கட்டுரைகள்
கவிதைகள்
Published:Updated:

" எங்கள் உரிமைகளுக்காக நாங்களேதான் பேச வேண்டுமா?” - சந்திப்பு: வெய்யில்,விஷ்ணுபுரம் சரவணன், பா.விஜயலட்சுமி

" எங்கள் உரிமைகளுக்காக நாங்களேதான் பேச வேண்டுமா?” - சந்திப்பு: வெய்யில்,விஷ்ணுபுரம் சரவணன், பா.விஜயலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
" எங்கள் உரிமைகளுக்காக நாங்களேதான் பேச வேண்டுமா?” - சந்திப்பு: வெய்யில்,விஷ்ணுபுரம் சரவணன், பா.விஜயலட்சுமி

படங்கள் :ஆ.முத்துக்குமார்

" எங்கள் உரிமைகளுக்காக நாங்களேதான் பேச வேண்டுமா?” - சந்திப்பு: வெய்யில்,விஷ்ணுபுரம் சரவணன், பா.விஜயலட்சுமி

மிழகத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகள் ஐந்து பேரை  இணைத்து, விகடன் தடம் இதழுக்காக ஒரு சிறிய சந்திப்பை ஏற்பாடு செய்தோம். அரசியல் செயல்களத்திலிருந்து ஓவியா, ஜோதிமணி, எழுத்தாளர்-திரைப்பட இயக்குநரான சந்திரா, ஊடகவியலாளர்களான ஜெயராணி, கவிதா முரளிதரன் ஆகியோர் வந்திருந்தனர். கன்னிமாரா நூலக வளாகத்தின் மரநிழலில் பறவைகளின் கீச்சிடலுக்கு நடுவே இயல்பாக அவர்கள் உரையாடியதிலிருந்து...

ஜோதிமணி: நான் அரசியலுக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்துவிட்டன. அப்போது, ஒரு பெண்ணாக அரசியலுக்கு வருவது சமூகத்திலும் குடும்பத்திலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. நான் அரசியலுக்குள் நுழைய முடிந்ததற்கு மிக முக்கியமான வாய்ப்பாக இருந்தது, பஞ்சாயத்து ராஜில் இருந்த இட ஒதுக்கீடு. இந்த அரசியல் உரிமை இல்லையென்றால் நானெல்லாம் அரசியலை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. அப்போதும்கூட தடைகளுக்கும் விமர்சனங்களுக்கும் குறைவில்லாமல்தான் இருந்தன. ஆனாலும் நான் என்னுடைய முடிவில் நிலையாக இருந்தேன். எனது அனுபவத்தில், மக்கள், வேட்பாளர்களை ஆண், பெண்  என்ற பாகுபாட்டோடு எல்லாம் பார்ப்பது இல்லை என்பதை அறிந்துகொண்டேன். ஆண்களைவிட, பெண்களைத்தான் அவர்கள் அதிகமாக நம்புகிறார்கள் என்பதுதான் கூடுதல் உண்மை.

ஆனாலும்கூட, இன்றும் அரசியல் என்பது ஆண்களுக்கான வெளியாகத்தான் இருந்துவருகிறது. ஆரம்பகட்டப் போராட்டங்களைத் தாண்டி  தொடர்ந்து உழைக்கும் பெண் தலைவர்களையோ, அரசியல்வாதிகளையோ சமூகம் ஏற்றுக் கொள்கிறது என்பதுதான் என்னுடைய அனுபவம்.
ஓவியா: என்னுடைய அனுபவம் இதில் வித்தியாசமானது; வேறுபட்டது. ‘பெண் அரசியலுக்கு வரலாமா?’ என்கிற கேள்விக்கு தலைகீழ் சூழ்நிலை என்னுடையது. ‘பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதே உன் கடமை’ என்று சொல்லிச் சொல்லியே வளர்த்த பெரியார் இயக்கக் கொள்கைகளால் ஆனது என்னுடைய குடும்பம். என்னுடைய வீட்டுச்சூழலின் விளைவாகவே நான் உருவானேன். சமூக யதார்த்தச் சூழல்கள், மதிப்பீடுகள், எனது அரசியல் நிலைப்பாடுகளைப் பாதித்தன. கொள்கைகளை நம்பிக்கைகளைப் பலவீனப்படுத்த முயன்றன. ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்பு, மனதின் பலம் கூடிவிடுகின்றது அல்லவா? நான் என்னுடைய வாழ்க்கையை சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். எனக்கும், எனது வாழ்க்கைத் துணைவருக்கும் பொதுவாழ்க்கையே பிரதானம் என்பதால், என்னுடைய குடும்ப அமைப்பு எனக்கும்  எனது செயல்பாடுகளுக்கும் ஆதரவாகத்தான் இருக்கிறது.

சந்திரா:
இன்று நான் அடைந்திருக்கும் இந்த இடம், எளிதாக எனக்குக் கிடைத்துவிடவில்லை. என்னுடைய குடும்பத்தில் 12-ம் வகுப்பு வரைதான் படிக்கவைக்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள். எனினும், நான் தொடர்ந்து படிப்பது  என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனாலும், குடும்பச் சூழலால் இளவயதிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டியதானது. அதற்குப் பிறகும் படித்தேன். படிப்பது, வேலைக்குச் செல்வது எனப் பல விஷயங்களில் என்னுடைய குடும்பத்தில் நான்தான் முதல் தலைமுறைப் பெண்.

பெண்கள் முன்னேறி எவ்வளவு பெரிய இடத்துக்கு வந்தாலும்கூட, குடும்பம் சார்ந்த அடிப்படைத் தளைகளிலிருந்து வெளியேறமுடியாத நிலைதான் யதார்த்தமாக இருக்கிறது. நான் இயக்குநராக இருந்தாலும்கூட, எனது தொழில் சார்ந்த பயணத்தைத் தாண்டி, என் மன ஓய்வுக்கான தனிமையான ஒரு பயணம் இன்றுவரை எனக்கு வாய்த்ததே இல்லை. வீட்டில் கோபித்துக்கொண்டு சென்றால் மட்டுமே அது பெண்ணுக்கு சாத்தியமாக இருக்கிறது. பெண்களுக்கான சுதந்திரவெளி என்பது முற்றிலும் சவாலாகத்தான் இருக்கிறது.

" எங்கள் உரிமைகளுக்காக நாங்களேதான் பேச வேண்டுமா?” - சந்திப்பு: வெய்யில்,விஷ்ணுபுரம் சரவணன், பா.விஜயலட்சுமி

ஜெயராணி: இந்தியாவில் குடும்ப அமைப்பில் என்னவெல்லாம் பிரச்னைகள், கட்டுப்பாடுகள், ஒடுக்குமுறைகளெல்லாம் உண்டோ, அத்தனையும் கொண்டிருந்த குடும்பப் பின்னணியிலிருந்துதான் நான் இன்றைக்கு இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். நம் சமூகத்தில் குடும்பம் என்கிற சிஸ்டம்தான் பெண்களுக்கான முதன்மையான பிரச்னையாக இருக்கிறது. கிட்டத்தட்ட நான் வீட்டை விட்டு ஓடிவந்து, போராடித்தான் இந்த இடத்தைப் பெற்றிருக்கிறேன்.

என் பணி சார்ந்து பல நள்ளிரவுகளில் தனியாகப் பேருந்துகளில் பயணித்திருக்கிறேன். ஆபத்தான இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், இதுவரை எனக்கு எந்த ஆபத்தும் அச்சுறுத்தலும் நேர்ந்தது இல்லை. என்னைப் பொறுத்தவரை, பெண்கள் அவர்களின் உடல்மொழி, பார்வை, குரல், மனதிடம் என தன்னை எப்படித் தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதில்தான் சமூகவெளியில் அவர்களுக்கான சுதந்திரமும் பாதுகாப்பும் அடங்கியுள்ளன.

மேலும், சமூகத்தில் அடித்தட்டில் இருக்கும் சாதியப் பிரச்னைகளையோ, வர்க்கப் பிரச்னைகளுக்கான தீர்வையோ கண்டுணராமல், பெண்களுக்கான முழுமையான சுதந்திரத்தைக் கொண்டுவர முடியாது என்பதே என்னுடைய இத்தனை ஆண்டு வாழ்க்கைப் பயணத்தில் உணர்ந்துகொண்ட உண்மை.

கவிதா முரளிதரன்:
மிகவும் சம்பிரதாயமான குடும்பப் பின்னணி என்னுடையது. படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆகவே படித்துமுடிப்பதற்கு முன்பாகவே ஒரு வேலை   தேடிக்கொண்டேன். கையிலிருந்த வேலை கொடுத்த தைரியம், வீட்டில் திருமணத்தைத் தள்ளிப்போட முடிந்தது. பிறகு போராடி காதல் திருமணமும் செய்துகொள்ள முடிந்தது.

நான் ஊடகத் துறைக்குள் வரும்போது தமிழில் பெரும்பாலும் பெண்கள் கிடையாது. அப்படி இருந்தாலும்கூட அவர்களுக்கு டெஸ்க் ஒர்க்-தான் தருவார்கள். ஒப்பீட்டளவில் ஆங்கில ஊடகங்களில் கொஞ்சம் சுதந்திரம் இருந்தது. எனது ஆங்கிலத் திறமை ஊடகத் துறையில் ஒரு முக்கியமான இடம் கிடைக்க உதவியது.  ஆனாலும் சக ஊழியர்கள் பெண்களைத் தவறாக சித்தரித்துப் பேசுவது, பெண்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை ஏதோ ஒரு சலுகையால் கிடைத்ததாக நினைத்து கொச்சைப்படுத்துவது எனப் பல பிரச்னைகள் உண்டு. அதற்காகவே, என்னுடைய குணத்தை நான் முரட்டுத்தனமாக மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. குரலை உயர்த்திப் பேசவேண்டியிருந்தது.

ஓவியா:
அரசியல் கட்சிகளில் பெண்களின் தலைமைத்துவத்தை அதிகரிக்காமல், ஊடகத் துறையில் பெண்களுக்கான தலைமை வாய்ப்புகளை அதிகரிக்க முடியாது என்று நான் கருதுகிறேன். இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை.

" எங்கள் உரிமைகளுக்காக நாங்களேதான் பேச வேண்டுமா?” - சந்திப்பு: வெய்யில்,விஷ்ணுபுரம் சரவணன், பா.விஜயலட்சுமி

ஜோதிமணி: உண்மைதான். ஆனால், துறைசார்ந்த எந்தவிதத் திறமையும் அறிவும் இல்லாமல்கூட ஆண்களால் அமைச்சராகிவிட முடியும். அதற்கு ஆண் என்கிற ஒரு தகுதி போதும். ஆனால், பெண்களுக்கு அது சாத்தியம் இல்லை. பெண் அமைச்சர்கள் என்றாலே சமூக நலத் துறை, மகளிர் மேம்பாடு போன்ற துறைகளைத்தான் கொடுப்பார்கள். பொதுத்துறைகளில் பதவிகள் தரப்படுவதில்லை.

ஓவியா:
கீழிருந்து மேல் வரை அனைத்துத் தளங்களிலும் பெண்களின் உண்மை நிலை குறித்த காத்திரமான புதிய உரையாடல்களைத் தொடங்க வேண்டும். எந்தெந்த வரலாற்றுப் பெண்கள் பற்றிய உரையாடலால் நாம் பலம் பெற முடியுமோ, அது குறித்த உரையாடலே நம்மிடம் இல்லை. கலை சார்ந்தும்கூட ஒன்றிரண்டு பேரைத்தான் நாம் குறிப்பிட்டுக் காட்ட முடிகின்றது.

சந்திரா:
கவிதை, கதைகளில் பெண்கள், குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துதான் வருகிறார்கள். ஆனால், அரசியல், சமூகம் போன்ற பொதுவெளிகள் குறித்து எழுத வேண்டும் எனும்போது பெண்கள் நிறைய பயணிக்க வேண்டும். சமூகம் சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள நிறைய வாசிக்க வேண்டும்; மனிதர்களைச் சந்திக்க  வேண்டும். ஆனால், குடும்பம் சார்ந்த கட்டுப்பாடுகள், வீட்டின் அடிப்படை பணிச்சுமைகள் பெண்களைக் களைப்படையச் செய்துவிடுகின்றன.

ஜெயராணி: ஆண்டாள் எழுதிய ‘திருப்பாவை’யேகூட கடவுள் மீதான காதல் என்பதால்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. பொதுவெளியில் பெண்களுக்கிருக்கும் அதே தடைகள்தான் அவர்களது படைப்புத்தளத்தையும் பாதிக்கின்றன.  அதையும் தாண்டி பல பெண்கள் நம்பிக்
கையோடு  எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

" எங்கள் உரிமைகளுக்காக நாங்களேதான் பேச வேண்டுமா?” - சந்திப்பு: வெய்யில்,விஷ்ணுபுரம் சரவணன், பா.விஜயலட்சுமி

சந்திரா: ஆண்கள், எழுத்தாளர், அரசியல்வாதி எனப் பொதுஅடையாளத்தில்தான் குறிப்பிடப்படுகிறார்கள். பெண்களை மட்டும் ஏன் பெண் எழுத்தாளர், பெண் கவிஞர் என்று அடையாளப்படுத்துகிறார்கள்? இங்கு நாம் வேண்டுவது சமத்துவம்தான். எழுத்து, கலை போன்ற தளங்களில் படைப்பாளிகளுக்கு முன்னே பாலியல்ரீதியான  ‘ஒட்டுகள்’ தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

கவிதா:
சந்திரா சொல்வதுபோல், பெண் படைப்புகளுக்கு கூடுதல் சலுகைகள் தரப்படுவதுபோலச் சித்தரிக்கிறார்கள். சில விஷயங்களைப் பெண்தான் வீரியமாக எழுத முடியும் என்பதை ஏனோ புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். சமீபத்தில்கூட தெலுங்கில் முத்துப்பழனி எழுதிய ‘ராதிகா சாந்தவனம்’ கவிதைகளில் காமம் அதிகமாக இருக்கிறது என்று தடைசெய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் கவனித்தோமென்றால் ஜெயராணி சொன்னதுபோல சமயம் சார்ந்த ஆதரவுதான் ஆண்டாளின் பாசுரங்களுக்கு  காப்பாகவும் அங்கீகாரமாகவும் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து
கொள்ளலாம்.

சந்திரா:
‘பெண் படைப்பாளி’ என்ற அடைமொழி குறித்த பயம், நான் எழுத ஆரம்பித்தபோது எனக்கு நிறையவே இருந்தது. என்னுடைய எழுத்துகளிலும் சரி, சினிமாவிலும் சரி பெண்ணுலகம் தாண்டி என்னைச் சுற்றியுள்ள சக மனிதர்களின் கதைகளையே எழுத, சினிமாவாக உருவாக்க ஆர்வப்படுகிறேன். ஆண்களோடு போட்டிபோட்டு ஜெயிக்கவே நான் விரும்புகிறேன். அதேசமயம் சினிமா மொழியில் பெண்கள் உலகைப் பற்றி பேசுவதில் ஏதோ ஒரு தடுமாற்றம் இருக்கின்றது. புரட்சி, அரசியல் சார்ந்த திரைப்படங்களில் ஏற்படுகின்ற  ‘ட்ரைனெஸ்’ (Dryness) பெண் சார்ந்த படைப்புகளிலும் நேர்ந்துவிடுகிறது.  

ஜெயராணி: பாலிவுட்டில் இயக்குநர் ஃபாராகான் பொதுவான கதைக் களங்களை எடுத்துக்கொண்டு பிரபலமான நடிகர்களை வைத்து இயக்குகிறாரே? தமிழ் சினிமா உலகிலும் விரைவில் இது நடக்கும் என்று நம்புவோம்.

 கவிதா: சமூகத்தளத்தில் போராடி முன்னுக்கு வரும் ஒரு பெண் அடையும் இடம்,  அடுத்து வரும் ஒரு புதிய பெண்ணுக்கு இயல்பாகக் கிடைத்துவிடுகிறதா என்றால் இல்லை. மீண்டும் அந்தப் பெண் முதலில் இருந்தே தொடங்கவேண்டியதாக இருக்கிறது. இந்தப் போரட்டத்தின் கண்ணி தொடர்வது இல்லை. எங்கோ அறுந்து விடுகிறது. இது சரிசெய்யப்பட வேண்டும். எல்லாப் போராட்டங்களும் தனி நபர் போராட்டமாகவே முடிந்துவிடுகின்றன.

ஓவியா:
அப்படி இல்லை. தனி மனிதர்கள் என்று யாருமே இல்லை. ஒரு பெண் போராடி வெளியே வருகிறாள் என்றால், அவர் அப்படி வருவதற்கான சமூகச் சூழலுக்காக எத்தனையோ பேர் உழைத்திருக்கிறார்கள், போராடியிருக்கிறார்கள். எதுவுமே தனி நபர் போராட்டமல்ல. 100 வருடங்களுக்கு முன்பிருந்த சமூகம் இப்போது இல்லை. பெண்கள் அதிகமாக கல்வி கற்றிருக்கின்றனர்; முன்னேற்றப் பாதைகளுக்குள் நுழைந்திருக்கின்றனர். எதிர்காலம் பெண்களுக்கு இன்னும் நம்பிக்கை தருவதாக இருக்கும்.

ஜோதிமணி:
குழந்தைகள், சிறுவர்களிடமிருந்தே இதற்கான உரையாடலைத் தொடங்க வேண்டும். பெண்கள் பற்றிய பிரச்னையைப் பெண்களிடமே பேசிக்கொண்டு இருப்பது தீர்வாகாது. நமது உரையாடலை ஆண்களின் திசை நோக்கி மடைமாற்றம் செய்ய வேண்டும்.

" எங்கள் உரிமைகளுக்காக நாங்களேதான் பேச வேண்டுமா?” - சந்திப்பு: வெய்யில்,விஷ்ணுபுரம் சரவணன், பா.விஜயலட்சுமி

கவிதா: பள்ளிகளில் பாலினச் சமத்துவம் சொல்லிக் கொடுக்கப்படுவது இல்லை. ஊடகத்துறைகளில்கூட புதிதாக வருகிற இளைஞர்களுக்கு கற்பழிப்பு என்கிற வார்த்தையை ஏன் பயன்படுத்தக் கூடாது என்று நாம் வகுப்பெடுக்க  வேண்டியிருக்கிறது.

ஜெயராணி:
முகத்தில் அடித்த மாதிரிதான் சிலரை கையாளவேண்டியிருக்கும். அப்படி நடந்துகொண்டால், ‘சிடுமூஞ்சி’ என்பார்கள். ஆண்களைப்போலவே உயர் பதவியில் இருக்கும் பெண்கள், சக ஊழியர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கினால் அதையும் தவறாகப் பேசுவார்கள்.

ஜோதிமணி: இங்கே எல்லாமே அப்படித்தான். மணிப்பூரில் இரோம் சர்மிளா தனது 16 வருடப் போராட்டத்தை முடித்துக் கொண்டிருப்பதையும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விருப்பங்களையும் விமர்சிக்கிறார்கள். அவரது புனித பிம்பம் உடைந்துவிட்டது என்பதாக நினைக்
கிறார்கள். ஓர் ஆண் போராளி, பல வருடப் போராட்டங்களுக்குப் பிறகு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்காக திருமண முடிவினை எடுக்கும்போது இந்தச் சமூகம் இயல்பாக ஏற்றுக்கொள்கிறது. ஆனால், ஒரு பெண்ணின் இயற்கைத் தேவை கொச்சைப் படுத்தப்படுகிறது.

சந்திரா: அவர் போராட்டத்தின் வடிவத்தைத்தான் மாற்றியிருக்கிறார் என்கிற விஷயத்தைப் பலரும் புரிந்து கொள்ளவில்லை.

ஜோதிமணி:
உண்மைதான். நம் எல்லோருக்கும் தெரிந்த போராளியான நெல்சன் மண்டேலா ஆயுதப் புரட்சியில் இருந்து அகிம்சை வழிக்கு தன்னுடைய போராட்டத்தின் வடிவத்தை மாற்றினார். ஆனால், அது கொண்டாடப்பட்டது. இரோம் சர்மிளா விஷயத்தில் அவர் பெண் என்பதாலேயே தவறாக அணுகப்படுகிறது.

கவிதா: இந்தப் போராட்டத்தில் பல்வேறு தியாகங்களைச் செய்திருக்கிறார் இரோம் சர்மிளா. பெண் என்பதாலேயே அவர் தனக்கான குடும்பம், காதல் என்று யோசிப்பதாக அவர் மீது காழ்ப்புஉணர்ச்சி கொண்டவர்கள், போராட்டத்தினைத் திசை திருப்ப முயற்சிக்கின்றார்கள்.

" எங்கள் உரிமைகளுக்காக நாங்களேதான் பேச வேண்டுமா?” - சந்திப்பு: வெய்யில்,விஷ்ணுபுரம் சரவணன், பா.விஜயலட்சுமி

ஜோதிமணி: இன்னொன்றையும் இங்கே பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது. ஆண்கள் அரசியலில் போராடும்போது, அவர்கள் சரியான காரணத்துக்காக மட்டும் போராடினால் போதும்; அது நியாயத்துக்கான போராட்டமாகிவிடுகிறது. ஆனால், பெண்களோ முதலில் அவர்களுடைய அங்கீகாரத்துக்காகப் போராடிவிட்டே, பிரச்னைக்கான போராட்டத்துக்குள் செல்ல வேண்டியிருக்கிறது.

ஓவியா:
ஜோதி சொல்வது மிகவும் சரி. இந்தச் சமூகம், உடனடியாக ஒரு பெண்ணை இயங்கவிடாமல் செய்வதற்கு முதலில் கையிலெடுப்பது அவளுடைய ஒழுக்கம் மீதான தாக்குதல்களைத்தான். அதன் மூலம் எந்தப் பெண்ணையும் ஒழித்துவிட முடியாது, பெண்ணை ஒழுக்கம் சார்ந்து குற்றம் சாட்டுபவர்கள் பரிதாபமாகத் தோற்றுப்போவார்கள் என்பது தெரிந்தும் இந்தச் சமூகம் அதைத் தொடர்ந்து செய்துவருகிறது. பெண்ணை ஒழுக்கத்தை வைத்து பொதுத்தளத்தில் இருந்து காலிசெய்துவிடலாம் என்று தவறாகக் கற்பனை செய்கிறது.

ஜோதிமணி: ஒழுக்கம் சார்ந்த பெண்களின்மீதான கட்டுப்பாடுகள் சகிக்க முடியாதவை.   ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படும்போதெல்லாம் அவளது உடையை வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்துகிறார்கள். ஐந்து வயது சிறுமி பாலியல் படுகொலை செய்யப்படுகிறாளே? அந்தக் குழந்தை உடை உடுத்தாமல் இருந்தது அதனால்தான் அப்படி நடந்தது என்று சொல்வார்களா? இப்படித்தான் ஒரு நாகரிக சமூகம் சிந்திக்கிறதா? இந்தக் கலந்துரையாடலுக்கு இன்னும் சரிபகுதி ஆண்களைக் கூப்பிட்டிருக்க வேண்டும். எங்களுடைய உரிமைகளுக்காக நாங்களேதான் பேசவும் போராடவும் வேண்டுமா?

ஜெயராணி:
ஆணும் பெண்ணும் ஒன்றாக இணைந்துதான்  சமூகத் தீர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டும். குறிப்பாக ஆண்களிடத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ வேண்டும்.  சமூக மாற்றத்துக்கான எந்தவொரு செயல்திட்டமும் அடிப்படையிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். அந்த வகையில் முதலில் நமது கல்விமுறையில் பெரிய மாற்றம் நிகழவேண்டும். இதைத்தான் நாங்கள் எல்லோருமே முதன்மையானதாக முன்மொழிகிறோம்.