Published:Updated:

எத்தனை செல்ஃபி எடுத்தாலும் நமக்கு நல்ல புரொஃபைல் படம் கிடைக்காதாம்... ஏன்?

எத்தனை செல்ஃபி எடுத்தாலும் நமக்கு நல்ல புரொஃபைல் படம் கிடைக்காதாம்... ஏன்?
எத்தனை செல்ஃபி எடுத்தாலும் நமக்கு நல்ல புரொஃபைல் படம் கிடைக்காதாம்... ஏன்?

நாம் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து புளகாங்கிதம் அடைவதில் நீண்ட நேரத்தினை செலவழிக்கும் நாம், அவற்றிலிருந்து பலரும் விரும்பக்கூடிய ஒரு சிறந்த புகைப்படத்தினைத் தேர்வு செய்வதில் தோல்வி அடைவது எதனால்?

மெமரி கார்டு முழுக்க நம்முடைய செல்ஃபிக்கள்தான். இருந்தும் எதை புரொஃபைல் படமாக வைப்பது என்பதை நம்மால் முடிவு செய்யவே முடியாது. 

உதாரணமாக, இரண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவற்றில் முதலில் எடுத்த புகைப்படமே உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது, இரண்டாவது புகைப்படம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் உங்கள் நண்பர்கள் இருவரோ, இரண்டாவது புகைப்படத்தில் தான் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். இப்போது இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்பதில் உங்களுக்குக் குழப்பம் வருமில்லையா? இனிமேல் குழப்பமே வேண்டாம். உங்கள் நண்பர்கள் சொன்ன இரண்டாவது புகைப்படத்தையே தேர்வு செய்யச் சொல்கிறது சமீபத்திய உளவியல் ஆய்வு ஒன்று.  நம்முடைய சிறந்த புகைப்படத்தினைத் தேர்வு செய்வதில் நாம் பெரும்பாலும் சொதப்பவே செய்வோம் என்று கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

பிடிக்கும்...ஆனா பிடிக்காது:

சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (University of South Wales) வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (University of Western Australia) மற்றும் சிட்னி பல்கலைக்கழகம் (University of Sydney) ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் 102 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவரின் பேஸ்புக் அக்கௌன்ட்டிலிருந்தும் ஒரு டஜன் புகைப்படங்களைப் பெற்றனர். பின்பு அவற்றை, கவர்ச்சி (attractiveness), நம்பகத்தன்மை (trustworthiness), ஆளுமைத்திறன் போன்ற பல்வேறு வகைகளின் கீழ் அவர்களைக்கொண்டே,10க்கு மதிப்பெண்கள் தரச்சொல்லி கேட்டனர். அதைத்தொடர்ந்து, 160 அந்நியர்களைக் கொண்டு மேற்சொன்ன அதே மதிப்பீடுகளின் கீழ்  மதிப்பெண்கள் தரச்சொல்லி கேட்டனர். இறுதியில், பெறப்பட்ட அந்த இரண்டு முடிவுகளுமே ஒன்றுடன் ஒன்று பொருந்தாத வகையில் காணப்பட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், மாணவர்களைப் பொறுத்தவரையில் தங்களின் சிறந்த புகைப்படம் என்று கருதிய படங்களுக்கு, மற்றவர்களிடமிருந்து மிகக்குறைவான மதிப்பெண்களும், அவர்கள் பெரிதும் விரும்பாத புகைப்படங்களுக்கு அதிக மதிப்பெண்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இம்முடிவுகள் சுய விளக்கக் கோட்பாட்டிற்கு (Self-Presentation Theory) முரணாக இருப்பதைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர்.

இதுகுறித்த ஆராய்ச்சிகள் வெளிவருவதற்கு முன்பே வெளிநாடுகளைச் சேர்ந்த சில டேட்டிங் தளங்கள் (dating sites) இந்த உண்மையை அறிந்து வைத்திருந்தன. புகழ்பெற்ற இணையதளமான ‘ஓகே குபிட்’ (OKCupid), ‘எனது சிறந்த முகம்’ (My Best Face) என்ற ஆன்லைன் சேவையை வழங்கியது. அதில் யாரென்றே தெரியாத (anonymously) மற்றவர்கள் தருகின்ற மதிப்பெண்களைக் கொண்டு ஒருவரின் சிறந்த Profile Picture  தேர்வு செய்யப்பட்டது. அதேபோல, ‘டின்டர்’ (Tinder) என்ற டேட்டிங் ஆப், சில அல்காரிதம்களைப் பயன்படுத்தி பலரும் விரும்பக்கூடிய ஒருவரின் சிறந்த புகைப்படத்தினைத் தேர்வு செய்யும் வசதியினைக் கொண்டுவந்தது.

வெவ்வேறு கதைகள் சொல்லும் புகைப்படம்:

நாம் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து புளகாங்கிதம் அடைவதில் நீண்ட நேரத்தினை செலவழிக்கும் நாம், அவற்றிலிருந்து பலரும் விரும்பக்கூடிய ஒரு சிறந்த புகைப்படத்தினைத் தேர்வு செய்வதில் தோல்வி அடைவது எதனால்? இதற்கு ஆராய்ச்சியாளர்கள் கூறும் பதில் இதுதான்., “நம்மைப்பற்றி நாம் ஏற்கனவே கொண்டுள்ள அபிப்ராயத்தினை, நமது ஒவ்வொரு புகைப்படத்தின் முகபாவனையோடும்  நமது மனது ஒப்பிட்டுப் பார்க்கும்”. அதாவது,  உங்களை ஒரு நம்பத்தகுந்த மனிதர் (trustworthy person) என்று கருதுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த எண்ணத்தோடு உங்களின் புகைப்படத்தினை பார்ப்பீர்களேயானால் அது உங்களுக்கு ஒரு நம்பத்தகுந்த மனிதராகவே தெரியும்.

இதற்குக் காரணம், நாம் ஒவ்வொருவரும் நம்மை, ‘சராசரியினை விட உயர்ந்தவர்கள்’ (better-than-average effect)  என்று நினைப்பதன் விளைவாக இருக்கலாம் அல்லது பெரும்பாலும் நம்முடைய நேர்மறையான குணாதிசயங்களை வைத்தே நம்மை மதிப்பிடுவதன் விளைவாகவும் இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.  புகைப்படத்தினைப் பார்ப்பதற்கு முன்பாகவே நம்மைப் பற்றிய சில அபிப்ராயங்களை வகுத்துக்கொண்டு அந்தத் தரத்திலிருந்து நம்மை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு நம் மனம் விரும்பாததால், நாம் பார்க்கும் எல்லா புகைப்படங்களுமே, ‘பார்த்தாலே பச்ச முகம், பால் வடியும் முகமாகவே’ தோன்றுகிறது. ஆனால் மற்றவர்களுக்கு அப்படித் தோன்றுவதில்லை என்பதே நிதர்சனம்.

நம்மைப் பொறுத்தவரையில் மட்டும் தான், அது ஒரே நபரின் 12 வெவ்வேறு புகைப்படங்கள். ஆனால் பிறருக்கோ அந்த 12 புகைப்படங்களும் 12 வெவ்வேறு கதைகளைச் சொல்லும்.

அடுத்த கட்டுரைக்கு