Published:Updated:

என் ஊர்!

பிச்சிப் பூ விளையும் பிச்சிவிளை!

என் ஊர்!

பிச்சிப் பூ விளையும் பிச்சிவிளை!

Published:Updated:
##~##

மிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் மாநிலத் தலைவர் த.வெள்ளையனின் சொந்த ஊர் 'பிச்சிவிளை’. திருச்செந்தூரில் இருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ள கிராமம். தனது சொந்த ஊர்பற்றி இங்கே பேசுகிறார் வெள்ளையன்.

 ''எங்க ஊர்ல வெத்தலைக் கொடி அபாரமா வெளையும். அங்க இருந்துதான் எல்லா ஊருக்கும் யாவாரத்துக்குக் கொண்டுபோவாங்க. அதே மாதிரி பிச்சிப்பூவும் அதிகம் விளையும். அதனால எங்க ஊருக்கு பிச்சிவிளைனு பேர் வந்ததுச்சாம். பனைமரம் அதிகமா இருக்குறதால கருப்பட்டியும் காய்ச்சுவாங்க. இப்போ இந்தத் தொழில்லாம் அழிஞ்சுபோச்சு. ஸ்கூல்ல படிக்கும்போது, பள்ளிக்கூடம் முடிஞ்சதும் பாட்டாவிளை வீதியில கபடி விளையாடப் போயிரு வேன். 19, 20 வயசு பெரிய பயலுங்க கபடி விளையாடு வாங்க. அப்போ நான் வாட்டசாட்டமா இருப்பேன். அதனால அவங்களுக்கு சப்ஸ்டியூட்டா இருப்பேன். பெரிய பயலுக நம்மளை மதிக்குறாங்களேனு கெத்தா திரிவேன்.

என் ஊர்!

அதே மாதிரி என் செட்டுப் பசங்களோட மணி நாடார் வீட்டு முன்னாடி கபடி விளையாடுவோம். விளையாட்டு இடைவேளையில மணி நாடார் வீட்டுல இருக்குற ரத்தினம் அக்காகிட்ட தண்ணி கேட்பேன். அவங்க தண்ணியோட காரச்சேவும் சேர்த்துத் தருவாங்க. அதுக்காகவே அடிக்கடி தண்ணி கேட்டுப் போவேன். எங்க வீட்டுல வளர்க்குற கோழி, வீட்டுல முட்டை விடாம, எங்கயாவது வைக்கப்படப்புல முட்டை விட்டுடும். நான் போய்த் தேடி எடுத்துட்டு வருவேன். எங்க ஊர்ல கருக் கல்ல 6 மணி ஆகிருச்சுன்னா, ஊர்ல எல்லார் வீட்டுப் பொம்பளைங்களும் 'பக்...பக்...பக்’னு சத்தம் போட்டுட்டு அடைய வராத கோழியைத் தேடுவாங்க. அந்த சத்தத்தை இப்போ கேட்க முடியலை.

லீவுல ஆர்.சி. சர்ச்சுல போய் சுத்தம் பண்ணுவேன். அங்க மெழுகுவத்தி உருகி கட்டியா இருக்கும். அதை கத்தியவெச்சு வழிச்சு எடுத்துட்டு வந்து காய்ச்சுவேன். பப்பாளி இலையைக் குழல் மாதிரி வெச்சு அதுல காய்ச்சின மெழுகை ஊத்தி, நூல் விட்டு புதுசா மெழுகுவத்தி ரெடி பண்ணுவேன். அதுல அப்படி ஒரு சந்தோஷம்!

எங்க ஊரு பக்கத்துல ஆலந்தலைனு கடற்கரைக் கிராமம் இருக்கு. அங்க மீன் அதிகமா கிடைக்கும். செலின் அக்கா வாளை, சாலை மீன் கொண்டுவந்து விப்பாங்க. டெய்லி மீன் சாப்பிடுவோம். அப்போ இட்லி, தோசைலாம் தீபாவளி, பொங்கலுக்குத்தான் சாப்பிடுவோம். சாதாரண நாள்ல யார் வீட்லயாவது இட்லி, தோசை போட்டாங்கன்னா, ஊரே ஆச்சர்யமா பாக்கும். எப்போ தீபாவளி வரும்கிறதைவிட, எப்போ இட்லி சாப்பிடலாம்னு பண்டிகைக்காகக் காத்திருப்போம்!

என் ஊர்!

எங்க ஊர்ல யார்கிட்டயும் சைக்கிள் கிடையாது அஞ்சு கி.மீ. தள்ளியிருக்கிற பரமன்குறிச்சிதான் எங்க ஊர் பக்கத்துல இருக்குற டவுன். அங்கேதான் வாடகை சைக்கிள் உண்டு. அங்க நானும் என் நண்பன் பால்சாமியும்  நடந்துபோய் வாடகைக்கு சைக்கிள் எடுப்போம். அதை எங்க ஊர்க்காரங்களுக்குக் காட்டணுமே? அதுக்காக அங்க இருந்து லொங்கு லொங்குனு மிதிச்சு ஊருக்கு வந்துட்டு, திரும்ப சைக்கிளை விடப் போவோம். சைக்கிளை விட்டதும் திரும்ப அங்க இருந்து நடந்தே வருவோம். ஒரு நாள் சைக்கிள்ல போக்ஸ் கம்பி உடைஞ்சிருச்சு. உடனே, ஒரு கயித்தை வெச்சுக் கட்டி, குளிக்குற சோப்பை வெச்சு ஒட்டிப்போட்டு கடைக்காரருக் குத் தெரியாம திரும்ப நிறுத்திட்டோம். அதுக்கு அப்புறம் அந்த கடைப் பக்கம் போறதே கிடையாது.

எங்க ஊர்ல சாதி, மதப் பிரச்னை கிடையாது. இந்து, கிறிஸ்துவ மக்கள் இருந்தாலும், பொண்ணு கொடுத்துப் பொண்ணு எடுப்பாங்க. தீண்டாமைக் கொடுமையும் கிடையாது. இப்பவும் அப்ப டியே சமத்துவமா இருக்கு. ஊரணிக் குப் பக்கத்துலதான் எங்க வயக்காடு உண்டு. ஊரணில பேய் இருக்குனு ஊரே பயப்படும். என் அண்ணன் போஸ் வயலுக்குப் போய்ட்டு சாயங்காலம் திரும்பி வர நடுங்குவான். அதனால நான் போய் அவனைக் கூட்டிட்டு வருவேன். சில சமயம் கூட்டிட்டு வரும்போதே, ஒளிஞ்சு ஊரணித் தண்ணியில கல்லைத் தூக்கிப் போட்டு எங்க அண்ணனைப் பயங்காட்டு வேன்.

என் ஊர்!

பேரவை வேலைகள் தொடர்பா எல்லா ஊருக்கும் போய் வந்தாலும், சொந்த ஊருக்குத் திரும்பும்போதுதான் நிம்மதியா இருக்கும். அதுதான் 'பிச்சிவிளை’ ஸ்பெஷல்!''  

- ஆ.கோமதிநாயகம், படங்கள்: ஏ.சிதம்பரம்