Published:Updated:

என் ஊர்!

படம் பார்க்குறது எங்க ஊர் கலாசாரம்!

என் ஊர்!

படம் பார்க்குறது எங்க ஊர் கலாசாரம்!

Published:Updated:
##~##

'எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் அழுத்தமான அறிவுரை சொன்ன அக்கறை கலைஞன் இயக்குநர் எம்.சரவணன். இவர் தன்னுடையசொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், வரகூர் கிராமத்தின் நினைவுகளை இங்கே பகிர்ந்துக்கொள்கிறார்!

 ''நாமக்கல்லில் இருந்து துறையூர் போகும் வழியில் இருக்கிறது வரகூர். ஒரு பக்கம் கொல்லிமலை... இன்னொரு பக்கம் தலமலை என்று பசுமையான மலைகள் சூழ்ந்த கிராமம் என் ஊர். தலமலையில் இருக்கும் பெருமாள் கோயிலுக்குப் புரட்டாசி மாச சனிக் கிழமைகளில் ஏகத்துக்கும் கூட்டம் வரும். அந்த மலைக்குப் போக ரோடு வசதி கிடையாது. 10 கி.மீ. நடந்துதான் போகணும். நான் ஸ்கூல்ல படிக்கிறப்ப ஃப்ரெண்ட்ஸோடு ரெண்டாவது ஆட்டம் படம் பார்த்துட்டு, தலமலை ஏறுவோம்.

என் ஊர்!

வெளிச்சத்துக்குப் பழைய சைக்கிள் டயரைக் கொளுத்தி தீப்பந்தமா பிடிச்சிக்குவோம். காலையில 7 மணிக்கு மேலே போயிடுவோம். மலை உச்சியில ஒரு குட்டை இருக்கும். தண்ணி சுத்தமோ சுத்தம். அந்தத் தண்ணிலயே குளிச்சிட்டு, சுக்கு காபி போட்டுக் குடிப்போம். அப்புறம் சாமி தரிசனம் முடிச்சுட்டு கிளம்பினா வீடு வந்து சேர பொழுது இறங் கிடும்.

எங்க ஊர் குமரன் டென்ட் கொட்டாயைபத்தி சொல்லியே ஆகணும். எங்க ஊரைச் சுத்தி இருந்த அத்தனை கிராமங்களுக்கும் ஒரே பொழுதுபோக்கு அந்தக் கொட்டாய்தான். 'சண் டைக் காட்சிகள் நிறைந்த கலர் படம்’னு ஒட்டுற போஸ்டரைப் பார்க்கவே தனிக் கூட் டம் வரும். படம் போட்டாங்கன்னா எப்படியும் ஊர்ல இருக்குற அத்தனை பேரும் பார்த்துடுவோம். படம் எப்படி இருந்தாலும் 'நல்லா இல்லை’னு யாரும் சொல்ல மாட்டாங்க. படம் பார்ப்போம். அவ்வளவுதான். எனக்கு சினிமா மேல ஆர்வம் ஏற்பட்ட பின்னணி இதுதான்.

எங்க ஊருக்குப் பக்கத்துல பௌத்திரம்னு ஓர் ஊர் இருக்குது. ஒவ்வொரு திங்களும் அங்க சந்தை கூடும். எங்க ஊர் ஆளுங்களுக்கு திங்கள் கிழமைதான் வாரச் சம்பளம். அதை வாங்கிட்டு திருவிழாவுக்குக் கிளம்புற மாதிரி சந்தைக்கு ஜனங்க போவாங்க. எங்க ஊர் ஏரிக்கரைக்குப் பக்கத்துல செல்லாண்டியம்மன் கோயில் இருக் குது. கோயில்ல வாக்குக் கேட்டு, சாமி உத்தரவு கொடுத்தா மட்டுமே திருவிழா நடக்கும். திரு விழாவுல பொன்னர் - சங்கர் கூத்து போடுவாங்க. விடிய, விடிய நடக்குற அந்தக் கூத்தைப் பார்க் குறதுக்கு மதியமே போய் கோணிப் பையைப் போட்டு இடம் பிடிப்போம்.

என் ஊர்!

எங்க வீட்டுல நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தவரைக்கும் வாரத்துல மூணு நாள் கம்மஞ்சோறு, சோளச் சோறு, களி ஆக்குவாங்க. வீட்டுல யாருக்காவது உடம்பு சரியில்லனா மட்டும்தான் ஹோட்டலுக்குப் போய் இட்லி வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க. இப்ப அதெல் லாம் மாறிடுச்சி. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஊருக்குப் போனப்ப அம்மாகிட்ட சோளச் சோறு கேட்டேன். உலக்கையைத் தேடி எடுத்து சுத்தப்படுத்தி உரலைக் கழுவிட்டு, சோளத்தைக் குத்தினாங்க. அப்ப எல்லாம் ஒவ்வொரு வீட்டு முற்றத்திலயும் பாத்திரம் கழுவுற இடத்துல சின்னதா தோட்டம் போட்டு காய்கறி, கீரைச் செடி வெச்சிருப்பாங்க. அதுல விளையுறதே வீட்டுக்குப் போதுமானதா இருக்கும். இப்போ அப்படி ஒரு வீட்டுலகூட பார்க்க முடியலை. எல்லாத் தெருக்களும் கான்கிரீட்டா மாறி டுச்சு.

என் ஊர்!

பொங்கல் சமயத்துல ஒவ்வொரு வீட்டுல இருக்கிற மாட்டுக்கும் அந்த மாட்டோட சொந்தக்காரங்க எந்த கட்சியோ, அந்தக் கட்சியோட கலரைக் கொம்புக்கு அடிச்சி, அலங்காரம் பண்ணி ஊர் முழுக்க ஊர்வலமா கூட்டிப் போவாங்க. யார் மாடு அழகா இருக்குன்னு போட்டியே நடக்கும். இன்னைக்கு அப்படி எல்லாம் எதுவுமே இல்ல. எல்லோரும் டி.வி-யில மூழ்கிக்கிடக்குறாங்க. நான் சின்ன வயசுல அனுபவிச்சது எல்லாம் மறுபடியும் வேணும்னுதான் சொந்த ஊருக்கு போறேன். ஆனா, இப்போ சென்னைக்கும் வரகூருக்கும் பெருசா வித்தியாசம் தெரியல. காலத்துக்கு ஏற்ப ஊரோட அடையாளங்கள் மாறிட்டு இருக்கு!''

- சந்திப்பு: கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: க.தனசேகரன்