இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 16

மெடிக்ளெய்ம் பாலிசி்கள் பற்றி விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வந்தாலும், பாலிசி எடுத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இன்னும் பாலிசி எடுக்காதவர்கள், அது பற்றிய விழிப்புஉணர்வே இல்லாதவர்கள் எண்ணிக்கையோ மிகமிக அதிகம். அப்படியே வைத்திருந்தாலும், அவர்களில் பலர் தங்கள் அலுவலகங்களில் அளித்த பாலிசியை வைத்திருப்பவர்களே! பணியில் இருந்து ஓய்வு பெறும்போது, பணியில் இருந்து விலகும்போது பாலிசியும் முடிந்துவிடும். இந்த பாலிசியைத் தொடர முடியும், தடையின்றி மருத்துவக் காப்பீட்டின் பலன்களைப் பெற முடியும் என்பதுகூட பலருக்கும் தெரிவதுஇல்லை. பொதுவாக, மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்கும்போது தோன்றும் சந்தேகங்களையும், அதற்கான பதில்களையும் இந்த அத்தியாயத்தில் காண்போம்.

மெடிக்ளெய்ம் பாலிசி என்றால் என்ன?

விபத்து, எதிர்பாராதவிதத்தில் ஏற்படக்கூடிய நோய் பாதிப்பு, அறுவைசிகிச்சைக்கு காப்பீடு செய்த தொகை முழுமைக்கும் பணம் இல்லா சிகிச்சை அல்லது சிகிச்சைகாகச் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெறக்கூடிய வசதியை அளிப்பது மெடிக்ளெய்ம் பாலிசி. இது தனிநபர், ஃபேமிலி ஃபுளோட்டர் (குழு), கிரிட்டிக்கல் இல்னெஸ் எனப் பல வகைகளில் கிடைக்கிறது. இதை வருடம்தோறும் புதுப்பித்துக்கொள்ளலாம்.

மெடிக்ளெய்ம் பாலிசி ஏன் அவசியம்?


நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய சிகிச்சைமுறைகள் என மருத்துவத் துறையில் நாளுக்குநாள் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. இதற்கு ஏற்றாற்போல, மருத்துவக் கட்டணமும் அதிகரித்துவருகிறது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெறும் வகையில் ஏற்படக்கூடிய உடல்நலக் குறைவு, விபத்து போன்றவற்றுக்கு ஆகும் திடீர் செலவில் இருந்து நம்மைக் காக்கிறது.

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 16

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெடிக்ளெய்ம் பெறுவது எப்படி?

நெட்வொர்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, க்ளெய்ம் அளிக்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவை அணுகி தகவல் தெரிவித்தால்போதும். அவர்கள் மருத்துவமனையுடன் பேசி செலவுத்தொகையை அளித்துவிடுவர். நெட்வொர்க் அல்லாத மருத்துவமனை எனில், சிகிச்சை பெற்ற 60 நாட்களுக்குள் அல்லது பாலிசியில் குறிப்பிட்டுள்ள காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பாலிசி வாங்கும்போதே நெட்வொர்க் மருத்துவமனைகளின் அட்டவணையை காப்பீட்டு நிறுவனம் அளிக்கும். அதில், உங்களுக்கு அருகில் என்னென்ன மருத்துவமனைகள் உள்ளன என்பதை குறித்துவைத்துக்கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் எடுத்தால் போதுமா?

மெடிக்ளெய்ம் பாலிசி என்பது முதலீடு இல்லை. குடும்பத்தில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் உடல்நலக் குறைபாடு ஏற்படலாம், விபத்து நிகழலாம். எனவே, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பாலிசி எடுப்பது அவசியம். இதற்காகத் தனித்தனியாக பாலிசி எடுக்கவேண்டியது இல்லை. ஃபேமிலி ஃபுளோட்டர் பாலிசி மூலம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு பெறலாம்.

எல்லா சிகிச்சைகளுக்கும் க்ளெய்ம் கிடைக்குமா?


கிடைக்காது. பாலிசி வாங்கும்போது அதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைப் படித்துப் பார்த்து வாங்க வேண்டும். ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு காப்பீடு உடனடியாகக் கிடைக்காது. ஒன்று, இரண்டு ஆண்டு காத்திருப்புக் காலம் இருக்கும். அதாவது காப்பீடு எடுப்பவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்றால், காப்பீடு எடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுக்கு எந்த க்ளெய்மும் பெற முடியாது. இரண்டு ஆண்டுகள்வரை பிறகு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய சூழல் ஏற்பட்டால் கவரேஜ் பெறலாம். காத்திருப்புக் காலம் என்பது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.

அதேபோல, காஸ்மெடிக் சிகிச்சைகள், விபத்து தவிர்த்து பல், பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்டவற்றுக்கு கவரேஜ் கிடைக்காது. குழந்தைப்பேறுக்கான சிகிச்சைகள், பிரசவம் போன்றவற்றுக்கும் கவரேஜ் கிடைக்காது. தற்போது சில நிறுவனங்கள் பிரசவத்துக்கும் கவரேஜ் அளிக்கின்றன. அதில் காத்திருப்புக் காலம் உள்ளிட்ட விதிமுறைகள் பொருந்தும்.

காத்திருப்புக் காலம் என்றால் என்ன?

பாலிசி வாங்கும்போது பொதுவாக 30 நாட்களுக்கு காத்திருப்புக் காலம் இருக்கும். இந்தக் காலத்தில் ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகளுக்கு கவரேஜ் கிடைக்காது. ஆனால், விபத்து போன்ற அவசரகால சிகிச்சைகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும். அதேபோல, ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு குறிப்பிட்ட வருடத்துக்கு க்ளெய்ம் இருக்காது. இந்த இடைப்பட்ட காலத்தை `காத்திருப்புக் காலம்’ என்பர்.

நான் மதுரையில் பாலிசி எடுத்தேன், டெல்லியில் சிகிச்சை பெற முடியுமா?

நிச்சயம் பெறலாம். இந்தியா முழுமைக்கும் இந்த மெடிக்ளெய்ம் பாலிசி செல்லுபடியாகும்.

பாலிசி எடுத்து ஒரு ரூபாய்கூட மருத்துவக் காப்பீடு பெறவில்லை. இந்தத் தொகையை, பாலிசி புதுப்பித்தல் மூலம் அடுத்த ஆண்டுக்குக் கூடுதலாகப் பயன்படுத்த முடியுமா?

முடியாது. காப்பீடு செய்த தொகை அந்த ஆண்டுக்கு மட்டும்தான். க்ளெய்ம் எதுவும் பெறவில்லை எனில், காப்பீட்டு நிறுவனம் போனஸ் உள்ளிட்ட சில சலுகைகளை அளிக்கும்.

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism