Published:Updated:

''அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள்

''அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள்
''அதிகாரிகள் ஆசியோடு எல்லா மணலையும் அள்ளிட்டாங்க!" புலம்பும் அணைப்பட்டி கிராம மக்கள்

மணல் திருட்டு

இயற்கை மனித இனத்துக்குக் கொடுத்த கொடைகளில் அற்புதமானது, மணல். ஆனால், பேராசை காரணமாக சில மனிதர்கள், மடியை அறுத்துப் பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பணத்தாசையில் செயல்படும் இதுபோன்ற சமூக விரோதிகளால் தமிழகம் வெகு விரைவில் தாகத்தில் தவிக்கப் போவது சர்வ நிச்சயமாகி விட்டது. இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளும் இவர்களுக்குத் துணையிருப்பதால், பொதுமக்களால் இவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. ஊற்றுக்கு ஆதாரமான ஆற்று மணலை அள்ளி அள்ளி ஆறுகளை பிறாண்டி வைத்துள்ளார்கள். தமிழகத்தின் பெரும்பாலான ஆறுகள் குண்டும் குழியுமாகப் பார்க்க சகிக்க முடியாத நிலையில் இருக்கின்றன. மணல் கொள்ளையர்கள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ளது அணைப்பட்டி. வைகை ஆறு இந்த வழியாகத்தான் மதுரைக்குச் செல்கிறது. இந்தப் பகுதியில் பேரணை என்ற பெயரில் ஒரு அணை உள்ளது. இந்த அணையில் இருந்துதான் திண்டுக்கல்லுக்கு குடிநீர் கிடைக்கிறது. மேலும், இங்குள்ள ஆற்றுப்படுகையில் பல குடிநீர் கிணறுகள் அமைத்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் நடக்கிறது. இந்நிலையில், இந்தப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே மணல் திருடர்கள் அராஜகம் அதிகமாக இருந்து வருகிறது. இரவு நேரங்களில் விளக்கு அமைத்து மணல் திருடுகிறார்கள். கிட்டத்தட்ட ஆறு அடிக்கு மணலை அள்ளிவிட்டார்கள். அதிகாரிகள், போலீஸ் இவர்களுக்குத் துணையாக இருப்பதால் இவர்களைத் தட்டிக்கேட்க பொதுமக்கள் அஞ்சுகிறார்கள்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக குடிநீர் கிணறுகளைச் சுற்றியுள்ள மணலைக்கூட விடாமல் சுரண்டி விட்டார்கள். ஏற்கெனவே நிலத்தடி நீர் மட்டம் குறைந்துப்போன இந்தப் பகுதியில், இந்தக் கிணறுகள்தான் தவித்த வாயின் தாகத்தை தணித்து வருகின்றன. தற்போது அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள் மணல் மாஃபியாக்கள். சித்தர்கள்நத்தம் ஊராட்சிக்கான குடிநீர் கிணறு, மணல் அள்ளியதால் சரிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், சில கிணறுகளும் இதேநிலையில் தான் இருக்கின்றன. பொறுத்துப் பொறுத்து பார்த்து வெறுத்துப்போன மல்லியாம்பட்டி இளைஞர்கள் கடந்த இரு தினங்களாக ஆற்றுக்குள் இறங்கி தங்கள் குடிநீர் கிணற்றையும், மணலையும் காவல் காத்து வருகிறார்கள். மணல் கொள்ளையர்களைக் கட்டுப்படுத்தாத மாவட்ட நிர்வாகத்துக்கு கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

 இதுதொடர்பாக பேசிய இளைஞர் ஒருவர், ''அதிகாரிகள் ஆசியோடு எங்கள் பகுதியில இருந்து மணல் எல்லாத்தையும் அள்ளிட்டாங்க. போனா போவுதுன்னு விட்டா, இப்ப குடிதண்ணி கிணத்தையே சாய்க்க துணிஞ்சுட்டாங்க. இனியும் இவங்களை விட்டா, தவிச்ச வாயிக்கு தண்ணியில்லாமத்தான் அலையணும்னு தோணுச்சு. அதுனாலதான் எங்க கிணத்தை பாதுக்காக்க நாங்களே களத்துல இறங்கிட்டோம். இது தொடர்பா கலெக்டரில் இருந்து முதலமைச்சர் வரைக்கும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆற்றுப்படுகையில எங்க ஊருல இருந்து சுடுகாட்டுக்குப் போறதுக்கு தார்ரோடு இருந்துச்சு. ஆனா, இவங்க ரெண்டு பக்கமும் மணலைச் சுரண்டி சுரண்டி தார்ரோடு இப்ப ஒத்தையடி பாதையாகிப்போச்சு. இன்னும் கொஞ்சநாள்ல அதுவும் இருக்காது. அப்புறம் பிணத்தைத் தூக்கிட்டுப் போகக்கூட பாதையில்லாம அவஸ்தைப்பட வேண்டியதுதான். அரசாங்கம் கடுமையான சட்டம் போட்டு கட்டுப்படுத்தணும். ஆனா என்ன செய்ய மணல் திருடுற பலபேர் ஆளுங்கட்சிக்காரங்களா இருக்குறாங்களே.. பிறகெப்படி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அதுனால தான் நாங்கள் காவலுக்கு இறங்கியிருக்கிறோம்‘‘ என்றார் ஆதங்கத்துடன்.

ஏற்கெனவே, மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், மணல் கொள்ளையர்கள் குடிநீர் கிணறுகளை சாய்த்து வருவதை இனியும் மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்கப் போகிறதா? அல்லது நடவடிக்கை எடுத்து குடிநீர் கிணறுகளையாவது காப்பாற்றுமா? என்பதுதான் அந்தப் பகுதி மக்களின் கேள்வியாக இருக்கிறது.  

அடுத்த கட்டுரைக்கு