Published:Updated:

யமஹா FZ-25 பைக் வாங்க இந்த 7 காரணங்கள் போதும்! #YamahaFZ25

யமஹா FZ-25 பைக் வாங்க இந்த 7 காரணங்கள் போதும்! #YamahaFZ25
யமஹா FZ-25 பைக் வாங்க இந்த 7 காரணங்கள் போதும்! #YamahaFZ25

மாதத்துக்குக் கிட்டத்தட்ட 2,500 பைக்குகள் வரை விற்பனையாகும் FZ பைக்கை வாங்க, சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. என்னனு பார்க்கலாம்!

ஸ்மூத்னெஸுக்கு இன்னொரு பெயர் யமஹா. 4 ஸ்ட்ரோக் பைக்கை ஓட்டுபவர்களுக்கு இது தெரியும். அதிலும் `எப்படியாவது FZ பைக் வாங்கிடணும்’ என்கிற லட்சியத்தோடு இளைஞர் கூட்டம், `பொல்லாதவன்’ தனுஷ் மாதிரி யமஹா ஷோரூமை எப்போதுமே வட்டமிட்டுக்கொண்டே இருக்கும். யமஹாவின் ஃபேவரிட்டான FZ-யில் 250 சிசி (yamaha FZ25) போன ஆண்டு இறுதியில் வெளிவந்தது. மாதத்துக்கு, கிட்டத்தட்ட 2,500 பைக்குகள் வரை விற்பனையாகும் FZ25 பைக்கை வாங்க, முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன. அவை என்னனு பார்க்கலாம்..!

பெயரே போதும்!

முதலில் யமஹா. இந்தப் பெயருக்காகவே பைக்கை புக் பண்ணும் இளசுகள் இருக்கிறார்கள். காரணம், ஜப்பான் நிறுவனமான யமஹாவின் இன்ஜினை எப்போதுமே சந்தேகப்படவேண்டியதில்லை. பர்ஃபாமென்ஸிலும் அப்படித்தான். லுக்கிலும் ப்ரீமியமாக அசத்துவதுதான் இதன் ஸ்பெஷல்! ஆரம்பத்தில் `யமஹா பைக்கா? ஸ்பேர்பார்ட்ஸ் கஷ்டமாச்சே!’ என்கிற இழுவை இருந்தது. இப்போது யூஸ்டு பைக் மார்க்கெட்டிலும் சக்கைப்போடுபோடுவதால், ரீசேல் வேல்யூவிலும் எகிறியடிக்கிறது யமஹா.

ஸ்டைல் ஸ்டைல்தான்!

இந்த செக்மென்ட்டிலேயே முழுக்க முழுக்க LED ஹெட்லைட்டுடன் வந்த முதல் பைக் FZ25-தான். எப்படிப்பட்ட இருட்டிலும் கவலையேயில்லை. தடிமனான 41மிமீ ஃபோர்க், அகலமான டயர்கள், ஸ்ப்ளிட் சீட், ஸ்போர்ட்டியான டிரைவிங் பொசிஷன்... இந்த எக்ஸாஸ்ட் பிடிக்காதவர்கள் இருப்பது சந்தேகம்தான். யமஹாவின் சூப்பர் பைக்கான MT சீரிஸ் பைக்கின் இன்ஸ்பிரேஷன்தான் இதன் டிசைன். நேக்கட் விரும்பிகளுக்கு அருமையான சாய்ஸ்.

இந்த மைலேஜ் போதுமா?

இந்த செக்மென்ட்டிலேயே அதிக மைலேஜ் தரும் பைக் என்கிற பெயரையும் வாடிக்கையாளர்களிடம் பெற்றிருக்கிறது யமஹா FZ25. நமது மோட்டார் விகடன் வாசகர்களே, அதிகபட்சம் 42-45 கி.மீ நெடுஞ்சாலையில் மைலேஜ் தருவதாகச் சொல்கிறார்கள். நகரத்தில் என்றால், 38-40 கி.மீ கிடைக்கலாம்.

ஈஸியா ஓவர்டேக் பண்ணலாம்!

இதன் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் யூத்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதாவது, சிக்னலிலிருந்து கிளம்பும் தன்மை; கியர்களைக் குறைக்காமலேயே த்ராட்டில் கொடுத்தாலும் பவர் டெலிவரி ஆவது; 4-வது கியரிலேயே வாகனங்களை ஓவர்டேக் பண்ணுவது... இவையெல்லாம் FZ25 பைக்கின் ஃபன் டு டிரைவ் விஷயங்கள்.

ஹேண்ட்லிங்கும் ஈஸி!

பார்க்க `பாகுபலி'போல் பல்க்காக இருந்தாலும், யமஹா FZ பைக்கின் எடை - 148 கிலோதான். இதே செக்மென்ட் கொண்ட மற்ற பைக்குகளின் எடை 155 கிலோவைத் தாண்டித்தான் ஆரம்பிக்கின்றன. இதனால், பைக்கின் ஹேண்ட்லிங் ஃப்ரெண்ட்லியாக இருக்கிறது. இதன் டர்னிங் சர்க்கிள் ரேடியஸும் அப்பாச்சியைவிடக் குறைவு என்பதால், (2.5 மீட்டர்) வளைவுகளில் ஜாலியாக கட் அடிக்கலாம்.

டிஜிட்டல் மயம்...

இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் எல்லாமே டிஜிட்டல் மயம். சில பைக்குகளில் காஸ்ட் கட்டிங்குக்காக டிஜிட்டலோடு, அனலாக் மீட்டரையும் செருகியிருப்பார்கள். டேக்கோ, ஸ்பீடோ, ஓடோ, ஃப்யூல், இரண்டு ட்ரிப் என்று எல்லா மீட்டர்களுமே டிஜிட்டல்தான்.

அதிர்வுகளா... மூச்!

ஆயில் கூல்டு, 20.9bhp பவர்கொண்ட 249சிசி Fi இன்ஜினின் ஸ்மூத்னெஸ்தான் பைக்கின் பெரிய ப்ளஸ். சில பைக்குகளில் 70-ஐ  தாண்டினால், கால்களில்/ஹேண்டில்பார்களில் நிலநடுக்கம் ஏற்படும். இதில் 130 கி.மீ வரை டாப் ஸ்பீடு போனாலும், அதிர்வுகளே தெரியவில்லை.

இதையும் கவனிங்க!

* பஜாஜ் பல்ஸர் NS200,  டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்குகள்தான் இதற்கு சரியான போட்டி. ஆனால், NS-ன் விலை 1,12,000 ரூபாய்; அப்பாச்சி - 1,15,000 ரூபாய். ஆனால் யமஹா FZ25-ன் விலை 1,40,000 ரூபாய்! மற்ற 200சிசி பைக்குகளில் ஆறு கியர்கள் இருக்க, FZ25-ல் வெறும் ஐந்து கியர்கள்தாம். இத்தனை பவர்ஃபுல் பைக்கில் பிரேக்கிங் சுமார்தான். என்பதோடு, ABS பிரேக்ஸும் இருந்திருக்க வேண்டும்.

FZ 25-ன் கன்சோல் டிஜிட்டலாக இருந்தாலும், ட்ரிப்-மைலேஜ்-கியர் இண்டிகேட்டர் எல்லாவற்றையும் தனித்தனியாக பட்டனை அழுத்தித்தான் பார்க்க முடியும். அப்பாச்சிபோல் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் ஆன்-டைம் டிஸ்பிளேவாகப் பார்க்க முடியவில்லை. கேடிஎம் பைக் போல் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மேல் மழைக்காலங்களில் தண்ணீர் தெறிப்பதைத் தவிர்க்க முடியாது.

`இதெல்லாம் ஒரு குறையா!’னு நினைப்பவர்கள், FZ25-யை புக் பண்ணலாம்.

அடுத்த கட்டுரைக்கு