Published:Updated:

ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டுவது எப்படி?

ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டுவது எப்படி?
ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டுவது எப்படி?

சாலையில் பைக் ஓட்டுவது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும், ரேஸ் டிராக்கில் இந்த அனுபவம் எப்படி என்று தெரியுமா? அப்பாச்சி RTR 200 பைக்குடன் இந்த அனுபவத்தை விவரிக்கிறோம்.

ஒரு பைக்கை ரேஸ் டிராக்கில் ஓட்டுவது பெரிய கலை அல்ல. அது ஒரு விளையாட்டு. கிட்டத்தட்ட ஐ.பி.எல் போட்டிக்கும் ODI போட்டிக்கும் இருக்கும் வித்தியாசம்தான், இந்த டிராக்குக்கும் சாலையில் பைக்கை ஓட்டுவதுக்குமான வித்தியாசம். ரேஸ் டிராக்கில் வேகம் வேண்டும், சாலையில் பொறுமை வேண்டும். ரேஸ் டிராக்கில் கண்கள் டிராக்கில் இருந்தால் போதும், சாலையில் எல்லா இடங்களிலும் கண்கள் தேவை. ரேஸ் டிராக்கில் சமீபத்தில் ஓட்டுவதற்கு சரியான பைக்காக அப்பாச்சி RTR 200 வந்துசேர்ந்தது. ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு பைக்கில் சில எடை குறைப்புகள், கார்புரேட்டர் டியூனிங், பிரேக் அட்ஜஸ்ட்மென்ட தேவை. அதை மெக்கானிக்குகளிடம் விட்டுவிடுவோம். ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டும் சூட்சுமத்தை மட்டும் நாம் பார்ப்போம். 

ரேஸ் டிராக்கில் எல்லா பைக்குகளுமே ஒரே செட்டப்பில் இருக்கும் என்பதால், நாம் எப்படி பைக்கை ஓட்டுகிறோம் என்பதைப் பொறுத்தே வேகம் அதிகரிக்கும். பிட் ஸ்டாப்பிலிருந்து டிராக்குக்கு வந்த உடனேயே நமக்கும் பிட்டுக்கும் இருக்கும் தொடர்பு முறிந்துவிடும். டிராக்கில் பயணிக்கும் நம்மைத் தொடர்புகொள்ள flag (கொடி) மட்டும்தான் ஒரே வழி. கறுப்பு, வெள்ளை, பச்சை, சிவப்பு என கலர் கலர் கொடிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம். சாலையில் வேகமாகப் போக முயற்சிக்கும்போதெல்லாம் பெரிய பெரிய பள்ளங்கள், பேரிகார்டுகள், ஸ்பீடு பிரேக்கர்கள், தற்கொலைக்கு முயலும் தெருநாய்கள், ரோட்டில் வந்து பந்து பொறுக்கும் விளையாட்டுப்பிள்ளைகள்... ஹூம் 50 கி.மீகூட தாண்ட முடியாது. எல்லாப் பக்கங்களிலும் கவனம் தேவை. ரேஸ் டிராக்கில் இந்தப் பிரச்னை எதுவுமே இல்லை. கண்கள், போகவேண்டிய இடத்தைப் பார்க்க வேண்டும். ஆக்ஸிலரேட்டரைத் திருகி பைக்கைச் செலுத்தவேண்டும் அவ்வளவுதான். குறைந்த விலையில் ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு பைக் வேண்டும் என்றால், அப்பாச்சிகள் ஒரு நல்ல தேர்வு. நாம் ஓட்டியது அப்பாச்சி 200 பைக்கை. பிட் ஸ்டாப்பிலிருந்து கிளம்பும்போது ஆட்டோவைக் கைபோட்டு நிறுத்துவதுபோல நிறுத்தி ஹெல்மெட் சரியாகப் பொருந்தியுள்ளதா என்று பார்த்துவிட்டு, வைஸரை மூடிவிட்டு போகச் சொன்னார் பயிற்சியாளர். ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு Double D-Ring லாக் உள்ள DOT தரச்சான்றும்கொண்ட ஹெல்மெட் கட்டாயம். DOT சான்றுதான் குறைந்தபட்சம். அதற்கு அடுத்தபடியாக SNELL, ECE மற்றும் Sharp ரேட்டிங்கொண்ட ஹெல்மெட்டுகள் உள்ளன. 

(நேர் பாதையில் பைக்கை ஓட்டும்போது)

பிட் ஸ்டாப்பில் 60 கி.மீ-க்குமேல் வேகம் கூடாது. மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் மொத்தம் 3.7 கி.மீ. இதில் 12 திருப்பங்களும், 3 நேர்சாலைகளும் உள்ளன. நேர்சாலையில் உடலை முன்பக்கம் வளைத்து டேங்கோடு ஒட்டி உட்காருவது அவசியம். வேகமாகப் போகும்போது நம் உடல் காற்றைத் தடுக்காமல் காற்று நமக்கு மேல் ஸ்மூத்தாகச் சென்று இன்னும் அதிக வேகம் கிடைக்கும். நாம் சாலையில் பயன்படுத்தும் டயர்களில் அதிக டிராக்‌ஷன் இருக்காது. டயரின் பக்கவாட்டுப் பகுதியில் கிரிப் இருந்தால்தான் வளைவுகளில் மண்ணைக் கவ்வாமல் இருக்க முடியும். அப்பாச்சியில் பைரல்லி டயர்கள் பயன்படுத்தினோம். அதனால் செம கிரிப். பைக்கின் முன்பக்கம் கொஞ்சம் ஹெவியாக இருந்தால் நம்பிக்கையாக வளைவுகளைக் கடக்கலாம். மூன்று பக்க டயர்களில் கிரிப் கிடைக்கும். ஆனால், அப்பாச்சி 200 பைக்கில் அப்படி இல்லை. பிரேக் போடவேண்டிய அவசியம் வரும்போது கிரிப் கிடைப்பதற்காக வளைந்து நம் எடையை முன்பக்கம் கொண்டுபோக வேண்டும். 

(சிறிய வளைவுகளில்)

ரேஸ் டிராக்குக்கு வருவதே இங்கு உள்ள வளைவுகளுக்காகத்தான். அவ்வளவு த்ரில் உள்ளது இதில். அதேசமயம் இந்த வளைவுகளில் வேகமாக நெளிந்துபோவது சுலபமல்ல. இங்கு பாடி பொசிஷன் ரொம்ப முக்கியம். உடலை அசைத்து பைக்கின் சென்டர் ஆஃப் கிராவிட்டியை ஒரே இடத்தில் வைத்தால்தான் பைக்கை நன்றாக வளைக்க முடியும். மேல் உடம்பை அசைத்தால் அதிக ஆற்றல் வீணாகும்; உடல்வலியும் ஏற்படும். அதிக லேப்களை ஓட்ட முடியாது. அதனால் கீழ் உடம்பை மட்டுமே அசைக்கவேண்டும். வலதுபக்க வளைவு என்றால், பைக்கின் வலதுபக்கம் சாய்ந்து பாதி சீட்டில் உட்கார்ந்து ஃபூட் பெக்கில் நுனிகாலை வைத்து அழுத்தினால் போதும். நம்ம உடலின் எடை ஃபூட்பெக்குக்குப் போகும். செம கார்னரிங் ஆங்கிள் கிடைக்கும்.

அப்பாச்சியில் ஃபுட்பெக்குகள் கொஞ்சம் உயரமாக இருப்பதால், கார்னரிங் க்ளியரன்ஸ் அருமை. அப்பாச்சியின் சஸ்பென்ஷன் சற்று இறுக்கமாக இருப்பது, திருப்பங்களில் செல்லும்போது உதவுகிறது. அப்பாச்சி 200 பைக்கில் ஹேண்டல்பார் உயரமாக இருப்பதால், முன்பக்க உடலை டேங்க்கோடு நெருக்கமாகச் சேர்த்து உட்காரும்போது உயரமான ரைடர்கள் கொஞ்சம் கஷ்டப்படவேண்டியிருக்கும். ரேஸ் டிராக்கில் ஆக்ஸிலரேட்டரை முழுவதும் விட்டுவிடக் கூடாது. பைக்கை கியர் மற்றும் ஆக்ஸிலரேட்டரை வைத்து மட்டும்தான் கன்ட்ரோல் பண்ண  வேண்டும். முன்பு சொன்னதுபோல, அப்பாச்சி ஃபிரன்ட் ஹெவி கிடையாது. இதனால், பேலன்ஸ் மிஸ்ஸாகாமல் வேகத்தைக் குறைக்க முடியும்.

ஒவ்வொரு ரைடருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உள்ளது. ரைடர்களின் எடை, உயரம், உடல்வாகு போன்றவற்றுக்கு ஏற்ப பைக்கின் கேரக்டரும் மாறுபடும். பயிற்சி மட்டுமே டிராக்கில் வேகமான ரைடரை உருவாக்கும். 

(பெரிய வளைவுகளில் பைக்கை வேகமாகச் செலுத்த...)

டிராக்கில் முதல்முறை பைக்கை ஓட்டியபோது, பயிற்சி தேவைதான். ஆனால், பயிற்சி மட்டுமல்ல பைக்குக்கும் ரைடருக்கும் உள்ள கனெக்‌ஷனும் ரொம்ப முக்கியம். பைக்கில் ஒரு நல்ல ஃபீல் இருந்தால் உங்க வேகமும் நன்றாக இருக்கும் என்று சில டிப்ஸ் கொடுத்தார்கள் டிராக் வாத்தியார்கள். நீங்களும் உங்க பைக்கை டிராக்குக்கு எடுத்துட்டு போகணுமா? முதலில் FMSCI இணையதளத்தில் சென்று டிராக் லைசென்ஸ் வாங்குங்க. பிறகு, சென்னையில் இருந்தா MMRT. கோவையில் இருந்தா கரி மோட்டார் டிராக்குக்குப் போய் டிராக்கை புக் பண்ணுங்க. டிராக் புக்கிங் விலை கொஞ்சம் அதிகம். நண்பர்களோடு சேர்ந்து டிராக்கில் ஓட்டினால் உங்களுக்கு சிரமம் குறைவு. டிராக்கில் வேகமாக ஓட்டுவதற்கு முன்பு உங்கள் பைக்கின் கேரக்டரைப் புரிந்துகொள்ளுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு