Published:Updated:

கடவுளாக இருந்த மனநல மருத்துவரைச் சைத்தானாக முன்னிறுத்திய மாத்திரை... ஒரு நிஜ திகில் கதை!

ர.சீனிவாசன்

வால்டர் புகழின் உச்சியிலேயே இருந்தார். தன்னைக் கடவுளாக உணர்ந்தார். ஆனால், அந்த ஒற்றை மாத்திரைதான் அவர் வாழ்வையே புரட்டிப் போட்டது. அவரையும் கொன்றது.

கடவுளாக இருந்த மனநல மருத்துவரைச் சைத்தானாக முன்னிறுத்திய மாத்திரை... ஒரு நிஜ திகில் கதை!
கடவுளாக இருந்த மனநல மருத்துவரைச் சைத்தானாக முன்னிறுத்திய மாத்திரை... ஒரு நிஜ திகில் கதை!

திகில் படங்களில், கதைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அதே அளவு அது நடக்கும் இடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காட்டில் மாட்டிக்கொண்ட நண்பர்கள் கூட்டம், வீட்டின் நிலவறையில் ஒளிந்திருக்கும் மர்மம் என ஒரு சில கதைகளை அது நடக்கும் இடத்தைக் குறிப்பிடாமல் வெளியே சொல்லவே முடியாது. தமிழில் சந்திரமுகி பங்களா, பீட்சா பேய் வீடு தொடங்கி பல படங்களை இந்த வரிசையில் இணைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் பழைய மனநல காப்பகங்களைச் சுற்றி நடக்கும் கதைகள் மிகவும் திகிலானவை. அப்படியொரு கதைதான் இதுவும். என்ன ஒரு வித்தியாசம், இது நிஜத்தில் நடந்த கதை!

1936-ம் ஆண்டு நம் கதையின் நாயகன் டாக்டர். வால்டர் ஃப்ரீமேன் அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவமனையில் மனநல மருத்துவராக வேலை பார்க்கிறார். அவருக்கு ஒரு மிகப்பெரிய லட்சியம் உண்டு. இந்த உலகில் மனநல காப்பகங்களே இருக்கக் கூடாது என்பது அவரது எண்ணம். மனநலமின்றி தவிப்பவர்களை சிகிச்சை என்ற பெயரில் வதைத்து, அவர்களைப் பார்த்துக்கொள்ள நிறைய பணியாளர்கள், இதெல்லாம் எதற்கு? மனநலம் இல்லாதவர்களை குணப்படுத்திவிட்டால் இதற்கான தேவைகளே இருக்காதே! அதற்காக அவர் ஒரு வழிமுறையையும் கண்டறிந்தார். அது மிகவும் சுலபமான வழிமுறைதான், ஆனால், கொடூரமானது. 

நோயாளி ஸ்ட்ரெட்சரில் படுத்திருப்பார். வாயில் கார்டு (Guard) ஒன்று மாட்டியிருப்பார்கள். நெற்றியில் ஜெல்லி போன்ற ஒரு பொருள் இருக்கும். திடீரென எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்படும். நோயாளி உடனே அரை மயக்க நிலைக்குச் சென்று விடுவார். பின்னர், அவர் இடது கண்ணுக்கு மேலே, புருவமும், மூக்கின் முடிவும் சந்திக்கும் இடத்தில் ஒரு தடிமனான ஊசி (Icepick) உள்ளே செலுத்தப்படும். அது நேரே, நெற்றிக்கதுப்பின் வழியே உள்ளே சென்று மூளையின் மடல்களைத் தொடும். அங்கே மூளையின் நரம்புகளைப் பிரித்து எடுப்பதுபோல ஒரு சில இடங்களில் இவர் நோண்டுவார். அவ்வளவுதான், சிகிச்சை முடிந்தது. மயக்க மருந்து, மருத்துவமனையில் தங்க வேண்டும் என்று எந்தத் தேவையும் கிடையாது. வீட்டுக்குச் சென்று விடலாம். இதிலேயே நோயாளிகள் குணமாகி விடுவார்கள். அல்லது அவ்வாறு டாக்டர். வால்டர் நினைத்துக்கொண்டார். இதற்கு அவர் Prefrontal Lobotomy என்று பெயர் வைத்தார். தற்போது இது transorbital leucotomy என்று அறியப்படுகிறது. இது நோயாளிகளின் பிரமைகளை அழிக்கிறது என்று அவர் உறுதியாக நம்பினார். ஆனால், இது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்று அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அவரிடம் இந்தச் சிகிச்சை பெற்ற அனைத்து நோயாளிகளும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். டாக்டர். வால்டர் மற்றும் அவரது உதவியாளர் டாக்டர். ஜேம்ஸ் வாட்ஸ் இருவரும் தொடர்ந்து பலருக்கு இதே சிகிச்சையை அளித்தனர். பத்திரிகைகள் இவர்கள் நிகழ்த்தும் இந்தச் சிகிச்சை குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தன. ஆனால், நோயாளிகள் குணமாகிறார்கள் எனும்போது பெரிய பிரச்னைகள் எதுவும் வரவில்லை. கடினமான ஒன்றாக இருந்தாலும், மக்கள் இந்தச் சிகிச்சையை வரவேற்கத் தொடங்கினார்கள் என்பதுதான் உண்மை. காலம் முழுவதும் நம் அன்புக்குரியவர்கள் மனநலமில்லாதவர்களாக இருக்க வேண்டியதில்லை. இந்தச் சிகிச்சைக்கு மயக்க மருந்து தேவையில்லை. அறுவைசிகிச்சை தேவையில்லை. ஏதோ ஓர் அறையும், இருபது நிமிடங்களுமே போதுமானது. யார்தான் பின்னர் இதை வரவேற்க மாட்டார்கள்?

டாக்டர் வால்டர் பின்னர் இதை வேறு சில டாக்டர்களுக்கும் செய்து காட்ட, ஒரு சிலர் வாந்தி எடுத்து ஓடினர். இருந்தும் 400 நோயாளிகளுக்கு இந்தச் சிகிச்சையை வால்டர் அளித்தார். ஒரு சிலர் இறந்து போயினர். இருந்தும் அந்தச் சதவிகிதம் மிகவும் குறைவுதான் என்பதால், வால்டர் புகழின் உச்சியிலேயே இருந்தார். தன்னைக் கடவுளாக உணர்ந்தார். எலெக்ட்ரிக் ஷாக் வைத்த பிறகு, அரை மயக்க நிலைக்குப் போகாமல் இருந்தாலும், இவர் சிகிச்சை அளிப்பதை நிறுத்தவில்லை. இந்த முறை, இவரின் கொடூர எண்ணத்தைப் பார்த்து உதவியாளர் ஜேம்ஸ் அவர்களே அரண்டுதான் போனார். ஆனால், மக்கள் வால்டரை முழுமையாக நம்பினர். மனநல பிரச்னைகளில் இருந்து விடிவு காலம் வந்துவிட்டதாகவே அவர்கள் கருதினர்.

Photo Courtesy: Harris A Ewing

டாக்டர் வால்டர் அவர்களின் இந்தச் சிகிச்சையைப் பெற்றவர்களில் ஒன்றிரண்டு பிரபலங்களும் அடக்கம். அப்போதைய புகழ்பெற்ற நடிகர், ஆஸ்கர் விருது வென்ற வார்னர் பாக்ஸ்டர் அவர்களும் மனச்சோர்வு அடைந்து பின்னர், வால்டர் அவர்களிடம் இந்தச் சிகிச்சையை பெற்றுக்கொண்டார். புகழ்பெற்ற அமெரிக்க தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதியான ஜோசப் கென்னடி சீனியர் அவர்களின் மூத்த மகள் ரோஸ்மேரி கென்னடிக்கு சிறுவயதில் இருந்தே மனநல பிரச்னை. அவருக்கு 23 வயதானபோது, டாக்டர் வால்டரைப் பற்றி அறிந்துகொள்ள, ரோஸ்மேரிக்கும் இதே சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர் வேறு யாருமல்ல, புகழ்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜான் F. கென்னடி அவர்களின் சகோதரி.

Photo Courtesy: Hulton-Deutsch Collection/CORBIS

அதே நேரத்தில் மனநல மருத்துவ அறிவியல் தன் அடுத்த கட்டத்துக்குச் செல்லத் தயாரானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மனநல துறையில் அதுவரை முக்கிய இடத்தில் பயணித்த வால்டருக்கு அந்த அடுத்தகட்டத்தில் இடம் கிடைக்கவில்லை. சந்தையில் தொராஸின் (Thorazine) என்று ஒரு மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாத்திரை மனநல நோயாளிகளைக் கட்டுக்குள் வைத்துக் குணப்படுத்துவதாக பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வர, மக்களும் பிற மனநல மருத்துவர்களும் இப்போது அதன்பின் சென்றனர். ஏற்கெனவே வால்டரின் கொடூர சிகிச்சை முறைக்கு அவர் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனிடையே ஒரு விபத்தில் அவர் மகனைப் பறிகொடுக்க, குடும்பத்தில் இருந்த நிம்மதியும் வால்டரை விட்டுப் பறிபோனது. அவரின் உதவியாளர் வாட்ஸ், இந்தக் கொடூர சிகிச்சை முறையை நிறுத்துமாறு வால்டருக்கு அறிவுரை வழங்க, அதை ஏனோ வால்டரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதுவரை கடவுளாக எல்லோராலும் பார்க்கப்பட்ட வால்டர், ஒரு சைத்தானாக முன்னிறுத்தப்பட்டார். அவரும் அப்படியே நினைத்துக்கொண்டார்.

அதன் பிறகுதான் வால்டருக்குப் பல உண்மைகள் புரிய ஆரம்பித்தன. மனநலம் பாதித்தவர்களுக்கு தான் அளித்த சிகிச்சை அவர்களைப் பூரண குணமடைய செய்ததா என்ற கேள்வி அவருக்குள் சிம்மாசனம் இட்டு அமர்ந்தது. 1960-ம் ஆண்டில் ஒரு நெடும் பயணம் மேற்கொண்டார். அவர் சிகிச்சை அளித்த நோயாளிகள், சுயநினைவுடன் இருந்தாலும், கிட்டத்தட்ட ஒரு நடைப்பிணம் போலவே இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்துகொண்டார். அதாவது, முன்னர் மனநலம் இன்றி தவித்தபோது அவர்களைப் பேணிப் பாதுகாக்க ஒருவர் தேவையாக இருந்தது. இப்போது அந்தத் தேவை இருக்கவில்லை, ஆனால், அவர்கள் இயல்பாகவும் இருக்கவில்லை. தங்கள் வேலையை தாங்களே செய்துகொண்டாலும், சுயமாகச் சிந்திக்க முடியாமல், சரியாகப் பேச முடியாமல்... மிகவும் கொடுரமான ஒரு தண்டனையை அவர்கள் அனுபவித்து வருவதைக் கண்டு வால்டர் மிகவும் வருந்தினார். வால்டர் அளித்த சிகிச்சைக்குப் பிறகு, சிறிது காலம் நலமாக இருந்தவர்கள், பின்னர் இப்படி ஆகிப்போயினர். இதில் ரோஸ்மேரி கென்னடியும் அடக்கம். இறக்கும் வரை, அவரும் ஒரு நடைப்பிணமாகவே வாழ்ந்தார்.

மிகப்பெரிய அற்புதத்தை நிகழ்த்தியதாக ஒரு காலத்தில் புகழப்பட்ட வால்டர் 1972-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். அவர் கல்லறையில் அவர் கொண்டுவந்த சிகிச்சை முறையின் நினைவாக ஒரு பெரிய துளையிடப்பட்டது. சைக்கோசர்ஜரியில் (Psychosurgery) ஒரு பெரும் மைல்கல்லாகக் கருதப்பட்ட வால்டரின் சிகிச்சை முறை 1950-களிலேயே வீழ்ச்சியைக் காணத் துவங்கி, பின்னர் ஒருநாள் அழிந்தே போனது. பல நாடுகள் அதற்குத் தடையும் விதித்தன. வால்டர் நினைத்ததுபோலவே, மனநல மருத்துவமனையில் நோயாளிகள் குறைந்தனர். ஆனால், அதை அவரின் சிகிச்சை முறை செய்யவில்லை. தொராஸின் (Thorazine) என்ற அந்த ஒற்றை மாத்திரை செய்தது. சொல்லப்போனால், அந்த ஒற்றை மாத்திரைதான் அவர் வாழ்வையே புரட்டிப் போட்டது. அவரையும் கொன்றது.