Published:Updated:

பாதாள வழித்தடங்கள்... அகழி... குளம்... நீர் மேலாண்மையில் தஞ்சை அன்றும் இன்றும்!

பாதாள வழித்தடங்கள்... அகழி... குளம்... நீர் மேலாண்மையில் தஞ்சை அன்றும் இன்றும்!
பாதாள வழித்தடங்கள்... அகழி... குளம்... நீர் மேலாண்மையில் தஞ்சை அன்றும் இன்றும்!

தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். இன்றைக்கும் இவை கடமையாற்றக் காத்திருக்கின்றன.

முன்பெல்லாம் அரசு அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்க, தண்ணீர் இல்லா காட்டுக்கு டிரான்ஸ்பர் செய்வதாகச் சொல்லி ராமநாதபுரத்துக்கு அனுப்புவார்கள். இனி தஞ்சாவூருக்கு அனுப்பலாம். தற்பொழுது தஞ்சை நகரில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு 40 அடி ஆழத்தில் கிடைத்து வந்த நிலத்தடிநீரின் இன்றைய நிலை என்ன தெரியுமா? 300 அடி ஆழத்தில் போடப்பட்ட போர்வெல்கள் கூட, தண்ணீரின்றி வறண்டு தூர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டுமே தஞ்சை நகருக்குள் உள்ள ஆயிரக்கணக்கான போர்வெல்கள் தண்ணீரின்றி முடங்கியிருக்கின்றன. பணக்காரர்கள் மட்டுமல்ல, பொருளாதார நெருக்கடியில் உள்ள நடுத்தர மக்களும்கூட, பெரும் தொகை செலவு செய்து 300-500 அடி ஆழத்தில் புது போர்வெல்கள் போட வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவையும்கூட விரைவில் முடங்கிப் போவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மாநகராட்சி விநியோகம் செய்யும் தண்ணீர் குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இதுவும்கூட எல்லா நாள்களுக்கும் எல்லா வீடுகளுக்கும் நிரந்தரம் இல்லை. பல குடும்பங்கள் தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியாமல் சொந்த வீட்டை அப்படியே விட்டுவிட்டு புறநகர் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். தஞ்சை நகரின் எதிர்காலம் நினைத்துப் பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. மக்கள் இல்லாத வரலாற்றுத் தடமாக மட்டுமே காட்சி அளிக்கப்போகிறதோ என்ற கவலை பீறிட்டு எழுகிறது. மீண்டுவர வேறு வழியே இல்லையா? தஞ்சை என்றால் தண்ணீர் நிறைந்த ஊர் என்றும் குளிர்ந்த நிலம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பெயர் காரணம் சொல்கிறார்கள். தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்குப் பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். இன்றைக்கும் இவை கடமையாற்றக் காத்திருக்கின்றன. இவற்றின் பாதாள வழித்தடங்கள் தற்பொழுதும் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனாலும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் இவை சேவையாற்ற முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரைச் சுற்றிலும் நான்கு புறமும் தொடர்ச்சியாகத் தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழி அமைக்கப்பட்டது. 

பரந்து விரிந்து பல கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இதன் பிரமாண்டமான தோற்றம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. காவிரி நீரும் மழைநீரும் இதில் சேமிக்கப்பட்டன. இது போதாதென, பெரிய கோயில் அருகே சிவகங்கை குளத்தையும் உருவாக்கியுள்ளார்கள். இந்த ஒரு குளம் மட்டுமே தற்பொழுது பராமரிப்பில் உள்ளது. காரணம் தண்ணீரின் அருமை கருதியல்ல. சிவகங்கை பூங்காவின் உள்ளே இந்தக் குளம் இருப்பதால், இதில் வின்ச் மற்றும் படகு சவாரி மூலம் தஞ்சை மாநகராட்சி வருமானம் ஈட்டுகிறது. தஞ்சையை ஆண்ட விஜய ரெகுநாத நாயக்க மன்னர் ஆட்சிக்காலத்தின்போது மேலவீதி அருகே மிகவும் பிரமாண்டமான அய்யன்குளம் உருவாக்கப்பட்டது.

சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன் குளத்துக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான பாதாள நீர்வழிப்பாதை இப்பொழுதும் உள்ளது. தஞ்சை அரண்மனையின் கிழக்குத் திசையில் உள்ள கொண்டிராஜபாளையத்தில் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சாமந்தன் குளமும் இங்குள்ள மக்களுக்கு சேவையாற்றி வந்தது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அகழி மற்றும் இந்தக் குளங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு தண்ணீர் சேமிக்கப்பட்டது. இதனால் தஞ்சாவூர் மக்களின் தண்ணீர்த் தேவை முழுமையாக நிறைவு செய்யப்பட்டது. மழை இல்லாத ஆண்டுகளிலும்கூட, தஞ்சை நகரம் முழுவதும் நிலத்தடிநீர் செழித்திருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தஞ்சை மாவட்ட நிர்வாகமும், தஞ்சை மாநகராட்சியும் இந்த நீர்நிலைகளைக் கண்டுகொள்வதில்லை. பெரும்பாலான ஆண்டுகள் அகழி மற்றும் குளங்கள் வெற்றிடமாகவே காட்சி அளிக்கின்றன. கடந்த ஆண்டு கனமழை பொழிந்து, ஆறுகளில் தண்ணீர் வந்த போதிலும்கூட அகழி மற்றும் குளங்களுக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பல நூறு அடி ஆழத்துக்குச் சென்றுவிட்டது. அகழி மற்றும் குளங்களை வாழ வைத்தால்தான் தஞ்சை நகரம் எதிர்காலத்திலும் உயிர்ப்போடு இருக்கும். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளில் உள்ளன. ஆனால், ஆச்சர்யம் தஞ்சாவூர் நீர்நிலைகள் இன்றைக்கும் சுதந்திரமாக உள்ளன. 

அடுத்த கட்டுரைக்கு