அடுக்களையிலேயே அழகாகலாம் ! - 12

கேரட்... கரோட்டின் மற்றும் விட்டமின் `ஏ' சத்து நிறைந்தது. விட்டமின் `ஏ', கண்களுக்கு மிகவும் நல்லது என்பதுடன், உடல் திசுக்களுக்கும் ஆரோக்கியம் தரக்கூடியது. கரோட்டின் சத்து தொடர்ந்து கிடைக்கப்பெற்றால், சருமம் பளிச்சென்று ஆகும். கேரட் மூலம் அழகை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.

கண்களுக்கு...


ஒரு கப் கேரட் துருவலுடன் 4 வெள்ளரித் துண்டுகள் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை வடிகட்டினால் `வழவழ' க்ரீம் போல வரும். அதை கண்களைச் சுற்றி அப்ளை செய்வதோடு, ஒரு துணியில் தோய்த்து கண்களுக்கு மேற்புறமும் வைத்துக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து துணியை எடுத்துவிட்டு, க்ரீமை கழுவாமல் அப்படியே விட்டுவிடவும். இது கண்களை `பளிச் என்று ஆக்கும், கூரிய பார்வை கிடைக்கச் செய்யும். இதை முகம், கைகளுக்கு மாய்ஸ்ச்சரைசர் ஆகவும் பயன்படுத்தலாம்.

முகம் மங்காமல் இருக்க...

வெயிலில் வேலை செய்வோர் மற்றும் லேப்டாப், கணினியில் வேலை செய்வோருக்கு அந்த வெப்பம் காரணமாக முகம் சிறிது மங்கிக் காணப்படும். அரைத்த கேரட் ஒன்றுடன் ஒரு டீஸ்பூன் பால், சிறிது கடலை மாவு சேர்த்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவி வர, மங்கிய முகம் தன் இயல்பை மீட்கும்.

கருமையைத் தவிர்க்க....


கேரட்டை பாலில் வேகவைத்து அரைக்க, க்ரீம் போல கிடைக்கும். இதை தினமும் வெளியே செல்லும்போது மாய்ஸ்ச்சரைசராக முகம், காது, கழுத்துப் பகுதியில் பயன்படுத்தலாம். இதனால் வறண்ட சருமம் ஈரப்பதம் பெறும். காது, கழுத்து பகுதிகளில் உள்ள கருமை நீங்குவதோடு... புருவம் அரிப்பதும், புருவத்தில் முடி உதிர்வதும் தடுக்கப்படும்.

அடுக்களையிலேயே அழகாகலாம் ! - 12

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரும்புள்ளிகள் நீங்க...

அரை கப் கேரட் சாற்றுடன் சிறிதளவு கற்றாழை ஜெல் சேர்த்து முகத்தில் `பேக்' போட்டு அரை மணி நேரம் கழித்து உரித்தெடுக்கவும். இதை தொடர்ந்து செய்து வர, கரும்புள்ளிகளுக்கு `பை பை' சொல்லலாம்.

ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் நீங்க...

பெண்களுக்கு பிரசவத்துக்குப் பின் வயிற்றில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் வந்துவிடும். குழந்தைப் பராமரிப்பு பொறுப்புகளுக்கு இடையே அதை நீக்கும் வழிமுறைகளை செய்யத் தவறிவிட்டால், அது நிரந்தரமாகத் தங்கிவிடும். அதைத் தவிர்க்க, 5 துண்டுகள் கேரட்டுடன் 5 பாதாம் சேர்த்து அரைத்து, தழும்புகளில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்கவும். இதை தினசரி செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

வெளிறிப்போதலை தடுக்க...

டைஃபாய்டு போன்ற நோய் களால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு, கன்னங்கள் வெளிறிப்போயிருக்கும். அதை சரிசெய்ய, ஒரு கேரட், 2 பேரீச்சம்பழத்துடன் சிறிது பால் சேர்த்து அரைக்கவும். இதை கன்னங்களுக்கு பேக் போட்டு கழுவி வர, இழந்த பொலிவு மீண்டும் கிடைக்கும்.

மாசு, தூசு, பாதிப்பு நீங்க...

கேரட் சாறு - அரை கப், கஸ்தூரி மஞ்சள் - ஒரு டீஸ்பூன், பார்லி பொடி - 2 டீஸ்பூன்... இவை அனைத்தையும் கலந்து வாரம் ஒருமுறை சோப்புக்கு பதிலாக பயன்படுத்தி குளித்துவர, மாசு, தூசால் சருமத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
நீங்கும்.’’

 தா.நந்திதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism