Published:Updated:

நெல்லையில் பூவா... தலையா?

நெல்லையில் பூவா... தலையா?

நெல்லையில் பூவா... தலையா?

நெல்லையில் பூவா... தலையா?

Published:Updated:
##~##

பாளை மாற்றுத் திறனாளிகளுக்கான பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதர் பள்ளியில் கோலாகலமாக நடந்து முடிந்தது. 'டாஸ் 2011.’ நெல்லை மற்றும் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். கட்டுரை, பெயின்டிங், கலரிங், பாடல், நடனம், ரங்கோலி, ஃபேஷன் ஷோ என விதவிதமான போட்டிகளில் பங்குகொண்டு அசத்தினார்கள் சுட்டிகள். 13 போட்டி களில்  அதிகமான போட்டியில் வெற்றி வாகை சூடும்  பள்ளிக்கு சுழல் கோப்பை வழங்கப்படும் என்பதால் போட்டி கடுமையாக இருந்தது.

 நடனப் போட்டியில் சொல்லிவைத்த மாதிரி பலரும் கிராமிய நடனம் ஆடினார்கள். சாரினிகா டீம் தலையில் கரகத்தைவைத்து சுத்திச் சுத்தி ஆடியதில் பார்ப்பவர்களுக்கு 'சாமி’ வந்திருக்கும். அப்படி ஆடித் தீர்த்தார்கள். பனியனில் மாணவர்களும், கூரைச் சேலையில் மாணவிகளும் சேர்ந்து, 'தேரோடும் மதுரைல ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்’ என்று ஆடி, பார்ப்பவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினார்கள். சுதர்ஸினி டீம் சிலம்பம், கரகம், தீச்சட்டி என்று மினி தசராவையே  கொண்டுவந்துவிட்டார்கள்.  ஜெஸ்மா டீம் சாமி கும்பிட்டுவிட்டு, கரகத்தை ஏணி மேல் நின்று ஆடி மிரள வைத்தார்கள். அடுத்து வந்தவர்கள், 'மதுரை குலுங்க’ பாட்டுக்கு ஆடி நெல்லையை கலங்க வைத்தார்கள்.

நெல்லையில் பூவா... தலையா?

அடுத்த போட்டி ரொம்பவே வித்தியாசமானது. டான்ஸர் மேடையில் ஏறி நிற்க வேண்டும். திடீரென ஒலிக்கும் பாடலுக்கு ஆட வேண்டும். மேடையேறிய சதிஸுக்கு 'ஓம் நமச்சிவாய’ என்று ஆன்மிகப் பாடல் ஒன்று ஒலிக்க, திருதிருவென விழித்தபடியே நின்றுவிட்டான். அடுத்து வந்த வினித்துக்கு குத்துப்பாட்டு ஒலித்தது. முகம் முழுக்க சந்தோஷத்தோடு  ஆடி முடித்தான் அவன். நிவேதா வினித்துக்கு கொஞ்சமும் சளைக்காமல், 'நான் நடந்தா அதிரடி’ என்று சரவெடி வெடித்துவிட்டார். அடுத்தது குரூப் டான்ஸ் போட்டி. மனிஜா டீமைச் சேர்ந்த ஆறு பேரும் கையில் ஹெல்மெட்டோடு வந்தார்கள். டான்ஸ் ஆடி முடித்து, ''நாங்க டான்ஸ் ஆடுறதுக்கே பாதுக்காப்புக்கு ஹெல்மெட் போடுறோம். அதே மாதிரி நீங்க வண்டி ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் போடுங்க!'' என்று வேண்டுகோள் வைத்தார்கள்.

கடைசியாக எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த ஆடை அலங்கார அணிவகுப்பு. ரகுநந்தன் நடையிலும், சந்தியா உடையிலும் கலக்கி எடுத்தார்கள். ஆயிஷா தகத்தக தங்க டிரெஸ்ஸில் ஜொலித்தார்.  இறுதியாக வடக்கன்குளத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் எக்கச்சக்க பரிசுகள் வென்று சுழற்கோப்பையை தட்டிச்சென்றார்கள்.

இந்த டாஸ் நிகழ்ச்சி பற்றி அதன் பொறுப்பாளர் ஆனியிடம் பேசினோம். '' இன்னைக்கு டி.வி, சினிமா, கம்ப்யூட்டரே கதின்னு மாணவர்கள் இருக்காங்க. அவங்களுக்கு கலைகள் மேல ஆர்வம் கொண்டுவரத்தான் இந்த நிகழ்ச்சியை உருவாக்குனோம். மாநில அளவில், தேசிய அளவிலான போட்டிகளில் நம்ம மாணவர்கள் பங்கு பெறவும் ஊக்குவிக்குறோம்!'' என்றவரிடம், ''டாஸ்ன்னா என்ன?'' என்று கேட்டபோது இப்படி பதில் சொன்னார். ''ஒரு நாணயத்தை சுண்டிவிட்டா பூ, தலை மாறி மாறி வர்ற மாதிரி வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரும். ரெண்டையும் சமமா பாவிக்கணும். இதை சிம்பாலிக்கா சொல்றதுதான் 'டாஸ்’!''

-ஆ.கோமதிநாயகம், பி.எஸ்.முத்து, படங்கள்: எல்.ராஜேந்திரன்