Published:Updated:

''எங்கள்ல பலருக்கு சுண்டு விரல்ல பாதி இருக்காது..!" வேதனைக் கதை சொல்லும் மூங்கில் கூடைத் தொழிலாளர்கள்

''எங்கள்ல பலருக்கு சுண்டு விரல்ல பாதி இருக்காது..!" வேதனைக் கதை சொல்லும் மூங்கில் கூடைத் தொழிலாளர்கள்
''எங்கள்ல பலருக்கு சுண்டு விரல்ல பாதி இருக்காது..!" வேதனைக் கதை சொல்லும் மூங்கில் கூடைத் தொழிலாளர்கள்

''எங்கள்ல பலருக்கு சுண்டு விரல்ல பாதி இருக்காது..!" வேதனைக் கதை சொல்லும் மூங்கில் கூடைத் தொழிலாளர்கள்

ம் வீடுகளில் நம்மோடு புழங்கி, வளர்ந்து வரும் நாகரிகத்தால், இன்று அப்புறப்படுத்தப்பட்டவற்றைப் பற்றி யோசித்திருக்கிறோமா? நம் பாட்டிக்களின் வியர்வை ஈர பிசுபிசுப்புடன், அம்மாக்களின் கைகளிலும், அப்பாக்களின் தோள்களிலும் ஒய்யாரமாகத் திரிந்த ஒரு பொருள் கொஞ்சம் கொஞ்சமாக புழக்கத்தில் இருந்து நீங்கும்போது அந்த பொருள் சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டவர்களும், அதையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்களும் என்ன ஆவார்கள் என்று யோசித்துப் பார்க்க நேரம் ஒதுக்குவதில்லை நாம். கடும் துயரத்தில் அழுது தீர்ந்த கண்ணீரின் கடைசித் துளி கண்களின் ஓரத்தில் கசிந்து காய்ந்துபோவது போல நமக்கே தெரியாமல் நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்ட பொருள்கள் எத்தனை எத்தனை! 

இப்படி நம் முன்னால் நசுக்கப்பட்ட கலையும், தொழிலும் இணைந்த ஒன்றுதான் மூங்கில் பொருள்கள் செய்யும் தொழில். சாலையோரமாகவே இடம்பிடித்து மடிந்தும்கொண்டிருக்கும் அந்த மூங்கிலின் ஒன்றரை அடுக்குக் குவளைகள் சேமித்து வைத்திருக்கிறது அத்தனை வரலாறுகளை.

கோவை தடாகம் சாலையை கடக்கும்போதெல்லாம், சாலையின் இருபுறங்களிலும் திடீரென முளைத்து நிற்கும் மூங்கில்களையும் அவற்றால் நேர்த்தியாக முடையப்பட்ட கூடைகளையும், கைவினைப் பொருள்களையும் கண்களால் சேகரிக்காமல் நகர முடியாது... நகரவும் விடாது!

இந்தப் பகுதியைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூங்கில் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருக்கின்றன. அவர்கள் செய்யும் பொருள்களில் காணப்படும் தெளிவு, அவர்கள் முகங்களில் இல்லை. பேச வேண்டும் எனத் தோன்றியது... தள்ளிப்போடவில்லை.. ''எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து மூங்கில் பின்றதுதாம்மா எங்க தொழில். அஞ்சு தலைமுறைக்கு முன்னாடி மதுரைல இருந்து இங்க வந்தவுக நாங்க. இந்த எடத்துலதான் இருக்கோம், முன்னாடியெல்லாம் தொழில் நல்லாப் போயிட்டிருந்துச்சு. அப்போ எல்லார் வீட்டுலயும் மூங்கில் கூடைகள்லதான்  பொருள்களை அடைச்சு வச்சிருப்பாங்க. காய்கறிச் சந்தைகள்ல முழுக்க கூடைதான். ஆனா இந்த எழவு பிளாஸ்டிக் வந்ததுக்கு அப்புறம் மொத்தமா நொடிஞ்சு போயிட்டோம். ஒரு பழத்தையோ, காயையோ மூங்கில் கூடைல வச்சு பாரும்மா, ரொம்ப நாள் கெட்டுப்போகாம இருக்கும். ஆனா இதெல்லாம் யாரு பாக்குறா.. இல்ல யாரு சொல்லுறா" என தரையில் நீட்டி படுத்திருக்கும் மூங்கிலை பதமாகச் சீவிக்கொண்டே பேசுகிறார் 60 வயதைக் கடந்த அன்னம் பாட்டி

கேட்க காதில்லாததால் அதுவரை சேகரித்து வைத்திருந்த அத்தனை வலிகளையும் அப்படியே நமக்கு கடத்துகிறார் லட்சுமி அக்கா, 'நான் கல்யாணம் ஆகி இங்க வந்தப்ப கூடைக்கு கிராக்கி அதிகமா இருந்துச்சு. நிறைய ஆர்டர் வரும். ஆசைஆசையா செஞ்சு கொடுப்போம். இப்போ அப்படி இல்ல. இந்த தொழில்ல இருந்த நிறைய பேரு வேற வேலை செய்ய ஆரம்பிச்சுட்டோம். ஒரு நாளுல 150 ரூவாய்க்கு மேல திருப்ப முடியல. அதுக்கே தண்ணி குடிக்க வேண்டியதா இருக்கு. அதுல பாதிக்காச டாஸ்மாக்ல தொலைச்சுட்டு வந்துடுறாரு எம்புருஷன். ரெண்டு புள்ளைங்களோட படிப்புச் செலவு, குடும்பச் செலவுன்னு எல்லாத்தையும் சமாளிக்க முடில. விட்டு அடிச்சுடலாம்னு பாத்தா கண்ணுக்கு எதிர சாச்சு வச்ச மூங்கில பாக்கும்போது சோறு எறங்க மாட்டேங்குது. பொறந்ததுல இருந்து அதுங்க கூடயே வளர்ந்து தொலைச்சுட்டோம். என்னத்த பண்ண!" என கண்ணீரில் கலக்கிறது அவரது வார்த்தைகள்.

அவர்கள் வீடுகளில் அடிப்படை வசதி என்று எதையும் நம்மால் பார்க்க முடியவில்லை. 'வீடு' எனச் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு சின்ன குச்சு வீட்டில் ஐந்து பேர் வசிக்கிறார்கள். சுகாதார சீர்கேட்டினால் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்துக் கேட்டோம், "எங்களுக்கு வேற இடத்துல வீடு கட்டிக் கொடுக்குறதா சொன்னாங்க. ஆனா இன்னும் நடக்கல. வாரவாரம் போய் மனு குடுக்குறோம்... ஒண்ணும் நடக்கல. ரோட்டோரத்துல உட்கார்ந்து கூடை பின்றதால போலீஸ்காரங்க அடிக்கடி பிரச்னை பண்ணுவாங்க. இங்க பாதி வீடுகள்ல கரன்ட் கொடுக்கல. புள்ளைக தெருவிளக்குலதான் படிக்குதுக. எங்களுக்கு அப்புறம் இந்தத் தொழிலுக்கு அதுங்க வந்துடவே கூடாது. வேற எதுவாச்சும் பண்ணி பொழைச்சுக்கட்டும்" எனச் சொல்லும்  ராமையா அண்ணன், அவர் பிள்ளைகளை விளையாடுவதற்குக் கூட மூங்கில் அருகே விடுவதில்லை. விரட்டிக்கொண்டே இருக்கிறார். அத்தனை வலி நிறைந்த காட்சி அது.

கூடை முடைவதென்பது சாதாரண விஷயம் அல்ல. சின்ன மூங்கில் தட்டையால், ஒரு பழத்தை  அழுத்தினால், நொடிப்பொழுதில் பழம் இரண்டு துண்டாகி கீழே விழுகிறது. அந்த அளவுக்கு கூர்மையாக இருக்கும் மூங்கிலை, வெறும் கைகளால் கையாள்வதால், அவர்கள் உள்ளங்கை முழுக்க ரத்தக் கீறல்களைப் பார்க்க முடிகிறது. ''மூங்கில் சீவல வளைக்கும்போது, சுண்டு விரல்லதாம்மா பிடிப்போம். திரும்பத் திரும்ப வெட்டு விழுறதுனால விரல்ல சலம் வச்சுரும். இங்க இருக்க நெறைய பேருக்கு சுண்டு வெரல்ல பாதிய ஆபரேஷன் செஞ்சு எடுத்துட்டாக. தினமும் வேலைய முடிச்சிட்டு சோத்துல கை வச்சா அவ்வளோ எரியும் பாத்துக்க.." எனச் சொல்லிக்கொண்டிருக்கும் சேகர் அண்ணனின் பாதி சுண்டு விரல் மூங்கிலைப் பின்னிக்கொண்டிருக்கிறது. அவரின் விரல் இடுக்கில் படிந்திருக்கும் ரத்தத்திவலைகள் உறுத்திக்கொண்டேயிருக்கின்றன இப்போது வரை. 

அடுத்த கட்டுரைக்கு