Published:Updated:

''லீலாவதி கொலை செய்யப்பட்ட இடத்தில் மாதக்கணக்கில் பெண்கள் நீரூற்றி பூக்கள் போட்டனர்!'' - சு.வெங்கடேசன் #RememberingLeelavathi

''லீலாவதி கொலை செய்யப்பட்ட இடத்தில் மாதக்கணக்கில் பெண்கள் நீரூற்றி பூக்கள் போட்டனர்!'' - சு.வெங்கடேசன் #RememberingLeelavathi
''லீலாவதி கொலை செய்யப்பட்ட இடத்தில் மாதக்கணக்கில் பெண்கள் நீரூற்றி பூக்கள் போட்டனர்!'' - சு.வெங்கடேசன் #RememberingLeelavathi

''லீலாவதி கொலை செய்யப்பட்ட இடத்தில் மாதக்கணக்கில் பெண்கள் நீரூற்றி பூக்கள் போட்டனர்!'' - சு.வெங்கடேசன் #RememberingLeelavathi

அதிகாரமிக்கவர்களை நோக்கி கேள்வி கேட்பதற்குச் சமூகத்தின் மீதான அக்கறையும் துணிச்சலும் போதும் என இந்த உலகுக்குக் காட்டியவர், லீலாவதி. மதுரையில், எளிமையான குடும்பத்தில் பிறந்த லீலாவதி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டு சமூகப் பணியில் தன்னைக் கரைத்துக்கொண்டார். இடதுசாரி கருத்தியலைத் தெளிவாக உள்வாங்கிக்கொண்டதால், ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரும் முயற்சிகளில் தன்னை முழுமையாக அளித்தார். லீலாவதியைப் பற்றி, அந்தக் கட்சியின் முதுபெரும் தோழரான, பாப்பா உமாநாத் ஒரு பதிவில் இப்படிச் சொல்கிறார்...

`லீலாவதி ஒரு கைத்தறி நெசவாளி. அவருடைய வீட்டுக்குப் போனால், மேற்பகுதியில் தறிநூல் கட்டியிருக்கும். கீழேதான் பாய் போட்டு படுத்திருப்போம். கைத்தறி சேலை பற்றி பட்டுக்கோட்டையார் பாடிய பாடலை என்னைப் பாடச் சொல்லிக் கேட்பார்.

சின்னச் சின்ன இழை

பின்னிப் பின்னி வரும்

சித்திரக் கைத்தறிச் சேலையடி

தென்னாட்டில் எந்நாளும்

கொண்டாடும் வேளையடி - என்று நான் பாடினால், கேட்டு மகிழ்ந்து மனதில் பதித்துக்கொள்வார். அவரது சிரித்த முகத்தை உற்றுப்பார்த்துக் கண்களை மூடிக்கொண்டால், கண்களுக்குள் அவரது சிரித்த முகம் கண்ணாடியில் பார்ப்பதுபோல பளிச்சென்று தோன்றும்.' என நெகிழ்ந்துள்ளார்.

அர்ப்பணிப்பும் நேர்மையும் கண்களாக இருந்த லீலாவதியின் வாழ்க்கை முடிவு, கொடூரமாக அமைந்தது. மதுரையின் வில்லாபுரம் மாமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் லீலாவதி. அந்தப் பகுதி மக்களின் குடிநீர் பிரச்னை பற்றி, யாருக்கும் அஞ்சாமல் உரக்கக் குரல் கொடுத்தார். இதனால், ஆத்திரமடைந்த சமூக விரோதிகள், அவரை உலகிலிருந்து இல்லாமல் செய்யத் துணிந்தனர். இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் விவரிக்கிறார்.

 ``தோழர் லீலாவதியை மிக நன்றாக அறிவேன். மென்மையான குரல் அவருக்கு. ஆனால், தான் சொல்லவரும் கருத்தில் தெளிவும் துணிச்சலும் மிளிரும். மக்களின் சின்னச் சின்னப் பிரச்னைகளிலும் மிகுர்ந்த அக்கறை எடுத்து, அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தவர். அந்தப் பகுதி மக்களின் பெரும் ஆதரவோடு மாமன்ற உறுப்பினர் ஆனவர். அரசியலில் எளிமைக்கும் நேர்மைக்கும் மிகச்சிறந்த உதாரணமாக லீலாவதியை அடையாளம் காட்டலாம்.

வில்லாபுரம் மக்களுக்கு முக்கியமான பிரச்னையே குடிநீர் தட்டுப்பாடுதான். அரசாங்கம் நியாயமாகத் தரவேண்டிய வாழ்வாதார உரிமையான குடிநீரை மக்களுக்குக் கிடைக்காமல், தனியார் சிலருக்குக் கிடைத்தது. இதனை எதிர்த்து, மக்களுக்குக் குடிநீர் பெற்றுத்தர ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தினார். மக்களும் நம்பிக்கையுடன் அவர் பின்னால் அணிவகுத்தனர். குடிநீரைக் கொள்ளை அடிப்பவர்களுக்கு லீலாவதி பெரும் சவாலாக நின்றார். இதனால், சமூக விரோதிகள் எதையும் செய்யத் துணிந்தனர்.

1997 ஏப்ரல் 23-ம் தேதி, காலை ஏழு மணி. வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக வில்லாபுரத்தில் லீலாவதி வந்துகொண்டிருந்தார். அப்போது, பொதுக்கழிப்பறையில் ஒளிந்திருந்த ரவுடிகள் பாய்ந்து வந்தனர். அரிவாளால் லீலாவதியைக் கொடூரமாக வெட்டினர். தடுக்கமுயன்ற அவரின் கையில் கடுமையான வெட்டு விழுந்து விரல்கள் துண்டாகின. இறுதியில், மக்களுக்காகவே துடித்துக்கொண்டிருந்த லீலாவதியின் உயிர் துடித்து அடங்கியது. அந்தக் கொடூரம் நடந்த இடத்துக்கு முதலில் சென்ற நபர்களில் நானும் ஒருவன். வெள்ளைத் துணிப் போர்த்திய தோழரின் உடலைப் பார்க்கவே துணிவில்லை. மதுரை மக்கள் அலை அலையாகத் திரண்டுவந்தனர். அந்த மக்கள் அலைக் கூட்டத்தின் மத்தியில் லீலாவதியின் உடல் இறுதி ஊர்வலமாகச் சென்றது. 

அதன்பின், பலமுறை லீலாவதி கொலை செய்யப்பட்ட அந்த இடத்துக்குச் சென்றுள்ளேன். இரண்டு, மூன்று மாதங்கள் வரைகூட மக்கள் அந்த இடத்தில் நீரூற்றி, பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தியதை இன்று நினைத்தாலும் நெகிழ்கிறது. அது, மக்களின் மனதில் லீலாவதி நீங்கா இடம்பெற்றதற்கான அடையாளம். அவரின் மறைவுக்குப் பிறகு, அந்தப் பகுதிக்கான குடிநீர், ரேசன் பிரச்னைகள் தீர்ந்தன.

சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக அவர் இருந்ததில்லை. உள்ளாட்சி அமைப்பில் எளிய பொறுப்பில் இருந்தவர். ஆனால், தனது பதவியின் வீச்சை இந்தச் சமூகத்துக்குக் காட்டியவர். அரசியலில் ஈடுபட வரும் பெண்களுக்குச் சிறந்த முன்மாதிரி, லீலாவதி" என்கிறார் நெகிழும் குரலில். 

அடுத்த கட்டுரைக்கு