Published:Updated:

வெளிநாடு புகழும் வில்லியனூர் முனுசாமி!

வெளிநாடு புகழும் வில்லியனூர் முனுசாமி!

வெளிநாடு புகழும் வில்லியனூர் முனுசாமி!

வெளிநாடு புகழும் வில்லியனூர் முனுசாமி!

Published:Updated:
##~##

முனுசாமியை வில்லியனூர் விலாசம் என்று சொல்லலாம். சுடுமண் சிற்பங்கள் செய்வதன் மூலமே உலகம் சுற்றி வந்த தமிழன் இவர். மத்திய அரசின் ஐந்து விருதுகளைப் பெற்றுள்ள முனுசாமி, தனக்கு அடுத்த தலைமுறைக்கும் கலையைக் கடத்துவதை நோக்கமாகக்கொண்டு இருக்கிறார்.

 ''எனக்கு வில்லியனூர்தான் எல்லாமே. பரம்பரை பரம்பரையா களிமண் சிற்பங்கள் செய்துவர்றோம். பொம்மைகள் செய்வதில் நாங்கள் பன்னிரண்டாவது தலைமுறை. அப்பா கிருஷ்ண பக்தர். அவர் அதிகம் செய்தது கிருஷ்ணர் சிலைகளாகத்தான் இருக்கும்.

அப்பாவுக்கு என்னை நல்லாப் படிக்கவைக்கணும்னு ஆசை. ஆனால், எனக்குப் படிப்பு சுத்தமா ஏறலை. அப்புறம் என்ன, பரம்பரைத் தொழிலில் இறங்கியாச்சு. ஏழு வயசில் இருந்து அப்பாவோட நெளிவு சுழிவு நுட்பங்களைக் கவனிச்சுட்டு வர்றேன். அதே மாதிரி யான பாரம்பரிய வடிவத்தில் இப்பவும் சிலைகள் செய்தால் போதாதுனு புதிய புதிய டிசைன்களில் பொம்மைகள் செய்ய ஆரம்பிச்சேன்.

வெளிநாடு புகழும் வில்லியனூர் முனுசாமி!

என் சிற்பங்கள் பாண்டிச்சேரியில் பலராலும் கவனிக்கப்பட... பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த டெரகோட்டா சிற்பக் கலைகள்பற்றி கத்துத்தரச் சொல்லி அழைப்புகள் வந்தன. இதுவரை 10 ஆயிரம் பேர் வரைக்கும் பயிற்சி கொடுத்திருப்பேன். என்கிட்ட தொழில் கத்துக்கிட்டவங்க இன்னைக்கு என்னைவிட நல்ல நிலைமையில இருக்காங்க. அவங்களைப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்பவே சந்தோஷம். களிமண் சிற்பம், சுடுமண் சிற்பம், க்ளே மோல்டிங்னு எல்லாமே செய்யறோம். அதைக் கற்றும் தருவோம்.

உலக நாடுகளான ஆஸ்திரேலியா, ருமேனியா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கனடா, வியட்நாம், ஜெர்மனினு பல நாடுகளுக்குச் சென்று இந்த சிற்பங்களைக் கண்காட்சிகளில் வெச்சிருக்கேன். மத்திய அரசின் விருதுகள் தவிர யுனெஸ்கோ அமைப்பின் சீல் ஆஃப் எக்சலென்ஸி, மாஸ்டர் ஆஃப் இந்தியன் கிராஃப்ட்ஸ் என்ற விருதுகளும் வாங்கியிருக்கேன். வெளிநாடுகளில் இந்தியக் கலைகளின் மீதும் பாரம்பரியத்தின் மீதும் ஏகப்பட்ட மரியாதை உண்டு.

வெளிநாடு புகழும் வில்லியனூர் முனுசாமி!

ஒருமுறை ஆஸ்திரேலியா போனபோது அங்கே இருந்த குழந்தைகளுக்கு விநாயகர் சிலைகள் செய்துகொடுத்தேன். பொம்மைகள் வாங்க ஒரு கூட்டமே சேர... கண்காட்சிக்காக கைவசம் வெச்சிருந்த எல்லா களிமண்ணும் தீர்ந்துடுச்சு. அப்போ அங்கே இருந்த ஆஸ்தி ரேலியாக்காரர் புதுசா களிமண்ணை வரவெச்சுக் கொடுத்தார். இது மாதிரியான பல மதிப்பு வாய்ந்த உதவிகள் வெளிநாடுகளில் கிடைக்கும். நான் எந்த வெளிநாடு போனாலும்  வேட்டி, சட்டைதான் கட்டுவேன். எப்போ எந்தப் பாராட்டு கிடைச்சாலும் வில்லியனூரைத் தான் மனசுல நினைச்சுக்குவேன். சுடுமண் சிற்பம் செய்றப்போ எவ்வளவு புகை வந்தாலும் இந்த வில்லியனூர் மக்கள் ஒரு வார்த்தை முகம் சுளித்தது இல்லை.

வெளிநாடு புகழும் வில்லியனூர் முனுசாமி!

30 நொடிகளில் என்னால் விநாயகர் சிலை செய்ய முடியும். நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகளைக் குறைந்த நேரத்தில் செய்து கின்னஸில் இடம் பெறலாம்னு ஒரு ஆசை இருக்கு. முன்னே ஒரு முறை அப்படியான முயற்சியில் இருந்தபோதுதான் சுனாமி வந்தது. நான் செய்துவைத்திருந்த விநாயகர் சிலைகளை விற்று, அதன் மூலமா வந்த 23,000 ரூபாயைப் புதுச்சேரி அரசாங்கத்திடம் கொடுத்தேன். எதிர்காலத்துல இந்த சுடுமண் சிற்பங்களைத் தொழிற்சாலை அளவுக்குப் பெரிசா செய்யணும். பல இளைஞருக்கு வேலைவாய்ப்பு  தரணும்!'' என்று அடுக்கடுக்காகத் தன் ஆசையை விவரிக்கிறார் முனுசாமி.

வெளிநாடுகளில் ஒரு வில்லியனூர்க்காரர் சிலைகள் அலங்கரிப்பது பெருமைதானே!

- நா.இள.அறவாழி