Published:Updated:

வாழ்க்கையில் சில நேரங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டும்... ஏன்? உண்மைக்கதை #MotivationStory

பாலு சத்யா
வாழ்க்கையில் சில நேரங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டும்... ஏன்? உண்மைக்கதை #MotivationStory
வாழ்க்கையில் சில நேரங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டும்... ஏன்? உண்மைக்கதை #MotivationStory

`ந்த மனிதனுக்கு ரிஸ்க் எடுக்க தைரியமில்லையோ, அவனால் வாழ்க்கையில் எந்தச் சாதனையையும் செய்ய முடியாது’ - பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலி தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்து சொல்லியிருக்கும் பொன்மொழி இது. ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் இருந்ததால்தான் மறக்க முடியாத ஆளுமையாக பல லட்சம் பேர் மனதில் இன்றுவரை நிலைத்து நிற்கிறார் முகமது அலி. மன தைரியம் சாதனைகளை நிகழ்த்த உதவும் என்பது ஒருபுறமிருக்கட்டும். இன்றையச் சூழலில் அது இருந்தால்தான் பிரச்னைகளை எதிர்கொண்டு வாழவே முடியும். சில நேரங்களில் தைரியத்தோடு நாமெடுக்கும் ஒரு ரிஸ்க் நமக்கு மட்டுமல்லாமல், பிறருக்கும் உதவக்கூடும்; இன்னோர் உயிரையே காப்பாற்றக்கூட உதவலாம். இதை எடுத்துக்காட்டும் உண்மைக் கதை இது! 

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்திலிருக்கும் அண்டோவர் (Andover) என்ற சின்னஞ்சிறு ஊர் அது. காலைப் பொழுது. டாம் (Tom O'Connell) அப்போதுதான் தன் காலைச் சிற்றுண்டியை முடித்திருந்தார். அவருக்கு வேலைக்குச் செல்லும் அவசரம். மனைவி மெலிண்டாவின் நெற்றியில் முத்தமிட்டு விடைபெற்றார். அவருடைய மகள்கள் ஜெஸ்ஸிகாவும் சமந்தாவும் கோபத்தோடு பார்த்துக்கொண்டிருக்க, சிரித்தபடி அவர்களையும் தூக்கிக் கொஞ்சினார். கிளம்பினார். குட்டிப் பெண்கள் இருவரும் வாசல்வரை அப்பாவை வழியனுப்பப் போனார்கள். 

அந்தப் பகுதியில் கடந்த பத்து நாள்களாக மழை விளாசித் தீர்த்திருந்தது. அன்றைக்கு சூரியன் வானில் கிளம்பி வந்திருந்தாலும், அண்ட்ஓவர் மட்டும் ஈரம் உலராமல் இருந்தது. தெருக்களில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் இருந்த தெருவையும் மழை வெள்ளம் விட்டுவைக்கவில்லை. ஒரு குட்டி ஆறுபோல மழை நீர் பெருக்கெடுத்துப் பாய்ந்தோடிக்கொண்டிருந்தது. அதோடு அந்தத் தெருவில், ஒரு பாதாளச் சாக்கடைக் குழி ஒன்று திறந்திருந்தது; அது வெளியே தெரியாதபடிக்கு மழை நீர் அதன் மேல் ஓடிக்கொண்டிருந்தது. இதெல்லாம் தெரிந்திருந்தும், சொல்லச் சொல்லக் கேட்காமல் முக்கிய வேலை என்று அலுவலகத்துக்குக் கிளம்பிப் போயிருந்தார் டாம்.

மெலிண்டா சமையற்கட்டில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார். அவருடைய கணவர் கிளம்பிப் போனதும் மகள்கள் ரப்பர் பந்து ஒன்றைவைத்து விளையாடிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காக சமையற்கட்டிலிருந்து வெளியே வந்தார். மூத்தவள் சமந்தா மட்டும் வாசலையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். ஜெஸ்ஸிகாவைக் காணவில்லை. 

அதே நேரத்தில், இரண்டு வீடுகள் தள்ளியிருந்த வீட்டு ஜன்னலிலிருந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தார் ரே பிளான்கன்ஷிப் (Ray Blankenship) என்ற மனிதர். அவர் கையில் ஜூஸ் நிரம்பிய ஒரு கோப்பை இருந்தது. பத்து நாள் மழை ஊரை என்ன பாடுபடுத்தியிருக்கிறது என்பதே அவருக்கு யோசனையாக இருந்தது. அப்போதுதான் அதைக் கவனித்தார். `அட... அது யார்? யாரோ குழந்தை மாதிரி இருக்கிறதே... அது அந்தக் குட்டிப் பெண் ஜெஸ்ஸிகாதானே..!’ ஜெஸ்ஸிகாவை மழை நீர் அடித்துக்கொண்டு போவதை அவர் பார்த்துவிட்டார். 

அப்போதுதான் ரே பிளான்கன்ஷிப்புக்கு இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு பாதாளச் சாக்கடைக்குழி இருப்பதும், அது திறந்திருப்பதும் நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 30 அடி ஆழம்கொண்ட குழி. `அந்தக் குழிக்குள் இந்தக் குழந்தை விழுந்துவிட்டால்..! கடவுளே!’ ரே அடுத்து ஒரு கணம்கூட தாமதிக்கவில்லை. கையிலிருந்த ஜூஸ் டம்ளரைக் கீழே போட்டார். வெளியே பாய்ந்து ஓடினார். மழை வெள்ளம் அவரையே இழுத்துக்கொண்டு போய்விடும்போல இருந்தது. அவர் அந்தக் குழந்தையை நோக்கி மார்பளவு நீரில் வேக வேகமாக நடந்து போனார். எதையோ பிடித்துக்கொண்டு பேச்சு மூச்சில்லாமல் மிதந்துவந்த ஜெஸ்ஸிகாவை நெருங்கிவிட்டார். அதற்குள் மழை நீர் அவர் கழுத்தளவுக்கு வந்துவிட்டது. ரே பிளான்கன்ஷிப் ஜெஸ்ஸிகாவைத் தூக்கி தோளுக்கு மேல் வைத்துக்கொண்டார். தண்ணீர் தன்னை அடித்துக்கொண்டு போகாமலிருக்க ஏதாவது பிடி கிடைக்காதா என்று தேடினார். 

ரே பிளான்கன்ஷிப்பின் மனைவி, தன் கணவர் மழை வெள்ளத்தில் தத்தளிப்பதையும், ஒரு குழந்தையைக் கையில் பிடித்திருப்பதையும் பார்த்துவிட்டார். உடனே தொலைபேசிக்கருகே ஓடினார். போலீஸுக்கும் ஃபயர் சர்வீஸுக்கும் போன் செய்தார். 

ரே பிளான்கன்ஷிப்பும் குழந்தையும் மாட்டிக்கொண்ட இடத்திலிருந்து 20 அடி தூரத்தில் அந்தக் குழி இருந்தது. அவர் தன் கைக்குக் கிடைத்த தடுப்புச் சுவர் ஓரமாக இருந்த ஒரு கல்லைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் குழந்தையையும் தாங்கிக்கொண்டிருந்தார். எங்கே நழுவி குழிக்குள் விழுந்துவிடுமோ என்கிற பயம் அவருக்கு வந்தது. `இன்னும் கொஞ்ச நேரம்... கொஞ்ச நேரம்தான். யாராவது உதவிக்கு வந்துவிடுவார்கள்’ என்று குழந்தை ஜெஸ்ஸிகாவுக்குச் சொல்வதுபோல தனக்குத் தானே சொல்லிக்கொண்டார். பாய்ந்து வந்த வெள்ளம், ஜெஸ்ஸிகாவை அவரிடமிருந்து பிரித்துக்கொண்டு போய்விடுமோ என்கிற பயமும் அவருக்கு வந்தது. அவருக்கு மயக்கம் வரும்போல இருந்தது. அன்றைக்கு அவருக்கு நல்ல நேரம். விரைவிலேயே உதவிக்கு போலீஸும் ஃபயர் சர்வீஸும் வந்துவிட்டன. 

வெள்ளத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த ஜெஸ்ஸிகாவும் ரே பிளான்கன்ஷிப்பும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இருவரும் மீண்டெழுந்தார்கள். 

அது, 1989, ஏப்ரல் மாதம் 12-ம் தேதி. ஓஹியோவின் கடலோரக் காவல்படை கமாண்டர், ரே பிளான்கன்ஷிப்புக்கு ஓர் உயிரைக் காப்பாற்றியதற்காக விருது கொடுத்து கௌரவித்தார். அது, Coast Guard’s Silver Lifesaving Medal. ரே பிளான்கன்ஷிப் ஜெஸ்ஸிகாவை மட்டும் காப்பாற்றவில்லை; தன் உயிரையே பணயம் வைத்திருந்தார் என்பது பலருக்குத் தெரியாது. விஷயம் இதுதான்... அவருக்கு நீச்சல் தெரியாது!