Published:Updated:

`ஹெச்.ராஜா ஏன் இப்படிப் பேசுகிறார்?' - ஓர் அலசல்

`ஹெச்.ராஜா ஏன் இப்படிப் பேசுகிறார்?' -  ஓர் அலசல்
`ஹெச்.ராஜா ஏன் இப்படிப் பேசுகிறார்?' - ஓர் அலசல்

ஹெச்.ராஜா என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. தமிழக பி.ஜே.பி-யினருக்கே அவரது பேச்சுக்கள் பெரும் தலைவலியை ஏற்படுத்திவருவதாகச் சொல்கிறார்கள், கமலாலய வட்டாரத்தில். இதுகுறித்துப் பேசும் பா.ஜ.க முக்கியஸ்தர்கள், ''தமிழக பி.ஜே.பி அளவில், உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை ஹெச்.ராஜாவுக்கு இருக்கிறது. இதனாலேயே உள்ளூர் தலைவர்களோடு அவருக்கு நல்லதொரு உறவும் இல்லை.

மேடைகளில், தடித்த வார்த்தைகளில் பேசும்போது, அடிமட்டத் தொண்டர்களின் கைத்தட்டல் கிடைக்கும் என்பது உண்மைதான். தொண்டர்களுடைய உற்சாகத்துக்காக பெரிய தலைவர்களேகூட அப்படிப் பேசுவதும் வாடிக்கைதான். ஆனால், அந்த கைத்தட்டலுக்காகவே தொடர்ந்து வரம்பு மீறி விமர்சிப்பதும், மீடியாவில் பேசும்போதுகூட தரம் தாழ்ந்து வார்த்தைகளைக் கொட்டிவருவதும் அவரது மரியாதையை சீர்குலைக்கும் என்பதை அவர் ஏனோ உணர்வதே இல்லை.

பதற்றத்தை ஏற்படுத்தும் தொனியில் அவர் ட்விட்டர் பதிவிட்டதையடுத்தே, ஆங்காங்கே பெரியார் சிலைகளுக்கு அவமரியாதை செய்யும் போக்குகள் அரங்கேறின. அப்போதும் அதுகுறித்து மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்காதவர், சம்பவம் நடந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு, அந்த ட்விட்டர் பதிவை என் கவனத்துக்குக் கொண்டுவராமல் அட்மினே பதிவிட்டுவிட்டார் என்று அரதப் பழசான பொய்யை அவிழ்த்துவிட்டார். அப்போதே மீடியாவில் 'ஹெச்.ராஜா அட்மின்' என்ற தலைப்பில் காய்ச்சி எடுத்துவிட்டார்கள். 

இப்போது, கவர்னர் சர்ச்சையிலும், தேவையே இல்லாமல் கருணாநிதி குடும்பத்தினரை கேவலப்படுத்தி ட்வீட் செய்திருக்கிறார். இது, கட்சிக்காரர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த மக்களிடையேயும் அவருக்குக் கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. வெற்று விளம்பரத்துக்காக இப்படிப் பேசி அகில இந்திய அளவில் பி.ஜே.பி தலைவர்களிடம் பெயர் வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார். அதன் மூலமாக தமிழக பி.ஜே.பி-யில் நல்லதொரு பொறுப்புக்கும் வந்துவிட வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பே இப்படியெல்லாம் அவரைப் பேச வைக்கிறது.'' என்று பொருமினர்.

இந்நிலையில், ஹெச்.ராஜாவின் அதிரடி செயல்பாடுகள் குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ''எதிர்ப்பு அரசியல்தான் கட்சியை வளர்த்தெடுக்கும் என்ற பாலபாடத்தை ஹெச்.ராஜா நன்றாகவே உணர்ந்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை எதையாவது பேசி மீடியாவில் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்க வேண்டும். தான் பேசுவது சரியா தவறா என்பதெல்லாம் இரண்டாம்கட்டம். ஆனால், ஒவ்வொரு நிகழ்வையும் தங்களது கட்சிக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது எப்படி? அதனைப் பிரச்னைக்குள்ளாக்குவது எப்படி... என்பது போன்ற வித்தைகளையெல்லாம் தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். 

தமிழ்நாடு முழுக்க காவிரிப் பிரச்னை சம்பந்தப்பட்ட போராட்டங்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த நேரத்தில்கூட, 'கர்நாடகத்தில் பி.ஜே.பி ஜெயிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்' என்றார் ஹெச்.ராஜா. மேலும், போராட்டத்தின்போது நடைபெற்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டிப் பேசியவர் குறிப்பிட்டத் தலைவர்களை 'கொலை முயற்சி வழக்கின்கீழ் கைது செய்ய வேண்டும்' என்று அதிரடியாகப் பேசி, பிரச்னையை திசை திருப்பிவிட்டார். இப்போதும்கூட, நிர்மலா தேவி ஆடியோ பிரச்னை, கவர்னருக்கு எதிராகத் திரும்புவதைக் கவனித்தவர், சட்டென்று தி.மு.க தலைவரைத் தாக்கி ட்வீட் செய்து தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் அவருக்கு எதிரான போராட்டங்களாக மடைமாற்றம் செய்துவிட்டார்.

'கல்யாண வீடா இருந்தாலும் எழவு வீடா இருந்தாலும் எனக்குத்தான் மாலை விழணும்' என்று தமிழ் சினிமா ஒன்றில் வரும் வசனம் அரசியலுக்கு நன்றாகப் பொருந்தும். இங்கே நாகரிகம் பார்த்துக்கொண்டு நியாய தர்மம் அனுசரித்துக்கொண்டிருந்தால், மக்கள் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள். உண்மையோ பொய்யோ, நல்லதோ கெட்டதோ எதுவானாலும் பரபரப்பைக் கிளப்புவதுபோல் ஏதாவது கருத்தைச் சொல்லி, திரி பற்ற வைத்துவிடவேண்டும். அதன்பிறகு வெடித்துச் சிதறுவதெல்லாமே சம்பந்தப்பட்ட தலைவருக்கான பப்ளிசிட்டியாகவே வந்து விடியும். இந்த வேலையை ஹெச்.ராஜா கனகச்சிதமாகச் செய்துவருகிறார். 

அவரது கட்சியினரேகூட, அவரது செயல்பாடுகளை விமர்சிப்பதுபோல் நடிக்கிறார்களே தவிர... உள்ளார்ந்து அவர்களும் இந்த அநாகரிகத்தை வரவேற்கத்தான் செய்வார்கள். ஏனெனில், அரசியலில் எப்போதுமே இரட்டை நிலைப்பாடுகள் உண்டு. நல்ல விஷயங்களை கட்சியின் மேல் மட்டத் தலைவர்கள் அதிகாரபூர்வ அறிக்கைகளாக வெளியிடுவார்கள். சில இரண்டாம்தர எதிர்ப்புகள் மற்றும் நிலைப்பாடுகளைத் தங்களுக்கு அடுத்தபடியாக உள்ள கீழ்மட்டத் தலைவர்களை வைத்து செயல்படுத்துவார்கள். இதில் ஹெச்.ராஜா எந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே... 

பி.ஜே.பி-க்கு நேரடி எதிரி காங்கிரஸ்தான்; சித்தாந்த ரீதியாக எதிரி கம்யூனிஸ்ட் கட்சி. ஆக, இந்த இரண்டு கட்சிகளைத் தவிர்த்து, பி.ஜே.பி தலைவர் ஒருவர் தேவையே இல்லாமல் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் மீது பாய்கிறார் என்றால் அது அவரது கட்சி சார்ந்ததாக இருக்காது; தனிப்பட்ட விருப்பு வெறுப்பாகத்தான் இருக்கும்!'' என்கிறார்.

அடுக்கடுக்கான  இந்த விமர்சனங்களுக்குப் பதில் கேட்டு ஹெச்.ராஜாவின் செல்பேசி எண்ணுக்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்தோம். ஆனாலும் நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இந்நிலையில் ஹெச்.ராஜா தரப்பினரது விளக்கத்தைக் கேட்டுப் பெற்றோம்... ``ஹெச்.ராஜா பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர். அவர் தமிழக அளவிலான கட்சிப் பதவிகளுக்காக அரசியல் செய்துவருகிறார் என்று சொல்வதே விஷமமானது. தேசிய அளவிலான பி.ஜே.பி-யின் மூத்தத் தலைவர்களுடன் நேரடி தொடர்புகொண்ட ஹெச்.ராஜா, கட்சிப் பணிக்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்.

தமிழக திராவிட அரசியலில், நடைபெறும் கூத்துகளை நாடே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. வெறும் உணர்ச்சி அரசியலை மட்டுமே முன்வைத்து தமிழக மக்களை இதுவரையிலும் ஏமாற்றிவந்தவர்களுக்கு ஹெச்.ராஜாவின் அறிவுபூர்வமான கேள்விகளும், விமர்சனங்களும் கோபத்தை வரவழைப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால், இதற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க ஹெச்.ராஜாவுக்கும் விருப்பம் இல்லை'' என்கின்றனர் பொறுமையாக.

அடுத்த கட்டுரைக்கு