Published:Updated:

``முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்!" - `கம்மார சம்பவம்' படம் எப்படி?

தார்மிக் லீ

பாபி சிம்ஹா, சித்தார்த், திலீப் நடிப்பில், புதுமுக இயக்குநர் ரக்‌ஷித் அம்பத் இயக்கியுள்ள `கம்மார சம்பவம்' பட விமர்சனம்.

``முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்!" - `கம்மார சம்பவம்' படம் எப்படி?
``முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்!" - `கம்மார சம்பவம்' படம் எப்படி?

மக்கள் மறந்துபோன ஓர் இயக்கத்தின் வரலாற்றைத் தோண்டியெடுத்து படமாக்கத் துடிக்கும் உள்ளூர் அரசியல்வாதிகள். ஓர் அரசியல் தலைவரின் வாழ்க்கை, கேவலமான பின் கதையைக் கொண்டிருந்தாலும், அதை சினிமா எனும் ஆயுதத்தை வைத்து சரித்திரமாக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்கும், இயக்குநர். `சம்பவத்தை' சரித்திரமாக்கிய `கம்மார சம்பவம்' படம் எப்படி?

வரலாற்றில் மறைக்கப்பட்ட நாயகனானக் கொண்டாடப்படுபவர், கம்மாரன் (திலீப்). நேதாஜியைப் பின்பற்றும் ஐ.எல்.பி எனும் அமைப்பின் தலைவர், வீட்டிலிருக்கும் தன் சொந்த மகனாலே மதிக்கப்படாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். மரண நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் கம்மாரனுக்குப் பின்னால், ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் போராடிய போராளி என்ற வரலாற்றுக் கதையும் உண்டு. ஆனால், அவரின் சொந்த வாழ்க்கையில் நடந்திருக்கும் ஒரு `சம்பவம்' மட்டும் யாரிடமும் சொல்லப்படாமலேயே இருக்கிறது.  

அதே அமைப்பில் இருக்கும் உறுப்பினர்களான ஃப்ரான்சிஸ் (விஜயராகவன்), பைஜு, வினய் ஃபோர்ட், சுரேந்திரன் (இந்திரான்ஸ்) ஆகியோர் கம்மாரன் நம்பியாரின் வாழ்க்கையைப் படமாக எடுக்க எண்ணி இயக்குநர், புலிகேசியை (பாபி சிம்ஹா) அணுகுகிறார்கள். இவர்கள் சொல்லும் கதையில் சமாதனமாகாத புலிகேசி, அவரை நேரில் சந்தித்துக் கதையைக் கேட்டறியலாம் என நினைத்து கம்மாரனின் வீட்டிற்குப் புறப்படுகிறார். கம்மாரனும், இத்தனை ஆண்டுகள் மறைத்து வைத்த அந்தச் சம்பவத்தைப் புலிகேசியிடம் சொல்கிறார். 

கதை 1945-ல், அம்ருதா சமுத்திரம் எனும் இடத்திற்குப் பயணப்படுகிறது. ஊருக்கே மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார், கம்மாரன். தான் குழந்தையாக இருக்கும்போது, தந்தைக்கு நடந்த ஒரு கோரச் சம்பவத்திலிருந்து கதை சொல்லத் தொடங்குகிறார். ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியாலும், ஊர்ப் பெரியவரான கேலு நம்பியாரின் (முரளி கோபி) அடக்குமுறையாலும் அடிமையாக வாழ்ந்து வருகிறார்கள், மக்கள். தன் தந்தையின் இறப்புக்கு நியாயம் வேண்டி, கேலு நம்பியாருக்கு எதிராகச் சில தந்திர வேலைகளை அவரோடு இருந்துகொண்டே செய்துவருகிறார், கம்மாரன். 

அதேசமயம் கேலு நம்பியாரின் உறவினரான பானுமதியை (நமீதா பிரமோத்) இவர் ஒருதலையாகக் காதலித்துக்கொண்டிருக்கிறார். பானுமதியோ கேலு நம்பியாரின் மகனான ஒத்தேனன் நம்பியாரைக் (சித்தார்த்) காதலிப்பார். ஒத்தேனன் நம்பியார் நேதாஜியைப் பின்பற்றும் சுதந்திரப் போராளி. இந்த இரண்டு சம்பவங்களைக் காரணமாக வைத்து, கம்மாரன் செய்யும் அந்தச் `சிறப்பான' சம்பவத்தை தான் இயக்கும் படத்தின் மூலம், வரலாற்றுச் சம்பவமாக மாற்றிவிடுகிறார், பாபி சிம்ஹா. அந்தச் சம்பவம் என்ன, வரலாறு எப்படித் திரிக்கப்படுகிறது? என்பதைச் சொல்கிறது, இந்த `கம்மார சம்பவம்'.

நெப்போலியன் கூறிய `வரலாற்றுக் கதைகள் பொய்களின் தொகுப்பே' எனும் மேற்கோளை மையமாக வைத்து படத்தின் கதையை எழுதியிருக்கிறார், முரளி கோபி. இதை ரத்தீஷ் அம்பத் இயக்கியிருக்கிறார். படத்தில் அப்லாஸ் அள்ளும் முதல் விஷயம், படத்தின் கதாபாத்திர வடிவமைப்பு. கம்மாரனில் தொடங்கி, நேதாஜி வரை... அனைத்துக் கதாபாத்திரங்களும் படத்தில் பெர்ஃபெக்ட்! திலீப்புக்குப் படத்தில், `90 வயது முதிர்ந்த' கம்மாரன், `அப்பாவி' கம்மாரன், `போராளி' கம்மாரன் என மூன்று கெட்அப்கள். மூன்றுவிதமான நடிப்பில் மெர்சல் காட்டியிருக்கிறார், திலீப். ஒத்தேனன் நம்பியாராக வரும் சித்தார்த் நடிப்பும் சரி, கெட்அப்பும் சரி, 1940-களில் இடம்பெற்றிருந்த `ரெட்ரோ' ஸ்டைலை கண் முன் நிறுத்தியிருக்கிறார். தவிர, நமீதா பிரமோத், முரளி கோபி, பாபி சிம்ஹா, சுவேதா மோகன், சித்திக்... படத்தில் இடம்பெற்றிருந்த மற்ற அனைத்துக் கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

படத்தின் மற்றொரு பெரிய பலம்,  விஷுவல். விடுதலைக்கு முன் இருந்த இந்தியாவிற்கு நம்மையும் அழைத்துச் சென்றிருக்கிறது. அதற்கு, சுனில் கே.எஸ்ஸின் ஒளிப்பதிவும், சுரேஷின் கிராஃபிக்ஸும் நன்றாகவே வொர்க்அவுட் ஆகியிருக்கிறது. கோபி சுந்தரின் இசை இந்தப் படத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது. படம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருக்கும் `கம்மார சம்பவம்...' பி.ஜி.எம் செம! படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து கேரக்டர்களுக்கும் சமீரா சனீஷா வடிவமைத்திருக்கும் காஸ்ட்யூம்ஸ் கலக்கல். ரோஷன். ஜியின் கேக்அப் கேரக்டர்களை மிக அழகாகவும் ரியலிஸ்டிக்காகவும் காட்டியிருக்கிறது. 

மார்ச் 8, 1944-ல் நடந்த `Battle of Imphal' சம்பவத்தை, ஹிட்லரின் இறப்பையும், நேதாஜியின் இறப்பையும் கம்மாரன் - ஒத்தேனனின் கதையோடு இணைப்பது, ஜப்பானில் நடக்கும் இரண்டாவது உலகப் போரையும் இதோடு கோத்துவிடுவது எனப் படத்தின் முதல்பாதி பயங்கர சுவாரஸ்யமாக நகர்கிறது. இரண்டாம்பாதி இதற்கு நேரெதிர். சொல்லவரும் கதையை இரண்டாம்பாதியில் `சட்டையராக'தான் சொல்லமுடியும் என்றாலும், திரைக்கதையில் இன்னும் வேகம் கூட்டியிருக்கலாம். 3 மணி நேரம் 2 நிமிடம் என்ற படத்தின் நீளத்தை இரண்டாம் பாதியில்தான் உணர முடிகிறது.  

இடைவேளைக்குப் பிறகான சம்பவத்தைச் சகித்துக்கொண்டு, முதல்பாதியின் சம்பவத்தை எதிர்பார்த்து தியேட்டருக்கு விசிட் அடித்தால், கம்மாரனின் சம்பவம் சிறப்பான சம்பவமாக இருக்கும்.

`தி ஹரிகேன் ஹெய்ஸ்ட்' படத்தின் விமர்சனத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.