Published:Updated:

'அவளும் அவரும் அமுதும் தமிழும்!' - பாரதிதாசன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'அவளும் அவரும் அமுதும் தமிழும்!' - பாரதிதாசன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
'அவளும் அவரும் அமுதும் தமிழும்!' - பாரதிதாசன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

'அவளும் அவரும் அமுதும் தமிழும்!' - பாரதிதாசன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த நூற்றாண்டின் கவிதை வெளி பாரதியின் தடங்களிலிருந்து தொடர்ந்தது. அதே காலகட்டத்தில் கவிதை வெளியிடை தமிழ் செய்ய வந்த மற்றுமொரு கவிச்சுடர் பாவேந்தர் பாரதிதாசன். கடவுளைத் தவிர்த்து தனிமனித ஈர்ப்பின் பால் "தாசன்" என பெயர் மாற்றும் தளத்தை பாரதிதாசன் ஏற்று பாரதியின் தாசனாக தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்டார். ஆனால், தமிழ் கவிதைகளை சுவாசிக்கும் தமிழர்களுக்கு இருவருமே வேறு வேறு திசைகளில் எழுத்துருக்களில் அலங்காரம் செய்தவர்கள் என்பது புரியும். இவர்கள் இருவரையும் ஒரே திசையில் பயணிக்கச்செய்தது அவர்களுக்குள் இருந்த காதல். பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள தொடர்பை காதலில் வைத்து அறிந்துகொள்வது இனிமையாக இருக்கிறது. 

'அவளும் அவரும் அமுதும் தமிழும்!' - பாரதிதாசன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

'கள்' என்னும் பொதுச்சொல்லுக்கு நன்மைகளும் தீமைகளும் வெவ்வேறு அளவீடுகளில் இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. அகத்தியரின் குணப்பாட பாடல் கள்ளை "பனைமது" என்று குறித்து அதை நன்மையானது என்று கூறுகிறது. வள்ளுவர் தீங்கில் சேர்த்து கள்ளுண்ணாமை என்று அதிகாரம் செய்திருக்கிறார். கம்பரும் கூட கம்பராமாயணத்தில் கள்ளை தீமையில் சேர்த்திருக்கிறார். கள் என்பதற்கு பயன்பாட்டுக்கும் செயற்பாட்டுக்கும் ஏற்றாற்போல மாறுபட்ட பார்வைகள் இருக்கின்றன.

பாரதியும் பாரதிதாசனும் "கள்வெறி" என்ற சொல்லை வெவ்வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
'கள்'  "களிப்பு" என்னும் வேர்ச்சொல்லில் இருந்து களித்தல், மகிழ்வுறுதல் போன்றவற்றின் அடையாளமாக 'கள்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை மகிழ்ச்சியின் பொருளில் எடுத்திருக்கிறான் பாரதி. பெருமகிழ்ச்சியின் குறிப்புணர அதை "கள்வெறி" என்று எழுதுகிறான்.


''கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ"

கன்னத்து முத்தத்தில் அடைந்த உள்ளத்தின் எழுச்சியை, மகிழ்ச்சி மிகுதியை கள்வெறி கொள்வதாய் பாரதி எழுதியிருக்கிறான். பாரதிக்கு கள்வெறியின் அனுபவம் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியைவிட கவிதையில் அனுபவங்கள் தேவையில்லை என்று சொல்லி கடந்துவிடுவது தமிழுக்கு சுபம். காதல் மரணவலி என்று எழுதுபவர்கள் யாருக்கும் மரணித்த அனுபவம் இருக்குமா என்ன ? "கள்வெறி" என்ற சொல்லுக்கென்று இருவேறு பொருள்கள் புலப்பட்டாலும் அதன் ஆதி மகிழ்ச்சியையே சுட்டுகிறது.

பாரதியைப்போல பாரதிதாசனும் தனது  கவிதை ஒன்றில் ''காணும் எழிலெல்லாம்  மெல்லியின்வாய்க் கள்வெறியோ" என்று கள்வெறியை பயன்படுத்தியிருக்கிறார்.


            தண்ணிலவும் அவள்முகமோ! தாரகைகள் நகையோ!

            தளிருடலைத் தொடும்உணர்வோ நன்மணஞ்சேர் குளிரும்!

            விண்ணீலம் கார்குழலோ! காணும் எழிலெல்லாம்

            மெல்லியின்வாய்க் கள்வெறியோ! அல்லிமலர்த் தேனின்

            வண்டின்ஒலி அன்னவளின் தண்டமிழ்த்தாய் மொழியோ!

            வாழியஇங் கிவையெல்லாம் எழுதவரும் கவிதை!

            கண்டெடுத்தேன் உயிர்ப்புதையல்! அதோ வந்துவிட்டாள்!

            கண்டெழுத முடியாத நறுங்கவிதை அவளே!

அந்திசாய்ந்த முன்னிரவில் காதலிக்காக காத்திருக்கும் காதலன் காத்திருப்பின் கணங்களை கவிதையாய் மாற்றி, இறுதியில் காதலி வந்ததும் எவ்வளவு எழுதினாலும் எழுதமுடியாத கவிதை காதலிதான் என்று சொல்லி முடிக்கும் இந்த கவிதை கீழுள்ளவாறு தொடங்குகிறது.


மேற்றிசையிற் சூரியன்போய் விழுந்து மறைந்திட்டான்;
மெல்லஇருட் கருங்கடலில் விழுந்த திந்தஉலகும்!
தோற்றியபூங் காவனமும் துளிரும்மலர்க் குலமும்
தோன்றவில்லை; ஆயினும்நான் ஏதுரைப்பேன் அடடா!
நாற்றிசையின் சித்திரத்தை மறைத்தஇருள், என்றன்
நனவிலுள்ள சுந்தரியை மறைக்க வசமில்லை!
மாற்றுயர்ந்த பொன்னுருக்கி வடிவெடுத்த மங்கை
மனவௌியில் ஒளிசெய்தாள் என்னதகத் தகாயம்!

இந்த பெருங்கவிதையின் சாரம் பாரதியின் கண்ணம்மா கவிதையை நினைவுப்படுத்துகிறது. 

பாரதியின் கவிதையும் அதே மாலைநேரத்து காத்திருப்பின் கணங்கள் சொல்லும் கவிதை தான்.

மாலைப் பொழுதிலொரு மேடைமிசையே
வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வானவளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல்கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சுசெலுத்தி,
நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற்கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்

பாரதி 'கண்ணம்மா" என்று காதலிக்கிறார். பாரதிதாசன் 'அவள்' என்று காதலிக்கிறார். ஆனால், இருவரின் காதலும் ஒன்றாகவே இருக்கிறது.

"சுட்டும் விழிச்சுடர் தான் –கண்ணம்மா சூரிய சந்திரரோ?" என்று பாரதியார் கண்ணம்மாவை எழுதினால் "தண்ணிலவும் அவள்முகமோ!" என்று பாரதிதாசன் குளிர் நிறைந்த நிலவை அவள் முகமென எழுதுகிறார்.

பாரதியைப் போலவே காதலை கொஞ்சம் அதிகமாகவே காதலோடு எழுதியிருக்கிறார் பாரதிதாசன்.

"இரவு சேர்ந்தவுடன் என்னுளத்தைச் சேர்ந்துவிட்டாள்!
எனினும் சன்னத்த மலருடலை என்னிருகை ஆரத்

தழுவுமட்டும் என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?"

புரட்சிக்கவிஞரின் 'காதல் கவிஞர்' அவதாரம் படிக்க படிக்க அத்துனை அழகு. பாரதி விட்டுச்சென்ற காதல்தமிழின் நீட்சி பாரதிதாசன்.

புரட்சி வேள்வியில் தமிழ் சமூகத்தைக் கட்டிப்போட்ட இந்த பெருங்கவிஞர் தற்கால தமிழ் இசை ரசிகர்களையும்  "அவளும் நானும் அமுதும் தமிழும்" என்று ரஹ்மான் இசையில் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு