Published:Updated:

கிரிவல பூமியில் குறள் வலம்!

கிரிவல பூமியில் குறள் வலம்!

கிரிவல பூமியில் குறள் வலம்!

கிரிவல பூமியில் குறள் வலம்!

Published:Updated:
##~##

ள்ளுவத்தைப் பரப்புவதையே வாழ்க்கைப் பணியாகக் கொண்டு இருக்கிறது திருவண்ணாமலையில் உள்ள 'திருக்குறள் தொண்டு மையம்’!

 திருவண்ணாமலையில் பல வீட்டுச் சுவர்களில் அனுமதி பெற்று திருக்குறளை எழுதி வருகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியரான குப்பன். வரலாற்று ஆசிரியராக 18 ஆண்டுகள் பணியாற்றி,' அனைவருக்கும் கல்வி’ இயக்கத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து 2005-ல் ஓய்வு பெற்றவர் குப்பன். மாணவப் பருவத்தில் இருந்தே திருக்குறள் மீது பற்று கொண்ட இவர், பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும்போதும் தன் மாணவர்களுக்கு திருக்குறளின் பெருமைகளை எடுத்துக் கூறியிருக்கிறார். ஓய்வு பெற்றதும் தன் வீட்டு வாசலில் ஒரு பலகை வைத்து திருக்குறளை எழுதி, அதன் கீழ் பொருளையும் எழுதிவைத்துள்ளார். இதைப் பார்த்த சண்முகம், கோவிந்தராசன், மளிகை சுப்பிரமணி, அரிசி மண்டி சிவலிங்கம், தமிழ்ச்செல்வி, இந்திரா, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் வைத்தியலிங்கம், பாலசுப்பிரமணியம் மற்றும் வேட்டவலம் நல்ல பன்னீர்செல்வம் ஆகியோர் குப்பனுடன் இணைந்து திருக்குறள் தொண்டு மையத்தை ஏற்படுத்தியுள்ளனர். குப்பனைப்போல் கொசமடத் தெருவில் கோவிந்தராசனும், டவுன் ஹால் பள்ளி எதிரில் சண்முகமும், செங்கம் சாலையில் அரசு கலைக் கல்லூரி எதிரே இந்திராவும் போர்டு வைத்து தினமும் ஒரு குறளும் அதன் பொருளையும் எழுதி வருகின்றனர்.

கிரிவல பூமியில் குறள் வலம்!

''திருக்குறள் எக்காலத்துக்கும் ஏற்புடைய கருத்துக்களைக் கொண்டது. நான் ஆசிரியராக இருந்த காலத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த ராமையா என்ற பார்வையற்றவர் எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார். அவர் மாணவர்களிடம் பேசும்போது தமக்குப் பார்வை இல்லை என்பதால் தற்கொலை செய்துகொள்ள இருந்ததாகவும், அப்போது பெட்டிக்கடை வைத்திருந்த ஒருவர் 'பொறியின்மை யார்க்கும் பழிஅன்று, அறிவுஅறிந்து ஆள்வினை இன்மை பழி’ என்ற திருக்குறளை படித்துக்காட்டி, அதன் பொருளை விளக்கியதாகவும் சொன்னார். 'உடல் ஊனம் என்பது உண்மையில் ஊனமே இல்லை’ என்பதே அந்தக் குறளின் சாரம். அதன்பின் தற்கொலை முயற்சியைக் கைவிட்டு தினமும் திருக்குறளைப் படிக்கச் சொல்லிக் கேட்டதாக ராமையா சொன்னதுதான் என் திருக்குறள் ஆர்வத்தில் விழுந்த முதல் வித்து.

திருக்குறளை வீடுகளில் எழுத அனுமதி கிடைக்குமா என்று  முதலில் சற்று பயந்தேன். தொடக்கத்தில் எனக்குத் தெரிந்தவர்கள், நண்பர்களின் வீட்டு மதில் சுவர்களில் அனுமதி கேட்டு குறள் எழுதினேன். இதைப் பார்த்த மற்ற வீட்டினரும் தங்கள் வீடுகளிலும் குறள் எழுதுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

இதுவரை திருவண்ணாமலையில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் குறள் எழுதியிருக்கிறேன். குறளை எழுதுவது மட்டுமல்லாமல், தினமும் அவர்கள் திருக்குறள் படிக்க வேண்டும் என்று ஒரு திருக்குறள் புத்தகத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு வருவேன். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக் கிழமையில் மதில் வீதி வழியாகவும், சனிக்கிழமையில் மாட வீதி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று மலையைச் சுற்றியும் திருக்குறள் படித்தபடியே நாங்கள் வலம் வருவோம். பல வெளிநாட்டினர் இதை ஆச்சர்யமாகப் பார்த்து விளக்கம் கேட்பார்கள். நாங்க ளும் குறளையும் அதன் பெருமைகளை யும் ஆங்கிலத்தில் விளக்கினால் அவர் களுக்கு வியப்பு தாங்காது. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது 'புலால் உண்ணாமை’ அதிகாரத்தை என் ஆசிரியர் கற்பித்ததில் இருந்து புலால் உண்பதைத் தவிர்த்துவிட்டேன். குறள் பரப்புவதற்கு மட்டும் அல்ல, அதன்வழி நடப்பதற்கும்தான்!'' என்கிறார் குப்பன்.

வாழ்த்தப்பட வேண்டியவர்கள் இந்த வள்ளுவத் தோழர்கள்!

- கோ.செந்தில்குமார், படங்கள்: பா.கந்தகுமார்