேயே கிடைக்கின்றன. குறிப்பாக ரன்னிங் குறித்த ஓர் ஆய்வு ஒரு சில உண்மைகளை நமக்கு உணர்த்துகிறது. தினமும் மிதமாக ஓட்டப்பயிற்சி எடுத்தவர்கள், பயிற்சி எடுக்காதவர்களைவிட ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்துள்ளனர். அதே சமயம், தினமும் கடினமாக ஓட்டப்பயிற்சி மேற்கொண்டவர்கள், அந்த ஓட்டப்பயிற்சியே செய்திடாதவர்களை விடவும் குறைவான காலமே வாழ்ந்திருக்கிறார்கள். எனவே, நீங்கள் அதீத உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், அதனால் உங்களுக்கு எந்த நலமும் கிட்டப்போவதில்லை. சொல்லப்போனால், மிதமான உடற்பயிற்சியின் நலன்கள்கூட கிடைக்கப் போவதில்லை.

மிகவும் கடினமான உடற்பயிற்சிகள், நீண்ட மராத்தான் போட்டிகளில் தொடர்ந்து ஓடுவது போன்ற செயல்களால், மாரடைப்பு, வாதம், இதயம் சீராக இயங்காமல் போவது, ரத்தக் குழாய்கள் விரிவடைதல் போன்ற பிரச்னைகள் தலை தூக்கலாம். இதற்குக் காரணம், நீங்கள் அதிகமாக உங்கள் உடலைச் சிரமத்துக்கு உள்ளாக்கும்போது, அந்த அழுத்தம் உங்கள் இதயம் மற்றும் ரத்த ஓட்டத்தை நேரடியாகப் பாதிக்கும். அதிகமாக உடலை வதைக்கும்போது உங்கள் இதயத் தசைகளை கடினமாக்குவது மட்டுமின்றி, திசுக்களில் பிரச்னைகளை ஏற்படுத்தும். மற்றுமொரு ஆய்வு பெண்களுக்குத் தேவையான உடற்பயிற்சியைப் பற்றிப் பேசுகிறது. அதன்படி, பெண்கள் வாரம் ஒரு முறை கடின உடற்பயிற்சியை மேற்கொண்டால் போதுமானது. அதே சமயம், தினமும் கடின உடற்பயிற்சி செய்தால் அவர்களுக்கு மாரடைப்பும், வாதமும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது. இந்தக் கடின உடற்பயிற்சி தொடர்ந்தால், மாதவிடாய் ஏற்படாமல் போவது, எலும்புகள் வலுவிழந்து தேய்ந்து போவது, சாப்பிடுவதில் பிரச்னை என ஏகப்பட்ட நோய்கள் வருவதற்கு வரிசைக்கட்டி நிற்கும்.

ஆண்களுக்கு இதே கடின உடற்பயிற்சியால் உடல் சோர்வு, விந்து இயக்குநீர் குறைபாடு போன்றவை ஏற்பட்டு ஆண்மைக் குறைபாடு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். ஆண், பெண் இருவருக்குமே அடிக்கடி காயங்கள், மூச்சுப் பிரச்னைகள், தசைநாண்அழற்சி, அழுத்தத்தால் ஏற்படும் எலும்பு முறிவுகள் போன்றவை ஏற்படுவது அதிகம் ஆகும். உடற்பயிற்சி உங்கள் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்யும் என்றால், அதீத உடற்பயிற்சி இருக்கும் நோய் எதிர்ப்பு திறனையும் குறைத்து விடும். இவ்வித பயிற்சிக்குப் பிறகு, சுமார் 72 மணி நேரங்கள் உங்கள் நோய் எதிர்ப்புத் திறன் மிகவும் குறைந்து போயிருக்கும். காரணம், அதற்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் உங்கள் உடலின் மற்ற செயல்பாடுகளுக்குப் போய்விட்டது. இந்த நேரத்தில்தான் உங்கள் உடலில் கிருமிகள் சுலபமாக நுழைந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகின்றன. அதனால்தான் அதீத உடற்பயிற்சி செய்தபின், காய்ச்சலோ, வேறு உடல் உபாதைகளோ வருவது.

அதீத உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உடலுக்குக் கிடைக்க வேண்டிய தேவையான அளவு ஊட்டச்சத்தை நீங்களே தடுப்பதாகத்தான் அர்த்தம். அதுமட்டுமின்றி, உளவியல் ரீதியாக அடிக்கடி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தோன்றுவதும் ஒருவித போதைதான் என்கின்றனர். ஒரு நாள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், அன்று நாளே ஓடாது. மன அழுத்தம், ஏக்கம், சோர்வு போன்றவை எட்டிப்பார்க்கும். அதே சமயம், உடற்பயிற்சி கூடாது என்று யாரும் சொல்லவில்லை. மேலே கூறிய அளவைச் செய்தாலே போதுமானது. சிக்ஸ் பேக்ஸ், எய்ட் பேக்ஸ் வைப்பதற்கான தேவை இருந்தால் மட்டுமே முயற்சி செய்யுங்கள். அதுவும் முறையாக ஒரு பயிற்சியாளரின் கீழ் மட்டுமே செய்ய வேண்டும்.

உங்கள் நண்பர்கள் யாரேனும் இப்படி அடிக்ட்டாக இருந்தால், அவர்களிடம் இந்தத் தகவலை சேர்த்து விடுங்கள்.