Published:Updated:

இந்தியாவில் வாழும் ஆப்ரிக்க பழங்குடி இனத்தின் வரலாறும் இன்றைய துயரங்களும்!

ஆப்ரிக்க பழங்குடி
ஆப்ரிக்க பழங்குடி ( விகடன் )

இது என் தாத்தா எனக்குச் சொன்ன கதை. அவருக்கு அவருடைய தாத்தா சொன்னார். அவருக்கு அவருடைய தாத்தா சொன்னது. அவருக்கு...கிழக்கு ஆப்பிரிக்காவின் ஏதோ ஓர் பகுதி. அது 7வது நூற்றாண்டாக இருந்திருக்கலாம்.

"இது என் தாத்தா எனக்குச் சொன்ன கதை. அவருக்கு அவருடைய தாத்தா சொன்னார். அவருக்கு அவருடைய தாத்தா சொன்னது. அவருக்கு...

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஏதோ ஓர் பகுதி. அது 7வது நூற்றாண்டாக இருந்திருக்கலாம். அரேபியர்களும், போர்த்துக்கீசியர்களும், பிரிட்டீஷாரும் அவரவர் கை ஓங்கியிருந்த காலத்தில் எங்களை அடிமைகளாகப் பிடித்து வந்தார்கள். அப்படியான அடிமைகளாகத்தான் இந்தியாவுக்குள் வந்தோம். நாங்கள் நுழைந்த வழி குஜராத்தின் பரூச் (Bharuch) பகுதியாக இருந்திருக்கலாம். எங்களைப் போன்ற அடர் கறுப்பு நிறமல்லாதவர்களுக்கு நாங்கள் அடிமைகளாக இருந்தோம். காலம் ஓடியது. காலம் முடிந்தது. காலம் மாறியது. காலனியாதிக்கம் முடிந்த நிலையில் ஊரிலிருந்து தப்பி காடுகளுக்குள் ஓடினோம். எங்கள் ஜீன்களில் நிறைந்திருந்த பச்சை வாசனை, காடுகளில் எங்களுக்கான ஆக்சிஜனைப் பிடித்துக் கொடுத்தன. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, எங்கள் வீட்டிற்கு நுழைந்த உணர்வை இந்தக் காடுகள் எங்களுக்கு வழங்கின. வாழத் தொடங்கினோம். ஆனால், எங்களால் அது முடியவில்லை. எங்கள் தோலும், நிறமும், முகமும் இங்கு யாருக்கும் பிடிப்பதில்லை. வேறு எங்குப் போவது என்றும் தெரியவில்லை. அடிமைகளாக இருந்தவர்கள்...இன்று அனாதைகளாக, அகதிகளாக, ஆதரவற்றவர்களாக, யாருக்கும் அவசியப்படாதவர்களாக, அந்நியர்களாக, அனாவசியமானவர்களாக, அனைவரும் வெறுத்து ஒதுக்கும் அழுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் சித்திகள். என் பெயர் ராம்நாத் சித்தி..." அந்த இளைஞனின் வார்த்தைகள் அத்தனை வீரியமாக வந்து விழுகின்றன. 

இணையத்தில் சித்திகள் (Siddis) குறித்து சில ஆவணப்படங்கள் காணக்கிடைக்கின்றன. அப்படியான ஒன்றில் கூறப்பட்டதுதான் மேற்கூறிய வார்த்தைகள். 

சித்திகள் ஆப்பிரிக்காவின் ``பன்ட்டு" (Bantu) எனும் பழங்குடி வழி வந்தவர்கள். கர்நாடகாவின் ``உத்தர் கன்னடா" (Uttar Kannada) மாவட்டப் பகுதிகளில், ஆப்பிரிக்கர்களையொட்டிய உருவ ஒற்றுமை கொண்ட சித்திகள் பலரையும் பார்க்க முடியும். அதேபோல், குஜராத், கோவா, மஹாராஷ்டிரா, ஹைதரபாத் போன்ற இடங்களிலும் சித்திகள் இருக்கிறார்கள். இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்த சில சித்திகளும் இருக்கிறார்கள்.  

Vikatan

ஆப்பிரிக்காவைவிட்டுப் பல ஆயிரம் மைல்கள் தள்ளியிருந்தாலும் கூட... ஆப்பிரிக்காவின் ஆன்மா அவர்களுக்குள் பொதிந்து கிடக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். காடுகளையும், இயற்கை சார்ந்த வாழ்வையும் மீறி இவர்களால் வாழ்ந்திட முடியவில்லை. அவர்களின் ஜீன்களும் ஆப்பிரிக்கா உருவத்தை இன்னும் இன்னும் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திக் கொண்டேயிருக்கின்றன. தாங்கள் வாழும் பகுதியின் கலாசாரம், மொழி, பண்பாடு போன்றவற்றை கற்றுக்கொண்டு வாழ்ந்தாலும் கூட...இன்றும் சித்திகள் தங்களின் சில பழைய மரபுகளையும், கலைகளையும் பாதுகாத்து வைத்துள்ளனர். குறிப்பாக ``கோமா" ( Goma) என்ற அவர்களின் இசை மற்றும் நடனக் கலை. 

அன்று அடிமைகளாக இருந்தவர்கள், இன்று ஒடுக்கப்பட்டவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். இந்திய தேசத்திற்குள் காலடி எடுத்து வைத்து பல நூற்றாண்டுகள் ஆன போதிலும், இவர்களை இன்னும் பொதுச் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. நகரங்களில் அல்ல, கிராமங்களிலேயே இவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். 

Vikatan

கறுப்பு என்ற நிறத்தை வைத்து இவர்களை இகழும் பொதுச் சமூகத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இவர்களுக்குப் பெரும் வலி ஏற்படுத்துகின்றன. கருப்பன், கருவாயன், கரிச்சட்டி மண்டையன், பொசுங்குன முடிகாரன் போன்ற வார்த்தைகள் இவர்கள் மீது மிக சாதாரணமாகப் பிரயோகிக்கப்படுகின்றன. இந்த இகழ்தலுக்கு பயந்து இவர்களும் ஒதுங்கியே வாழ்கின்றனர். இந்திய அரசியல் சாசனத்தின்படி இவர்கள் பழங்குடியினர் (Scheduled Tribes) பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களும் வாழும் வீட்டிற்கான பட்டா உள்ளிட்ட அரசு ஆவணங்கள் இருந்தாலும் கூட, இவர்களுக்கு அருகில் வேறு எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களை மிரட்டி இடத்தைக் காலி செய்ய வைப்பது மிகச் சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. 

1. இயற்கையாகவே ஆப்பிரிக்க மரபணுக்கள் கொண்ட இவர்களைத் தடகளத்தில் பயிற்சி கொடுத்து, அதன்மூலம் இந்தியாவின் ஒலிம்பிக் மெடல் கனவை நிறைவேற்றலாம் என்ற அடிப்படையில் 1987 ல் இவர்களுக்குத் தடகளப் பயிற்சிகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பல அரசியல் காரணங்களால் அது முடங்கிப் போனது. 

2. கமலா மிங்கல் சித்தி (Kamala Mingel Siddhi) என்பவர் சர்வதேச அளவில் தடகளப் போட்டிகளில் பங்கேற்றார். 

கமலா மிங்கல் சித்தி (Kamala Mingel Siddhi)

 

ஆப்பிரிக்காவிலிருக்கும் பன்ட்டூக்கள் பெரும்பாலும் கிறித்துவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் இருக்கின்றனர். குஜராத், பாகிஸ்தான், ஹைதராபாத் போன்ற இடங்களில் வசிக்கும் சித்திகள் இஸ்லாமியர்களாக இருக்கின்றனர். கர்நாடகாவில் இருக்கும் சித்திகள் அனைவருமே இந்து மதத்தை தழுவியவர்களாகவே இருக்கின்றனர். இந்து மதம் இவர்களைச் சூத்திரர்களாக வகைப்படுத்துகிறது. அதற்கான அடிநாதம் என்ன என்பது தெரியவில்லை. ஒருவேளை இவர்களின் கறுப்பு நிறமாக இருக்கக்கூடும். 

சித்தி இனத்தைச் சேர்ந்த ஜூஜே ஜாக்கி ஹர்னோட்கர் (Juje Jackie Harnodkar) என்பவர் சித்தி சிறுவர், சிறுமிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கான தடகளப் பயிற்சிகளைக் கொடுத்து வருகிறார். அழுக்கு அரசியல் அவர்கள் மீது படராவிட்டால், கண்டிப்பாக அதிலிருந்து பல சர்வதேச வீரர்களை உருவாக்கிடும் சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன.

தன் குழுவோடு ஜூஜே...

``மிருகங்களைவிடவும் மிக மோசமாக எங்களை நடத்தும் இந்தச் சமூகத்திடம் நாங்கள் என்ன சொல்வது? நாங்களும் அவர்களைப் போன்ற மனிதர்கள்தாம் என்பதையா? நாங்கள் மிக எளிமையான ஒரு வாழ்வைத்தான் வாழ முயல்கிறோம். இருந்தும் வறுமையில் துவண்டு கிடக்கிறோம். வேர்கள் அறுக்கப்பட்டு, இங்கு இழுத்து வரப்பட்டோம். பல நூற்றாண்டுகளாகியும் இந்த மண்ணில் எங்கள் வேர் பதியவில்லை. வேரற்ற மரங்களாக, உயிரற்ற மனிதர்களாக உலவிக் கொண்டிருக்கிறோம். எங்களை மனிதர்களாகவே மதிக்காத, ஏற்றுக்கொள்ளாத சமூகத்திடம் இன்னும், இன்னும் எங்களின் எத்தனை தலைமுறைகள் இந்தப் பாடுகளைப் படப்போகின்றனவோ... தெரியவில்லையே" என்று கேள்வி எழுப்பும் அந்தச் சித்திக்கு யார் பதில் சொல்வது?

ஒருவேளை அவரின் கேள்விக்கு பதிலே இல்லையோ? 

அடுத்த கட்டுரைக்கு