Published:Updated:

பழநியின் குதிரை வண்டி!

பழநியின் குதிரை வண்டி!

பழநியின் குதிரை வண்டி!

பழநியின் குதிரை வண்டி!

Published:Updated:

பழநியின் குதிரை வண்டி!

பழநியின் குதிரை வண்டி!

ழநியில் இன்றும் ஆச்சர்யமாக வழக்கத்தில் இருந்துகொண்டு இருக்கின்றன குதிரை வண்டிகள். டக்... டக்... என்று ஓடிக்கொண்டு இருக்கும் குதிரையின் லகானை இழுத்துப் பிடித்தபடி பேசுகிறார் குதிரை வண்டிக்காரர் பாண்டியன். ''எனக்கு வயசு 65. 30 வருஷமா குதிரை வண்டி ஓட்டிட்டு இருக்கேன். அப்பவும் சரி, இப்பவும் சரி... எங்க வண்டிக்குனு கிராக்கி உண்டு. இந்தக் குதிரை வண்டியை வெச்சுத்தான் என் ரெண்டு பையன், ரெண்டு பொண்ணுங்களைக் கட்டிக் கொடுத்தேன்!'' என்றார். அடுத்த வண்டிக்காரர் சாகுல் ஹமீது, ''எனக்கு வயது 27 ஆகுது சார். நான் டவுசர் போட்ட காலத்துல இருந்தே குதிரை வண்டி ஓட்டிட்டு இருக்கேன். ஆட்டோ, பஸ் எல்லாம் ஓட்டுவேன். ஆனாலும், குதிரை வண்டியில ஓடுறது தனி சுகம். அதனாலயே டிரைவர் வேலையை விட்டுட்டு, குதிரை வண்டி ஓட்ட வந்துட்டேன். சீஸன் டைம்ல ஒரு நாளைக்கு ஆயிரம், ரெண்டாயிரம் வரைக்கும் சம்பாதிக்கலாம். ஃபாரினர் வந்தா பிரியப்பட்டு 500, 1,000னு கொடுப்பாங்க. பழநிக்கு அதிகம் வர்றது கேரளாக்காரங்கதான். பழநி கோயிலுக்குப் போயிட்டு வந்தா 40 ரூபாய். வேற இடங்கள்னா, எக்ஸ்ட்ரா 20 ரூபாய். அதே மாதிரி லவ்வர்ஸ் வந்தா எங்க வண்டியில ட்ரிப் அடிக்கப் பிரியப்படுவாங்க. ஒரு நாளைக்கு குதிரைக்குக் கொள்ளு, வண்டி பராமரிப்புக்கு 100 ரூபாய் செலவாகும். மத்தது எல்லாம் லாபம்தான். தமிழ்நாட்ல எந்தக் கோயில்லயும் குதிரை வண்டி கிடையாது. பழநியில 24 மணி நேரமும் சர்வீஸ் பண்றோம். இங்க மொத்தம் 140 வண்டிக்கு மேல ஓடுது. அத்தனை குடும்பத்துக்கும் சோறு போடுறது இந்த பழநி ஆண்டவன் சந்நிதிதான்!''- சாட்டையைச் சுழற்றியபடி குதிரையின் லகானைச் சுண்டிவிடுகிறார் சாகுல் ஹமீது!

கு.பிரகாஷ், படம்: வீ.சிவக்குமார்

பெட்டிக் கடை சாமி!

பழநியின் குதிரை வண்டி!

துரை மாவட்டம், கீரிப்பட்டி கிராமத்தில் 'பெட்டிக் கடை’ ஒன்றில் முன்னால் சென்ற ஒருவர்  சிகரெட் கேட்க... அங்கு இருந்த பெரியவர் கோபத்தில் கொந்தளித்துவிட்டார். 'ஏன்டா, கோயிலுக்கு வந்து எகத்தாளமாப் பண்றீங்க? ஆத்தாவ சீண்டுனவங்க கதி என்ன தெரியுமா?' என்று அவர் எகிறிக்கொண்டு இருந்தபோதுதான், மெள்ள உறைத்தது அது கோயில் என்று.

ஐந்துக்கு ஐந்து அடியில் பந்தல் போட்டு, உள்ளே 1 லிட்டர், 2 லிட்டர் பெப்சி, செவன்-அப், மிராண்டா போன்ற கூல்டிரிங்ஸ்களையும், பழுத்த வாழைத் தாரை யும் கட்டித் தொங்கவிட்டு இருக்கிறார்கள். தவிர, முறுக்கு, கடலை மிட்டாய், ஜூஸ்பொரி, பிஸ்கட், தேன் மிட்டாய், தேங்காய் மிட்டாய்களும் பாக்கெட்  பாக்கெட்டுகளாகத் தொங்குகின்றன. இதைத் தாண்டி சாமி பீடம் இருக்கிறது.

'இது கீரிப்பட்டி ஜனங்களுக்குப் பாத்தியமான சந்தன மாரியம்மன் கோயில். திருவிழா நடக்கிறப்ப சம்சாரிங்க அவங்க அவங்க தோட்டத்துல விளைஞ்ச தென்னங்குலை, வாழை, நுங்குனு எல்லாத்தையும் காணிக்கையா நினைச்சி கோயிலுக்குக் கொண்டுவந்து கட்டிருவாய்ங்க. திருவிழா முடிஞ்ச மக்ய்யா(மறு) நாளைக்கு அதை எல்லாம் ஏலம்விட்டு, கோயில் வருமானத்துல சேர்த்துருவாங்க. அது மாதிரிதான் இதுவும். ஆளாளுக்குத் தன் தகுதிக்கு ஏத்தபடி கூல்டிரிங்ஸ், தின்பண்டங்களை வாங்கியாந்து கோயில்ல கட்டிருவாய்ங்க. திருவிழா முடிஞ்சதும் ஏலம் விடுவோம். சாமிக்குப் போற பணம்கிறதால ஒரு லிட்டர் கூல்டிரிங்ஸை ஆயிரம் ரூபாய்க்கும், கடலை மிட்டாயை 501 ரூபாய்க்கும் ஏலம் எடுப்பாய்ங்க. ஏலத்துல கலந்துக்கிட்டவங்களுக்கும், பொருட்களைக் கட்டிக் கொடுத்தவங் களுக்கும் செல்வத்தை அள்ளிக் கொடுப்பா ஆத்தாங்கிறதுதான் எங்களோட நம்பிக்கை' - என்றார் தங்கமலை பூசாரி!

- கே.கே.மகேஷ், படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மார்கல்யாணம்!

பழநியின் குதிரை வண்டி!

பாலாறுபட்டியில் ஊருக்கு வெளியே மரத்தடியில் காவி வேட்டி, கையில் கம்பியுடன்  'யாராவது வருகிறார்களா?’ என்று ரோட்டில் கண் வைத்துக் காத்திருக்கிறார்கள் சிறுவர்கள். பைக்கில் வருபவரைப் பார்த்ததுமே கம்பியை வைத்து வழி மறிக்கிறார்கள்.  ''காசை எடு... இது கள்ளநாட்டு வழக்கம்'' என்கிறார்கள் கோரஸாக. விஷயம் தெரிந்த உள்ளூர்க்காரர்கள் சிரித்தபடி காசு கொடுக்கிறார்கள். ஊருக்குப் புதியவர்களோ 'இது என்ன நவீன பிச்சையா, இல்லை வழிப் பறியா?’ எனப் புரியாமல் தடுமாறுகிறார்கள். ''எங்க சாதி வழக்கப்படி 10 வயசுப் பையன்களுக்கு மார்கல்யாணம் (சுன்னத்) செய்வாங்க. மார்கல்யா ணம் செய்றவங்க, ஒரு வாரம் ஊருக்கு வெளியே தங்கணும். அந்தச் சமயத்தில் வழியில் போற வர்றவங்ககிட்ட வழிப்பறி செய்றது மாதிரி பணம் வாங்குவோம். அந்தப் பணத்தில் கோயி லுக்கு எண்ணெய் வாங்கி ஊத்துவோம். மீதி பணத்துக்குக் காவி வேட்டி எடுத்துக் கட்டு«வாம்'' என்றார்கள் ஊர் மக்கள். 'இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள சுன்னத் வழக்கம், பிரமலைக் கள்ளர் சமூகத்தினரிடம் எப்படி வந்தது?’ என்று கேட்டால், ''எப்படி வந்ததுனு தெரியலை. பாரம்பரியமாகக் கடைபிடித்து வருகிறோம். மார்கல்யாணம் பண்ணும்போது சொந்தக்காரங் களுக்குச் சொல்லி அனுப்புவோம். அவங்க சீர் செய்வாங்க'' என்றார்கள். இதுகுறித்து, சமூக அறிஞர் தொ.பரமசிவனிடம் கேட்டோம், ''உலகத்தில் பல பழங்குடி மக்களிடம் இந்தப் பழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக, யூதர்களிடம் இருந்தது. தமிழ்ச் சமுதாயத்தில் பல சமூகங்களில் இருந்த இந்தப் பழக்கம், பிரமலைக் கள்ளர்களிடம் மட்டும்தான் எஞ்சியுள்ளது. அவர்கள் முந்தைய காலத்தில் மார்கல்யாணத்தைக் 'கவரடைப்பு’ எனச் சொல்வார்கள். இந்த வழக்குச் சொல்லும் தற்போது மறைந்துவிட்டது'' என்றார்!

- இரா.முத்துநாகு