Published:Updated:

அய்யோ... ஷாப்பிங்கா? - அலறும் கணவர்கள்!

அய்யோ... ஷாப்பிங்கா? - அலறும் கணவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அய்யோ... ஷாப்பிங்கா? - அலறும் கணவர்கள்!

காமெடி

ஷாப்பிங் செல்லும்போது என்றாவது படிகளுக்குப் பக்கத்தில் ஓர் ஓரத்தில் பாவமாக சேர்களில் அமர்ந்திருக்கும் ஆண்களைக் கவனித்ததுண்டா? நவரசத்தின் எந்தவகையிலும் சேராத `லுக்'கோடு வெறித்துப் பார்க்கும் அவர்கள் உங்களிடத்தில் எதிர்பார்ப்பது கொஞ்சமே கொஞ்சம் கருணைதான். ‘டார்லிங்’ படத்து நிக்கி கல்ராணி போல க்யூட்டாக இருக்கும் பெண்கள், அவர்களுக்கே தெரியாமல் ஆண்களைப் போட்டு புரட்டி எடுப்பது ஷாப்பிங் செய்யும் நேரத்தில்தான்... என்னத்த சொல்ல!

செருப்பைக்கூட ஆன்லைனில் பார்த்து ஐந்தே நிமிஷத்துல ஆர்டர் செஞ்சுதான் எங்களுக்குப் பழக்கம். `ஏ.சி' காற்றை ஓசியில் வாங்கத்தான் ஷாப்பிங் மாலில் அதிக நேரத்தைச் செலவிட்டிருக்கிறோம் என்பதை எப்படி உங்களுக்குப் புரியவைப்பது! அப்படிப்பட்ட பாவப்பட்ட ஜீவன்களை, ஒரே ஒரு ஜீன்ஸ் வாங்க அரைநாள் அலைக்கழிப்பது நியாயமா பெண்களே?

`வெஜ் குருமாவா? நான்-வெஜ் குழம்பா?' என்ற சிம்பிளான கேள்விக்குக்கூட `ஏதாச்சும் ஒண்ணு'ன்னு பதில் சொல்லித்தான் பசங்களுக்குப் பழக்கம். இந்த லட்சணத்தில் ‘இந்த டிரெஸ் நல்லாயிருக்கா?’ எனக்கேட்டு முழிக்க வைப்பதை இனியாவது நிறுத்திக்கொள்ளுங்கள். எங்களுக்கு நடிக்கத் தெரியாதுங்க!

அய்யோ... ஷாப்பிங்கா? - அலறும் கணவர்கள்!

மொத்தக் கடையையும் புரட்டிப் போட்டுவிட்டு, முதலில் செலக்ட் பண்ணி வெச்ச டிரெஸ்ஸை `ஓகே'னு டிக் பண்ற பழக்கம் உங்களுக்கு எப்படி வந்துச்சு? இந்தக் கேள்விக்கு இன்னைக்கு வரைக்கும் பசங்களால் பதில் கண்டுபிடிக்க முடியலை. இதாவது பரவாயில்லை... 3 மணி நேரம் மொத்தக் கடையையும் புரட்டிப் பார்த்துட்டு, `வேற கடைக்குப் போலாமா?'னு மனசாட்சியைக் கழட்டி வெச்சுட்டு கேப்பீங்களே... தெய்வமே!

ஒரே கலர்ல 50, 60 ஷேட் இருக்கிற விஷயமே பொண்ணுங்களோட ஷாப்பிங் போனதுக்கு அப்புறம்தான் பசங்களுக்குத் தெரியவரும். எங்களுக்கு புளூ கலர்தான் தெரியும். அதென்ன பேபி புளூ, ஸ்பானிஷ் புளூ? கடுப்பேத்துறீங்க மை லார்ட்!

காட்டன் புடவைக்கு ஒரு இடம், பட்டுப்புடவைக்கு வேறு இடம், பிளவுஸ் மெட்டீரியல்ஸ் வாங்க இன்னொரு இடம். அட... இதெல்லாம்கூட பரவாயில்ல. ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கிற டெய்லரைத் தேடிப்போய் கொடுக்கணும்னு சொல்றீங்க பார்த்தீங்களா... அதைத்தான் எங்களால பொறுத்துக்க முடியலை. ஷாப்பிங் முடியறப்போ சில கிலோ மீட்டர் சுற்றளவே உள்ள இடத்துக்கு உள்ளேயே பல கிலோ மீட்டர் ரவுண்ட் அடிக்க விடுறதே உங்களுக்கு வழக்கமாப்போச்சு.

ஐயாயிரம், பத்தாயிரம்னு செலவாகிருச்சேன்னு பில்லைப் பார்த்து சோகமா நடந்து வரும்போது, ‘பாவிப்பய, கூட இன்னொரு கட்டப்பை தந்தா கொறஞ்சா போயிருவான்’னு கடைக்காரர் பரம்பரையையே இழுத்து வசைபாடும்போது சிரிக்கிறதா அழறதான்னு தெரியலை அம்மணி!

ஷாப்பிங் போனா, லஞ்ச் இல்லாட்டி டின்னருக்கு ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போகணும்கிறது எழுதப்படாத விதி. எப்படியாவது டிமிக்கி கொடுத்து வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டா, உப்புமா பண்ணிப்போட்டு பழி தீர்த்துக்கிறதெல்லாம் வன்மத்தின் உச்சம். ஆமா சொல்லிட்டேன்!

இதெல்லாம் வாசிக்கிறப்பவே `இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க ஒண்ணும் எங்ககூட ஷாப்பிங் வர வேண்டாம்'னு உங்க மைண்ட் வாய்ஸ் சொல்லிருக்குமே. இப்படித்தான் எங்க வீட்லயும் சொன்னாங்க. சிப்ஸ் பாக்கெட்டோட சோபாவில் சாய்ஞ்சா, டி.வி ரிமோட்டைக் காணோம். எங்க அடிச்சா வலிக்கும்கிற விஷயம் பெண்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு.

தி.நகர், புரசைவாக்கம் ஏரியா முழுக்க ஃப்ரீ வைஃபை கொடுத்தீங்கனா, லேடீஸ் ஷாப்பிங் பண்றப்போ நாங்க இந்தப் பக்கம் ‘போகிமான் கோ’ விளையாடிக்கிட்டே வருவோம்ல. இதைச்சொன்னா நம்மளை...

ஆனா, இதை நான் சொல்லியேதான் ஆகணும். இவ்வளவுக்கும் மத்தியில பாவப்பட்டு ஆறுதல் பரிசா ரெண்டு பனியன் வாங்கித்தர்ற அந்த மனசுதான் சார் கடவுள்!

- கருப்பு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz