தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அடுக்களையிலேயே அழகாகலாம்! - 13

அடுக்களையிலேயே அழகாகலாம்! - 13
பிரீமியம் ஸ்டோரி
News
அடுக்களையிலேயே அழகாகலாம்! - 13

முன் நெற்றி வழுக்கை... தடுக்கும் கோதுமை!

``தினசரி உணவில் கோதுமை சேர்த்துக்கொண்டால், ஸ்லிம் ஃபிட்டாக இருக்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து, இடைப் பகுதியில் உள்ள தேவையற்ற சதையை நீக்கி, பருமனைக் குறைக்கும். அத்தகைய கோதுமையில், அழகு காக்கும் சூட்சுமங்களும் உள்ளன’’ என்று சொல்லும் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி, அவற்றை இங்கே பட்டியலிடுகிறார்...

அடுக்களையிலேயே அழகாகலாம்! - 13

•  அக்குள் கருமை நீங்க!

கோதுமை – 100 கிராம், பாதாம் – 100 கிராம், வெட்டிவேர் – 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்... இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக இதை அக்குள் பகுதியில் பயன்படுத்தி வர, தயக்கமின்றி ஸ்லீவ்லெஸ் அணியலாம்!

கம்மல் ஒவ்வாமைக்கு கோதுமை!

சிலருக்குத் தங்கம் தவிர்த்து பிற உலோகங்களால் ஆன காதணிகள் அணிந்தால் அரிப்பும் கருமையும் ஏற்படும். இதற்கு எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், ஊறவைத்த கோதுமை – 1 டீஸ்பூன்  இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்து, கம்மல் அணியும் இடத்தைச் சுற்றி அப்ளை செய்து உலர்ந்தவுடன் கழுவவும். இதே கலவையை அணியவிருக்கும் காதணியின் தண்டுப் பகுதியிலும் தடவி, சிறிது நேரம் கழித்துத் துடைத்துவிட்டு அணிந்தால், அரிப்பைத் தவிர்க்கலாம்.

குழந்தைகளுக்குப் பூனைமுடி உதிர!

சில குழந்தைகளுக்குப் பிறக்கும்போது முதுகு, மார்பு பகுதியில் அடர்ந்து காணப்படும் பூனைமுடி, குழந்தை வளர வளர அதன் நிறத்தை மங்கலாகக் காட்டும். அதை நீக்க, கோதுமை கைகொடுக்கும். அரை கிலோ கோதுமை, 100 கிராம் வெட்டிவேர், 50 கிராம் கஸ்தூரி மஞ்சள்... இவை அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்துச் சலிக்கவும். குழந்தை முதுகில் சிறிதளவு வெண்ணெய் தடவி, இந்தக் கலவையை மிதமான வெந்நீரில் கலந்து அப்ளை செய்யவும். அரை மணி நேரம் கழித்து பீல் ஆஃப் போல் உரித்து எடுக்கவும். ஒவ்வொரு நாளும் இதை முதுகிலும் மார்பிலும் மாறி மாறிச் செய்துவர, குழந்தைகள் எப்போதும் பளிச்சென்று இருப்பார்கள்.

சன் டேனிங்கில் இருந்து விடுதலை!

அதிகம் வெயிலில் சுற்றுபவர்களுக்கும், அதிக நேரம் நீச்சல் பயிற்சி செய்பவர்களுக்கும் முகமும், கை, கால்களும் கருமை அடையும். இதிலிருந்து விடுபட ஊறவைத்து அரைத்த கோதுமைப் பால் – 2 டீஸ்பூன், கடலை மாவு – 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகம், கை, கால்களில் `பேக்' போட்டுக் கழுவவும்.

முகத்தில் முடி நீங்க!

உதடுகளின் மேலுள்ள பகுதியிலும், கன்னங்களின் ஓரங்களிலும் சில பெண்களுக்கு சற்று அதிக முடி காணப்படும். கோதுமை - கால் கிலோ, பூலாங்கிழங்கு – கால் கிலோ, கோரைக்கிழங்கு – கால் கிலோ... இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து, தேவைக்கேற்ப சிறிது எடுத்து வெந்நீரில் கலந்து முகத்துக்கு `பேக்' போடவும். 15 நிமிடங்கள் கழித்து அதன் மேல் சிறிது பால் தெளித்து, 2 நிமிடங்கள் கழித்து முகம் கழுவவும். இதை தொடர்ந்து செய்துவர, முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்கி க்ளியர் சருமம் கிடைக்கும்.

துர்நாற்றம் தூரப்போக!

சிலருக்கு வியர்வையால் அதிக துர்நாற்றம் ஏற்படும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் காரணமாக பெண்களுக்கு இது அதிகமாகக்கூடும். வெங்காயம், பூண்டு அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் வியர்வையில் அதிக துர்நாற்றம் ஏற்படும். அவர்கள் சம்பா கோதுமை – 100 கிராம், கார்போக அரிசி – 100 கிராம், வெள்ளரி விதை – 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம், பூலாங்கிழங்கு – 100 கிராம், உலர்ந்த மரிக்கொழுந்து – 100 கிராம்... இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்தவும். துர்நாற்றத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

முன் நெற்றி வழுக்கையைத் தடுக்க!

முழு கோதுமை – 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 டீஸ்பூன், வெள்ளை எள் – 1 டீஸ்பூன்... இவை அனைத்தையும் கலந்து தண்ணீர் விட்டு அரைக்கவும். அதை வடிகட்டி சாறு எடுத்து, ஒரு துணியை அந்தச் சாற்றில் நனைத்து முன் நெற்றியில் ஒற்றியெடுக்கவும். இவ்வாறு செய்தால் வழுக்கை ஏற்படாமல் இருப்பதோடு, வழுக்கை விழுந்த இடங்களிலும் மீண்டும் முடி வளரத் தொடங்கும்.
 
- தா.நந்திதா