Published:Updated:

ரிலீஸ் ஆகிறது விஸ்வரூபம்; கமல் உடன் உடன்பாடு - இஸ்லாமியர் போராட்டம் வாபஸ்

Vikatan Correspondent
ரிலீஸ் ஆகிறது விஸ்வரூபம்; கமல் உடன் உடன்பாடு - இஸ்லாமியர் போராட்டம் வாபஸ்
ரிலீஸ் ஆகிறது விஸ்வரூபம்; கமல் உடன் உடன்பாடு - இஸ்லாமியர் போராட்டம் வாபஸ்
ரிலீஸ் ஆகிறது விஸ்வரூபம்; கமல் உடன் உடன்பாடு - இஸ்லாமியர் போராட்டம் வாபஸ்

சென்னை: விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பான முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, இஸ்லாமிய அமைப்பினர் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

விஸ்வரூபம் பட ரிலீஸ் பற்றி விரைவில் தகவல் வெளியிடப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்பு இஸ்லாமிய அமைப்பினரின் பிரதிநிதிகள் கூறியது: 

"விஸ்வரூபம் துவக்கக் காட்சியில் 'இது உண்மைத் தொகுப்பு' என்று இருந்தது. அதை மாற்றக் கோரினோம். அதன்படி 'இப்படம் முழுக்க முழுக்க கற்பனையே" என்று பதிவு செய்ய கமல்ஹாசன் ஒப்புதல். படத்தில் 15 காட்சிகள் நீக்கக் கோரினோம்; அதில் 7 காட்சிகளை நீக்க கமல் ஒப்புதல் அளித்தார். அதை ஏற்றுக்கொண்டோம். எங்கள் போராட்டங்களை வாபஸ் பெறுகிறோம்."

கமல்ஹாசன் நம்பிக்கை...

இதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் பேசியது:

"இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர், உள்துறைச் செயலருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இஸ்லாமிய சகோதரர்களுடன் நடத்தியப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய சகோதரர்கள் கேட்டுக்கொண்ட சில காட்சிகளின் ஒலியை நீக்குகிறேன். 
எங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட ரிட் மனு வாபஸ் பெறுகிறோம்.

விஸ்வரூபம் மீதான தடையை அரசு நீக்கும் என்று நம்புகிறேன்.

விஸ்வருபம் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பேன் என்று என் ரசிகர்களுக்குக் கூறிக்கொள்கிறேன்." என்றார் கமல்ஹாசன்.

நீங்குகிறது தடை...

சென்னைத் தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலர், கமல்ஹாசன் - சந்திரஹாசன் மற்றும் இஸ்லாமிய அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் இடையே முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டுள்ளதை அடுத்து, விஸ்வரூபம் மீதான தடையை தமிழக அரசு உடனடியாக நீக்கும் எனத் தெரிகிறது.

அனைத்து கலெக்டர்களுக்கும் இன்று இரவு 144 உத்தரவை நீக்குமாறு உள்துறைச் செயலரிடம் இருந்து வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்படும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

ரிலீஸ் எப்போது?

எல்லா முட்டுகட்டைகளும் நீங்கியுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் விஸ்வரூபம் தமிழகத்தில் ரிலீஸ் ஆவதற்கான வாய்ப்பு மிகுதியாகியுள்ளது.

முத்தரப்புப் பேச்சு வெற்றிகரமாக முடிந்த நிலையில், படத்தை உடனடியாக ரிலீஸ் செய்வதற்காக தியேட்டர் உரிமையாளர்களிடம் கமல் தரப்பில் இருந்தும் பேசப்பட்டு வருகிறது.

கடல், டேவிட் உள்ளிட்ட படங்கள் அண்மையில் வெளியானதால், அப்படங்களுக்கு புக்கிங் ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கும். அதற்கு பாதிப்பு வராமல் விஸ்வரூபத்தில் ரிலீஸ் செய்வது பற்றி தியேட்டர் உரிமையாளர்களிடம் பேசப்படுகிறது.

விஸ்வரூபம் டிஜிட்டலில் படமாக்கப்பட்டதால், இஸ்லாமிய அமைப்பினர் குறிப்பிட்டுள்ள சில காட்சிகளை நீக்குவதற்கு தொழில்நுட்ப அடிப்படையில் சில மணி நேரமே போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.