Published:Updated:

அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுக: ஜெ.

சென்னை, பிப்.26,2011

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.##~~##

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை களைதல்; காலிப் பணியிடங்களை முறையான நியமனங்கள் மூலம் நிரப்புதல்; தேர்வு நிலை, சிறப்பு நிலை, முதுநிலை ஊதிய நிர்ணயம் செய்யப்படும் போது அடுத்த பதவி உயர்வுக்கான ஊதியக்கட்டு மற்றும் தர ஊதியம் வழங்கிடுதல்;

சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை அடியோடு நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23.2.2011 முதல் சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தினை மேற்கொண்டு வருகின்றனர். நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

1991-ம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, ஊதியக் குழுவின் முரண்பாடுகளைக் களைந்ததோடு மட்டுமல்லாமல், அமைச்சுப் பணியாளர்களுக்கு 5 சதவீதம் தனி ஊதியம் வழங்கி, அவர்களின் பதவி உயர்வில் நிலவி வந்த தேக்க நிலையை போக்கும் வகையில், 12 ஆயிரம் இளநிலை உதவியாளர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு கிடைக்கவும்; 2000-க்கும் மேற்பட்ட உதவியாளர்களுக்கு கண்காணிப்பாளர் பதவி உயர்வு கிடைக்கவும்; கண்காணிப்பாளர் பதவிக்கு மேலான பதவிகளைப் பொறுத்தவரையில் அந்தந்த துறைகளில் உள்ள மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உயர் பதவிகள் கிடைக்கவும் வழிவகை செய்தேன்.

இதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவதோடு, உண்ணாவிரத அறப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தி.மு.க. அரசு புறக்கணிக்கும் பட்சத்தில், விரைவில் தமிழகத்தில் ஆட்சியை அமைக்கவிருக்கும் அ.தி.மு.க. அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இதர கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுடைய சலுகைகளைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற உறுதியினை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.